Halloween party ideas 2015
.

ஹூஸ்டனில் உள்ள பெடரல் நீதிமன்றம் முன்பு போராட்டத்தில் சகதோழர்களுடன் முகம்மது அலி. (1967)

அது 1967ம் ஆண்டு ஏப்ரல் 29ம் நாள்.அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைநகர் ஹூஸ்டன் மாநகரம். உயர்ந்து நிற்கும் பழைய தலைமை அஞ்சலக கட்டிடத்தில் ஒரு அறையில் 11 பேர் வரிசையாக நிற்கிறார்கள்.ஒவ்வொர­ுவராக பெயர் அழைக்கப்படுகிறது. பெயருக்குரியவர்கள் சென்று, விறைப்பாக சல்யூட் அடித்துவிட்டு ஒப்புதல் பத்திரத்தில் கையெழுத்திடுகிறார்கள­்.கறுப்பினத்தைச் சேர்ந்த, முஸ்லிம் பெயரை தாங்கிய அந்த இளைஞனின் பெயர் அழைக்கப்படுகிறது. சில நிமிடங்கள் ஆகியும் அந்த இளைஞன் முன்னால் சென்று சல்யூட் அடிக்கவில்லை. அப்போதுதான் நிமிர்ந்தே பார்க்கிறார், அந்த இளைஞனின் பெயரை அழைத்த அதிகாரி. அமெரிக்க ராணுவத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவர் அவர்.பெயரை சொன்னதுமே முன்னால் வந்து மரியாதை செலுத்தாததே அந்த ராணுவ அதிகாரியை பொறுத்தவரை பெரிய குற்றம்தான். ஆனால் அதையும் விட பெரிய குற்றத்தை செய்தான் அந்த இளைஞன்.“மிஸ்டர் அலி, கொஞ்சம் முன்னால் வருகிறீர்களா?”அலி ஒன்றும் பேசவில்லை.உடனே பதறிப்போன சேவக அதிகாரிகள் சிலர், அந்த இளைஞனை அறைக்கு வெளியே அழைத்து வந்து, இதற்கு நீ ஒப்புக் கொள்ளாவிட்டால் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று தெரியுமா என மிரட்டி பணியவைக்க முயன்றார்கள்.பின்னர்­ மீண்டும் அறைக்கு அழைத்துச் சென்று சில நிமிடங்கள் அவகாசம் தந்தார்கள். மீண்டும் பெயர் அழைக்கப்பட்டது. மீண்டும் சல்யூட் அடிக்க மறுத்தான் அந்த இளைஞன். ஒப்புதல் பத்திரத்தில் கையெழுத்திட மறுத்தான் அந்த இளைஞன்.உங்களது முயற்சிக்கு என்னால் ஒத்துழைக்க முடியாது என்று, கோபம் கொப்பளிக்க பார்த்துக் கொண்டிருந்த ராணுவ அதிகாரியின் முன்னால் கடகடவென எழுதி கையெழுத்திட்டு கொடுத்துவிட்டு வெளியேறினான்.நேராக அந்த ஹூஸ்டன் மாநகரின் பெடரல் நீதிமன்றத்தின் முன்பு ஆயிரக்கணக்கில் கூடியிருந்த தனது சக இளைஞர்களோடு கரம்கோர்த்தான்.

