Halloween party ideas 2015
.

மனித உரிமை ஆர்வலரும் தமிழ்த் தேசப்பற்றாளருமான திரு. சேவியர் அவர்களின் மறைவையொட்டி இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் அவர்கள்,  இனப் பற்றாளர்களும், அர்ப்பணிப்போடு செயலாற்றும் திறன் கொண்டவர்களும் எமது இனத்தின் விடுதலைக்கு மிகவும் இன்றியமையாதவர்களாவர்  எனத் தெரிவித்துள்ளார். 

பிரதமர் ருத்திரகுமாரன்  அவர்களது  இரங்கல் செய்தியின் முழுவடிவம் : 

  மனித உரிமை ஆர்வலரும் தமிழ்த் தேசப்பற்றாளரும் சிறந்ததோர் மனிதராக விளங்கியவருமான திரு பிரான்சிஸ் சேவியர் அவர்களது மறைவு பற்றிய செய்தியறிந்து நான் மிகவும் கவலையடைகின்றேன். 

அன்னாரை நான் கடந்த நான்கு தசாப்தங்களாக நன்கறிவேன். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் தமிழ் இளைஞர்கள் விரும்பியபடியெல்லாம் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்து, கைது செய்யப்பட்டவர்களின் சார்பில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்தவர்களிடையே திரு சேவியர் முன்னணியில் நின்று செயல்பட்ட ஒருவர். இந்த அரிய பணியை அவர் எவ்வித ஊதியமுமின்றி ஆற்றிவந்தார் என்பதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

மனித உரிமைகள் தொடர்பான பணியில் அன்னார் கனடா நாட்டிலும் அரும்பணியாற்றியுள்ளார். பல தமிழ் அகதிகள் சார்பிலும், குறிப்பாக பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டோர் சார்பிலும் அவர் தனது சேவையை வழங்கியுள்ளார். 1977ஆம்ஆண்டில் இடம் பெற்ற இனப்படுகொலைகளைத் தொடர்ந்து அன்னார் தனது சகாக்கள் இருவரோடிணைந்து 'மனித உரிமைகளுக்கான இல்லம்' ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்ததோடு அவ்வமைப்பின் அறக்கட்டளை நிதியத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராக இறுதி வரை பணியாற்றி வந்துள்ளார்.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களின் யதார்த்தத்தை அனைத்துலக அளவில் வெளிக்கொணரும் காலம் கனிந்து வரும் இவ்வேளையில் திரு. சேவியர் அவர்களின் மறைவு மிகவும் துரதிஷ்டவசமானதாகும். இக்கால கட்டத்தில் அவரைப் போன்ற திறமை படைத்த சட்ட வல்லுனர்களும், இனப் பற்றாளர்களும், அர்ப்பணிப்போடு செயலாற்றும் திறன் கொண்டவர்களும் எமது இனத்தின் விடுதலைக்கு மிகவும் இன்றியமையாதவர்களாவர்.   

திரு சேவியர் அவர்களின் மறைவினால் நாம் மனம் கலங்கி நிற்கின்றோம். அதேவேளையில், அவர் விட்டுச் செல்கின்ற அவரது நற்பண்புகளான அர்ப்பணிப்பு, மனஉறுதி, எளிமை என்பன என்றென்றும் எம்மையெல்லாம் ஊக்குவிக்குமெனவே நம்புகிறோம். 

இந்த வேளையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலும் என் சார்பிலும் அன்னாரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அவரிடம் தொழில்சார் அறிவுரை பெறும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், மனித மாண்பும், உரிமைகளும் மேலோங்கி நிற்கும் ஒரு சமுதாயத்தை எதிர் பார்த்து நிற்கும் அனைத்து உள்ளங்களுடனும் நாமும் இணைந்து அன்னாரின் ஆத்ம சாந்தியை வேண்டி நிற்கிறோம்.

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

Post a Comment

Powered by Blogger.