Halloween party ideas 2015
.

மாதொருபாகன்: படைப்புலகுக்கு புதிய கதவைத் திறந்திருக்கிறது!

செவ்வாய், 5 ஜூலை 2016

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவல் ஏற்படுத்திய தாக்கம் பெரியதல்ல. நாவல் வெளியாகி 4 ஆண்டுகளுக்குப்பின் அதை ஒரு பிரச்னையாக உருவாக்கி, பெருமாள் முருகன் என்ற எழுத்தாளரை கொன்றுபோட்டது தமிழ்ச்சமூகம். ஆம், பெருமாள் முருகன் என்ற எழுத்தாளன் மரணித்துவிட்டான். இனி, பெ.முருகன் மட்டும்தான் உயிர்வாழ்வான். அவன் இனி எழுதமாட்டான்’ என ஒரு படைப்பாளன் கூறுமளவுக்கு நொந்துபோகச் செய்தனர். ‘மாதொருபாகன்’ என்ற நாவலை 2010இல் எழுதினார் கல்லூரிப் பேராசிரியர் பெருமாள் முருகன். இந்த நாவல், குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் கோவில் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் இழிவுபடுத்துகிறது என்று, ஜனவரி 2015இல் திருச்செங்கோடு பகுதி மக்களிடம் பரப்புரை செய்து, மக்களையும் அந்த நாவலுக்கு எதிராகத் திருப்பிவிட்டன சில இயக்கங்கள். வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாத அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளானார். பெருமாள் முருகன் என்ற எழுத்தாளன் இறந்துவிட்டான் என அறிவித்தபிறகும், அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நடைபெற, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் காவல்துறையினரால் பெருமாள் முருகனிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிவாங்கப்பட்டது. 50 வயதாகும் எழுத்தாளர் பெருமாள் முருகனும், அவரது துணைவியார் எழிலரசியும் நாமக்கல் மாவட்ட அரசுக் கல்லூரி பேராசிரியர்கள். சில அமைப்புகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, தமிழக அரசு அவர்களை சென்னைக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டது. அதேசமயம், அவர்மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டு, மாதொருபாகன் நாவலும் தடை செய்யப்பட்டது. ஒரு படைப்பாளன் இத்தகைய இன்னல்களுக்கு ஆளாவது, தமிழ் அறிவுலகில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியதால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் அவருக்காகவும், எழுத்தாளனின் கருத்து சுதந்திரத்துக்காகவும் தனது போராட்டக் களத்தை நீதிமன்றத்துக்கு மாற்றின. பெருமாள் முருகன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்யக் கோரியும், நாவல்மீது விதிக்கப்பட்ட தடையை விலக்கக்கோரியும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேரடியாக ஈடுபடாத பெருமாள் முருகனையும் ஒரு மனுதாரராகச் சேர்த்து அவரின் பதிலையும் எதிர்பார்த்த நீதிமன்றத்துக்கு பதில் மனுவை தாக்கல்செய்த பெருமாள் முருகன், ‘தன்மீதான கிரிமினல் வழக்குகளை கைவிடக்கோரியும், தனக்கு விதித்த நிபந்தனைகளை ரத்து செய்யுமாறும்’ கோரியிருந்தார். ஓராண்டாக நடைபெற்றுவந்த இந்த வழக்கு, விசாரணை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், புஷ்பா சத்தியநாராயணா அமர்வுமுன்னர் விசாரணைக்கு வந்தபோது, ‘மாதொருபாகன் நாவலுக்கு தடை விதிக்க முடியாது. இந்த நூலின் பிரதிகள் எதையும் எழுத்தாளர் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு மாவட்ட நிர்வாகமோ, போலீசோ நிபந்தனைகளை விதிக்கமுடியாது, அவர்மீதான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்கிறோம். எழுத்தாளர்கள் தொடர்பான விஷயங்களில் அரசும், காவல்துறையும் எப்படியான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதை மூன்று மாதத்தில் செயல்படுத்த வேண்டும்’ என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவை என்ன விதிமுறைகள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், குடியுரிமைச் சுதந்திரத்துக்கான மக்கள் கூட்டியக்கத்தின் பிரெசிடெண்ட் வக்கீல் V.சுரேஷ் தாக்கல்செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த நெறிமுறைகள் சிலவற்றை நீதிமன்றம் மூன்று மாதத்துக்குள் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த பல நெறிமுறைகளில், மிக முக்கியமான ஐந்து நெறிமுறைகளை மட்டும் நீதிமன்றம் தேர்ந்தெடுத்திருக்கிறது. அவை...

