Halloween party ideas 2015
.

அர்மேனியாவில் திருத்தந்தை பிரான்சிஸ்

இரண்டாம் நாள்

------------------------------------------------------------------------------------------------------

 

1. Tzitzernakaberd நினைவிடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

 

2. Gyumri நகர் Vartanans வளாகத்தில் திருப்பலி

 

3. கியூம்ரி நகர் வளாகத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

 

4. Gyumri நகர் வளாகத்தில் நடந்த திருப்பலியில் கத்தோலிக்கோஸ் உரை

 

5. திருத்தந்தையின் மருத்துவமனைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி

 

6. அர்மேனிய அரசுத்தலைவர், அதிகாரிகள் சந்திப்பு

 

7. அர்மேனிய அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை

 

8. பிரிட்டன் கருத்து வாக்கெடுப்பின் முடிவு மதிக்கப்பட வேண்டும்

 

9. குண்டூர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. Tzitzernakaberd நினைவிடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

 

ஜூன்,25,2016. "இந்த இடத்தில் என் மனதில் மிகுந்த வேதனையுடன் செபிக்கின்றேன். இத்தகைய பெருந்துன்பம் இனிமேல் ஒருபோதும் நிகழக் கூடாது, மனித சமுதாயம் இதை ஒருபோதும் மறக்கக் கூடாது, நன்மையால் தீமையை எப்படி வெல்வது என்பதை மனித சமுதாயம் அறிந்துகொள்ளும்". இவ்வாறு, அர்மேனிய இனப்படுகொலை நினைவிடத்தில் விருந்தினர் புத்தகத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதினார் திருத்தந்தை பிரான்சிஸ். "அர்மேனிய மக்களின் நினைவை இறைவன் பாதுகாப்பாராக. நினைவு ஒருபோதும் அழிக்கப்படவோ, மறக்கப்படவோ கூடாது. நினைவு, அமைதி மற்றும் வருங்காலத்தின் ஊற்றாகும். தனிநபர்களைப் போன்று மக்களுக்கும் நினைவுகள் உண்டு. உங்கள் மக்களின் நினைவு பழமையானது மற்றும் விலைமதிப்பற்றது" என்றும் எழுதினார் திருத்தந்தை. அர்மேனிய நாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளாகிய இச்சனிக்கிழமை, உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம் காலை பத்து மணிக்கு, Etchmiadzin நகரின் அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைமையகத்திலிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் Tzitzernakaberd நினைவிடத்திற்கு காரில் புறப்பட்டார் திருத்தந்தை. Tzitzernakaberd நினைவிடம், துருக்கியின் ஒட்டமான் பேரரசால், 1915க்கும் 1917ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஆறு இலட்சம் முதல் 15 இலட்சம் அர்மேனியர்கள் வரை படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் இடமாகும். இப்படுகொலை நடத்தப்பட்டதன் எண்பதாம் ஆண்டு நிறைவாக, 1967ம் ஆண்டில் இவ்விடம் அமைக்கப்பட்டது. இது, அந்நாட்டின் 12 மாநிலங்களைக் குறிக்கும் விதமாக, 12 உயர்ந்த தூண்களைக் கொண்டுள்ளது. வட்டவடிவ குன்றின்மீது எழுப்பப்பட்டுள்ள இவ்விடத்திற்கு வந்த திருத்தந்தை, மலர் வளையம் வைத்து, சிரம் தாழ்த்தி அமைதியில், உருக்கமாகச் செபித்தார். அங்கிருந்த அணையாச் சுடரின் முன்பாக திருத்தந்தை செபித்தபோது, குருக்கள் தூபமிட்டுக்கொண்டிருந்தனர். பாடகர் குழு பாடியது. இந்நிகழ்வில், சக்கர நாற்காலியில் இருந்த சில சிறாரும் இருந்தனர். அர்மேனியப் படுகொலை "பெரும் தீமை" என்றும் அழைக்கப்படுகின்றது.

