Halloween party ideas 2015
.

தமிழ்நாட்டு வரலாற்றில் அதிகமான அளவில் "அரசியல் சாணக்கியத்தனம்" என்று பேசப்பட்டால், அது திமுக தலைவர் கலைஞரைப்பற்றிதான் இருக்கும். சிறிய அசைவுகளைச் சொல்கிறார்களா? அல்லது பெரிய வெற்றிகளைச் சொல்கிறார்களா? என்பது இன்றுவரை கேள்விக்குறியே. ஆனால், அப்படிச் சொல்பவர்கள் எல்லாம் "அடிமட்ட மக்கள் மத்தியிலே" செல்வாக்கை வளர்ப்பதைச் சொல்கிறார்களா? அல்லது முக்கிய நிகழ்வுகளை மட்டுமே மேற்கோள் காட்டுகிறார்களா? என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. எம்.ஜி.ஆர். தனக்கான சொந்த அரசியலை கையில் எடுத்துக்கொண்ட காலம்தொட்டு, ஒவ்வொரு தேர்தலிலும் அல்லது பெருவாரியான தேர்தல்களில், எம்.ஜி.ஆர் வென்றாரா? கலைஞர் வென்றாரா? என்ற கேள்விக்கு சிறு பிள்ளைகூட பதில் சொல்லிவிடும்

எம்.ஜி.ஆரை விட்டுவிடுவோம். செல்வி.ஜெயலலிதாவை எடுத்துக் கொள்வோம். கலைஞரது அரசியல் சாணக்கியத்தனத்துக்கும், செல்வி.ஜெயலலிதாவின் அரசியல் சாணக்கியத்தனத்துக்கும் உள்ள வேறுபாட்டை சிறிது ஆராய்வோம். உள்ளபடியே இருவருமே "சாணக்கியத்தனமாக கணக்குப் போட்டு அரசியல்" செய்பவர்கள்தான். ஆனாலும் ஒருவர் மட்டுமே வெல்லமுடியும் என்ற ‘இசை நாற்காலி’ யாக இந்த அரசியல் இருக்கிறது. கலைஞரின் சாணக்கியத்தனத்தை எம்.ஜி.ஆரை எதிர்த்து, இந்திரா காந்தியுடன் இணைந்து வென்றதைக் கூறலாம். இந்தியப் பிரதமராக தேவகவுடாவை, ஐ.கே.குஜ்ராலை கொண்டு வந்ததைக் கூறலாம். ஆனால் அதிலும்கூட அவரால் கொண்டுவரப்பட்ட அத்தகைய தலைமை அமைச்சர்கள், அவர்களது பதவியைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டுக்கு நன்மை செய்தார்களா? தங்களைக் கொண்டுவந்த கலைஞரை மதித்தார்களா? என்றால் இன்னமும் பதில்தேடும் நிலையில்தான் இருக்கிறோம்.

1997க்குப் பிறகு, செல்வி.ஜெயலலிதா, பிரதமர் வாஜ்பாய் ஆட்சியைவிட்டு வெளியே வந்தபிறகு, 1998, 1999, 2004 வரை நடுவண் அரசின் பாஜக ஆட்சியில் பங்குபெற்ற திமுக-வின் செயலை "சாணக்கியத்தனம்" என்று கூறுவோமானால் அதுவே, தமிழ்நாட்டில் திமுக-வின் பாரம்பரிய "வாக்கு வங்கியான" இஸ்லாமியர்களின் வாக்குகளை "திமுக-வை விட்டுப் பிரிக்க" உதவியது என்பதையோ, குறைந்தபட்சம் "திமுகமீது சந்தேகத்தை முஸ்லிம்கள் மத்தியில் விதைத்துவிட்டது" என்பதையோ, யாராவது மறுக்க முடியுமா? 2002 குஜராத் முஸ்லிம்கள்மீதான படுகொலை அதற்கான "நிரந்தர சாட்சியாக" நிற்கவில்லையா? அது ஒரு நிரந்தர "இழப்பு" இல்லையா? உடனடி லாபத்துக்காக, நீண்டகால இழப்பைச் சந்திப்பது "சாணக்கியத்தனமா? இன்றுவரை "பாஜக தலைமையிலான "தேசிய ஜனநாயகக் கூட்டணி" ஆட்சியில் அங்கம்வகித்த திமுக-மீது மதச்சார்பற்ற சக்திகள் மத்தியில் "சேறு வாரி" இறைக்கப்படவில்லையா? அடுத்து நடுவண் அரசில் 2004ல் தலைமைக்கு வந்த காங்கிரஸ் ஆட்சியில் அங்கம்வகித்தது "சாணக்கியத்தனம்" என்றால், அதனால் கிடைத்த பலன் "திமுக நடுவண் அமைச்சர்களுக்கும், குடும்பங்களுக்கும்" போய்ச் சேர்ந்ததே தவிர, தமிழ்நாட்டின் எந்தப் பிரச்னையாவது தீர்க்கப்பட்டதா? அப்படியானால் அந்த "சாணக்கியத்தனம்" திமுக என்ற கட்சிக்கு சரிவைக் கொடுத்தது என்பதாகப் புரிந்துகொள்ளலாமா?

