Halloween party ideas 2015
.

12.4.2017 அன்று நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடத்தேர்தலை ரத்து செய்து திட்டமிட்டு தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்திருப்பதை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா மறைவையொட்டி, ஆ.கே.நகர்  சட்டப்பேரவை தொகுதிக்கு 12.4.2017 அன்று தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்து, அந்த அறிவிப்பை ஏற்று அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை களமிறக்கியது, அதே போன்று திமுக.வின் வேட்பாளராக அதே பகுதியை சேர்ந்த மக்களின் நன்மதிப்பைப் பெற்ற வழக்கறிஞர் மருதுகணேஷ் அவர்களை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தி.மு.க செயல்தலைவர் மாண்புமிகு தளபதியார் அறிவிப்பு செய்தார். மக்களின் பேராதரவோடு வெற்றி வாகை சூட இருந்த மருதுகணேஷின் வெற்றியை குறுக்குவழியில் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி தடுத்துள்ளது மத்தியில் ஆளும் மோடி அரசு.

வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்ததுதான் காரணம் என்றால், பணம் வினியோகம் செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்து, அதற்கு மூலகாரணமான தமிழக ஆளும் அரசின் அமைச்சர்கள் மற்றும் தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சட்டப்படி சிறைபடுத்துவதை விட்டுவிட்டு, மக்களின் வரிப்பணத்தை வீணடித்து இப்படியான ஓர் அறிவிப்பை நள்ளிரவில் அரங்கேற்றி மக்கள் விரோத செயலில் ஈடுபட்டிருப்பது, தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும்  நம்பிக்கையை கேள்விக் குறியாக்கியுள்ளது.

எந்த இடத்தில் வைத்து யார் பணம் வினியோகம் செய்கிறார்கள் என்பதை ஆதாரபூர்வமாக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும், அந்த புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்காமல், கடைசிவரை அமைதி காத்துவிட்டு தி.மு.க வெற்றி பெறப் போகிறது என்றும், எஞ்சிய தினகரன் அணியும் ஓ.பி.எஸ் அணியும் இரண்டாம் மூன்றாம் இடத்திலும், பா.ஜ.க. வைய்ப்புத் தொகையை இழந்து கடைசி இடத்திற்கு செல்லப் போகிறது என்ற கருத்து ஆர்.கே.நகர் வாக்காளர்களின் மனதில் இருக்கிறது என்ற கருத்துக் கணிப்பைத் தெரிந்து கொண்டு, குறுக்கு வழியில் இப்படி ஒரு அதிகார துஷ்பிரயோகத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது  மத்திய மோடி அரசு.

ஏற்கனவே அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் ஏற்பட்ட இது போன்ற அனுபவத்தை கணக்கில் கொண்டு முன்கூடியே அதற்குறிய நடவடிக்கைகளை முடுக்கி தீவிரம் காட்டாத தேர்தல் ஆணையம், பணம் வினியோகம் செய்ததுதான் காரணம் என்று சப்பக்கட்டு கட்டுவது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று.

தனக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுக்க அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையையும், அதனடிப்படையில் மக்கள் ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையையும் தட்டிப் பறிக்க திட்டமிட்டு இப்படி ஒரு திடீர் அறிவிப்பு நாடகத்தை அரங்கேற்றி இருக்கும் மத்திய மோடி அரசு, தமிழகத்தில் எப்படியும் காலூன்றி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறது.

திராவிட இயக்கங்களை அழிப்பதற்கும், தன்னை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதற்கும் அல்லது பணிய வைப்பதற்கும் பார்பனிய மோடி அரசு எடுக்கும் தொடர் நடவடிக்கையையே இது காட்டுகிறது. இப்படி பா.ஜ.க எடுக்கும் சூழ்ச்சியான நடவடிக்கையால் ஒருபோதும் திராவிட இயக்கங்களை பணிய வைக்கும் கனவும்  பலிக்கப்போவதில்லை. எத்தனை முறை இது போன்ற சூழ்ச்சிகளை செய்தாலும், தற்போது மக்கள் மனதில் எழுந்துள்ள தளபதி தளபதி என்ற தாரக மந்திரத்தை தடுத்து நிறுத்தமுடியாது.

ஆகவே நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பான தேர்தல் ஆணையம் மத்திய மோடி அரசிற்கு காவடி தூக்குவதை விட்டுவிட்டு மக்களுக்கு உண்மையாக ஆற்றவேண்டிய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை கேட்டுக் கொள்கிறது.


இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
தலைமையகம், கோவை.

10.4.2017.

Post a Comment

Powered by Blogger.