Halloween party ideas 2015
.

நான் லண்டனில் வந்து திரையில் பார்க்கும் எம்மவரின் இரண்டாவது முழு நீள திரைப்படம் . முதலில் ஒரு படம் பார்த்தேன். என்னோடு சேர்த்து 5 பேர் தான் அந்த படம் பார்க்க இருந்தார்கள் . லண்டனில் தான் எடுத்திருந்தார்கள் , படத்தின் பெயர் மறந்திட்டுது .லண்டனில் தமிழ் வீடுகளில் நடக்கும் கொள்ளைகளை மையமாக கொண்டு எடுத்திருந்தார்கள். ஆனால் அதை படம் என்று சொன்னால் தியேட்டர் காரனே துரத்தி துரத்தி அடிப்பான் .

சுஜித் ஜி யின் கடைசி தரிப்பிடம் இன்று ஹாரோ பகுதியில் இருக்கும் சபாரி தியேட்டரில் வைத்து வெளியிடப்பட்டது .அந்த தியேட்டரில் இந்திய படங்கள் போட்டாலே பார்க்க ஆட்கள் வரமாட்டார்களாம் . ஆனாலும் என்ன தைரியத்தில் அங்கெ வைத்து வெளியிட தீர்மானித்தார்கள் என்று தெரியல . ஆனாலும் 100 க்கும் மேற்பட்ட மக்கள் படம் பார்க்க வந்திருந்தார்கள்

ஏற்கனவே சுஜித் ஜி யின் ஒரு சில குறும்படங்கள் பார்த்திருந்தால் கொஞ்சம் எதிர் பார்ப்புடனே போனேன் .படம் தொடங்கியது

"லண்டனில் இன்றைய கால கட்டத்தில் வாழ கூடிய தமிழ் மக்களின் வாழ்க்கையை " மையமாக கொண்டு மிக திறமையாக ஒரு மணித்தியாலத்துக்குள் படமாக்கியுள்ளார் சுஜித் ஜி

ஏற்கனவே பல தனி தனி குறும்படங்களாக பலர் சொல்ல முனைந்த புலம்பெயர் வாழ்க்கையினை மொத்தமாக (கிட்ட தட்ட ) ஒரே மணித்தியாலத்தில் திரைப்படமாக்கியுள்ளார் .

இதில் நான் வியந்தது என்ன என்றால் இதில் வரும் எல்லா நடிகர்களூடாகவும் வெவ்வேறு புலம்பெயர் நாட்டில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை யதார்த்தமாக சொல்லி இருக்கிறார்

அண்மையில் பிரித்தானியாவில் திடீரென்று மூடபட்ட பல கல்லூரிகள் அல்லது பல்கலைகழகங்களால் மாணவர் விசா மூலம் வந்தவர்கள் எதிர் கொண்ட பிரச்சனையில் இருந்து , ஒரு வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் , வேலைக்கு போகும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் . விசாவுக்காக இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று பல பிரச்சனைகளை அப்படியே புடம்போட்டு காட்டி கொண்டே கதையை நகர்த்தியுள்ளார்

திரைக்கதையில் விறு விருப்பு இல்லை . ஹீரோஷிஷம் இல்லை . தீம் மியூசிக் இல்லை . ஆனாலும் படம் தொடங்கி சில நிமிடங்களில் இருந்து படம் முடியும் மட்டும் தியேட்டரில் எந்த சலனமும் இல்லை . அந்த அளவுக்கு திரைக்கதைக்குள் போயிருந்தார்கள் அத்தனை பேரும். ஏனெனில் அத்தனை பேருமே அவற்றை நடைமுறையில் கண்டு கொண்டே இருப்பவர்கள் , இதுவே சுஜித் ஜிக்கான அங்கீகாரமாக நான் கருதுகிறேன் .

படத்தில் சில வசனங்களும் சில கட்டங்களும் இங்கே உள்ள பலரை குற்ற உணர்ச்சியால் நிலை குலைய வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை , குறிப்பாக அசேலம் கேஸ் செய்யும் வக்கீல்களை கடுமையாக தாக்கியுள்ளார்

//விசாவை வைச்சு கொண்டு காசு தரட்டாம் ,

ஏன் நீங்க எல்லா காசு கொடுந்திட்டீன்கள் தானே அண்ணா ?

ஓம் . இது சக்சஸ் பீசாம் , பதினைஞ்சு வருஷமாக கேசை வைச்சு இழுத்திட்டு இப்ப சக்சஸ் பீசாம், நல்ல சக்சஸ் , //

இதே மாதிரி வசனங்களாலும் காட்சிகளாலும் நாம் அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்கையை தொய்வில்லாமல் படமாக்கியுள்ளார் .

காதல் திரைப்படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகனும் கதாநாயகியும் இரவில் தங்க இடமில்லாதாதால் ஓடும் பஸ் இல அந்த ஊருக்கும் இந்த ஊருக்குமாக பயணம் செய்வது போல ஒரு காட்சி வைத்திருந்திருப்பார் அந்த படத்தின் இயக்குனர். அதே மாதிரி ஒரு காட்சி . இந்த படத்தில் கதாநாயகன் இல்லை . கதாநாயகியை வீட்டை விட்டு எழும்ப சொல்லியாச்சு . இரவு தங்க இடம் தேவை என்று ஊர்காரன் நண்பனாக நடிக்கும் பாஸ்கி மன்மதனிடம் கேட்கிறார் , அவரும் கூட்டி கொண்டு போய் ஆஸ்பத்திரியின் 24 மணித்தியால சிகிச்சை பிரிவான ANE பகுதியில் இருக்கும் படி சொல்லி விட்டிட்டு போவது போல ஒரு காட்சியை வைத்திருக்கிறார் சுஜித் ஜி

