Halloween party ideas 2015
.


தமிழர் தேசம் தமக்காக அறம் பாடிய போராளியை இன்று இழந்து விட்டது.

இந்த ஒப்பற்ற சமூகமாற்றப் போராளியின் உயிரை இவ்வளவு விரைவாக இயற்கை தன்னுள் இழுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கவில்லை.

இன்குலாபு தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், இதழாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். குமுகாயச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன.

இன்குலாப்பின் இயற்பெயர் எசு. கே. எசு. சாகுல் அமீது. கீழக்கரை என்னும் ஊரில் இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சித்த மருத்துவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார்.

மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். ஆகவே, பேராசிரியர் சி.இலக்குவனாரின் மாணவராகும்பேறு பெற்றார். இதனால், தமிழுணர்வும் போர்க்குணமும் பெற்றார்.

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரின் முன்னெடுப்பில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் நா. காமராசன் கா. காளிமுத்து முதலானவர்களுடன் இணைந்து தானும் பங்கேற்றார்; சிறை வாழ்க்கையும் பெற்றார்.

படிப்பை முடித்துச் சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் (பயிற்றுநராகப்) பணியில் சேர்ந்தார். ஈரோடு தமிழன்பன், நா.பாண்டுரங்கன் போன்றோர் உடன் பணி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளாராக இருந்தார். பிற்காலத்தில் மார்க்சியக் கொள்கையாளர் ஆனார். பிறகு மார்க்சிய இலெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா.லெ.அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் மேதகு வே.பிரபாகரனைச் சந்தித்த நிகழ்வு இன்குலாப்பின் வாழ்வில் குறிப்பிடத்தக்க ஒன்று.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உணர்வுத்தளத்திலிருந்து மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் சுகவீனம் காரணமாக காலமாகிவிட்ட செய்தி தமிழக எல்லை கடந்து உலகத் தமிழர் நெஞ்சமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனவெறியாட்டத்தில் சிக்கி ஈழத் தமிழர்கள் அனுபவித்துவந்த கொடுந்துயரத்தை தன் துயரமாக கருதுமளவிற்கு உணர்வால் ஒன்றிணைந்திருந்தார் மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள். அதனால் தான் வகை தொகையின்றி எமது உறவுகள் கொன்று குவிக்கப்பட்டு வருவதனை தாங்கமுடியாது அதற்கு காரணமான காங்கிரசு-தி.மு.க. கூட்டணி அரசின் அயோக்கியத்தனத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டிருந்த 'கலை மாமணி' விருதை திரும்பக் கொடுத்திருந்தார்.

இளவேனில் என்பவர் நடத்திய 'கார்க்கி' இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். 'சூரியனைச் சுமப்பவர்கள்' என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 'மார்க்சு முதல் மாசேதுங்கு வரை' என்னும் மொழியாக்க நூலை எசு.

வி.இராசதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள். "மனுசங்கடா, நாங்க மனுசங்கடா" என்னும் இவர் பாட்டு எண்ணற்ற மேடைகளில் ஒடுக்கப்பட்டவர்களால் பாடப் படுகிறது. கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என மூன்று நாடகங்கள் எழுதினார். பிற்காலத்தில் ஔவை, மணிமேகலை ஆகிய நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாபு எழுதிய கவிதைகள் அனைத்தும் 'ஒவ்வொரு புல்லையும்' என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவரது கவிதைகளும் எழுத்துகளும் கூர்மை மிக்கவை.

மானிட விடுதலையும் சமூக நீதியும் அவரது கவிதை, பாடல்களின் அடிநாதம். எளிமையாக வாழ்ந்த மனிதர். பாெதுவுடமைச் சிந்தனையாளர்.

ஈழ விடுதலை மீது பற்றுறுதியாேடு செயற்களத்திலும் படைப்புக்களத்திலும் இயங்கியவர். கவிதைகள் தீப்பந்தங்களாக இருக்கவேண்டும் என்றவர் ஒடுக்கப்பட்டவர்க்கு பாடிய பறவை பறந்துவிட்டது

இரந்துண்ணும் எந்தமிழ் நாடே மறந்து போகா இலக்கியம்!
உண்மையான மக்கள் கவிஞர் இன்குலாப் இன்று காலமானார். மக்கள் கவிஞரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

எழுச்சி மிகு எண்ணங்கள்
உணர்ச்சிமிகு வார்த்தைகள்
இன்குலாப் என்றால் புரட்சி
அதுவே உம் வாழ்வாய்
வாழ்ந்தீர் நீர் வாழ்கவே !

Post a Comment

Powered by Blogger.