விண்ணதிரும் முழக்கம் எழுந்தது... ஓ.. அமெரிக்காவே... வியட்நாமை தாக்காதே...!அடுத்தகண­மே அந்த இளைஞனின் பதக்கங்கள் பறிக்கப்பட்டன. உலக குத்துச் சண்டை அசோசியேசன், நியூயார்க் குத்துச் சண்டை கமிஷன், டெக்ஸாஸ் குத்துச் சண்டை கமிஷன் ஆகிய அமைப்புகள் அந்த இளைஞனை உடனே வெளியேற்றுவதாக அறிவிப்பை வெளியிட்டன.வியட்நாமை­ தாக்காதே என்று அமெரிக்காவிலேயே பகிரங்கமாக முழக்கமிட்ட முதல் மாபெரும் சக்தி அந்த இளைஞன். அவனது பெயர் முகம்மது அலி.“அவர்கள் ஏன் என்னை ராணுவச் சீருடை அணிந்து கொண்டு 10 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று அந்த அப்பாவி வியட்நாமிய ஏழை மக்கள் மீது குண்டு போடச் சொல்கிறார்கள்; அவர்களை துப்பாக்கியால் சல்லடையாக துளைக்கச் சொல்கிறார்கள்; இங்கே எங்களது சொந்த ஊரான லூயிஸ்வில்லேயில் கறுப்பின நீக்ரோ மக்களை நாய்களை போல நடத்துகிற இவர்கள், வியட்நாமிய மக்களிடம் என்ன குறை கண்டார்கள்; இங்கே மனித உரிமைகளை முற்றாக புறந்தள்ளுகிற இவர்கள், வியட்நாமிய மக்களுக்கு பாடம்புகட்ட நினைப்பதாக கூறுவதில், என்ன அர்த்தம் இருக்கிறது?இல்லை, நான் செல்ல மாட்டேன். 10 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று அந்த ஏழை நாட்டின் மக்களை படுகொலை செய்வதற்கும், நாட்டையே எரித்து சாம்பலாக்குவதற்கும் நான் உதவ மாட்டேன்; இவர்கள் ஏன் அதை செய்ய விரும்புகிறார்கள்...­ உலகம் முழுவதும் கறுப்பு நிறமாக உள்ள அனைத்து மக்களையும் வெள்ளை எஜமானர்களின் அடிமைகளாக்க முயற்சிக்கிறார்கள்; அந்த அடிமைத்தனம் தொடர வேண்டுமென்று விரும்புகிறார்கள். இத்தகைய தீமைகளுக்கு ஒரு முடிவு கட்டுகிற நாளாக இந்த நாள் அமையட்டும். நான் இந்த முடிவினை எடுத்தால் என்ன கதி நேரிடும் என்பது எனக்கு தெரியும். அவர்களே பகிரங்கமாக மிரட்டினார்கள். நான் குத்துச் சண்டை போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் என்ற முறையில் உருவாக்கி வைத்திருக்கிற எனது கவுரவம் பறிக்கப்படும் என்று மிரட்டினார்கள். அதன்மூலம் லட்சக்கணக்கான டாலர் வருமானத்தை இழக்க நேரிடும் என்று மிரட்டினார்கள்.ஆனால்­, நான் எனது நிலைபாட்டில் உறுதியாக நிற்கிறேன். நான் அதை எப்போதும் உரக்கச் சொல்வேன். எனது மக்களின் உண்மையான எதிரிகள் வியட்நாமில் இல்லை; உண்மையான எதிரிகள் இங்கேயே இருக்கிறார்கள். நான் எனது மக்களுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை;

