Halloween party ideas 2015
.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் திரு குணங்குடி அனீபா, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் திரு. கொளத்தூர் மணி, தமிழ்த் தேச விடுதலை இயக்கத் தலைவர் திரு. தியாகு, தமிழர் தேசிய முன்னணியின் திரு. அய்யநாதன், எஸ். டி. பி. அய்., கட்சியின் திரு. கரீம், பேராசிரியர் இராமு. மணிவண்ணன், பேராசிரியர் சரசுவதி, இயக்குநர் புகழேந்தி, வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, தந்தை  பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பேரியக்கம், ஆதி தமிழர் பேரவை, ம.தி.மு.க, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, நாம் தமிழர் கட்சி, இளந்தமிழகம், தமிழ்த் தேச குடியரசு இய்ககம், தமிழர் எழுச்சி இயக்கம், தமிழர் விடியல், சி.பி. எம் எல் மக்கள் விடுதலை, மே 17 இயக்கம், தமிழர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்புகளின் தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் கூட்டாக இன்று காலை 11 மணிக்கு, சென்னை நிருபர்கள் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் வெளியிட்ட செய்தி அறிக்கை :அய். நா மனித உரிமைக் குழுவின் கூட்டம் எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், சில முக்கிய நிகழ்வுகள் நமது கவனத்தை கோருகின்றன.
அண்மையில் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்குள்ளே இலங்கை மற்றும் இந்திய தூதரகங்கள் இணைந்து கூட்டமொன்றை நடத்தி முடித்துள்ளன. அந்த கூட்டத்திலே அறுபதிற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இலங்கை அரசு கீழ் காணும் செய்திகளை முன் வைத்தது.
·   இலங்கையில் தற்போது இனங்களுக்கிடையே அமைதி நிலவுகிறது.
· புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.
· மாவீரர்தினம் சுதந்திரமாக அனுட்டிக்கப்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
· இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த கணிசமான நிலப்பரப்பு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
· கடந்த அரசாங்கத்தை விடவும் தற்போதைய அரசானது தமிழர் விவகாரங்களுக்கு முக்கியத்துவமளித்துவருகிறது.
பொறுப்புக்கூறலுக்கான செயற்திட்டங்களை மேற்கொண்டி ருப்பதால் அதற்கு தமக்கு வருகின்ற மார்ச் மாதத்திலிருந்து 18 மாதங்கள் தேவைப்படுவதாகவும் அதாவது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்வரை கால அவகாசம் வழங்க வேண்டுமென்றும் அத்துடன் அதற்காக தமக்கு நிதியுதவிகள் வழங்கவேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
ஆகவே இந்த நிலவரத்தை சரியான விதத்தில் புரிந்துகொண்டு தமிழருக்கு எதிரான ஒரு நிலைப்பாடு கொண்டுவரப்படுவதற்கான முனைப்பை உணர்ந்துகொண்டு தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவு கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், திரைத் துறையினர், கல்வியாளர்கள் என அனைவரும் இணைந்து, இலங்கை அரசின் கூற்று எவ்வளவு பொய்யானது என்பதையும், புதிய அரசு வந்த பிறகும் நிலைமைகள் எதுவும் மாறவில்லை என்பதையும், கால நீட்டிப்பு என்பது தமிழர்களை மேலும் புதை குழிக்குள் அமிழ்த்துவதாகவே இருக்கும் என்பதையும் தெளிவுப்படுத்தி, தங்கள் எதிர்ப்பினை அய். நா. மனித உரிமைக் குழுவுக்கு அறிக்கை வாயிலாக தெரிவிக்க உள்ளோம்.
அந்த அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அரசுக்கு துணை போவதை இந்திய அரசு நிறுத்திக் கொள்வதோடு, இலங்கை மீது முழுமையான சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்ற தீர்மானத்தை இந்திய அரசு அய். நா. மனித உரிமைக் குழுவில் முன் மொழிய வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
எதிர் வரும் பிப்ரவரி 15-க்குள் இந்திய அரசு இலங்கை அரசுக்கு துணையான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிடில், தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு கட்சிகளும் அமைப்புகளும் இந்திய அரசு அலுவலங்களில் தொடர் முற்றுகைப் போராட்டத்தினை நடத்துவோம் என்று அறிவிக்கிறோம்.


Post a Comment

Powered by Blogger.