Halloween party ideas 2015
.

முள்ளிவாய்க்காலில் இருந்து விடுதலையை நோக்கி – தத்தர்முள்ளிவாய்க்கால் ஒரு முடிவென்று எதிரி கருதுகிறான். அது முடிவல்ல, இனி அதுவே விடுதலைக்கான தொடக்கப் புள்ளி.

முள்ளிவாய்க்கால் பெரும் துயரை எதிரி செய்துகாட்டி ஆறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இப்போது எம்முன் உள்ள பிரதான கேள்வி இதுதான். முள்ளிவாய்க்கால் பெரும் துயரத்துக்குள் மூழ்குண்டு கிடக்கப்போகிறோமா அல்லது அதையே அடிப்படை ஆதாரமாகக் கொண்டு வீறுடன் எழுந்து விவேகத்துடன் நடைபோடப் போகிறோமா.எதிரி எமக்கு ஒரு பெரும் சவாலை தந்திருக்கின்றான். அதனை எதிர்கொண்டு முன்னேற வேண்டியதும் விடுதலையை காணவேண்டியதும் எமது பொறுப்பு.

முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றிய இனப்படுகொலையின் மூலம் எமது தேசியத் தளம் தகர்க்கப்பட்டுவிட்டது என்றும் இனி எங்களால் எழுந்து நிற்க முடியாது என்றும் எதிரி நம்புகின்றான். முள்ளிவாய்க்காலின் பின் நாம் சின்னா பின்னப்படுத்தப்பட்டுவிட்டோம் என்றும் எதிரி நம்புகிறான்.இதை நிரூபிக்கும் வகையில் நாம் நடக்கப்போகிறோமா? அல்லது இதனைக் கடந்து மேலெழப்போகிறோமா?
6 ஆண்டுகளின் பின் நாம் எங்கே நிற்கின்றோம் என்பதை நிதானத்துடன் நோக்க வேண்டும். எம்மை நாம் மதிப்பிட வேண்டும். நாம் நிற்கும் இடத்தில் இருந்து அடுத்த கட்ட பயணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.


இப்போது ஈழத்தமிழரின் அரசியலில் ஒரு பாரீய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதுதான் எதிரியின் பலம். இதனை ஏற்படுத்திய மகிழ்ச்சியில் எதிரி உள்ளான். களத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் இந்த வெற்றிடம் தெளிவாயும், பெரிதாயும் உள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் இந்த வெற்றிடத்தை களத்தில் ஒருபோதும் நிரப்ப முடியாது. அதற்கான விருப்பமும் அவர்களிடம் இல்லை மற்றும் அதற்கான திட்டங்களும் அவர்களிடம் துளியும் இல்லை.


ஆனால் களத்தி;ற்கு வெளியே விடுதலை விரும்பிகள் துண்டுபட்டு சிதறுண்டு கிடக்கின்றனர். மிதவாத தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழீழ விடுதலைக் கொள்கையை கைவிட்டுவிட்டதாக அறிவித்துவிட்டனர். இனி அவர்களின் பிரச்சனை நாடாளுமன்ற ஆசனங்களும், மாகாணசபை கதிரைகளும்தான். அவர்கள் தங்கள் பாதையை தெளிவாக்கி அதன் வழி தமக்கான பதவிக் கதிரைகளை நோக்கி தெளிவாக நடைபோடுகிறார்கள். எனவே அவர்கள் மீது யாரும் நம்பிக்கை வைக்க முடியாது.


அப்படியென்றால் விடுதலைக்கான பயணமும், பணியும் மேலும் கடினமாகிவிட்டது என்பதுதான் அர்த்தம்.
முள்ளிவாய்க்காலில் 40,000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை கூறுகின்றதே ஆயினும் அது மிகைப்படுத்தப்பட்ட தொகை என்றும் சுமாராக 10,000 பேர் வரைதான் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவற்றுள் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் தொகையும் அடங்கும் என்றும் பச்சையாக பொய்சொல்லும் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரா இவ்வாரம் தெரிவித்த செய்திக்கு ஒரு சிறு மறுப்பையோ, எதிர்ப்பையோ தெரிவிக்காத தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இனியும் ஈழத்தமிழரின் நியாயங்களுக்காக குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவும் கூடாது.


ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை 40,000 மேல் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளதுடன் இது மேலும் பல்மடங்கு அதிகம் என்பதை தகுதிவாய்ந்த வேறு பலதரப்பினர் தெரிவிக்கின்றனர்.

