Halloween party ideas 2015
.

:                                                                                              நாம்தமிழரின் "கண்டிநாயக்கர்" உளறல்கள்-4                                                                                                                                        --------------------------------------------------------------------------
? விஜயநகர ஆட்சி முறை ஒரு கொடுங்கோல் இராணுவ ஆட்சி முறையாகும். மக்களிடமிருந்து நில உடமைகள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டன. பாளையம், பாளையமாக நிலங்கள் பிரிக்கப்பட்டு ஊருக்குஊர் தண்டநாயக்கர்களையும், அமரநாயக்கர்களையும் நியமித்து தமிழ்மக்களை துன்புறுத்தி ஆண்டனர் தெலுங்கு வடுகர்கள். தமிழ்அரசர்கள் தோற்றுவித்த உன்னதமான உள்ளாட்சி முறையை சிதைத்து கொடுமை படுத்தினர் வடுகர்கள்.
                   ***********************
# விஜயநகர ஆட்சி முறை மட்டுமல்ல, அனைத்து மன்னர்களின் ஆட்சியும் மக்களின் உரிமைக்குரலை நசுக்குகிற இராணுவ ஆட்சி முறைதான். விதிவிலக்காக ஒரு சில மன்னர்களிடம் சில நேரங்களில் ஜனநாயக பண்புகள் வெளிப்பட்டிருக்கலாம் இது தனிமனித குணநலனை பொறுத்ததே தவிர ஆட்சிமுறைஎன்பது எப்போதும் ஒடுக்குமுறை ஆட்சிதான். இதுவரை நமக்கு கற்பிக்கப்பட்ட வரலாறு என்ன?
நீதிதவறாத ஆட்சி என்றால் "மனுநீதி"  தவறாத ஆட்சி !  "பொற்கால ஆட்சி" என்றால்  கோயில் காட்டுவதும்,பார்ப்பனர்களுக்கு தானதர்மங்களை வாரிவழங்குவது! இதிலிருந்து சற்று விலகி சென்றவர்கள் களப்பிரர்கள். எனவே அவர்களது ஆட்சிகாலம் " இருண்டகாலம்" என்றுகற்பிக்கப்படுகிறது.இதில் தெலுங்கர்களின் ஆட்சி மட்டும் கொடுங்கோல் ஆட்சி என்பது வெறுப்புனர்ச்சியின் வெளிப்பாடே!
தமிழரின் இழிநிலைக்கு ஒட்டுமொத்த காரணமும் விஜயநகர ஆட்சியின் பாளையப்பட்டு ஆட்சிமுறைதான் என்கிறார்கள்  நாம்தமிழர்கள். இது உண்மையா? சோழர்களின் ஆட்சியில் ஊர், சபை, மண்டலம், நாடு என்ற முறையில் நிர்வாகம் நடைபெற்றது.இதில் இராஜராஜசோழன் காலத்தில் வளநாடு என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. விஜயநகர ஆட்சியில் ஊர், சபை, நாடு என்பதுடன் மண்டலம் அல்லது வளநாடு என்ற பகுதிகள் பாளையங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகம் நடைபெற்றது.இது ஒரு வகையில் அதிகார பரவல்தான்.சோழர்களின் ஆட்சியில் மய்யப்படுத்தப்பட்ட ஒற்றை தலைமையிலான ஆட்சிநடைபெற்றது. நாயக்கர் ஆட்சியில்
பாளையக்காரர்களின் மூலமாக அதிகாரம் செலுத்தப்பட்டது. இவர்கள் சொல்வது போல பாளையங்கள் அனைத்தும்தெலுங்கர்கள் கட்டுப்பாட்டில் மட்டும் இல்லை, தமிழ்பாளையக்காரர்களின் அதிகாரமும் கொடி கட்டி பறந்தது. இதில் குறிப்பிடத்தக்கவர் பூலித்தேவன்.
