Halloween party ideas 2015
.


அனைவருக்கும் வணக்கம்.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே இடங்கனசாலை பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளிகளான  அண்ணாதுரை- மஞ்சுளா தம்பதியரின் மகள் வினுப்பிரியா (21).  இவரின் படத்தை  பேஸ்புக்கில் Vinu Priya Mythili என்ற பெயரில் உள்ள கணக்கில்,ஒரு சமூக விரோதி  மார்பிங் செய்து 17.06.2016.ஆபாசமாக சமூகவலை  தளத்தில் வெளியிட்டு உள்ளான்.

மீண்டும் தனது படத்தை ஆபாசமாக சித்தரித்து (மார்பிங்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்த வினுப்பிரியா  தூக்கிட்டு 27.06.2016 திங்கள் அன்று  காலையில் தற்கொலை செய்துள்ளார்.

வினுப்பிரியா  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தாலும் இதை நாம் படுகொலையாகவே பார்க்க வேண்டியுள்ளது .

குற்றவாளியான காவல்துறை
============================
காரணம் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி செயல்படும் காவல்துறை அதிகாரிகள்,  தனது லஞ்ச -ஊழல் செயல்பட்டாலும், பொறுப்பற்ற நடவடிக்கையாலும்தான் வினுப்பிரியா அவர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி,  அவரை   தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும்  நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். எனவே   இதை படுகொலையாகவே நாம்  பார்க்க வேண்டியுள்ளது .

வினுப்பிரியாவின் படத்தை முகநூலில்  ஆபாசமாக சித்தரித்து (மார்பிங்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து அவரது  ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியடைந்து, தங்கள்  மகளின் வாழ்வில் அநியாயமாக புயலைக் கிளப்பிய சம்பந்தப்பட்ட குற்றவாளியைத் துரிதமாகக் கண்டறிந்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சர்ச்சைக்குரிய முகநூல் பக்கத்தை உடனடியாக முடக்க வலியுறுத்தியும் காவல்துறையினரை அணுகினர்.

கடந்த 17ம் தேதி , வினுப்ரியா போட்டோ முகநூலில் ஆபாசமாக வந்திருக்குன்னு அறிந்த  வினுப்பிரியா குடும்பத்தினர் 19.06.2016.அன்று  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் அவர்களிடம் நேரில் சென்று  புகார் அளித்தனர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் அவர்களின் வழிகாட்டல்படி  சங்ககிரி டி.எஸ்.பி. கந்தசாமியிடம் சென்று  புகார் கொடுத்தனர் .

 டி.எஸ்.பி. கந்தசாமி,  மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தனிடம் சென்று  புகார் கொடுக்க சொன்னதால்  மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தனிடம் கொடுத்தனர் . மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சேலம் சைபர் க்ரைமில்  புகார் கொடுக்க சொன்னார்.. மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர்  வழிகாட்டல்படி சேலம் சைபர் கிரைம்  காவல்நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.

சேலம் சைபர் க்ரைமில்  புகாரை வாங்கிக் கொண்டு இந்த ஐ.டி., உடனே அழிக்க முடியாது. இது ஆஸ்திரேலியாவில் தான் லிங் இருக்கு. அங்கு சொல்லி தான் அழிக்க முடியும். 10, 15 நாட்கள் ஆகுமுன்னு  எவ்வித பொறுப்பற்றும் சொல்லியுள்ளனர் .

குதிரை கிழே குப்புற தள்ளியது மட்டுமன்றி குழியும் பறித்தது போல   சைபர் க்ரைம் காவல்துறையினர் எவ்வித மனசாட்சியும்  இன்றி,   இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் சைபர் க்ரைமில் உள்ள  காவலர்களுக்கு 2000 ரூபாய் பணமும், ஒரு செல்போனும் வாங்கி கொடுத்தே தீர வேண்டும் என  வினுப்பிரியா குடும்பத்தினரிடம் அதிகாரத்துடன் மிரட்டி பெற்று உள்ளனர்.

