Halloween party ideas 2015
.

தோ வந்து விட்டது... நெடுஞ்சாலை மைல் கல்லில் இந்தி! மத்திய அரசு அலுவலகங்களில் இருக்கும் இந்தி, இன்று தெருவுக்கு வந்திருக்கிறது, நாளை நம் வீட்டிற்குள் நுழைய நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது. அப்படி நுழைந்துவிட்டால், இந்தி ஆதிக்கம் முழுமையாகி, மெல்லத் தமிழ் இனிச் சாகும்.

இதைச் சொன்னால், உடனே மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், "நெடுஞ்சாலை மைல் கல்லில் இந்தியின் ஊர் பெயர்கள் எழுதும் திட்டம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்தபோது, கொண்டு வரப்பட்டதுதான்' என்று கூறுகின்றார். இதற்கு டி.ஆர்.பாலுவே விளக்கம் அளித்துள்ளார். அவருக்குத் தெரியாமலேயே துறை அதிகாரிகள் எடுத்த அந்த நடவடிக்கையை, அவருடைய பார்வைக்கு அது கொண்டுவரப்பட்டதுமே, அதை நிறுத்திவைக்குமாறு ஆணையிட்டுள்ளார். அதன்பின்பும், இதையே ஒரு குற்றச்சாட்டாகப் பொன்.இராதாகிருஷ்ணன் கூறுவதில் பொருத்தம் இல்லை.சரி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த திட்டத்தைத்தான் செயல்படுத்துகிறோம் என்பவர்கள், ஐ.மு.கூ. அரசு கொண்டு வந்த அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தினார்களா? மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஐ.மு.கூ. அரசு கொண்டுவந்த சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற இவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

""எப்போதெல்லாம் தி.மு.க. தோல்வியை சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் ஜாதி, மதம், மொழி, அரசியலை கையில் எடுத்து, பா.ஜ.க.வை விமர்சிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது'' என்றும் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தி.மு.க. இப்போதுதானா இந்தியை எதிர்க்கிறது?

தேர்தல் அரசியலில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே, 1938-ல் இந்தியைக் கட்டாய பாடமாக்கியபோது, அதை எதிர்த்துப் போராடிய அண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, 14 வயது சிறுவனாக இருந்த கலைஞர் இந்தியை எதிர்த்து ஊர்வலம் சென்றார். 1948-ல் இந்தியை மீண்டும் கட்டாயப் பாடமாக்கியபோதும், அதை எதிர்த்து அண்ணா மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். கலைஞர், தன்னுடைய திருமண நாளன்று கூட, மணக்கோலத்திலேயே சென்று, மறியலில் கலந்துகொண்டார். இந்த இரண்டு போராட்டங்களிலும் முத்தமிழுக்கே முழு வெற்றி கிடைத்தது. கட்டாய இந்தி விலக்கிக் கொள்ளப்பட்டது.

மூன்றாவது போராட்டம் 1952-ல் நடைபெற்றது. இன்று தமிழ்நாட்டில் புகைவண்டி நிலையப் பெயர்ப்பலகைகளில், ஊரின் பெயர்கள் முதலில் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன என்றால், அதற்குப் பெரியாரும் அண்ணாவும் நடத்திய போராட்டங்கள்தான் காரணம். எனவே, தேர்தல் வெற்றி-தோல்விகளுக்கும், இந்தி எதிர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மான உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்றாகும்.தேர்தலில் தி.மு.க. பங்கெடுத்துக்கொண்ட பின்பு, 50 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட, வலுவான எதிர்க்கட்சியாக இருந்தபோதுதான், 1965-ல் நான்காவது இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. அண்ணாவும் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினரும் கைது செய்யப்பட்டனர். கலைஞர் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் 68 நாட்கள் அடைக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற மாணவர் புரட்சியில் பலபேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தப் புரட்சியின் காரணமாகவே, 1968-ல் ஆட்சிமொழிகள் சட்டம் திருத்தப்பட்டு, இன்றளவும் ஆங்கிலம் மத்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக நீடிக்கிறது.

1970 பிப்ரவரி 22-ல் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் பேசிய அன்றைய முதல்வர் கலைஞர் ""இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!'' என்று முழங்கினார். அது வெற்று முழக்கம் அல்ல, அதுவே தி.மு.க.வின் வழக்கம் என்று ஆகிவிட்டது. அதனால்தான் இப்போது மைல் கல்லில் இந்தி திணிக்கப்படும்போதும், 89 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வலுவான எதிர்க்கட்சி என்ற நிலையில், தி.மு.க. எதிர்க்கிறது. எனவே, தமிழ்நாட்டுத் தேர்தல்களில் டெபாசிட் கூட வாங்கமுடியாத பா.ஜ.க., "தோல்வியைச் சந்திக்கும்போதெல்லாம் இந்தி எதிர்ப்பை தி.மு.க. கையில் எடுக்கும்' என்று கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியை எதிர்ப்பதில் மட்டுமல்ல, தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றும், தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. 1965 மார்ச்சு 4ஆம் நாள் மாநிலங்களவையில் பேசிய அண்ணா, ""தமிழ்மொழி மத்திய அரசின் ஆட்சிமொழியாகும் நாள்வரையில் நான் ஓயமாட்டேன்'' என்று தெரிவித்தார். தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்குவதற்காக, முரசொலிமாறன் 1982 அக்டோபர் 8ஆம் நாள் மாநிலங்களவையில் அரசியலமைப்புச் சட்டத்திருத்த முன்வரைவு ஒன்றை முன்மொழிந்து பேசினார். ஆனால், அரசின் ஆதரவு இல்லாததால் அந்தச் சட்ட முன்வரைவு தோற்றுப் போனது. மீண்டும் திருச்சி சிவா தமிழை மத்திய அரசின் ஆட்சிமொழியாக்குவதற்காக, 2012 டிசம்பர் 7ஆம் நாள் சட்ட முன்வரைவு ஒன்றை மாநிலங்களவையில் முன்மொழிந்தார். ஆனால், அதன் மீதான விவாதம் நடைபெற்று முடிவதற்குள்ளாகவே, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்துவிட்டதால், அந்தச் சட்ட முன்வரைவு காலாவதியாகிவிட்டது.