கருத்து சுதந்திரம்:

ஒரு வழக்கை எடுக்கும்போது, கருத்து சுதந்திரத்தை முதலில் மனதில் வைத்துக்கொண்டு அந்த வழக்கை அணுகவேண்டும். சினிமா, பாடல், நூல், கார்ட்டூன் ஆகியவற்றுக்கு எதிராக வழக்கு வரும்போது கருத்து சுதந்திரத்தை பாதிக்காதவகையில் வழக்கை அணுக வேண்டும்.

கலைஞர்கள் கட்டுப்பாடு:

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, கலைஞர்கள்மீது எந்தக் கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது.

நிபுணர் குழு :

இந்த மாதிரியான பிரச்னைகளைக் கையாள அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை அமைக்கவேண்டும். அந்தக் குழுவில் இடம் பெறுபவர்கள் சுதந்திரக் கருத்து கொண்டவர்களாகவும், இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் வழங்கிய கருத்துகள், திட்டங்களை அறிந்து அதன்மூலம் பிரச்னையை நோக்குபவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் வழங்கும் அறிவுரைப்படி உள்ளூர் நிர்வாகமும், காவல்துறையும் இயங்க வேண்டும். தன்னிச்சையாக இதுபோன்ற வழக்குகளில் அவர்கள் நேரடி முடிவு எடுக்கக்கூடாது.

கலைஞர்களுக்குப் பாதுகாப்பு :

எதிர்காலத்தில் ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகளில், சம்மந்தப்பட்ட கலைஞர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

காவல்துறை - நிர்வாகங்களுக்கு கருத்தரங்கங்கள் :

காவல்துறை மற்றும் நிர்வாகத்துக்கு கருத்து சுதந்திரம், கலை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துமளவுக்கு கருத்தரங்கங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்தி உணர்வுகளை ஊட்டவேண்டும்.

படைப்புலகின் வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கும் நீதிமன்றம், பெருமாள் முருகனுக்கும் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறது. எந்த அச்சமும் இன்றி மீண்டும் தனது எழுத்துப்பணியை பெருமாள் முருகன் தொடரவேண்டும் என்று கூறியிருக்கின்றனர். இதைவிட சிறப்பான தீர்ப்பைப் பெறமுடியாது என்று மகிழ்ச்சியில் இருக்கிறார், மாதொருபாகன் நாவலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தின் ஆசிரியர் கண்ணன். மாதொருபாகன் நாவலுக்கு எதிராக வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் ஜோடிக்கப்பட்டவை என்று நிராகரித்த நீதிமன்றம், இந்தப் புத்தகம்பற்றி தவறான பரப்புரையை மக்களிடையே கொண்டுசென்றதால்தான் இந்தப் பிரச்னை இத்தனை பெரிய விஸ்வரூபம் அடைந்தது என்பதை உணர்ந்து, நடந்தவற்றை மறந்துவிட்டு அமைதியான வாழ்க்கையை தொடரும்படி அறிவுறுத்தியிருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னையை உருவாக்க, கருவியாகச் செயல்பட்டிருந்தாலும் உண்மையை உரக்கச் சொல்லவும், நீதிமன்ற தீர்ப்பால் படைப்புலகத்துக்கு புதியவழியைத் திறந்துவிடவும் காரணமாக அமைந்திருக்கிறது மாதொருபாகன்.

தகவல் : ‘காலச்சுவடு’ கண்ணன்

தொகுப்பு : சிவா.

Post a Comment

Powered by Blogger.