Halloween party ideas 2015
.

சிறையில் உள்ள தனது மகனிடம், கழிவறை எங்கே இருக்கிறது? என்று கேட்கிறார் தாய். ‘அம்மா அதெல்லாம் வேண்டாம்மா, நீங்க கிளம்புங்க’ என்கிறார் மகன். ‘பரவாயில்லை. நான் பார்த்துக்கிறேன் என்று கழிவறைக்குச் செல்கிறார் தாய். பார்த்ததும் அதிர்ச்சியடைகிறார். திறந்தவெளியில் கழிப்பிடம் இருக்க, சுற்றி காவலர்கள் காவலுக்கு நிற்கின்றனர்.

அந்தத் தாயின் நினைவுகள் கடந்தகாலத்துக்குச் செல்கிறது. சின்னவயதில் குளித்துவிட்டுவந்த மகனுக்கு கால்சட்டை அணிவிக்கச் செல்கிறார் தாய். ‘அம்மா, நீங்க கண்ணை மூடுங்க அப்போதான் போட்டுப்பேன்’ என கைத்துண்டால் தன்னை மறைத்துக்கொள்கிறார். ‘டேய், நான் உன் அம்மாடா’ என்கிறார் இவர். ‘பரவாயில்லம்மா, நீங்கள் கண்ணை மூடுங்க’ மீண்டும்கூற, அதை சிரித்தபடியே ஏற்றுகொண்ட தாய் கண்களை மூடிக்கொள்கிறார். மகனும் கால்சட்டை அணிந்துகொள்கிறார்.

இப்படி சின்ன வயதிலேயே வெட்கப்படும், கூச்சப்படும் தன் மகன் இன்று இயற்கையான விசயங்களில் ஈடுபடும்போதுகூட சுற்றிலும் கண்காணிக்கிறார்களே என, குமுறி அழுகிறார் அந்தத் தாய். மேற்கண்ட தாயின் தவிப்பை உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்துள்ளார் பூங்குழலி. தான் எழுதிய தொடரும் தவிப்பு நாவலில். இந்தத் தவிப்பு புனைவல்ல. உயிரை உலுக்கும் உண்மை.

‘இனியும் மகன் சிறையில் வாடக்கூடாது’ என்று, வேட்கையோடு தன் மகனை மீட்கப் போராடிய அந்தத் தாய், தனது நீண்ட நெடிய போராட்டத்தில் இன்று 25 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறார். அன்றைப்போலவே இன்றும் போராடிக்கொண்டிருக்கும் அந்தத் தாய், முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைவழக்கில் தண்டனைபெற்ற பேரறிவாளனின் தாயார் ‘அற்புதம்மாள்.’

25 ஆண்டுகாலம் கடந்துவிட்டது கொண்டாட்டமல்ல, வலி. இந்த வலியைத் தீர்க்க, தனது நீண்ட போராட்டப் பயணத்தில் மற்றுமொருவழியாக ஜுன் 11 அன்று ஓர் அறப்போராட்டத்தை அறிவித்தார் அற்புதம்மாள். தனது மகன் பேரறிவாளன் மற்றும் சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி, வேலூரில் இருந்து சென்னைக்கு பேரணி சென்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து மனு கொடுப்போம் என்று அதற்குத் தயாரானார். இதற்கு திரைத்துறையினர், பல்வேறு கட்சியினர், மனிதஉரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், ‘தேசிய நெடுஞ்சாலை பேரணி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், கூடுதல் வாகனங்களால் புகை ஏற்பட்டு மாசு ஏற்படும்’ என்ற காரணங்களைக்கூறி அனுமதி மறுத்தது வேலூர் காவல்துறை. அதன்பின் வழக்கறிஞர் துரை.அருண் மூலம் சென்னை காவல்துறை ஆணையாளரிடம் ‘சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகிலிருந்து ஊர்வலமாக தலைமைச் செயலகம் சென்று மனு அளிக்க உள்ளோம்’ என்று மனு கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு ‘மதியம் 2 மணிக்குத் தொடங்கி 3 மணிக்கு முடிந்துவிட வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு ஆகக்கூடாது’ என, பல்வேறு விதிமுறைகளை வகுத்து அனுமதி வழங்கினார் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன்.

இதற்கேற்ப, சரியாக இரண்டு மணிக்கு பேரணி தொடங்கியது. பல ஊர்களில் இருந்தும் திரளானோர் பங்கேற்றனர். இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள். பலர் வேலூர் சென்றுவிட்டு அங்கிருந்து பேரணி இடம் மாறியதையறிந்து தாமதமாக வந்து சேர்ந்தனர். வழியெங்கும் ஏழுபேர் விடுதலையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிவந்தனர் இளைஞர்கள். திரைத்துறையில் நடிகர் நாசர், சத்யராஜ், இயக்குநர் விக்ரமன், அமீர், ராம், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் பேரணியில் இணைந்துகொள்ள அன்புமணி ராமதாஸ், மல்லைசத்யா போன்ற பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் பேரணியில் நடந்துவந்தனர்.

ஏழு தமிழர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் பேரணியில் பங்கேற்றனர்.