2004 மே 27ஆம் நாள், ஐ.மு.கூ. அரசு வெளியிட்ட குறைந்தளவு செயல்திட்டத்தில், கலைஞர் வலியுறுத்தியதற்கிணங்க, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகள் அனைத்தையும் மத்திய அரசின் ஆட்சிமொழிகளாக்குவது பற்றி ஆராய குழு ஒன்று நியமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாறே, மத்திய அரசு டாக்டர் சித்தகாந்த் மகாபத்ரா தலைமையில் குழு ஒன்றையும் நியமித்தது. அந்தக் குழுவும் தன்னுடைய அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துவிட்டது.

2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போதும், 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போதும், தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில், "தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், தமிழில் செயல்பட தி.மு.க. முயற்சிகள் மேற்கொள்ளும்' என்று கூறப்பட்டுள்ளது. இப்படி ஒரு தெளிவான திட்டத்தைத் தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போது, புதிதாக ஒரு பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். இந்தி படிக்காததால் தங்களுக்கு வாய்ப்புகள் பல கிடைக்காமல் போனதாகச் சிலர் புலம்புகின்றனர். 1965 மார்ச்சு 4ஆம் நாள் மாநிலங்களவையில் பேசிய அண்ணா, ""இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தித் திணிப்பையே எதிர்க்கிறோம்'' என்று தெரிவித்தார். அதைத்தான் இப்போது தளபதி மு.க.ஸ்டாலினும் கூறி வருகிறார். எனவே, இந்தியை எவர் வேண்டுமென்றாலும் படிக்கலாம் அதைத் தி.மு.க. தடுக்கவில்லை.

இந்திப் பிரச்சினை சுதந்திரத்திற்குப் பின்புதான் வந்தது. அதற்கு முன்பெல்லாம் வடமாநிலங்களுக்குத் தமிழர்கள் செல்லவில்லையா? பெருந்தலைவர் காமராசர் இந்தி தெரியாமல்தானே அகில இந்தியக் காங்கிரசுக் கட்சியின் தலைவராக இருந்தார். சி.சுப்பிரமணியம், அழகேசன் போன்றோர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். எனவே, இந்தி படிக்கவிடாததால் வேலைவாய்ப்புகள் போய்விட்டன என்பது பித்தலாட்டமான பேச்சாகும்.

அப்படி என்ன - வடமாநிலங்களில் ஆள் கிடைக்காமல், வேலைவாய்ப்புகள் குவிந்திருக்கின்றன. அங்கே வேலை கிடைக்காமல்தானே, ஆயிரக்கணக்கான வடமாநில இளைஞர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலே கொடுமை என்ன தெரியுமா? சென்னையில் உணவகங்களில் வேலை பார்க்கும் வடமாநில இளைஞன் தமிழ் கற்றுக்கொள்ள மறுக்கிறான். இந்தியில் மட்டுமே பேசுகிறான். அங்கே சாப்பிடச் செல்லும் தமிழன் அவனிடம், ""பானி லாவோ'' என்று இந்தியில் கூறுகிறான். இதுதான் தமிழனின் அடிமைப்புத்தி. இந்நிலையில், இந்தியை மட்டுமே தமிழன் படித்திருந்தால், வடமாநிலங்களில் உள்ள உணவகங்களில் டேபிள் துடைக்கத்தான் போயிருப்பான்.

ஆனால், இன்று என்ன நிலைமை?

ஆங்கிலம் படித்ததால் தமிழ்நாட்டு இளைஞர்களும், இளம்பெண்களும் இன்று உலகம் முழுவதும் பரவி, பல்வேறு பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். மிக உயர்ந்த பதவிகளில்கூட இருக்கிறார்கள். எனவே, தி.மு.க. தொடர்ந்து இந்தியை எதிர்த்து வருவதால்தான் ஆங்கிலம் இன்றளவும் இங்கே இருக்கிறது. அதனால் நம் மக்கள் பயன்பெறுகிறார்கள். அதற்காகத் தி.மு.க.விற்குத்தான் தமிழக இளைஞர்களும், இளம்பெண்களும் நன்றி கூற வேண்டும். எனவே, இந்தி படிக்காததால், தமிழனுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்பதுதான் உண்மை.

- நக்கீரன் இணையம்

Post a Comment

Powered by Blogger.