Halloween party ideas 2015
.

பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள்
6.7.1870

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே 'சூரிய நாராயண சாஸ்திரி' எனும் வடமொழிப் பெயர் நீக்கி 'பரிமாற்கலைஞர்' என்று தனித் தமிழில் சூட்டிய பெருமகனார்.

உயர்தனிச்செம்மொழி தமிழென்றும், வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழென்றும் உலகுக்கு அறிவித்தவர்.

அது மட்டுமின்றி, பிரித்தானியரால் திணிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கு தமிழர்கள் அடிபணியக் கூடாது என்றும் ஆணித்தரமாக வாதுரை செய்தவர் நம் பைந்தமிழ் வளர்த்த   பரிதிமாற் கலைஞர்.

இவர் 6.7.1870ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள விளாச்சேரி எனும் சிற்றூரில் பிறந்தார். இவரின் தந்தையார் கோவிந்த சிவன் அவர்கள் மூலம் வடமொழி கற்றார். இவர் மகாவித்துவான் க.சபாபதி முதலியாரிடம் பழகி தமிழறிவை முதன்முதலில் அவரிடமிருந்து வளர்த்துக் கொண்டார்.

பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்த நிலையில் தாமே பல புதுமைக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். இக்கட்டுரைகளை புகழ்பெற்ற 'விவேக சிந்தாமணி' ஏடு வெளியிட்டது. 1899ஆம் ஆண்டு சென்னையில் 'திராவிட பாஷா சங்கம்' ஒன்றினை நிறுவி, அதற்கு உதவித் தலைவராகப் பொறுப்பேற்றுத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றை வெளிக் கொணர்ந்தார்.

சென்னையில் வசித்த வந்த போது தமிழறிஞர் சி.வை. தமோதரம் பிள்ளை  அவர்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். (தொல்காப்பியத்தை முதன் முதலில் பதிப்பித்தவர் சி.வை.த. என்பது குறிப்பிடத்தக்கது.)

சங்ககாலத் தமிழிற் பேசும் வித்தை பரிதிமாற் கலைஞருக்கு இயல்பாகவே அமைந்ததைக் கண்டு வியந்த தாமோதரம் பிள்ளை, "பிராம்மணராயிருந்து, சாஸ்திரிரயென்னும் பட்டம் புனைந்திருந்தும், திராவிடமொழியில் இவ்வளவு ஆர்வங்கொண்டு, அதை நீர் ஆராய்ந்திருப்பது நமக்கு விந்தையை அளிக்கின்றது, உம்மைத் 'திராவிட சாஸ்திரி' என்று அழைத்தல் சாலப் பொருந்தும் என்றும் பாராட்டினார். அவரின் வேண்டுகோளை ஏற்று பரிதிமாற் கலைஞரும் 1902ம் ஆண்டில் 'மதிவாணன்' என்ற கதை நூலினை உயர் தனிச்செம்மொழி நடையில் எழுதி  வெளியிடவும் செய்தார்.

அதன் பிறகு ஆரியர் செய்த தமிழ்த்திருட்டை
'தமிழ்மொழி வரலாறு' என்ற நூலில் எழுதி வெளியிட்டார். அந்நூலில், "ஆரியர்கள் தமிழரிடமிருந்து பல அரிய விசயங்களையும் மொழிபெயர்த்து தமிழர் அறியும் முன்னரே அவற்றை தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டிவிட்டனர். தமிழருக்கு ஆரியர் இந்தியாவிற்கு வரும் முன்னரே எழுதப் படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ் சொற்களாதலுங் காண்க!" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் பிறந்த மதுரை நகரம் தமிழுணர்ச்சியற்று கிடந்ததை வேதனையோடு பின்வருமாறு  தெரிவித்தார். "தாய்மொழியாகிய தமிழினை மறந்து செல்வப் பொருளீட்டலிலேயே காலம் போக்கியுழலும் மதுரையாகிய தாம் பிறந்த நகர்கிரங்கியாற்றாது பாடியது"

