Halloween party ideas 2015
.

கடந்த ஆண்டு 11, 12  சூன் 2016 இளந்தமிழகம் இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயக்கத்தின் செயல்த்திட்ட முடிவுகளிலும் நிர்வாக கட்டமைப்பிலும் சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை (இனி சி.பி.எம்.எல்)கட்சியின் தலையீடு குறித்து பொதுக்குழு கவனத்திற்கு முன்வைக்கப்பட்டது. அதாவது  பைட் நிர்வாகக்குழு சீரமைப்பு  நடவடிக்கையில் சி.பி.எம்.எல் கட்சியின் தலையீடு, கட்சியில் முன்பே எடுக்கப்பட்ட முடிவுகளை இளந்தமிழகத்தில் அமல்படுத்தும் நோக்கில் 11 பேர் கொண்ட செயற்குழுவில் 7 பேர் சி.பி.எம்.எல் கட்சி உறுப்பினர்கள் இருந்தனர் என்ற விபரங்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரிடமும் எடுத்துரைக்கப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக நடந்த விவாதங்களின் மூலம் 26 சூன் 2016 கூடிய பொதுக்குழு கூட்டத்தில் இளந்தமிழகம் இயக்கத்தில் உள்ள ஒரு பொதுக் குழு உறுப்பினர் வேறு எந்தக் கட்சியிலோ/இயக்கத்திலோ உறுப்பினராக இருக்கக் கூடாது எனும் தீர்மானம் அனைத்து பொதுக் குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டது. இயக்கத்தின் செயற்குழுவும், 15 உறுப்பினர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. பொறுப்பிலிருந்து யாரும் விலக வேண்டும் என்று பொதுக்குழு அக்கூட்டத்தில் வலியுறுத்தவில்லை.


சி.பி.எம்.எல் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் கட்சியில் நீடிக்கவில்லை என்றளித்த உறுதியை பொதுக்குழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர். மேலும் தோழர்.செந்திலின்  வேண்டுகோளின் படி தீர்மானத்தில் இருந்து சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை கட்சியின் பெயர் நீக்கப்பட்டது.


இதன் பிறகும் பொதுக்குழுவில் இருந்த உறுப்பினர்கள் சிலர் சி.பி.எம்.எல் கட்சியில் உறுப்பினராக நீடித்து வருவது பொதுக்குழுவிற்கு தெரியவந்தது. எனவே இச்சிக்கலை விவாதிக்க மீண்டும் பொதுக்குழு கூட்ட வேண்டும் என முன்மொழியப்பட்டு நவம்பர் 19 பொதுக்குழு கூடியது. தான் கூட்டத்தேதியை அறிவிக்காமல் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என தோழர்.செந்தில் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து கட்சியில் இன்றும் நீடிக்கும் உறுப்பினர்களும், அவரது ஆதரவு உறுப்பினர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்தனர். 19 நவம்பர் 2016 கூட்டத்தில் 26 சூன் 2016 தீர்மானம் மீண்டும் வலியுறுத்தப்பட்டு சி.பி.எம்.எல் கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

19 நவம்பர் 2016 பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்த சி.பி.எம்.எல்  கட்சியினர் 8 சனவரி 2017 அவர்கள் தரப்பு நபர்களை வைத்து ஒரு கூட்டத்தைக் கூட்டினர். அதில் தாங்கள் சி.பி.எம்.எல் கட்சியில் இன்னும் உறுப்பினராக தொடர்வதை தோழர்கள் செந்தில், சார்ச், பரிமளா உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒத்துக் கொண்டனர். மேலும் தாங்கள் கட்சியிலும் உறுப்பினராக தொடர்வோம், இளந்தமிழகம் பொறுப்புகளிலும் தொடர்வோம் என 26 சூன் 2016 எடுத்த தீர்மானத்திற்கு முரணாக செயல்படத் தொடங்கினார்கள்.


மேலும் பிற கட்சியில் உறுப்பினராக உள்ளவர்கள் இயக்கத்தின் பொதுக்குழுவில் இருந்து விலகி உறுப்பினர் அளவில் செயல்பட வேண்டும் என்ற தீர்மானத்தை புறந்தள்ளினர்.


இந்தச் சூழலில் இயக்கத்தின் செயற்குழு முற்றாக செயல்படாமல் முடங்கியிருந்தது. இயக்கத்தின் தொடர் செயல்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் 19 நவம்பர் 2016 கூடிய பொதுக்குழு உறுப்பினர்கள் சி.பி.எம்.எல் கட்சி உறுப்பினர்கள் அல்லாத பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய புதிய ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்து செயல்படத் தொடங்கினர்.