தண்டநாயக்கர் என்பவர் வரிவசூல் பொறுப்பாளர், அமரநாயக்கர் என்பவர் போர்படை பொறுப்பாளர். இவர்களின் பெயரில் நாயக்கர் என்று இருப்பது  நாம்தமிழர்களுக்கு ஒவ்வாமையாக இருப்பதால் இவர்கள் அனைவரும் கொடுங்கோலர்கள் என்று பொத்தாம்பொதுவில் ஆவணப்படத்தில் அளந்துகொட்டியிருக்கிறார்கள். சோழர்,பாண்டியர் ஆட்சியில் கூட நாடுமுழுவதும் வரிவசூல்பொறுப்பை ஏற்றிருந்த அதிகாரிகளுக்கு "மாதண்டநாயக்கர்" என்ற பட்டம் இருந்தது. அக்காலத்தில் பயிர்களை
கால்நடைகள் அழித்துவிடாமல் காவல்  செய்யும் அடிமட்டதொழிலாளர்களுக்குகூட
காக்கும்நாயக விளாகம், எனறும் காவல்நாயக்கர் என்றும் பெயர் இருந்தது. விட்டால் ,கால்நடைகள் பயிர்களை தின்று பசியாறவிடாமல் தடுத்தவர்கள் இந்த வந்தேறி வடுகர்களான சர்வாதிகார நாயக்கர்கள் என்றுகூட நாம்தமிழர்கள் சொல்வார்கள் போலிருக்கிறது.
நாயக்கர் என்பது ஒரு ஜாதிக்குரிய பெயராக மட்டும் இருந்ததில்லை. பல்வேறு சமூத்தினரும் தங்களது பெயருக்கு பின்னால் அடைமொழியாக நாயக்கர் என்று வைத்துக்கொள்ளும் வழக்கம் நீண்டகாலமாகவே  நடைமுறையில் உள்ளது. நாயக்கர் என்ற பட்டம் தங்களுக்கே உரியது, வேறு எவரும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று தெலுங்கர்கள் தற்போது மட்டுமல்லாமல் தாங்கள் ஆட்சிஅதிகாரத்தில் இருந்தபோதும் தடுத்ததாக தெரியவில்லை. ஆனால் பார்ப்பனர்களுக்கு உரிய துவேதி, திரிவேதி, சதுர்வேதி, சாஸ்திரி, சர்மா,அய்யங்கார், தீட்சதர் பட்டங்களை வேறு எவரும் பயன்படுத்த முடியாது. பயன்படுத்திட பார்ப்பனர்கள் விடவும் மாட்டார்கள். அதுமட்டுமின்றி
இராஜாஜி ஆட்சியில், விஸ்வகர்மா  சமூக மக்கள் தங்களது பெயருக்கு பின்னால் ஆசாரியார் என்றுதான் போட்டுக்கொள்ளவேண்டுமே தவிர பிராமணருக்கு உரிய ஆச்சாரியார் என்பதை பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டதையும், லால்பகதூர்சாஸ்திரி பிரதமரான போது சாஸ்திரி என்பது அவர் பெற்ற பட்டம்தானே தவிர நம்இனத்தின்  சாஸ்திரி இல்லை என்று இராஜாஜி அறிவித்ததையும் இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சமூக நிலை இப்படியிருக்க,தெலுங்கர்கள் தமிழினப்பகைவர்கள் என்றும் பார்ப்பனர்கள் தமிழ்பிராமணர்கள் என்றும் இவர்கள் உளறுவது வாயால்மட்டும் சிரிக்ககூடிய நகைச்சுவை இல்லை. என்னசெய்வது?
அறிஞர்(?) குணாவிடம் அரசியல் பயிலும் சீமானின் தம்பிகளிடம் இதைதாண்டி எதிர்பார்க்க முடியாது.
தமிழ்மக்களை,வரிக்கொடுமையால் வாட்டி கசக்கி பிழிந்து துன்புறுத்தி ஆண்டனர் தெலுங்கு வடுகர்கள் என்று இவர்கள் சொல்வதும் முற்றிலும் உண்மையில்லை.
சேர,சோழ,பாண்டிய ஆட்சியானாலும், விஜயநகர ஆட்சியானாலும், தெலுங்கு பாளையக்காரர்களின் ஆட்சியானாலும், தமிழ் பாளையக்காரர்களின் ஆட்சியானாலும்
அனைவருமே வரிவிதிப்பு முறையை கடுமையாகப் பின்பற்றினர்.  இதிலும் வரிவிலக்கு சலுகைகளை அதிகமாக அனுபவித்தவர்கள் பார்ப்பனர்களே.
