Halloween party ideas 2015
.

Received from WhatsApp Group:

1983 ல் வெளிவந்த,  கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தை நம்மில் பலருக்கும் தெரியாது..
பகிரங்கமாக சாதிய வன்மத்தையும், நிலவுடமையாளர்களின் கோரமுகத்தையும், அவர்களால் எரிபடும் சேரிகளின் அவலத்தையும், அதற்கெதிராக உழைக்கும் மக்களிலிருந்து  ஆயுத போராட்டத்திற்கு அணியமாகும் சிவப்பு சிந்தனையாளர்களையும் பதிவு செய்த படம்..
பொதுவுடைமை ஆயுதக்குழுக்கள் தமிழகத்தில் துளிர்விட்டிருந்த அந்த காலத்தில், நக்சல்பாரியே நமது பாதை எனும் வாசகங்களை தாங்கிய சுவர்களை அதிகம் காணமுடியும். அதெல்லாம் ஏதோ பூச்சிக்கொல்லி மருந்து விளம்பரம் என்றெண்ணி அதைப்பற்றி அறியாமல் நாங்கள் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த காலமது. புரட்சிகர சிந்தனையாளர்களை போலவே அவர்களை வேட்டையாட அரசும் முனைப்போடு இருந்த காலம்.  அந்நேரத்தில் வெகு துணிச்சலாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி, ''கண் சிவந்தால் மண் சிவக்கும்".
அந்த படத்திற்கு மக்களிடையே வரவேற்பு இல்லையென்றாலும், ஊர்த்தெரு, சேரி முரண் கெட்டிப்பட்டு இருந்த அந்த காலகட்டத்தில் அந்த படத்திற்கு எதிர்ப்பு இருந்ததாக எந்த தகவலும் இல்லை..
அதற்கடுத்தபடியாக சாதி வன்மம் குறித்த பெரிய அளவு படங்கள் வெளியாகவில்லை. பாரதிராஜாவின் வேதம்புதிது படத்தில் சாதி ஒழிப்பை பேசும் கதாப்பாத்திரத்தின் பெயர் பாலுத்தேவர். ஒரு காட்சியில் அந்த பெயருக்கு பின்னால் வரும் சாதி விவாதப் பொருளாக்கப்பட்டாலும், கடைசி காட்சிவரை அந்த கதாப்பாத்திரம் பாலுத்தேவர் என்றே தம்மை கூறிக்கொள்ளும் என்பது கவனிக்கத்தக்கது. அதற்கு பின்னால் வந்த பாரதிராஜா படங்கள் சகட்டுக்கு சுயசாதி புராணத்தை ஓதி தள்ளின.
பின்னொரு காலத்தில் விஜய்காந்த் நடித்த காந்தி பிறந்த மண் படத்தில் தமக்கு தெரிந்த வழியில் சுந்தர்ராஜன் சாதி ஒழிப்பு கருத்தை பதிவுசெய்தார்.
அதற்கு பின்னால் சன் உள்ளிட்ட கேபிள் டி.வி மூலமான ஊடகங்கள் பெருகியிருந்த காலத்தில் வீரியமாக சாதி ஒழிப்பு பேசி வெளிவந்த படம், 'வாட்டக்குடி இரணியன்'. சாதியத்திற்கு எதிரான காரசாரமான வசனங்களோடு வெளிவந்த இந்தப்படத்தை வின்செண்ட் செல்வா இயக்கியிருந்தார். படம் ஏற்படுத்திய நட்டத்தால் தயாரிப்பாளர் தற்கொலை செய்துகொண்டார்.
2000 க்கு பிறகு வந்த மாத்தியோசி படத்திலும் சாதிய இழிவுகள் குறித்த பதிவுகள் குறிப்பிடத்தக்க அளவு இருந்திருக்கிறது. அந்த படமும் தோல்விப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக 2013 ல் ராமதாசு தலைமையிலான அனைத்து சமுதாய கூட்டணி அமைக்கப்பட்டு ஆணவக்கொலைகளுக்கான அறைகூவல் பகிரங்கமாக மேடைகளிலும், வலைதளங்களிலும் ஒலித்துக்கொண்டிருந்த, இளவரசனின் கொலை பரபரப்பு ஓய்ந்திராத நிலையில், சில எதிர்ப்புகளுக்கிடையேயும் பிராகாஷ்ராஜ் தயாரிப்பில், ராதாமோகன் இயக்கத்தில் கவுரவம் என்ற படம் வெளிவந்தது. இதுவும்கூட ஆணவக்கொலையை, சாதி சூறையாடல்களை பதிவு செய்த படம். இந்த படமும் தோல்விப்படம் என்பது வேதனை.