மகுடன்சாவடி  காவல்துறை உதவி ஆய்வாளரோ, பாதிக்கப்பட்ட  வினுப்பிரியாவை அழைத்து எவ்வித மனசாட்சியும் அற்று,  பல்வேறு வகையில் மனஉளைச்சல் ஏற்படும் வகையில் இழிவுபடுத்தி விசாரித்து உள்ளார்.

ஆனால் வினுப்பிரியா பற்றி பிரச்சனைக்குறிய முகநூல் கணக்கை   முடக்கப்பட காவல்துறையினரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  புகாரின் மீதும்  காவல்துறையினர் எவ்விதமான  நடவடிக்கைகளையும்  மேற்கொள்ளவில்லை.

சேலம் -சங்ககிரி -மகுடன்சாவடி என   ஒரு வார காலம்  ஒவ்வொரு காவல்நிலையமாக வினுப்பிரியா குடும்பத்தினர் அலைந்தும் 19.06.2016.அன்று கொடுக்கப்பட்ட புகாரின் மீது,  26.06.2016 வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இக்காலத்தில் மீண்டும் வினுப்ரியாவின்  புதிய ஆபாச புகைப்படம்   ஃபேஸ்புக்கில்  வந்துள்ளது.   இதனால் வினுப்ரியா ரொம்ப மனம் உடைந்து போய் இருக்க,  மீண்டும் புகார் கொடுக்க 27.06.2016.  திங்கள் அன்று  காலையில்  மீண்டும் வினுப்பிரியா குடும்பத்தினர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் சந்திக்க  வந்துள்ளார். அப்போது வினுப்ரியா வீட்டை சாத்தி தூக்கு போட்டு இறந்துள்ளார் .

இறந்த பின்பு தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக  ஒரு மணி நேரத்தில் அந்த முகநூல் ஐ.டி.,  முடக்கப்பட்டு உள்ளது.

வினுப்ரியா சாவுக்கு  ஆபாச படம் அனுப்பிய சமூக விரோதி ஒரு காரணம் என்றால், முதன்மைக் காரணம் என்பது சேலம் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடற்ற, பொறுப்பற்ற, அக்கறையற்ற தன்மையே முழுக்க காரணம் ஆகும்.  வினுப்ரியா சாவு என்பது காவல்துறை அதிகாரிகளின்  படுகொலையை ஆகும்.

நமக்கு எழும் கேள்விகள்!
========================
- ஒரு முகநூல்   பக்கம் . சமூக ஆர்வலர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக  ஒரு மணி நேரத்தில்  முடக்கப்பட்டு உள்ளது.  காவல்துறையினர் ஒரு வார காலம் இதை செய்ய முடியாமல் இருந்ததற்கு என்ன காரணம்?

- முதல்வரை பற்றியோ, அமைச்சரை பற்றியோ தவறான பதிவுகளோ, தவறான  (மார்பிங்) புகைப்படங்களோ வந்தால் சில மணி நேரத்தில் அதன் மீது நடவடிக்கை எடுத்ததற்கு தமிழகத்தில் எத்தனையோ உதாரணங்கள் உண்டு.  அப்படி இருக்க  வினுப்ரியா பிரச்சினையில்   ஒரு வார காலம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க  முடியாமல் காவல்துறை இருந்ததற்கு என்ன காரணம்?

- சமூக வலைத்தல குற்றங்களுக்கு என தனியாக  சைபர் க்ரைம் காவல்துறை இருக்க ஒரு வார காலம் இதை செய்யாமல் அவர்கள் இருந்ததற்கு காரணம்,  பாதிக்கப்பட்டவர்களை அலைய வைப்பதன் மூலம் நிறைய லஞ்சம் வாங்கலாம் என்பதை தவிர வேறு காரணம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை?

- வினுப்ரியா பிரச்சினையில்   எளிய மக்களுக்கு ஒரு நீதி? அதிகாரத்தில் இருந்து ஆள்வோருக்கும், சொத்துள்ளவர்களுக்கும் மட்டும் ஒரு நீதியா ?

- காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டு இருந்தால்,  காவல்துறையினர்  இப்படித்தான் நடந்து கொண்டு இருக்குமா? காரணம் சொல்லிக் கொண்டு இருக்குமா?

- காவல்துறையில் குற்றவாளிகள்  சைபர் க்ரைம் காவல்துறை தலைமை காவலரும் -மகுடன்சாவடி  காவல்துறை உதவி ஆய்வாளர் மட்டும்தானா?
மனதை கொடூரமாக பாதிக்கும் பக்கத்தை முடக்கக் கோரி வினுப்பிரியா குடும்பத்தினர் புகார் கொடுத்தும் அதன் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என கண்காணிக்காத  1.சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் 2.சங்ககிரி டி.எஸ்.பி. கந்தசாமி
3.மகுடஞ்சாவடி ஆய்வாளர்  விவேகானந்தன்
4. சைபர் க்ரைம் ஆய்வாளர்-உதவி ஆய்வாளர்   ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் இல்லையா? இவர்கள் மீதான நடவடிக்கை என்ன?

- நேற்று முன்தினமும் . நேற்றும் (27, 28-06-2016)  வினுப்பிரியா குடும்பத்தினரும், சமூக ஆர்வலர்களும் , குற்றவாளி மீதும் -காவல்துறையினர் மீதும் நடவடிக்கை கோரி, வினுப்பிரியா சாவுக்கு நீதி கோரியும்   வினுப்பிரியா உடலை பெற மாட்டோம் என சேலம் மருத்துவமனையில் போராடவில்லை எனில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் அவர்கள் அங்கு(சேலம் மருத்துவமனைக்கு)  வந்து  காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், புகார் கொடுக்க வந்த பெற்றோரை காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதற்காகவும்  கைகூப்பி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருப்பாரா? 

- நேற்று முன்தினமும் . நேற்றும் (27, 28-06-2016)  சேலம் மருத்துவமனையில் போராட்டம் எதுவும் இல்லையெனில் காவல்துறையினர் செய்த  பற்றிய குற்றமும், அவர்கள் மீதான  நடவடிக்கையும்  ஏதாவது பொதுவெளியில் தெரிந்து இருக்குமா?
இந்த வினுப்பிரியா சாவு ஒரு தற்கொலை செய்தியாக மட்டுமே செய்தித்தாளில் ஒரு மூலையில் வந்து முடிந்திருக்கும் என்பதுதானே எதார்த்த உண்மை?

-  வினுப்பிரியா இறந்த பின்பு எந்த ஒரு அதிகாரியும்  வந்து வினுப்பிரியா குடும்பத்தினரை  இதுவரை பார்க்காதது ஏன்? 

-  ஒரு தாயுக்குத்தான் ஒரு குடும்பத்தின் கஷ்டம் தெரியும் என வாய்ச்சவடால் அடித்து தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள தமிழக முதல்வர் அவர்கள் ,
ஒரு பெண்ணான  வினுப்பிரியா ஒரு சமூக விரோதியின் செயல்பட்டாலும் . தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கையாளும்  மரணமடைந்த நிலையில் அதை பற்றி இப்போது வரை பேச மறுப்பது ஏன்?
ஒரு தாய் இப்படித்தான் தனது மகள் பாதிக்கப்படும்போது இருப்பாரா?

 - சமூக விரோதியால்  படுகொலை செய்யப்பட்ட ஓசூர் காவலர் முனுசாமிக்கு ஒரு கோடி ரூபாயும் - அவரது குடும்பத்தாருக்கு அரசு வேலையும் கொடுத்த தமிழக முதல்வர்,
தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கையால்   மரணமடைந்த சேலம் -இளம்பிள்ளை  வினுப்பிரியா குடும்பத்திற்கு செய்யப் போவது என்ன?

- இனி மேல் தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் (படத்தை முகநூலில்  ஆபாசமாக சித்தரித்து (மார்பிங்) பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தால்) நடந்தால் நாம்   என்ன வழிமுறையை கையாள்வது என தமிழக அரசு தெளிவுபடுத்துமா?