எந்த தமிழ்அரசனும், தமிழ்பாளையக்காரரும்
உழைக்கும் தமிழ் மக்களிடம் அன்போடு, பணிந்து வணங்கி வரிவசூலித்தார்கள் என்று எந்த வரலாற்று பதிவும் இல்லை.
இவர்கள் மிகவும் உச்சிமுகர்ந்து மெச்சுகிற இராஜராஜ சோழனின் ஆட்சிகாலத்தில்,
வட்டிநாழி ( வட்டிக்கு வரி)
கண்ணாலக்காணம்( திருமணவரி)
வண்ணாரப்பறை ( சலவைத்தொழிலாளர் செலுத்தும் வரி)
குசக்காணம் ( குயவர்களுக்கான வரி)
தறிப்புடவை ( நெசவாளர் வரி)
தட்டார்பாட்டம்( கொல்லர்களுக்கான வரி)
இடைப்பாட்டம் ( இடையர்களுக்கான வரி)
ஊடுபோக்கு( ஊடுபயிர் செய்திட வரி)
விற்பிடி (வில்வித்தை கற்போருக்கான வரி)
ஓடக்கூலி( ஒடக்காரர்கள் செலுத்தும் வரி)
தீயெறி( கோயில் வழிபாட்டு வரி)
கூத்திக்கால்( நாட்டியமகளிர் செலுத்தும் வரி)
என்ற வரிவிதிப்பு முறைகள் இருந்தன
என்பது 'ஆனைமங்கலச்செப்பேடுகள்" சொல்லும் செய்தி. இப்படி சமூகத்தின் கடைநிலை மக்கள் அனைவருக்கும் வரி விதித்து அந்த வருவாயின் பெரும்பகுதியை கோயில் கட்டவும், பிராமண தானம் செய்யவும் பயன்படுத்திய இராஜராஜ சோழனின் ஆட்சி உன்னதமான மக்களாட்சி,
இதையே விஜயநகர மன்னர்கள் செய்தால் அது வந்தேறி வடுக கொடுங்கோல் ஆட்சி?
நாம்தமிழர்களின் இந்த அளவுகோல் சரியானதா? சிந்தியுங்கள்!
இப்படிசொல்வதனால் விஜயநகர ஆட்சிமுறை சரியானது, நியாயமானது,நீதியானது என்று பொருளல்ல. மாறாக அன்றைக்கு ஆண்ட அத்தனை மன்னனும், உழைப்பவரை கசக்கிபிழிந்து உழைக்காத உஞ்சவிருத்தி பார்ப்பனர்களுக்கு அள்ளிக்கொடுத்து அவர்களின் காலை கழுவி குடித்தவர்கள்தான். (இன்று மட்டும் என்ன வாழுகிறது?)
நீதிக்கட்சி காலம் வரை பெண்களுக்கும்,ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வாக்குரிமை இல்லை என்பதிலிருந்தே இவர்களின் உன்னதமான உள்ளாட்சி முறை எந்த யோக்கியதையில் இருந்தது என்பதை உணரமுடியும்.
இந்த மன்னர்களின் ஆட்சி முறை,
நீதி நிர்வாகமுறை எப்படியிருந்தாலும் ஒருவன் ஏன் மேல் ஜாதி? இன்னொருவன் ஏன் கீழ் ஜாதி?  என்று கேட்கிற துணிவும்,தெம்பும்,திராணியும் எந்த மன்னாதிமன்னனுக்கும், மாவீரசக்கரவர்த்திக்கும், பேரரசனுக்கும் இருந்ததாக தெரியவில்லை. இதற்கு விஜயநகரப் பேரரசும் விதிவிலக்கில்லை!
எனவேதான் இந்த மன்னர்களின் யோக்கியதையை மக்கள் முன் அம்பலபடுத்தி காறிஉமிழ்ந்தார் தந்தைபெரியார்.
-சீனி விடுதலையரசு (தந்தை பெரியார் திராவிடர் கழக துணை பிரச்சார செயலாளர்)

Post a Comment

Powered by Blogger.