 "பறவைகளின் குன்று(Hill of the Swallows)" எனப்படும் Tzitzernakaberd நினைவிடத்தில், இத்தாலியத்தில் சிறிய செபம் ஒன்றைச் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவே, அர்மேனியர்களின் புனிதர்களை முடிசூட்டுபவரே, அவர்களின் விசுவாச விருப்பத்தை நிறைவேற்றுபவரே, அவர்களை அன்போடும் கனிவோடும் நோக்குகிறீர். எங்களின் விண்ணப்பத்தைக் கேட்டருளும். எங்கள் மீது இரக்கம் வையும், எங்கள் பாவங்களை மன்னித்தருளும். இறைத்தந்தையுடனும், தூய ஆவியாருடனும் சேர்ந்து நன்றியுள்ள இதயங்களுடன் உம்மை மகிமைப்படுத்த எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கும் எனச் செபித்தார் திருத்தந்தை.

பின்னர் அர்மேனிய அரசுத்தலைவர் Serge Sarkisianஅர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவர் 2ம் Karekin ஆகியோருடன் அந்நினைவிடத்தின் பெரிய பூங்காவை, சிறிய திறந்த வாகனத்தில் சுற்றிப் பார்த்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது ஓரிடத்தில் நின்று, இந்நினைவிடத்திற்கு வந்ததன் நினைவாக, ஒரு மரத்தை ஆசீர்வதித்து, அதற்குத் தண்ணீர் ஊற்றினார். அர்மேனியப் படுகொலையின்போது துன்புறுத்தப்பட்டு உயிர்பிழைத்தவர்களின் வாரிசுகள் அவ்விடத்தின் கீழ்தளத்தில் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். அவர்களை ஆசீர்வதித்தார் திருத்தந்தை. அந்தப் பெருந்தீமையில் காப்பாற்றப்பட்ட 400 சிறார் அக்காலத்தில், திருத்தந்தை 11ம் பத்திநாதர் அவர்களால், காஸ்தெல் கந்தோல்ஃபோவில் பல மாதங்கள் விருந்தினர்களாகவும் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தை 11ம் பத்திநாதர்,  திருத்தந்தை 15ம் பெனடிக்ட் ஆகிய இருவரும், ஒட்டமான் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டுமென, சுல்தானுக்கு விண்ணப்பித்திருந்தனர். Tzitzernakaberd நினைவிடத்தில் செபித்து, விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்ட பின்னர், அங்கிருந்து 19 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கின்ற எரேவான் விமான நிலையத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. Gyumri நகர் Vartanans வளாகத்தில் திருப்பலி

 

ஜூன்,25,2016. எரேவான் விமான நிலையத்திலிருந்து ஆல் இத்தாலியா A321 விமானத்தில் Gyumri நகரின் Shirak பன்னாட்டு விமான நிலையத்தை திருத்தந்தை சென்றடைந்தபோது உள்ளூர் நேரம் இச்சனிக்கிழமை காலை 8.35 மணியாகும். இந்திய நேரம் பிற்பகல் 2 மணி 5 நிமிடங்களாகும். Gyumri, வடமேற்கு அர்மேனியாவில், குன்றுகளும், அழகான காட்டு மலர்களும் நிறைந்த நகரமாகும். இது அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமுமாகும். கிறிஸ்தவத்தின் தொட்டிலாக நீண்ட காலமாக விளங்கி வரும் இந்நகரத்தில், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மக்கள் வாழ்ந்து வருவதாக அகழ்வராய்ச்சிகள் கூறுகின்றன. Shirak பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவர் 2ம் Karekin அவர்களுடன் காரில் Gyumri நகரின், Vartanans வளாகம் சென்றார் திருத்தந்தை. அங்குக் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் காரில் வலம் வந்து திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. இந்த மூன்று நாள் அர்மேனியத் திருப்பயணத்தில், திருத்தந்தை பொதுவில் நிகழ்த்திய திருப்பலி இது மட்டுமேயாகும். இறைஇரக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருப்பலியை, இத்தாலியம் மற்றும் அர்மேனிய மொழிகளில் நிறைவேற்றினார் திருத்தந்தை. இத்திருப்பலியின் ஆரம்பத்தில், அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவர் 2ம் Karekin அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். 1988ம் ஆண்டில், அர்மேனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், வீடுகளை இழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை, உடன்பிறப்பு அன்புணர்வில் ஆற்றிய இடர்துடைப்புப் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார் கத்தோலிக்கோஸ் 2ம் Karekin. திருப்பலி தொடர்ந்து நடந்தது. அர்மேனியர்கள், கடும் துன்ப நேரங்களிலும் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாயிருந்ததற்குத் தனது மரியாதையைச் செலுத்தும் நோக்கத்தில் Gyumri சென்றார்      திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியின் இறுதியில் எல்லாருக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை.