நான் வரித்து கொண்ட மதத்திற்கு துரோகம் செய்ய விரும்பவில்லை; தங்களது சொந்த விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்திற்காக வியட்நாமில் போராடிக் கொண்டிருக்கிற மக்களுக்கு எதிரான ஒரு அடிமைக் கருவியாக ஒருபோதும் என்னை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்.வியட்நாமில்­ யுத்தம் நடத்தினால், அந்த யுத்தம் எனது சொந்தங்களான 22 மில்லியன் அமெரிக்க கறுப்பின மக்களுக்கு சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் கொண்டு வருமானால், இதோ எனது பெயரை எழுதிக் கொள்ளுங்கள்.. நாளைக்கே நான் ராணுவ வீரனாக புறப்படுகிறேன். ஆனால், வியட்நாம் மீதான யுத்தத்தால் எனது மக்களுக்கு எந்த விடுதலையும் கிடைக்கப் போவதில்லை. எனக்கு தெரியும், என்னை சிறையில் அடைப்பார்கள். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஏனென்றால் நாங்கள் 400 வருடங்களாக சிறையில்தான் இருக்கிறோம்.”- கூடியிருந்த இளைஞர்களிடையே கர்ஜித்தான் முகம்மது அலி. அப்போது அவனுக்கு வயது 26 மட்டுமே.கேஸியஸ் கிளே என்ற இயற்பெயர் கொண்ட கிறிஸ்தவ கறுப்பின இளைஞன், தனது பெயரை 1964ம் ஆண்டு தனது 22வது வயதில் முதல்முறையாக ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, முஸ்லிமாக மதம் மாறி முகம்மது அலி என மாற்றிக் கொண்டான்.முதல்முறையா­க சாம்பியன் பட்டத்தை வென்றபோது, “நான் இந்த உலகை குலுக்கிவிட்டேன்“ என்று முழக்கமிட்டு பதக்கத்தை முத்தமிட்டான். அப்போது மட்டுமல்ல, அவன் தனது பெயரை முகம்மது அலி என்று மாற்றிக் கொண்டபோது மட்டுமல்ல... அமெரிக்காவிலேயே அமெரிக்க அரசுக்கு எதிராக - வியட்நாமுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான இளைஞர்களோடு விண்ணதிர முழக்கமிட்டானே அந்த தருணத்தில்தான் உண்மையிலேயே உலகை குலுக்கினான். வியட்நாமிற்கு ஆதரவான குரல், அதற்குப் பிறகுதான் அமெரிக்கா முழுவதும் பேரெழுச்சியோடு எழுந்தது. கறுப்பின மக்கள் அமெரிக்க அரசின் போர்வெறிக்கு எதிராகவும், இனவெறிக்கு எதிராகவும், நிறவெறிக்கு எதிராகவும் பிரம்மாண்டமான போராட்டங்களை நடத்தினார்கள்.குத்து­ச் சண்டை போட்டி நடக்கும் களத்தில் எதிர்த்து விளையாடும் வீரரை ஒரு கணம் கூட நிதானிக்க விடாமல் அதிரடி தாக்குதல் தொடுக்கும் வல்லமை படைத்த முகம்மது அலி, போராட்டக்களத்தில் அமெரிக்க அரசுக்கு எதிராக இடைவிடாமல் அதிரடி தாக்குதல் தொடுத்தார்.ஏகாதிபத்த­ிய வெறிபிடித்த அமெரிக்க அரசு, அவரை சும்மா விடவில்லை. வியட்நாமிற்கு செல்ல முடியாது என்று கூறிய அடுத்த நிமிடமே அவரது பதக்கங்கள் பறிக்கப்பட்டது மட்டுமல்ல, ராணுவ உத்தரவை மீறியதற்காக அவருக்கு ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. குத்துச் சண்டை போட்டியில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. நாடு கடத்தும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.இ­தை எதிர்த்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் முகம்மது அலி மேல்முறையீடு செய்து அந்த வழக்கு மூன்றாண்டு காலம் நடந்தது. மேல்முறையீடு வழக்கு நடந்து கொண்டிருந்ததால் அவர் சிறையில் அடைக்கப்படுவது தவிர்க்கப்பட்டது. வழக்கின் முடிவில், அவர் மீதான தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதற்குப் பிறகு இன்னும் உத்வேகத்தோடு எழுந்து வந்தார் முகம்மது அலி.இடைப்பட்ட மூன்றாண்டு காலத்தில் அமெரிக்கா முழுவதும் கல்லூரி மாணவர்களை முகம்மது அலியும், அவரது சகதோழர்களும் சந்தித்தார்கள். ஒவ்வொரு கல்லூரி வளாகத்திலும் முகம்மது அலியின் ஆவேசமான பேச்சு மாணவர்களை ஈர்த்தது. போர்வெறிக்கு எதிராகவும், நிறவெறிக்கு எதிராகவும் முழங்கினார் முகம்மது அலி.அந்த காலகட்டத்தில் இந்தப் பேச்சுக்கள் எல்லாம் பதிவு செய்யப்படவில்லை ஆனால், அவரது நண்பர்கள் சில பேட்டிகளில் அவரது பேச்சுக்களை பதிவு செய்துள்ளனர்.“நாம் எல்லோரும் மூளைச் சலவை செய்யப்பட்டு இந்த நாட்டில் இருக்கிறோம். எல்லாமே வெள்ளையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இயேசுவை பார்க்கிறோம், அவருக்கு வெள்ளை முடியை வைத்து விட்டார்கள். நான் இப்போது சொல்கிறேன். சொர்க்கம் எப்படி இருக்கும் தெரியுமா, அதுவும் வெள்ளையாகத்தான் இருக்கும். நீங்கள் சொர்க்கத்திற்கு போனால்தான் அது தெரியும். அங்கு தேவதைகள் வெண்மையான உடை அணிந்திருப்பார்கள். ஆனால் அந்த தேவதைக்கும் கூட இவர்கள் சமையலறை வேலையைத்தான் கொடுத்திருப்பார்கள்.­ மிஸ் அமெரிக்காவை பாருங்கள், அவர் ஒரு வெள்ளை பெண்மணி. உலக அழகியை பாருங்கள் அவர் ஒரு வெள்ளைப் பெண்மணி. பிரபஞ்ச அழகியை பாருங்கள் அவளும் ஒரு வெள்ளைப் பெண்மணி. முற்றிலும் கறுப்பின மக்கள் நிறைந்த ஆப்பிரிக்காவின் காடுகளது அரசனான டார்ஜானை கூட இவர்கள் வெள்ளையாக காட்டிவிட்டார்கள். வெள்ளை சிகரெட்டுகள். வெள்ளை ஸ்வான் சோப்புகள். வெள்ளை டிஸ்யூ பேப்பர்கள். முடிகளுக்கு டை அடிப்பதற்கு கூட வெள்ளை பவுடர்கள். எல்லாமே வெள்ளைமயம். இங்கே சிறுவர்கள் விளையாடுவதற்கு கூட வெள்ளை குதிரைகள்தான் காட்டப்படுகின்றன. சிறந்த உணவு வெள்ளை கேக்குகள் என்று தான் சொல்லப்படுகின்றன.கறு­ப்புநிறம் கொண்ட, காக்கி நிறம் கொண்ட சாக்லேட் வகை கேக்குகள் - அவை சாக்லேட்டுகளாக இருந்த போதிலும் பிசாசுகளின் உணவு என்று சிறுமைப்படுத்துகிறார­்கள்.