குறியீடுகளாகவும் சில விடயங்களை சொல்லி இருக்கிறார் . ஒரு  காட்சியில் கிளீனிங் வேலை செய்யும் கதாநாயகி கீழே கிடக்கும் விசிட்டிங் கார்ட்டை எடுத்து டஸ்பின்னில் போடும்போது யோசிப்பது போல காட்டிவிட்டு பின்னர் வீட்ட போனவுடன் தனக்கு ஏற்கனவே கடைக்காரர் ஒருவர் தந்த விச்ட்டிங் கார்ட்டை தேடி எடுப்பது போல காட்சி வைத்திருப்பார் . இன்னொரு  வேலையில்லாமல் இருக்கும் கதாநாயகி செலவுக்கு என்ன செய்வார் என்பதை லாட்சியில் சாமான்கள் வைக்கும் போது தான் கொண்டு வந்த 50 பவுண்ட்ஸ் காசு கட்டுகளை காட்டுவதன் மூலம் சொல்லி இருக்கிறார்

இப்படி ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார் .படத்தின் இசையும் காட்சிகளும் மெதுவாக நகர்வது போல இருந்தாலும் முடிவு வரை படத்தின் கதையில் இருந்து விலக முடியல .

கதாநாயகி யாக நடித்தவர் படித்து கொண்டிருக்கும் ஒரு மாணவி , பெயர் பிரியஷா , முதலாவது படமாம் . மிகவும் தரூபமாக நடித்திருக்கிறார் , இறுதிகட்ட காட்சிகள் கண்ணீரை வரவைக்கிறார் . மீண்டும் நடிப்பாரா தெரியல .நடிப்பாராயின் நல்ல எதிர்காலம் இருக்கு .

அடுத்து குறிப்பிட்டு சொல்ல கூடியவர் என்றால் மன்மதன் பாஸ்கி தான் . தனக்கென்று ஒரு பாதை இருந்தும் , கதாநாயகனாக நடித்து கொண்டிருந்தும் ஹீரோவே இல்லாத படம் ஒன்றில் நடிச்சதுக்கு அவரை பாராட்டனும் . அவரின் நடிப்பு பற்றி சொல்ல தேவையில்லை .

எல்லா நடிகர்களும் எங்கள் தமிழில் கதைச்சிருந்தார்கள் . ஆனால் சுஜித் ஜியின் தமிழ் கொழும்பு தமிழ் .
// இங்கே மிச்சம் பேர் இப்படி தான் //

மற்ற நடிகர்களும் நல்லாகவே நடித்திருந்தார்கள் , இன்னொரு நடிகர் பற்றி சொல்லணும் . அவர் தான் ரமேஷ் வேதநாயகம் . சினிமா மீது காதல் கொண்ட ஒருவர் , ரஜினி எபெக்ட் என்று ஒரு படம் கூட இயக்கி இருந்தார் . எனது facebook நண்பராக கூட இருக்கிறார் , அவர் வெறும் ஐந்து செக்கண்ட் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

இசையமைப்பும் எடிட்டிங்கிலும் என்னால் குறை காண முடியல , ஒளிப்படப்படப்பிடிப்பில் ஒரு சில குறைகள் எனக்கு தென்பட்டன . சில இடங்களில் கமெரா நடுங்குவது போல இருந்தது . சில இடங்களில் கமெராவை பிக்ஸ் பண்ணிட்டு சுஜித் ஜி தானே எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன் . ஒரு காட்சியில் கதாநாயகி தந்து அறையில் இருந்து அங்கேயும் இங்கேயும் நடந்து போன் கதைச்சு கொண்டிருப்பார் ,ஆனால் அவற்றின் கால் பகுதியும் தலையில் மேல் பகுதியும் கமேராவுக்குள் அடங்கவில்லை . எடிட்டிங் இல் இதை கவனிக்கவில்லை போல .

லண்டன் வாழ்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் , பல்வேறு துன்பங்களையும் காட்டி இருந்தாலும் இடையிடையே லண்டனில் இருக்கும் நல்லவர்களையும் இனம் காட்ட தவறவில்லை சுஜித் ஜி ,

இயக்குனராக சுஜித் ஜி கவனிக்க தவறியவை .அல்லது இயக்கத்தில் இருக்கும் குறைகள்
high visible என்றழைக்கப்படும் மஞ்சள் கலர் ஜக்கட் வெளிப்பகுதியில் வேலை செய்யும் போதே போடப்பட வேண்டும் .உள்ளே  கிளீனிங் வேலை செய்பவர்கள் போடுவதில்லை . அதே மாதிரி டொயிலெட் கிளீனிங் பண்ணும் போது கட்டாயம் டொயிலெட் பூட்டி இருக்கணும் . ஆட்கள் வந்து போய் கொண்டிருக்கும் டொயிலெட் அமைத்துள்ள இடத்தை மொப் பண்ணும் போது கட்டாயம் "இந்த நிலம் ஈரமாக இருக்கிறது வலுக்கும் அபாயம் உள்ளது " என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் ( அது வழமையாக இங்கே மஞ்சள் நிறத்தில் v வடிவத்தில்  மடிச்சு வைக்க கூடியதாக இருக்கும் ) .

மொத்தத்தில் சுஜித் ஜி யின் கடைசி தரிப்பிடம் அவரின் முழு நீள திரைப்படத்துக்கான முதலாவது தரிப்பிடம்

புலம்பெயர் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தாயகத்தில் கூட அடுத்து வரும் நாட்களில் பேசப்படுகின்ற ஒரு படைப்பாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

வாழ்த்துகள் சுஜித் ஜி மற்றும் பட குழுவினர் ஆகியோருக்கு

நன்றி

Rathan London

Post a Comment

Powered by Blogger.