இச்சனிக்கிழமை மாலையில், அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைப் பேராலயத்தைப் பார்வையிடுதல், எரேவானில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு ஆகியவை இப்பயணத் திட்டத்தில் இருந்தன. மேலும், இச்சனிக்கிழமையன்று, இந்தியாவின் குண்டூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி Bhagyaiah Chinnabathini அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. கியூம்ரி நகர் வளாகத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

 

ஜூன்,25,2016. "நெடுங்காலமாய் இடிந்து கிடந்தவற்றை அவர்கள் கட்டியெழுப்புவார்கள்; முற்காலமுதல் பாழாய்க் கிடந்தவற்றை நிலைநிறுத்துவார்கள்; தலைமுறை தலைமுறையாக இடிந்து அழிந்துகிடந்த நகர்களைச் சீராக்குவார்கள்." (எசாயா 61:4) 

அன்பு சகோதர, சகோதரிகளே, இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் இவ்விடத்தில் பொருளுள்ளதாகத் தெரிகின்றன. நிலநடுக்கத்தின் அழிவுகளுக்குப் பின், மீண்டும் கட்டியெழுப்பப்பட்டுள்ள அனைத்திற்காகவும் இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்.

நம் வாழ்வில் எதை கட்டியெழுப்ப இறைவன் நம்மை அழைக்கிறார்? எதை அடித்தளமாகக் கொண்டு நம் வாழவைக் கட்டியெழுப்ப வேண்டும்? கிறிஸ்தவ வாழ்வைக் கட்டியெழுப்ப மூன்று அடித்தளங்களை நான் முன்வைக்க விழைகிறேன்.

முதல் அடித்தளம், நம் நினைவுத் திறன். இறைவன் நமக்குச் செய்ததையெல்லாம் நினைவுகூர வேண்டும் என்று இன்றைய நற்செய்தி அழைப்பு விடுக்கிறது (லூக்கா 1:72)

இறைவன் நம் வாழ்வில் ஆற்றிய செயல்களை நினைவுகூர்ந்து, அவற்றை போற்றி பாதுகாக்க வேண்டும்.

மற்றொரு நினைவு, மக்களை சார்ந்தது. அர்மேனிய மக்களின் நினைவுகள், மிகப் பழமை வாய்ந்தவை. உங்கள் வரலாற்றில் பல கொடுமைகளைக் கண்டாலும், இறைவன் உங்களைக் கைவிடவில்லை என்ற உறுதியை நீங்கள் தொடர்ந்து நினைவில் கொள்ளவேண்டும். "அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்" (லூக்கா 1:68) என்று நாம் நற்செய்தியில் வாசித்த வார்த்தைகள், அர்மேனிய மக்களுக்கு மிகவும் பொருத்தமானவை.

நான் கூறவிழையும் இரண்டாவது அடித்தளம், நம்பிக்கை. நம் வரலாற்று நினைவுகளை அருங்காட்சியகப் பொருளாக மாற்றி, பூட்டி வைத்துவிடுவதால், நம் நம்பிக்கையின் ஒளி மங்கிவிடுகிறது. பூட்டிவைக்கப்பட்ட பழைய நினைவுகளில் அல்ல, மாறாக, ஒவ்வொருநாளும் இறைவன் தொடர்ந்து ஆற்றிவரும் செயல்களை உணர்வதால் நம் நம்பிக்கை வாழ்கிறது. ஒவ்வொரு நாள் வாழ்வில் இறைவன் தொடர்ந்து செயலாற்றுவதை உலகறியச் செய்வது, நீங்கள் ஆற்றக்கூடிய நற்செய்திப் பணிஇத்தகையப் பணி, இன்றைய உலகிற்கு மிகவும் தேவைப்படுகிறது.