‘கடந்தகாலம் எப்படியோ, எஞ்சிய நாட்கள் என் மகன் எங்களோடு சேரட்டும், குடும்பத்தோடு கழிக்கட்டும்’ என்று கண்ணீர்விட்டார் ராபர்ட் பயாஸ் தாயார் சோமணி. அவரின் சகோதரி லதா, ‘இந்தச் சமூகமே ஒதுக்குவது கவலையா இருக்கு’ என்றார் வேதனையோடு.

ஜெயக்குமாரின் மகனோ, ‘என் அப்பா என்னை தொட்டுக்கூட தூக்கியதில்லை. சின்ன வயதிலேயே சிறைக்குப் போய்விட்டார். சிறுவயதில் என்னுடைய அடிப்படைக் கல்வி கிடைக்கவே மிகுந்த போராட்டத்தைச் சந்தித்தேன். இனி, என் வாழ்க்கை என் அப்பாவோடு கழியவேண்டும்’ என்றார் கண்கள் கலங்கி.

‘போதும் இத்தனை ஆண்டுகள் அனைவரும் சிறையில் தவித்தது. வேண்டும் விடுதலை’ என உருகினர் திரண்ட தமிழர் உணர்வாளர்கள்.

‘முதல்வர் ஜெயலலிதா துணிச்சலாக முடிவெடுக்கவேண்டிய நேரமிது’ என்றார் வைகோ. ‘தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது பேரணி’ என்றார் திருமாவளவன். நாம் தமிழர் சீமானோ, ‘மத்திய அரசு கருணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். ’25 ஆண்டுகளாக சிறைப்படுத்திவைப்பது மனிதநேயத்துக்கு அப்பாற்பட்டது’ என்றார் நெடுமாறன். ‘161 விதியை பயன்படுத்தி ஏழுபேரையும் விடுதலை செய்யவேண்டும் முதல்வர் ஜெயலலிதா’ என்றார் தியாகு.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சுப.வீ. கூறும்போது, ‘மாநில அரசே 161வது சட்டப் பிரிவைக் கொண்டு விடுதலை செய்யலாம். இதற்கு மத்திய அரசு அனுமதி அவசியமில்லை. ஆனாலும் மத்திய அரசும் தேவையற்ற வறட்டுத்தனம் காட்டவேண்டாம். அவர்கள் கொள்கைக்காக வாழ்ந்த குடும்பம். எனவே, தமிழக அரசே அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலைக்கு உத்தரவிடலாம்’ என்றார்.

‘ஏழுபேர் விடுதலைக்கு சட்டசபையில் தீர்மானம் போட்டவர் முதல்வர் ஜெயலலிதா. அந்தத் தீர்மானத்துக்கு வலுச்சேர்க்கும்விதமாக இந்தப் பேரணி நடத்தப்படுகிறது. நிச்சயம் ஏழு தமிழர்கள் விடுதலை பெறுவார்கள் என நம்பிக்கையோடு உலகத் தமிழர்கள் உள்ளனர்’ என்றார் நடிகர் சத்யராஜ்.

இப்படி அனைவரும் ‘ஏழு தமிழர் விடுதலை’ என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வுபூர்வமாக ஒருங்கிணைந்தனர். பேரணி தெற்கு கூவம்வழியாக நான்கு கிலோமீட்டர் பயணித்து தலைமைச் செயலகம் அடைந்தது. பேரணியை முன்வாசலிலேயே நிறுத்தப்பட, அற்புதம்மாளுடன் நான்கு பேர்கள் இணைந்து உள்ளே தலைமைச் செயலகம் சென்றனர். அங்கே தனிப்பிரிவு செயலரிடம் மனு கொடுத்துவிட்டு திரும்பினர்.

வெளியே திரண்டிருந்த உணர்வாளர்கள்முன் பேசிய அற்புதம்மாள், ‘தமிழகம் முழுக்க திரண்டு வந்த உணர்வாளர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி. 25 ஆண்டுகால சிறைவாசம் மிகவுமே என் மகனையும் குடும்பத்தையும் பாதித்துவிட்டது. வாலிப வயதில் சிறைக்குச் சென்றவர், இன்று மத்திய வயதைத் தொட்டிருக்கிறார். போதும் அவன் அடைந்த துயரம். சம்மந்தமில்லாத குற்றத்தால் சிறைக்குத் தள்ளப்பட்டுவிட்டான். எப்படியாவது ஏழுபேரும் விடுதலை செய்யப்படவேண்டும். அந்த அடிப்படையில்தான் இன்று மனு கொடுத்துள்ளோம். நிச்சயம், முதல்வர் ஜெயலலிதா ஏழுபேர் விடுதலையையும் உறுதிப்படுத்தி அறிவிப்பார் என்ற நம்பிக்கையோடு உள்ளோம்’ என்றார்.

சிறையிலுள்ள தன் மகனின் புரட்சிகர போராட்டத்தை வெளியே தொடர்ந்தார் மாக்சிம் கார்க்கியின் தாய். சிறையில்தவிக்கும் தன் மகனுக்கு நீதிகேட்டு 25 ஆண்டுகள் கடந்தும் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார் இந்த தமிழகத் தாய். நடை தளர்ந்து, உடல் தளர்ந்தாலும் அந்தத் தாயின் நம்பிக்கை தளரவில்லை. தாயின் போராட்டப் பயணம் தொடர்கிறது.

-சே.த.இளங்கோவன்
2016 © காப்புரிமை மின்னம்பலம் அமைப்பு.

Post a Comment

Powered by Blogger.