உண்மை இப்படியிருக்கையில் இதற்காக சிறுதும் கவலை தெரிவிக்காமல் நடந்த இனப்படுகொலையை மூடி மறைக்கவும், அதனை நியாயப்படுத்தவும்தான் புதிய அரசாங்கம் முயல்கிறது என்பதை சமரவீராவின் கூற்று வெளிக்காட்டுகிறது. மேலும் போர்க்குற்றத்திற்கான ஐ.நா.சபையின் சர்வதேச விசாரணையை மறுத்து உள்நாட்டு விசாரணையை அங்கீகரிக்குமாறு கூறும் புதிய அரசாங்கத்தின் செயல் முதலையை நம்பி அதன் முதுகில் ஏறி ஆற்றைக் கடக்க முயலும் குரங்கின் கதையையே புதிய அரசாங்கத்தின் உள்நாட்டு விசாரணை என்ற மாயமான் நினைவுபடுத்துகிறது. கொலைகாரனே எப்படி நீதிபதியாக அமைய முடியும்? இப்பின்னணியில் சர்வதேச நீதிவிசாரணை என்ற ஒற்றைக் கோரிக்கையின் அடிப்படையில் ஈழப்போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை. ஆதலால்தான் சர்வதேச விசாரணையை இல்லாது செய்துவிட்டால் போராட்டத்துக்கான அடிப்படையையே இல்லாது செய்துவிடலாம் என்று எதிரி நம்பி அதை நோக்கி புதிய அரசாங்கம் நகருகிறது.


விடுதலைதான் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஒரே தீர்வு. விடுதலைக்கான தெளிவான சர்வதேச பார்வையுடன், உள்நாட்டு யதார்த்தத்தை சரிவர ஒருங்கிணைத்து ஒரு தெளிவான பாதையை நாம் வகுக்க வேண்டும். இந்த புள்ளியில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். முள்ளிவாய்க்காலில் மாண்டுபோன ஒன்றரை இலட்சம் மக்களின் பெயரால் நாம் விடுதலைக்காக ஐக்கியப்படுவதும், விடுதலைக்காக சபதம் எடுப்பதும், விடுதலையைச் சாத்தியமாக்குவதும்தான் முள்ளிவாய்க்காலில் படுகொலையான எமது மக்களுக்கு நாம் செய்யும் காணிக்கையாகும்.


நாம் பகைவர்களை உற்பத்தி செய்யும் இயந்திரமாக அல்லாமல் நண்பர்களை உற்பத்தி செய்யும் விளைநிலமாக வேண்டும். விடுதலைக்காக நாம் எத்தகைய முரண்பாடுகளையும் கடந்து ஐக்கியப்பட தயாராகவேண்டும். 6 ஆண்டுகள் காத்திருந்தது போதும் இனியாவது  இதனை சாத்தியமாக்காது விட்டால் வரலாறு எம்மை பழி கூறும்.


தேசியப் போராட்டங்கள் உலகில் முடிவடைந்து விட்டது என்று ஒரு கருத்து மாயையை ஏற்படுத்த பல உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் முயல்கின்றன. உலகம் மேலும் மேலும் சுருங்கிச் செல்லும் நிலையில் பிரிந்து செல்வதற்கோ அதற்கான தேசியத்திற்கோ இடமில்லை என்று மேற்குலக அறிஞர்கள் உரக்கக் கூறிவருகின்றனர். ஆனால் உண்மை அப்படியல்ல என்பதை பட்டவர்த்தனமாக கடந்த வாரம் நடந்து முடிந்த ஸ்காட்லாந்து தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.


மேற்குலகில் தேசியம் தம் இலக்கை அதிகம் தாண்டிவிட்டது என்பது ஓரளவு உண்மை. ஆனால் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் தேசியம் துவக்கநிலையில்தான் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புக்குள் பல ஐரோப்பிய அரசுகள் கட்டுப்படும். தேசியம் தாண்டி வளர்ச்சியடைவதாக கூறப்படும் ஐரோப்பாவில், அதுவும் பிரித்தானியாவில் கடந்தவாரம் நிகழ்ந்த தேர்தலின் போது ஸ்காட்லாந்து தேசிய கட்சி மொத்தம் உள்ள 59 தொகுதிகளில் 56 தொகுதிகளில் வெற்றி பெற்று தம் தேசிய அபிலாசையை நிரூபித்துள்ளது. மேலும் பிரிந்து செல்வது பற்றிய பொதுவாக்கெடுப்பை தாம் நடத்தப்போவதாக இக்கட்சி தன் தேர்தல் வெற்றியின் பின் அறிக்கையிட்டுள்ளது. ஒருவர்கூட கொல்லப்படாத ஸ்காட்லாந்தில் தேசிய உணர்வும் பிரிந்து செல்வதும் பற்றிய உணர்வும் இப்படி இருக்கையில் பாதுகாப்பற்று படுகொலைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள் தேசியத்தின் பேரால் பிரிய வேண்டியதன் அவசியம் எவ்வளவு பெரியது என்பதை புரிந்து கொள்ளலாம்.