நினைவுத் திறன், நம்பிக்கை என்ற இரு அடித்தளங்களுக்கு அடுத்ததாகத் தேவைப்படும் மூன்றாவது அடித்தளம், இரக்கம் நிறைந்த அன்பு. இந்த அன்பைச் செயல்படுத்துவதால், திருஅவையின் முகம் புதுப்பிக்கப்பட்டு, அழகு பெறுகிறது. நடைமுறை வாழ்வில் வெளிப்படும் அன்பு, கிறிஸ்தவர்களின் அடையாள அட்டை. வேறு எவ்வகையிலும் நாம் அடையாளப்படுத்தப்படுவது தவறாக முடியும். நாம் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலிருந்து நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர் (யோவான் 13:35).

எங்கெல்லாம் அன்பு உள்ளதோ, குறிப்பாக, வலுவற்றோர், வறியோர் இவர்களிடம் அன்பு காட்டும்போது, அங்கெல்லாம் இறைவன் இருக்கிறார். எதிர்ப்புகளைக் கண்டு மனம் தளராமல், பணியாற்ற விழையும் கிறிஸ்தவர்கள் இன்றைய உலகிற்குத் தேவை. சொல்லால் மட்டுமல்லாமல், செயல்வடிவிலும் தன் சகோதர சகோதரிகளுக்கு உதவும் நல்மனம் கொண்டோர், இன்றைய உலகிற்குத் தேவை.

நம்மிடமும், பிறரிடமும் குறைகள் இருக்கும்போது, எவ்விதம் இரக்கம் காட்டமுடியும்? நரேக் நகர் புனித கிரகோரியின் வாழ்வை எடுத்துக்காட்டாகக் கூற விழைகிறேன். மிகக் கொடுமையான மனித அவலங்களை அவர் அனுபவித்தாலும், இறைவன் மீது நம்பிக்கை தளராமல், செபித்து வந்தவர், புனித கிரகோரி. இறைவனின் இரக்கம் நம் அனைவருக்கும் தேவை என்பதை இப்புனிதர் நமக்குச் சொல்லித் தந்துள்ளார்.

புனித கிரகோரியின் வார்த்தைகளைப் பயன்படுத்தி, இறைவனின் தவறாத அன்பிற்காக மன்றாடுவோம்: தூய ஆவியானவரே, "எம்மைக் காக்கும் சக்தி கொண்டவரே, அமைதியை உருவாக்குபவரே, உம்மிடம் எங்கள் செபங்களை எழுப்புகிறோம். நாங்கள் ஒருவர் ஒருவரை, பிறரன்பாலும், நற்செயல்களாலும் தாங்கிப் பிடிக்க உதவியருளும். இரக்கமே உருவானவரே, எம்மீது இறங்குவீர்".

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

4. Gyumri நகர் வளாகத்தில் நடந்த திருப்பலியில் கத்தோலிக்கோஸ் உரை

 

ஜூன்,25,2016. 1988ம் ஆண்டில், அர்மேனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், வீடுகளை இழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை, உடன்பிறப்பு அன்புணர்வில் ஆற்றிய இடர்துடைப்புப் பணிகளுக்கு நன்றி. இந்நிலநடுக்கத்தில் 25 ஆயிரம் பேர் இறந்தனர். மேலும், Gyumri நகர், அர்மேனியாவின் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாகும். இந்நகரில், அர்மேனியக் கிறிஸ்தவ விழுமியங்கள் மலர்ந்தன. அந்நகர் மக்கள், கிறிஸ்தவ சகோதரத்துவ நல்லிணக்க வாழ்வின் அழகான மரபைக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, இந்நகரின், இறைவனின் தூய அன்னை ஆலயம், சோவியத்தின் கம்யூனிச காலத்தில் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளுக்கும் திறந்திருந்தது. ஏனென்றால், கம்யூனிச காலத்தில், ஆலயங்கள் அழிக்கப்பட்டன அல்லது மூடப்பட்டன. இந்நாட்டு மக்களின் ஆர்வம் நிறைந்த உறுதிப்பாட்டால், புனித Etchmiadzin தலைமை ஆலயமும், இன்னும் சில ஆலயங்களும் இன்னும் திறக்கப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் ஒட்டமான் பேரரசின் அழிவு நடவடிக்கைகள் மற்றும், ஆக்ரமிப்பு அரசியலில், Gyumri மக்களின் உறுதிப்பாடு தனியிடம் பெற்றது....