உதாரணமாக எடுத்துக்கொண்டால், அந்த "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி" ஆட்சிக்காலத்தில் வந்த "2 ஜி வழக்கு, ஈழத்தமிழரின் இனப்படுகொலை, மீதேன் கையெழுத்து, கெயில் குழாய்கள், தீராத முல்லைப் பெரியார், காவேரி, பாலாறு தடுப்பணை" ஆகியவை நடுவண் அரசால் தீர்த்துவைக்கப்படுவதற்குப் பதில், "பல சிக்கல்களை" ஏற்படுத்திவைக்கவில்லையா? அத்தகைய நடுவண் ஆட்சியில் "சாணக்கியத்தனமாக" அமர்ந்தது ஒரு "வரலாற்றுப் பிழை" என்பதாக இப்போது புரியப்பட முடிகிறதா?

அதேசமயம், செல்வி.ஜெயலலிதா 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையும், 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையும், 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையும் எப்படிக் கையாண்டார்?. ஒவ்வொரு தேர்தலுக்கும் "பொருத்தமான" தேர்தல் தந்திரங்களை எவ்வாறு வகுத்தார்? 2011ல் திமுக ஆட்சிமீது "மின் தடை" பெரும் பிரச்னையாக இருந்தது. அதை அதிமுக கையில் எடுத்துக்கொண்டது. அதற்குப் பலன்கிடைத்தது. 2ஜி யைக் கையிலெடுத்தது. அதற்கும் பலன் கிடைத்தது. ஈழத் தமிழர் இன அழிப்பை கையிலெடுத்தது. திமுக காங்கிரசுடன் சேர்ந்து சிக்கிக்கொண்டது. அவை அனைத்தும் அதிமுக-வுக்கு கை கொடுத்தன. அதேசமயம், தமிழ்நாட்டில் வழமையாக இருந்துவரும் "ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாற்றம்" என்பதும் சேர்ந்துகொண்டது. அவை போதாது என்று எண்ணிய செல்வி.ஜெயலலிதா, கூட்டணி கட்டுவதில் தெளிவான முயற்சியை எடுத்தார். சி.பி.ஐ, சி.பி.ஐ.(எம்), புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக ஆகியவற்றுடன் முக்கியமாக கூட்டணி அமைத்தது. கொங்கு இளைஞர் பேரவை, செ.கு.தமிழரசன், சரத்குமார் கட்சி, பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகளை ஆளுக்கு ஒன்று, இரண்டு, மூன்று எனக் கொடுத்ததும், இடதுசாரிகளுக்கு வழமைபாணியில் கொடுத்ததும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்துக்கு அதிகபட்சமாகவும் கொடுத்து கூட்டணி அமைத்தார். ஏன்?. அன்றைக்கு அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்த சிறு கட்சிகள் எல்லோருக்கும் வடக்கு மாவட்டங்களில் செல்வாக்கு இல்லாததால், வடக்கு மாவட்டங்களில் இருக்கும் திமுக, பாமக, விசிக ஆகியோரை எதிர்கொள்ள அதிமுக போதாது என்பதால், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்துடன் சேர்ந்தார் என்பதை யாராவது உணர்ந்தார்களா? எப்படியாவது ஆட்சியில் இருக்கும் திமுக-வை தோற்கடிக்க எந்தளவு விட்டுக்கொடுக்க முடியுமோ, அந்தளவு விட்டுக்கொடுத்து ஏற்படுத்தப்பட்ட கூட்டணி அது. அதேசமயம், காங்கிரஸ் கட்சி 2ஜி-யைக் காட்டி, திமுக-வுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து தொகுதிகளைப் பெற்றது என்பதும் நாடறியும். இப்போது, 2016ம் ஆண்டில் யார் "சாணக்கியத்தனம்" பலித்தது என்பது புரிகிறதா?