கறுப்பை விட வெள்ளைதான் உயர்ந்தது என்ற மிகப் பெரும் பொய்யை உண்மையென நமது மக்கள் நம்பவைக்கப்பட்டிருக்­கிறார்கள். அதற்கு முடிவு கட்டுவது எப்போது?”.

- இப்படி அதிரடியான பேச்சுக்களை முழங்கினார் முகம்மது அலி.முஸ்லிமாக மதம் மாறிய போது, முகம்மது அலி மீது மோசமான முத்திரை குத்த அமெரிக்க அரசு முயற்சித்தது. ஆனால் உண்மையின் கதாநாயகனாக, அமைதியின் தூதுவனாக அமெரிக்க கறுப்பின மக்களின் அன்பை மட்டுமல்ல, உலக நாடுகளின் கோடிக்கணக்கான மக்களின் அன்பையும் பெற்றிருந்த முகம்மது அலியை அமெரிக்க அரசு, வேறுவழியின்றி பாராட்டியது.“மிஸ்டர்­ இண்டர்நேசனல் பிரண்ட்ஷிப்” (திருவாளர் சர்வதேச நண்பர்) என்று அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது வாயால் பாராட்டினார். அமெரிக்காவில் செயல்பட்டு வந்த நேசன் இஸ்லாம் என்ற அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்த முகம்மது அலி, பின்நாட்களில் அந்த அமைப்பினரின் செயல்பாடுகளில் அதிருப்தி கொண்டு வெளியேறிவிட்டார் என்றும் ஒரு தகவல் உண்டு.முஸ்லிமாக மதம் மாறியது, தன்னை ஒரு அமைதியின் தூதுவனாக முன்னிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் என்பதை முகம்மது அலியே பின்னால் குறிப்பிட்டார். “நான் ஒரு குத்துச் சண்டை வீரன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதையும் தாண்டி நான் உண்மையின் மனிதன். இஸ்லாம் என்பது பயங்கரவாதிகளுடன் ஒப்பிடப்படுகிறது; ஆனால் உண்மையில் இஸ்லாம் என்பது பயங்கரவாதத்தை பிரதிநிதித்துவப்படுத­்தியிருந்தால் நான் ஒரு இஸ்லாமியனாக மாறியிருக்க மாட்டேன்... உண்மையில் இஸ்லாம் என்பது அமைதி; இஸ்லாம் என்பது கொலைக்கு எதிரானது; இஸ்லாம் என்பது படுகொலைகளுக்கு எதிரானது; இஸ்லாம் என்பது பயங்கரவாதத்திற்கு எதிரானது இஸ்லாத்தின் பெயரால் கொலையும், பயங்கரவாதமும் சிலரால் பின்பற்றப்படுமானால் அதுவே இஸ்லாத்திற்கு எதிரானது” என்று தெளிவான பார்வையை எப்போதும் முன்வைத்தார் முகம்மது அலி.தேசபக்தி என்ற பெயரில் அமெரிக்கா முன்வைத்த போர்வெறியையும், நிறவெறியையும், முஸ்லிம் எதிர்ப்பையும் ஒருசேர நிராகரித்தார் முகம்மது அலி.“தேசபக்தி என்பதை கண்மூடித்தனமாக முன்னிறுத்தும் சக்திகள், மாற்றுக் கருத்துக்களை தவறானவை என்று நிராகரிப்பது மட்டுமல்ல; மாற்றுக் கருத்து சொல்வதே தவறானது என்றும், போராட்டம் நடத்துவது நாட்டிற்கே எதிரானது என்றும், மாற்றுக் கருத்தை முன்வைத்து போராடுவதும், மக்களை திரட்டுவதும் தேசவிரோதம் என்றும் இடைவிடாமல் கூச்சலிட்டு வருகின்றன. இந்த கூச்சலை முற்றாக நிராகரித்தவன் முகம்மது அலி. அதனால்தான் அவன் இந்த உலகையே குலுக்கிய ஒரு சக்தியாக இன்றும் திகழ்கிறான்“ என அலியுடனே இளமைக்காலத்தில் பயணித்த ரெவரண்டு ஜெஸ்சி ஜாக்ஸன் கூறுகிறார்.இன்றும் அது பொருந்துகிறது.இந்திய­ாவுக்கும் அது பொருந்துகிறது.முகம்ம­து அலி நீடுழி வாழ்க

Post a Comment

Powered by Blogger.