இவ்வாறு அனைத்து அர்மேனியர்களின் கத்தோலிக்கோஸ் 2ம் Karekin அவர்கள், திருப்பலியின் தொடக்கத்தில் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றியானார். அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவர், பொதுவாக, கத்தோலிக்கோஸ் என அழைக்கப்படுகிறார். 1915ம் ஆண்டில் அர்மேனிய அடக்குமுறையில் இறந்தவர்களில் ஐம்பதாயிரம் பேரை, 2015ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி புனிதர்களாக அறிவித்தது அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவை. ஏப்ரல் 24ம் தேதி இதில் பலியானவர்களின் நினைவு நாளாகவும் அறிவிக்கப்பட்டது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி                                  

 

5. திருத்தந்தையின் மருத்துவமனைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி

 

ஜூன்,25,2016. Gyumri நகர் வளாகத்தில் நடந்த திருப்பலியின் இறுதியில் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையில் இருப்போர்க்கு மிகுந்த மனத்தாராளத்துடனும், பிறரன்புச் செயல்கள் வழியாகவும் உதவும் எல்லாருக்கும், குறிப்பாக, திருத்தந்தையின் மருத்துவமனை வழியாக ஆற்றப்பட்டுவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் விருப்பத்தின்பேரில், 25 ஆண்டுகளுக்கு முன்னர், Ashotskல் இம்மருத்துவமனை தொடங்கப்பட்டது. மேலும், கத்தோலிக்கோஸ். 2ம் Karekin, அரசு அதிகாரிகள், இன்னும் இத்திருப்பலியில் கலந்துகொண்ட எல்லாருக்கும், அண்டை நாடான ஜார்ஜியாவிலிருந்து வந்திருந்த விசுவாசிகளுக்கும், கொல்கத்தா அன்னை தெரேசா சபையினர், அர்மேனிய அமலமரி சபையினருக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை. அனைவருக்கும் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி, இத்திருப்பலியை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலிக்குப் பின்னர், அங்கிருந்து திறந்த காரில், அர்மேனிய அன்னைமரியா அருள்சகோதரிகள் இல்லம் சென்று, அங்குள்ள கருணை இல்லத்தில் வாழும் ஏறத்தாழ அறுபது ஏழை இளையோருடன் சேர்ந்து மதிய உணவருந்தினார் திருத்தந்தை. அதன் பின்னர் அனைவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அர்மேனியா சுதந்திரம் அடைந்தபோது. வீடற்றவர்க்கு உதவும் நோக்கத்தில் இந்தக் கருணை இல்லத்தைத் தொடங்கினர் அர்மேனிய அமலமரி சபை சகோதரிகள்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

6. அர்மேனிய அரசுத்தலைவர், அதிகாரிகள் சந்திப்பு

 