2009 மக்களவைத் தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள். அது, அகில இந்திய அரசியலை முன்வைக்கும் தேர்தல். ஏற்கனவே, அதிமுக-வுக்கு இருக்கும் "வாக்கு வங்கி", அதனுடன் மூன்று ஆண்டுகளாக நடத்திய "நல்வாழ்வுத் திட்டங்கள்", அதன்மூலம் அடிப்படை மக்களது வாக்குகள், ஆகியவற்றுடன் "நிலவிய காங்கிரஸ் எதிர்ப்பு" என்பவை அதிமுக-வுக்கு சாதகமாகவும், திமுக-வுக்கு எதிராகவும் இருந்தாலும், நடுவண் அரசில் காங்கிரஸ் வருவதா? பாஜக வருவதா?" என்ற அறிவார்ந்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் அடி நீரோட்டமாக ஓடும் "காங்கிரசும் வேண்டாம், பாஜக-வும் வேண்டாம்" என்ற முழக்கத்தை செல்வி.ஜெயலலிதா கையிலெடுத்தார். அதற்கு "காவேரி பிரச்னையில், கர்நாடகாவில் உள்ள காங்கிரசும், பாஜக-வும் இணைந்து தமிழ்நாட்டை எதிர்ப்பதையே" முழக்கமாக்கினார். அத்தகைய அகில இந்தியக் கட்சிகளை எதிர்த்து, "மாநிலக் கட்சிகளின் கூட்டணி" என்று உருவாவதைக் கணித்து, குஜராத்தின் மோடியா? தமிழ்நாட்டின் லேடியா?" என்று முழங்கினார். அவையெல்லாம் "நல்ல அறுவடையை"க் கொடுத்தது. அப்போதும், யார் "சாணக்கியத்தனம்" வென்றது?