மேலும் உக்ரைனில் இருந்து கிருமியா கடந்த ஆண்டு தேசியத்தின் பேரால் ரஷ்ய இராணுவத்தின் உதவியுடன் பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ இருக்கிறது. பிரிக்கப்பட்டது பிழை என்று உக்ரைன் கூறுவதிலும் உக்ரைனிய தேசியவாதம் இருக்கிறது. பிரிந்தது சரி என்று கிருமியர்கள் கூறுவதிலும் கிருமிய தேசியவாதம் இருக்கிறது. கிருமியாவை ரஷ்யாவுடன் இணைத்தது சரியென்று ரஷ்யா கூறுவதில் ரஷ்ய தேசியவாதம் இருக்கிறது. இதனை எப்படிப் பார்த்தாலும், எப்பக்கத்தால் பார்த்தாலும் இங்கு ஏதோ ஒருவகை தேசியவாதம் மேலோங்கியிருப்பதை காணலாம். எனவே தேசியவாதம் முடிவடைந்துவிட்டது என்று சொல்வது மேற்படி மேற்கு ஐரோப்பிய, கிழக்கு ஐரோப்பிய உதாரணங்கள் இரண்டின் மூலம் சுத்தத் தவறு என்பது தெளிவாக தெரிகிறது.


பனிப்போர் காலத்தில் பங்களாதேஷ் மட்டும்தான் பிரிந்து சென்று விடுதலை அடைந்த ஓரே ஒரு தேசிய இனமாகும். ஆனால் பனிப்போரின் பின் ரஷ்யாவிலிருந்து 14 தேசிய இனங்கள் பிரிந்து சென்று விடுதலையடைந்துள்ளன.

யூகோஸ்லாவியவிலிருந்து 7 தேசியங்கள் பிரிந்து சென்று விடுதலையடைந்துள்ளன. செக்கோஸ்லோவியாவிலிருந்து 3 தேசங்கள் பிரிந்து சென்று விடுதலை அடைந்துள்ளன. இதேபோல ஆப்பிரிக்காவில் எரித்திரியாவின் விடுதலையையும், ஆசியாவில் கிழக்குத் தீமோரின் விடுதலையையும் இப்படி பட்டியல் படுத்தி நீட்டிச் செல்லலாம். எனவே தேசிய இனங்கள் விடுதலை அடைவதற்கு இந்த யுகம் தடையல்ல. தடை என்று சொல்வது ஒரு விசமத்தனமான கருத்தியல் ஆதிக்கமாகும்.


இறுதி உதாரணமாக ஸ்காட்லாந்தின் தேசிய நிமிர்வு தேர்தல் மூலம் வெளிப்பட்டிருப்பது உலகெங்கும் உள்ள ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகும்.

நாம் தேசிய விடுதலை அடைய வேண்டும் என்பதே வரலாற்று நியதியாகும். விடுதலையால் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உள்ளான ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களுக்கு காணிக்கை செலுத்துவோமாக.


இது ஒரு கடினமான பணி. இதனை செய்வது ஒன்றுமட்டும்தான், அந்த ஒன்றே ஒன்று மட்டும்தான் ஈழத்தமிழர் முன்னுள்ள தெரிவுமாகும். பதவி நாற்காலிகளை தெரிவு செய்ய துடிப்போர் விடுதலை என்ற தெரிவை நிராகரிப்பர். இப்போது விடுதலைக்கான தேவை முன் எப்போதையும்விட மிக அவசியமானதாக இருப்பதுடன் அதற்கான  பயணம் அதைவிடவும் மிகவும் கடினமானதாகவும் உள்ளது. ஆனால் அந்த கடினமான பணியைத் தேர்ந்தெடுத்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் உண்மையான விடுதலையை விரும்பும் ஒவ்வொருவரின் கையிலும் உண்டு.


(பதிவு வலைத்தளம் - வேந்தன், புதன், மே 18, 2016 - 09:44 மணி, தமிழீழம்)

http://www.pathivu.com/?p=36348

Post a Comment

Powered by Blogger.