ஜூன்,25,2016. அர்மேனியத் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் மாலையில், தலைநகர் எரேவானில் அரசுத்தலைவர் மாளிகையில், அரசுத்தலைவர் Serž Sargsyan அவர்களைத் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்நாட்டின் பாதுகாவலரான புனித கிரகரியின் பதக்கத்தையும் திருத்தந்தைக்கு அளித்தார் அரசுத்தலைவர் Sargsyan. திருப்பீடத்துக்கும், அர்மேனியாவுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. இது குறுகிய காலம் என்றாலும், 2001ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் மேற்கொண்ட திருப்பயணத்திற்குப் பின்னர் நிறையக் காரியங்கள் நடந்துள்ளன என்று திருத்தந்தையிடம் கூறினார் அரசுத்தலைவர் Sargsyan. திருத்தந்தையும் அர்மேனியாவுக்குத் தன்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அந்த மாளிகையில் அர்மேனிய அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், சமூகக் குழுக்களின் பிரதிநிதிகள் என ஏறக்குறைய 250 பேரைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை. அர்மேனியா, அடக்குமுறையை அறிந்துள்ளது, 20ம் நூற்றாண்டின் முதல் படுகொலையை அனுபவித்துள்ளது. முதல் மறைசாட்சிகளையும்விட, இக்காலக் கிறிஸ்தவர்கள் சில இடங்களில், விசுவாசத்திற்காக, பாகுபாடுகளையும், அடக்குமுறைகளையும் அனுபவிக்கின்றனர் என்றார் திருத்தந்தை. இச்சந்திப்பை நிறைவு செய்து, அங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரம் காரில் Etchmiadzin சென்று, அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவரைச் சந்தித்தார் திருத்தந்தை. அம்மாளிகையில் விருந்தினர் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். மிகுந்த மகிழ்வோடு இங்கிருக்கிறேன். கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிய நம் பயணத்தையும், அர்மேனியாவையும் ஆண்டவர் ஆசீர்வதிக்கச் செபிக்கிறேன் என்று எழுதினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு கனவு நனவாக நாமும் திருத்தந்தையுடன் சேர்ந்து செபிப்போம். இந்த மூன்று நாள் திருத்தூதுப் பயணம் இஞ்ஞாயிறன்று நிறைவடையும். 

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

7. அர்மேனிய அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை

 

ஜூன்,25,2016. அரசுத் தலைவரே, அரசு அதிகாரிகளே, பன்னாட்டுத் தூதர்களே, அன்பு சகோதர, சகோதரிகளே, செறிவு மிகுந்த பழம்பெரும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள மக்களை சந்திப்பது எனக்குப் பெரும் மகிழ்வைத் தருகிறது. எத்தனையோ இன்னல்கள் நடுவில், நீங்கள் காத்து வந்துள்ள நம்பிக்கை, வீரம் மிகுந்த சாட்சியமாகத் திகழ்கிறது.

"எங்கள் நீல வானம், தெளிந்த நீர் நிலைகள், ஒளி வெள்ளம், கோடை வெயில், பழம்பெரும் கற்கள், எங்கள் செபமாக மாறிவிட்ட பழமையான நூல்கள்" என்று உங்கள் கவிஞர் கூறியுள்ள வரிகள், உங்கள் நாட்டின் சக்தி வாய்ந்த அடையாளங்களை பதிவு செய்துள்ளன.

அரசுத் தலைவரே, நீங்களும், அர்மேனிய முதுபெரும் தந்தை, இரண்டாம் கரேக்கின் அவர்களும், மேலும் சில தலைவர்களும், வத்திக்கான், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு நூற்றாண்டு வழிபாட்டில் கலந்து கொண்டீர்கள். "பெரும் தீமை" என்று பொருள்படும் Metz Yeghérn படுகொலையில் உயிரிழந்தோர் நினைவாக அந்த வழிபாடு நிகழ்ந்தது. தவறான முற்சார்பு எண்ணங்களால், ஓரினத்தைச் சேர்ந்தவர்களை முற்றிலும் அழிக்கும் கருத்துடன் சென்ற நூற்றாண்டு நிகழ்ந்த பல்வேறு துயர நிகழ்வுகளின் ஆரம்பமாக இந்த படுகொலைகள் நிகழ்ந்தன.

இத்தகையக் கொடுமைகள் நடுவிலும், நற்செய்தியின் ஒளியுடன், சிலுவை, உயிர்ப்பு ஆகியவற்றில் தங்கள் நம்பிக்கையைக் காத்து வந்த அர்மேனிய மக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். இத்தகையக் கொடுமைகளை மனித சமுதாயம் இனி தொடராது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உரையாடல் வழியே அனைத்து வேறுபாடுகளையும் தீர்ப்பதற்கு எல்லாரும் இணைந்து வரவேண்டும்.

