Halloween party ideas 2015
.


தமிழர் நலனுக்காகப் பிறர் குரல் கொடுக்கக்கூடாதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் நலனுக்காகப் பிறர் குரல் கொடுக்கக்கூடாதா?


   ஒருவர் நலனுக்காக மற்றவர் குரல்கொடுக்கக்கூடாது என்பதும் ஓர் இனத்தவரின் நலனுக்காகப் பிற இனத்தவர் குரல் கொடுக்கக்கூடாது என்பதும் அறியாமையல்லவா? இனப்பற்றை ஆரவாரச் செயலாகக் கருதுபவர்கள் அப்படித்தான்  அறியாமை மிகுந்தவர்களாக இருக்கின்றனர். சான்றுக்கு ஒன்று பார்ப்போம்!
  அண்மையில் எழுவர் பேரணிக்காக, வேலூரில் இருந்து சென்னை வரை ஊர்திப்பேரணி நடப்பதாக இருந்ததை அனைவரும் அறிவர்! அந்தப் பேரணிக்குப் பலதரப்பட்டாரும் ஆதரவு தெரிவித்தனர். அதுபோல் நடிகர்  விசய்சேதுபதியும் 25 ஆண்டுகளாக அறமுறையின்றி அடைத்துவைக்கப்பட்டிருப்பதைக் கொடுமையாகக் கூறித் தானும் அப்பேரணியில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். உடன் ஆரவாரக் கூட்டத்தினர், "தெலுங்கன் நீ எப்படிக் குரல்கொடுக்கலாம்" எனக் கூக்குரல் இட்டுள்ளனர். வி்சய் சேதுபதி தமிழரா அல்லரா என்பதைப் பிறகு பார்ப்போம்! அவர் தெலுங்கர் என்றே வைத்துக்கொள்வோம்! நம் இனத்தவர் நலன்என்பது நமது போராட்டங்களால்மட்டும் கைகூடும் என்பது இன்றைய சூழலில் ஏற்கக்கூடியதா? உலக அளவில் இதற்கு வரவேற்பு வேண்டும் என்னும் நாம் இந்தியத் துணைக்கண்டத்தில் அதற்கான கருத்தாதரவைத் திரட்ட வேண்டாவா? இங்குள்ள  ஈழத்தமிழர் நலன்களுக்கும் தமிழ்ஈழ மக்கள் படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் தமிழரின் தாயகமான தமிழீழம் விடுதலை பெறவும் நாம் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள பிறரிடம் ஆதரவு பெற வேண்டுமல்லவா? இந்திய அளவில்   நெருக்கடி கொடுத்தால்தானே நாம் மத்தியஅரசை அடிபணியச் செய்ய முடியும்! குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டி என்ன பயன்?
  நாம் முதலில் தமிழ்நாட்டில்வாழும் பிற இனத்தவரினடம் இதற்கான ஆதரவைப் பெற்று அவர்கள் வாயிலாகப் பிற மாநிலத்தவர் ஆதரவு பெறுவதுதானே நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும்?
  இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டு மண்ணின் மைந்தர்களின் நலன்களில் பாராமுகமாக வாழ்வது என்பது சரியல்லவே! ஆனால், நமக்காகக் குரல் கொடுக்கவும் கை கொடுக்கவும் வருபவர்களையும் நாம் விரட்டியடித்தால், உண்மையில் விரட்டியடிப்போர்தானே இனப்பகைவராவார்.
  தமிழனைப்போல் திரையில் நடித்துவிட்டு உண்மையில் தமிழர்க்கு எதிராகச் செயல்பட்டால் அத்தகையவரை எதிர்க்கலாம். ஆனால், திரைக்கு  வெளியே தமிழர்க்காகக் குரல்  கொடுப்பவரை மதித்து வரவேற்காமல் விரட்டியடிப்பது பண்பாடா? நடிகர் விசய்சேதுபதி நன்கு வளர்ந்து வரும் பண்பட்ட கலைஞராகத் திகழ்கிறார். அவருக்கென்றும் நேயர் கூட்டம் உள்ளது. திரைப்படக் கலைஞர்களைத் தெய்வத்திற்கு மேலாகவும எண்ணுவதே மக்களின் பழக்கமாகப் போகிவிட்டது. அத்தகைய நேயர்கள் இவரின் குரலைப்பின்பற்றி எதிரொலிப்பது  கருத்தாதரவு பெருக்கத்திற்குத்தானே வழிவகுக்கும்! அவ்வாறிருக்க வரவேற்காவிட்டாலும் பரவாயில்லை, எதிர்க்கலாமா? இவர்களின் தனிப்பட்ட சிக்கல்களுக்கு இத்தகையோர் ஆதரவை இழக்க அவர்கள் முன்வரலாம். ஆனால், பிறருக்குத் தெரிவிக்கும் ஆதரவை எதிர்ப்பதற்கு இவர்களுக்கு யார் உரிமை கொடுத்ததுபேரறிவாளன் முதலானோர் இவர்களிடம் தெரிவித்தார்களா? எனவே, இத்தகைய அறிவற்ற செயல்களில் ஆரவாரக் கூட்டத்தார் ஈடுபட வேண்டா என அன்புடன் வேண்டுகின்றோம். நம் உரிமைக்கான ஆதரவு எங்கிருந்து வந்தாலும்  வரவேற்க வேண்டும். அதுபோல் 25 ஆண்டுகளாகச்சிறைக்கொட்டடிகளில் துன்புறும் அப்பாவித்தமிழர்க் எழுவர் விடுதலைக்கான ஆதரவுக் கரங்களை யார் நீட்டினாலும் பற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆதரவு தராதவர்களை, அவர்கள் தமிழ்மண்ணில் இருந்துகொண்டே தனித்தீவுபோல் விளங்குவதாக எதிர்க்கலாமே தவிர,   நமக்கான ஆதரவுக் கரங்கள் நீட்டுபவர்களை எதிர்க்கக்கூடாது.
  தமிழ்நாட்டிலுள்ள அயலினத்தவர் தமிழர் நலன்கள் தொடர்பில் அமைதி காத்தால், தமிழர்களால் பிழைத்துக்கொண்டு தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை என்று கண்டிப்பதும், குரல்கொடுத்தால், வந்தேறிகள் ஒன்றும் குரல் கொடுக்க  வேண்டா என்பதும் நடுநிலையற்றதும் பொதுநலனுக்கு எதிரானதுமாகும் என்பதை இத்தகையோர் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, எதற்கெடுத்தாலும் வந்தேறிகள் என  வைவதையே தொழிலாகக் கொள்ளாமல்,
வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல். (திருவள்ளுவர், திருக்குறள் 471)
வேண்டும் என அறிந்து பிறரின் ஒத்துழைப்பபைப் பெற்று வெற்றி ஒன்றே இலக்கு என நடை போட வேண்டும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

-

Post a Comment

Powered by Blogger.