புதிய ஒருங்கிணைப்புக் குழுவை புறக்கணித்த சி.பி.எம்.எல் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து இளந்தமிழகம் பெயரில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து இயக்கத்திற்குள் குழப்பம் ஏற்படுத்தும் வேலைகளை தொடர்ந்தனர். இதனை தடுக்கும் பொருட்டு தோழமை இயக்க தலைவர்கள் தோழர் தியாகு, தோழர் ஓவியா தலைமையில் 31 மார்ச்சு 2017 ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திலும் 26 சூன் 2016 அனைவரும் ஏற்றுக் கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் சி.பி.எம்.எல் கட்சி உறுப்பினர்கள் பொதுக்குழு தீர்மானத்தை ஏற்க மறுத்து இளந்தமிழகம் இயக்கம், தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கான மன்றம்  (Forum for IT Employees F.I.T.E)  உள்ளிட்ட அமைப்பு வடிவங்களை பிரித்துக் கொள்ளலாம் என்ற இடத்திற்கு பேச்சுவார்த்தையை கொண்டு சென்றனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.


இளந்தமிழகம் இயக்கத்தை பொறுத்தவரை இயக்கத்தின் எந்த வடிவத்தையும் சி.பி.எம்.எல் கட்சியின் அழுத்தத்திற்கு அடி பணிந்து விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதை ஆலோசனைக்குழு முன் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. இம்முடிவுக்கு 48 உறுப்பினர்கள் கொண்ட பொதுக்குழுவில் 30 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளது. சி.பி.எம்.எல் உள்ளிட்ட எந்த ஒரு கட்சியின் தலையீடோ, சி.பி.எம்.எல் உள்ளிட்ட எந்த ஒரு கட்சியின் உறுப்பினர்களோ நமது இயக்கத்தின் முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ள பொதுக்குழு உள்ளிட்ட பொறுப்புகளில் நீடிக்க கூடாது என 48 பொதுக்குழு உறுப்பினர்களில் 30 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர்.


ஆனால் இவை அனைத்தையும் மீறி மீண்டும் மீண்டும் இளந்தமிழகம் இயக்கத்தின் ஒற்றுமையை சிதைக்கும் நோக்கில் சி.பி.எம்.எல் கட்சி உறுப்பினர்கள் தற்பொழுது இளந்தமிழகம் இயக்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டப்போவதாக அறிவித்து மேலும் மேலும் இயக்கத்திற்குள் குழப்பத்தை திணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இளந்தமிழகம் இயக்கத்தின் தனித்தன்மையை பாதுகாக்கும் நோக்கிலும், இயக்கத்தின் செயல்பாடுகளில் உங்கள் ஆதரவுடன் தொடர் வேகத்தை உறுதி செய்யவும் 26 சூன் 2016 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் பின்வரும் முடிவுகளை எடுத்துள்ளோம்.


 26 சூன் 2016 பொதுக்குழு தீர்மானத்தின்படி சி.பி.எம்.எல் கட்சியில் உறுப்பினராக இருக்கும் உறுப்பினர்கள் இளந்தமிழகம் இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். முறையே இவர்கள் இளந்தமிழகம் இயக்கத்திலும், தகவல் தொழில்நுட்பத்துறையினருக்கான மன்றத்திலும் வகித்த பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனர். மேலும் இவர்கள் பொதுக்குழு முடிவுக்கு மாறாக உறுப்பினர்கள் அளவில் தொடர்ந்து குழப்பங்களையும், இயக்க விரோத நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதால் இவர்களை தற்காலிகமாக உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கின்றோம். அவர்கள் பட்டியல் கீழே,


தோழர்கள் செந்தில், பரிமளா, சார்ச், பாலாசி, இரபீக், பாரதிதாசன், முத்துவேல்


இனி பொதுக்குழு சீரமைக்கப்பட்டு, இளந்தமிழகம் இயக்கம் அரசியல் பணிகளில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். சி.பி.எம்.எல் கட்சியினால் திணிக்கப்பட்ட அமைப்பு நிர்வாகச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு இயக்கத்தின் கொள்கை அறிக்கையின் படி செயல்பட உள்ள 'இளந்தமிழகம் இயக்கத்திற்கு" தோழமை இயக்கங்களும், தலைவர்களும் தங்கள் ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறும்,  சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை கட்சி தரப்பினர் இனியும் இளந்தமிழகம், தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான மன்ற பெயரை பயன்படுத்தினால் அவர்களை புறக்கணிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.


ஒருங்கிணைப்பு குழு

இளந்தமிழகம் இயக்கம்

தொடர்புக்கு : 8939661119

 

CC: தி.செந்தில்குமார், அரசியல் தலைமை குழு உறுப்பினர்.

    சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை

    பரிமளா, மைய குழு உறுப்பினர், சி.பி.எம்.எல் மக்கள்       விடுதலை

    ஜார்ஜ், மைய குழு உறுப்பினர், சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை

    பாலன், பொதுச்செயலாளர், சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை

    சிதம்பரநாதன், தலைவர்,  சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை

Post a Comment

Powered by Blogger.