மனிதர்களின் மதிப்பையும், உரிமைகளையும் காக்கும் அனைவரோடும் கத்தோலிக்கத் திருஅவை இணைத்து உழைக்க விரும்புகிறது. இந்நேரத்தில் நாம் ஒன்றை புரிந்துகொள்வது அவசியம். மதத்தின் பெயரால், போர்களையும், அடக்கு முறைகளையும், வன்முறைகளையும் வளர்க்கும் அனைத்து சக்திகளையும் தனிமைப்படுத்தி, கட்டுப்படுத்துவதற்கு, இறை நம்பிக்கையுள்ள அனைவரும் இணைந்து வரவேண்டும்.

இன்றைய உலகில் தங்கள் மத நம்பிக்கைக்காக அடக்கு முறைகளையும், வன்முறைகளையும் சந்திப்போரின் எண்ணிக்கை கூடியுள்ளது. கிறிஸ்தவர்கள் பெரும்பாலான துயரங்களை அனுபவிக்கின்றனர். இக்கொடுமைகளை அகற்றி, நீதியை நிலைநாட்டுவது அரசுகள் மேற்கொள்ளவேண்டிய அவசரமான, முக்கிய முயற்சி.

கொடுமைகளை நேருக்கு நேர் சந்தித்து, அவற்றிலிருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ள அர்மேனிய மக்கள், அனைத்து உலகிற்கும் எடுத்துக்காட்டாக திகழவேண்டும்.

அர்மேனியா நாடு சுதந்திரம் பெற்ற 25வது ஆண்டு இது. நீங்கள் மேற்கொண்டுள்ள கொண்டாட்டங்கள், இந்நாட்டில் வாழ்வோருக்கும், ஏனைய நாடுகளில் வாழும் அர்மேனிய மக்களுக்கும் மகிழ்வை வழங்கட்டும்

உங்கள் நாட்டு வரலாறும், கிறிஸ்தவ மறையின் வரலாறும் இணைந்து சென்றுள்ளன. இந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் மகத்தானவை. இறைவன், அர்மேனியா நாட்டையும், மக்களையும் ஆசீர்வதித்து, காப்பாராக. எத்தனை துயர் வரினும் தொடர்ந்து செல்வதற்கு இந்நாட்டு மக்களிடம் காணப்படும் நம்பிக்கை, உலகினர் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக!

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

8. பிரிட்டன் கருத்து வாக்கெடுப்பின் முடிவு மதிக்கப்பட வேண்டும்

 

ஜூன்,25,2016. அர்மேனியத் தலைநகர் எரேவானுக்குச் சென்ற விமானப் பயணத்தில், பத்திரிகையாளர்களிடம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகிச் செல்வதற்கு நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு பற்றியும் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். இது மக்களின் விருப்பம் என்பதால் இது மதிக்கப்பட வேண்டும் என்றார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர். 

மேலும், கொலம்பியாவில், அரசுக்கும், FARC புரட்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தம் கையெழுத்திடப்பட்டிருப்பது குறித்த மகிழ்வை வெளியிட்டார் திருத்தந்தை.

கொலம்பிய, அரசுக்கும், FARC புரட்சியாளர்களுக்கும் இடையே ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற போர் நிறைய இரத்தம் சிந்தலை ஏற்படுத்தியுள்ளது, போர் நிறுத்த ஒப்பந்தம் நல்ல செய்தியாகும், இச்செய்தி கேட்டு மிகவும் மகிழ்ந்தேன் என்றார் திருத்தந்தை. இம்முயற்சியை எடுத்துள்ள கொலம்பியாவுக்கு, தனது நல்வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

On Flight to Armenia, Pope Comments on Britain's Referendum

 

9. குண்டூர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்

 

ஜூன்,25,2016. இந்தியாவின் குண்டூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி Bhagyaiah Chinnabathini அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆந்திர மாநிலத்திலுள்ள குண்டூர் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய ஆயர்  Gali Bali அவர்களின் பணி ஓய்வை திருஅவை சட்டம் 401,1ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Nalgonda மறைமாவட்டத்தின் Miryalaguda குழந்தை இயேசு திருத்தலப் பங்குக் குருவாகப் பணியாற்றிய அருள்பணி Bhagyaiah Chinnabathini அவர்களை நியமித்துள்ளார்.