தமிழ் திரையுலகில் ஒருபுறம்  பெருவாரியாக சுயசாதி பெருமைகள் பேசி வன்முறைக்கு வித்திட்ட படங்கள் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது. இன்னொருபுறம் சாதியத்துக்கு எதிரான கருத்தியலோடு வெளியான சில படங்களும் தோல்வியையே தழுவியுள்ளன. ஊடக வசதியற்ற காலம் தொடங்கி, காட்சி ஊடகங்களை தாண்டி இன்று சமூக வலைதளங்களை சாதி ஒழிப்பு ஆர்வலர்கள் தமது உள்ளங்கையில் வைத்திருக்கக்கூடிய காலம்வரை சாதி ஒழிப்பை பேசிய படங்கள் தோல்வியை தழுவியுள்ளன என்றால் சாதியத்திற்கு இலக்காகக்கூடிய சமூகங்கள் அவர்களுக்கான படைப்புகளை அங்கீகரிக்கவில்லை என்றும் பொருள்.
ஒருபுறம் சுந்தரபாண்டியன் படத்தில் சாதி வன்மத்தை தூண்டியிருப்பதாக திரையரங்கு போய் படம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதிய முற்போக்காளர்கள், கவுரவம் படம் திரையிடப்பட்ட திரையரங்கு பக்கமே செல்லவில்லை. கவுரவம் படத்தை விடவா மெட்ராஸ் படத்தில் சாதிய வன்மத்தை பதிவு செய்துவிட்டார் ரஞ்சித்..

நாம் மேலே குறிப்பிட்ட சாதி ஒழிப்பை வலியுறுத்தும் படங்களுக்கு வராத எதிர்ப்பு, அந்த படங்களில் வந்த சாதி எதிர்ப்பு கருத்துகளில் ஒரு சதவீதத்தை கூட பதிவு செய்யாத ரஞ்சித்துக்கு எப்படி உருவானது? யார் இதை உருவாக்கியது என்பதுதான் நமது கேள்வி.

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு சமயத்திலும் ஏதோ ஒரு செய்தியை பிடித்துக்கொண்டு அனைவரும் அவரவர் மொழியில் பதிவு செய்வதை நாம் பார்க்கமுடியும். அப்படி மெட்ராஸ் படத்தைப்பற்றி யாரோ ஒரு சிலர் எழுதியதையடுத்து அவரவர் தம் பங்குக்கு எழுதிக்கொண்டே போக, ஒரே படத்தில் அம்பேத்கர் நினைத்த புரட்சியை ரஞ்சித் செய்துமுடித்ததாக எழுதியவர்களைகூட முகநூலில் காண முடிந்தது. இரண்டொரு நாட்களுக்கு முன்வரை எங்கு காணினும் இறைவி புராணம் காணப்படவில்லையா? இது ஒரு வலைதள நோய்.. அப்படியான மெட்ராஸ் நோய் முகநூலை பீடித்திருந்த காலத்தில்தான் ரஞ்சித்துக்கு எதிரான ஆயுதங்களும் கூர்தீட்டப்பட்டன.  அதுவரை சும்மா இருந்த எதிர்தரப்பு உசுப்பப்பட்டது அப்போதுதான். மெட்ராஸ் படத்தை புறக்கணிப்பதற்கான முன்னெடுப்புகளை ஆலோசிக்க, அனைத்து சமுதாய கூட்டமைப்பு கூடி விவாதித்தது என்ற தகவல் இங்கு பலருக்கும் தெரியாது. அப்போது கொங்கு மண்டல அமைப்புகள் கவுண்டர் சமூகத்து கார்த்திக் நடித்துள்ளதால் மெட்ராஸை விட்டுவிடுவோம் என கூற, ரஞ்சித்தின் அடுத்த படத்தை பார்த்துக்கொள்வோம் என்று முடிவெடுத்து அன்று கலைந்தது அனைத்து சமுதாய கூட்டமைப்பு.