நாம் எழுப்பியுள்ள மேற்கண்ட கேள்விகளுக்கு தமிழக அரசு முறையான பதிலையும், நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.
இது ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு பெண்ணையும் வீட்டில் வைத்துள்ளவர்களுக்கு  மிக அவசியமான ஒன்றாகும் .



குற்றவாளியான காவல்துறையின் செயல்பாடுகள் இன்று (29-06-2016)
================================================================

காவல்துறையும் குற்றவாளியாக நிற்கும் சேலம் -இளம்பிள்ளை வினுப்பிரியா படுகொலையில்...

இன்று குற்றவாளியை கைது செய்ததாக  காவல்துறை தெரிவித்து உள்ளது. அதோடு காவல்துறையினர்  தன்  மீதுள்ள குற்றத்தை மறைக்க வழக்கம் போல், வினுப்பிரியா பற்றி  பல அவதூறு கட்டுக்கதைகளை, பொய்களை கோயபல்ஸ் பிரச்சாரம்   போல்  அவிழ்த்து விட தொடங்கி விட்டது.
வினுப்பிரியா பற்றி பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதன் மூலம் தனது தவறை மூடி மக்களிடம் மறைக்க முயற்சி செய்கிறது.  பொய்யை பேசி மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறது.
தமிழக முதல்வரும் இதை பற்றி பேசாமல் காவல்துறையை பாதுகாக்கும் முயற்சியிலேயே உள்ளார்

கடந்த ஆண்டு  திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா மரணத்திலும்,   காவல்துறை அதிகாரிகள்  தங்கள்   மீதுள்ள குற்றத்தை மறைக்கவே,  டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா  குருக்களோடு காதல், வழக்கறிகரோடு  காதல் எனக் கூறி  கொச்சைப்படுத்தி  இன்று வரை உண்மையை வெளிக் கொணராமலும் உள்ளனர். எனவே டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா அப்பா சி.பி.ஐ விசாரணை கோரி போராடி வருகிறார்.
 காவல்துறை அதிகாரியான டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியாவுக்கே தமிழ்நாட்டில் இதுதான் நிலையாக உள்ளது.  

 
நேற்று டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா...
இன்று வினுப்பிரியா...

இது ஏதோ ஒரு வினுப்பிரியாவுக்கு நடந்த ஒரு நிகழ்வாக கடந்து செல்ல மனசாட்சியுள்ள  எந்த ஒரு மனிதராலும்    முடியாது.
இன்று இளம்பிள்ளை வினுப்பிரியாவுக்கு-
நாளை நமது குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு  பெண்களுக்கும்!

வினுப்பிரியாவின் மரணத்திற்கு காரணமான சேலம் மாவட்ட குற்றவாளி  காவல்துறையினர் அனைவர் மீதும்  நடவடிக்கை எடுக்கும் வரை நமது போராட்டத்தை தொடருவோம் ...
வினுப்பிரியா பற்றிய பொய் பிரசாரத்தை முறியடிப்போம்  .
உறுதியாக போராடுவோம்!!!

வினுப்பிரியாவின் மரணத்திற்கு காரணமான சேலம் மாவட்ட குற்றவாளி  காவல்துறையினர்
அனைவர் மீதும்  உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை எனில்
தமிழகம் முழுக்க உள்ள சமூக அக்கறையுள்ள அனைத்து அமைப்புகளையும் இணைத்து 
மிக  கடுமையான போராட்டத்தை மேற்கொள்வோம்

இந்த செய்தியை தங்கள் இதழ்களில்/செய்தித்தாளில் வெளியிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.   


--
முகிலன் ,
ஒருங்கிணைப்பாளர்,
கனிமவளமுறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்,
தமிழ்நாடு சுற்றுசூழல்  பாதுகாப்பு இயக்கம் ,
பொறுப்பாளர் : அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு
அலைபேசி : 94436-75048, 75022 25658
மின் அஞ்சல் : sagayamaaivukkuzhu@gmail.com
29-06-2016



Post a Comment

Powered by Blogger.