1956ம் ஆண்டு Nalgonda மறைமாவட்டத்தில், Motakondur-Yadagirigutta Mandal என்ற ஊரில் பிறந்த புதிய ஆயர் Bhagyaiah அவர்கள், இலக்கியத்திலும், கல்வியியலிலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றிருப்பவர். இவர், 1983ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பின்னர், Nalgonda மறைமாவட்டத்தில் பங்குக் குருவாகவும், மறைமாவட்ட இளையோர் மைய இயக்குனராகவும், இன்னும், ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளில் பங்குக் குருவாகவும் பணியாற்றி இருக்கின்றார். 2011ம் ஆண்டு முதல், Miryalaguda குழந்தை இயேசு திருத்தலப் பங்குக் குருவாகப் பணியாற்றி வந்தார். இவர், இச்சனிக்கிழமையன்று, குண்டூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, நியமிக்கப்பட்டுள்ளார்.  

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

இது இரக்கத்தின் காலம்...

 

இரக்கத்தின் இமயம்

 

குரங்குகளின் அரசனாக இருந்த ஒரு பெரும் குரங்கு, உடல் வலிமையில் மட்டுமல்ல, அன்பாலும், அறிவாலும் உயர்ந்து விளங்கியது. அதன் புகழை விரும்பாத ஒரு சில குரங்குகளும் அந்தக் கூட்டத்தில் இருந்தன.

ஒரு நாள், மனிதப் படையொன்று குரங்குகளை வேட்டையாட வருகின்றது எனக் கேள்விப்பட்டதும், அந்தக் காட்டை விட்டு அடுத்த காட்டுக்கு எல்லாக் குரங்குகளையும் பத்திரமாக அழைத்துச் சென்றது அந்த அரசக் குரங்கு. போகும் வழியில், ஆழமான ஒரு பள்ளம். குரங்குகள் அதைத் தாண்ட முடியாதென உணர்ந்த அரசக் குரங்கு, அந்தப் பள்ளத்தின் இரு ஓரங்களையும் இணைக்கும் பாலமாக தன் உடலை அமைத்தது. எல்லாக் குரங்குகளும் அந்தப் பாலத்தில் நடந்து சென்றன. குரங்குகள் தன்னை மிதித்து நடந்து சென்ற வலிகளையெல்லாம் அந்த அரசக் குரங்கு பொறுத்துக் கொண்டது.

அரசக் குரங்கின் மேல் பொறாமை கொண்ட குரங்குகளில் ஒன்று, இதுவே தகுந்த தருணம் என்று நினைத்து, கூர்மையான ஒரு குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு, அரசக் குரங்கின் உடல் மீது நடந்து சென்று, அதன் இதயத்தை அந்தக் கூரிய குச்சியால் குத்திப் பிளந்தது. வலியால் துடித்த அந்த அரசக் குரங்கு, தன் பிடியைத் தளர்த்தவில்லை. தன்னைக் குத்திய அந்தக் குரங்கு உட்பட, எல்லாக் குரங்குகளும் பத்திரமாகக் கடந்து விட்டபின், மயக்கமுற்று, அந்தப் பள்ளத்தில் விழுந்தது.

குரங்குகளை வேட்டையாட வந்த மனிதப் படையின் தலைவன் நடந்ததனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். மயங்கி விழுந்த குரங்கைக் காப்பாற்ற முயன்றார். மயக்கம் தெளிந்து எழுந்த அரசக் குரங்கிடம், "நீ அந்தக் குரங்குகளுக்கெல்லாம் அரசன். பின் ஏன் இப்படி அவர்களுக்காக உன் உயிரைக் கொடுக்கிறாய்?" என்று கேட்டார். "நான் அவர்களுக்கு அரசன். அதனால்தான்." என்று சொல்லி, அந்த அரசக் குரங்கு உயிர் துறந்தது.

உயிரைத் தருவது, இரக்கத்தின் இமயம்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

 
--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு

SEO/SMO Team

Post a Comment

Powered by Blogger.