இவர்கள் எல்லோரும் குறிப்பிடுமளவு என்ன சொல்லியிருக்கிறார் என்றறிந்துகொள்ள நானும்  மெட்ராஸ் படத்தை பார்த்தேன். வட சென்னை மக்களின் வாழ்வியலை, உழைக்கும் மக்களை சுற்றி இயங்கும் அரசியலை பேசியிருக்கிறார் என்பதை தாண்டி, ரஞ்சித் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு ராம்கோபால் வர்மா என்பதை படம் பறைசாற்றுகிறது. ரஞ்சித் இன்னும் வளரவேண்டியவர். ரஞ்சித்தை போலவே நிறையபேர் வளரவேண்டும்.

தமிழ் திரையுலகில் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக உருவாக்கப்பட்டுள்ள சாதியடிப்படையிலான கட்டமைப்புகளை புரிந்துகொள்ளாதவர்களும், அதன் சாதனைகளை அறியாதவர்களும்தான் என்று ரஞ்சித்தின் துவக்க நிலையையே சிலாகித்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
தென்மாவட்டத்திலிருந்து வருபவர்களை கைதூக்கிவிடவும், கொங்கு மண்டலத்திலிருந்து வருபவர்களை அரவணைத்துக்கொள்ளவும் இருவேறு சாதி குழுவினர் திரையுலகில் இறங்கி வேலை செய்துள்ளனர்.
அவர்கள் ஒரு சிவாஜியோடு திருப்தியடைந்துவிடவில்லை. பாரதிராஜா, கார்த்திக், பிரபு, என கலைஞர்களும், படைப்பாளிகளும் வந்து இறங்கியபடியே இருந்தார்கள்.
அவர்கள் ஒரு சிவக்குமாரோடு  திருப்தியடைந்துவிடவில்லை.. சத்தியராஜை போன்று பல கலைஞர்கள் உருவாக்கப்பட்டனர்.
ஆனால் இந்த ஒற்றை ரஞ்சித்தின் இந்த இரண்டு வெற்றிப்படங்களுக்கான இந்த ஆர்பரிப்புகளை போன்ற எதையும், சத்தமில்லாமல் ஆக்கிரமிப்பு செய்த அவர்களிடம் பார்க்கமுடியவில்லை. அந்த வெறித்தனமான சுயசாதி உணர்வாளர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் அனைவருக்குமான கலைஞர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆனால் ரஞ்சித்தை ஆதரிக்கிறேன் என்ற பெயரில்  எதிரிகளிடத்திலே அடையாளப்படுத்தி அவருக்கு நெருக்கடி உண்டாக்கும் வேலையை சிலர் செய்துகொண்டு இருக்கிறார்கள்..
ரஞ்சித்தை ரசியுங்கள், ஆனால் ரஞசித்தை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவைத்து அழகுபார்க்காதீர்கள். ரஞ்சித்தின் எல்லைகள் விரிவடையவும், இன்னும் ஏராளமான ரஞ்சித்துகள் வெளிவரவும் ஆர்பாட்டமில்லாமல், அறிவுப்பூர்வமாக ஆதரவளிக்க பழகுங்கள்..

Post a Comment

Powered by Blogger.