1901ஆம் ஆண்டு மே24 இல் மதுரையில் பாஸ்கர சேதுபதியார் தலைமையில் பாண்டித்துரைத் தேவர் மேற்பார்வையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கம் 'செந்தமிழ்' எனும் திங்களேட்டை வெளியிட்டது. அதன் முதல் ஏட்டில் தான் பரிதிமாற் கலைஞர் உயர்தனிச் செம்மொழி தமிழே! என்று தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டார்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக் கழகப் பாடப் புத்தகத்தில் தமிழை நீக்கி விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை பரிதிமாற் கலைஞரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உடனே கோவையில் இருந்த தமிழறிஞர் பூரணலிங்கம் பிள்ளை அவர்களை சென்னைக்கு  வரும்படி உடனே தந்தி அடித்தார். அதற்கு முதல் நாள் தான் பூரணலிங்கம் பிள்ளை சென்னையிலிருந்து   கோவைக்கு வந்து சேர்ந்திருந்தார். தந்தியை கண்டவுடன் பதட்டமடைந்து உடனே மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டு பரிதிமாற்கலைஞரை சந்தித்தார்.

அவரிடம் இரண்டு நாட்களுக்குள் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடப்பதால் இந்த அவசரம். தமிழுக்கு ஆபத்து நேர்ந்துள்ளதால் உடனே அனைத்து ஆசிரியர் பெருமக்களையும் சந்திப்போம் என்று பரிதிமாற்கலைஞர் கூறினார். இருவரும் வாடகை வண்டி அமர்த்திக் கொண்டு ஒவ்வொரு ஆசிரியர் வீட்டுக்கதவையும் தட்டி தமிழைக் காப்பாற்றும்படி வேண்டினர். இதோடு நில்லாமல் மதுரைக்குச் சென்று பாண்டித்துரை தேவரவர்களை  நேரில் கண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றும் படி கேட்டுக் கொண்டனர். பாண்டித்துரை தேவரும் இருவரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கினார். பரிதிமாற் கலைஞரும், பூரணலிங்கம் பிள்ளையும் பட்டபாடுக்கு பயன் கிடைத்தது. ஆசிரியர் சங்கக் கூட்டத் தீர்மானமும், மதுரை தமிழ்ச்சங்க தீர்மானமும் சென்னை பல்கலைக் கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறுதியில் தமிழே வெற்றி பெற்றது.

இதில் வெற்றி பெற்ற பரிதிமாற் கலைஞர் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால்
தமிழ்மொழியை தொடக்கப்பள்ளி நிலையிலேயே அழிக்கத் துடிக்கும் இன்றைய திராவிட ஆட்சியாளர்களின் முகத்திலே காறி உமிழ்ந்திருப்பார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

பரிதிமாற்கலைஞரது ஆசிரியத்தன்மையை பேராசிரியர், உரையாசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், இதழாசிரியர் என்று ஐவகையாகப் பிரிக்கலாம்.

33 வயது வரை மட்டுமே வாழ்ந்து மறைந்த பரிதிமாற்கலைஞர் எழுதிய நூல்கள் பின் வருமாறு:
1.ரூபாவதி அல்லது காணாமற்போன மகள், 2.கலாவதி, 3.மானவிஜயம், 4.தனிப்பாசுரத் தொகை, 5.பாவலர் விருந்து முதல் நாள், 6.நாடகவியல், 7.மதிவாணன், 8.தமிழ்மொழியின் வரலாறு, 9.மணிய சிவனார் சரித்திரம் ஆகியவை.

முப்பத்தி மூன்று வயதுவரை வாழ்ந்தலென்ன, தமிழுக்கு உண்மையாகத் தொண்டு செய்வோன் என்றும் சாவதில்லை!

பரிதிமாற்கலைஞருக்கு வீர வணக்கம்!

Post a Comment

Powered by Blogger.