இப்போது மீண்டும் காங்கிரசும், திமுக-வும் சேர்ந்து நிற்கும்போதே, பல முணுமுணுப்புகள் தோன்றின. இயல்பாகவே, புறச்சூழலில் அதிமுக-வை எதிர்க்கும் நடுநிலையாளர்களிடம், திமுக எதிர்ப்பும் இருந்தது. யார் உதவியிருந்தாலும் "மூன்றாவது அணி" என்ற ஒன்று "புறநிலைத் தேவைகளை" ஒட்டி எழுந்தது. அதை உருவாக்குவதில் திமுக-வின் ஒரு பிரிவினரின் "வெட்டிவிடும் போக்கும்" காரணம். மூன்றாவது அணிக்குக் கிடைத்த ஆதரவை அவர்களே "கெடுத்துக் கொண்டார்கள்" என்பது வேறு கதை. விஜயகாந்த் உட்பட, தன்னுடன் 2011ல் இருந்த சிறு கட்சிகள் அனைவரையும் சேர்க்காமலே, 2014 முடிவுகளை மனதில் கொண்டு, செல்வி.ஜெயலலிதா ஒரு "தனிக் கணக்கு" போட்டார். அதிமுக தனது "மிருகத்தனமான" செல்வாக்கை நம்பி, 234 தொகுதிகளிலும் "இரட்டை இலை" என்ற முடிவுக்கு வந்தது. மீண்டும் "காங்கிரசும் வேண்டாம், பாஜக-வும் வேண்டாம்" என்ற தாரக மந்திரமும் பயன்பட்டது. இப்போதும் அவரது "சாணக்கியத்தனம்" சுற்றுச் சூழலுக்குப் பொருத்தமானதாக அமைந்ததால் வென்றது. அதேசமயம், பாஜக-வின் கடுமையான "ஜெ" எதிர்ப்பு பரப்புரையும், ம.ந.கூ.யின் "ஜெ" எதிர்ப்பு பரப்புரையும், பாமக-வின் "ஜெ"எதிர்ப்பு பரப்புரையும், அவரவர் கட்சிகளுக்கு உதவுவதைவிட "அதிமுக-வை வீழ்த்த திமுக மட்டுமே சரி" என்ற நிலைப்பாட்டை நடுநிலை வாக்களர்களுக்கு கடைசி வாரங்களில் ஏற்படுத்தி, திமுக-வுக்கு 89 தொகுதிகளை பெற்றுத் தந்தது. அதற்கு ஸ்டாலின் அணியினரின் "தொடர் விளம்பரங்கள்" துணை செய்தன. ஆகவே, "புறநிலையை ஒட்டி எடுக்கும் முடிவுகள்தான் சாணக்கியத்தனத்தை" தீர்மானிக்கும் என்பதே சரியானது.

2016 தேர்தல் முடிவுகளின்படி, அதிமுக ஆட்சி அமைப்பதற்காக "பதவியேற்பு" நிகழ்ச்சியில், இதுவரை நடுத்தரவர்க்கம் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் உள்ள " சாலையை அடைக்கும், நடைமேடையை அடைக்கும் பதாகைகளை நிறுவும் பந்தா அரசியலை" வெறுக்கும் போக்கை உணர்ந்து, போயஸ் தோட்டம் தொடங்கி தலைமைச் செயலகம் வரை "ஒரு பதாகை" கூட இல்லாதநிலையை செல்வி.ஜெயலலிதா உருவாக்கினார். இது, ஏற்கனவே அவரால் உணரப்பட்டு அதிமுக-வின் பொதுக்குழுவுக்கு "நூறு தொடர் பதாகை" வைத்ததற்காக மாவட்டச் செயலாளர் செந்தமிழன் தூக்கியடிக்கப்பட்டபோதே தெரிய வந்தது. அதேபோல, "காலில் விழும் கலாச்சாரம்" முழுமையாக மக்களால் வெறுக்கப்பட்டது என்பதை உணர்ந்து, பதவியேற்பு மேடையிலேயே அதைத் தவிர்த்தார். இவையெல்லாமே, பொதுமக்கள் மத்தியிலே உலாவும் கருத்தறிந்து, செயல்களை மாற்றிக்கொள்ளும் "சாணக்கியத்தனம்" இல்லையா? அதேபோல, ஸ்டாலின் அமரும் இடம்பற்றியும் எழுந்த சர்ச்சைக்கு பதில் சொல்வதுபோல "வெறுப்பு அரசியல் வேண்டாம், ஒத்துழைப்பு அரசியல் வேண்டும்" என்ற பாணியில் ஒரு அறிக்கை வெளியிட்டதும் சாணக்கியத்தனம்தானே? மக்கள் எதிர்பார்ப்பையொட்டி, "ஐந்து கையெழுத்துகளை" போட்டு விளம்பரம் தேடியதும், தனது எதிர்ப்பு வாக்குகளை தன்பக்கம் ஈர்க்கும் பாணிதானே? காலாவதியான சாணக்கியத்தனத்துக்கும், சூழலுக்கு ஏற்ற சாணக்கியத்தனத்துக்கும் உள்ள வேறுபாடு என்று கூறலாமா?

- சமூக ஆர்வலர், பத்திரிகையாளர் T.S.S.மணி
https://minnambalam.com/k/1464307223

Post a Comment

Powered by Blogger.