Halloween party ideas 2015
.

மொழி அறிவைச் சீரழிப்பதுதான் இன்றைய பள்ளிக் கல்வியின் மிக மோசமான சிக்கல். தாய்மொழியான தமிழ் ஏறத்தாழ எல்லா தனியார் ஆங்கிலப் பள்ளிகளிலும் ஒடுக்கப்படுகிறது. உயர் கட்டணப் பள்ளிகளில் தமிழ் மொழியே கற்றுத் தரப்படுவதில்லை. இந்தத் தலைமுறைக் குழந்தைகள் எதிர்கொள்ளப்போகும் ஆபத்துகளுக்கான அடித்தளம் இதுதான்.

தாய்மொழி அறிவு இல்லாத எந்த மனிதராலும் நல்ல வாழ்வியலை அமைத்துக்கொள்ள முடியாது. தனியார் பள்ளிகளில் பயிலும் இப்போதைய பிள்ளைகளுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது.

ஒருவேளை எழுதினாலும் படித்தாலும் வெற்று மனப்பாடத்தின் வழியாகத்தான் இவற்றைச் செய்கிறார்கள். செம்மை மரபுப் பள்ளியில் தமிழ் உயிர், உயிர் மெய் எழுத்துகளை எழுதிப் போட்டுவிட்டு, அவற்றை வாசிக்கச் சொன்னோம். ஏறத்தாழ எல்லாப் பிள்ளைகளும் சரியாக வாசித்துக் காட்டினர்.

என்னுடன் பணியாற்றும் பள்ளி ஆசிரியர் சாதிகா, ‘எழுத்துகளை வரிசையாக எழுதாமல் இடை இடையே எழுதிப் போடுங்கள்’ என்றார். அதேபோல் எழுத்துகளை வரிசை மாற்றி எழுதியபோது பெரும்பாலான பிள்ளைகள் அவற்றை வாசிக்க இயலாமல் தேங்கிவிட்டனர். அ, ஆ, இ, ஈ என்ற வரிசையில் நன்றாக வாசிக்கும் குழந்தைகளால் உ, ஊ, அ, ஈ என்ற வரிசையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

மனப்பாடத்தின் வழியாகக் கற்றுத் தரும் கேடுகெட்ட வழிமுறையை மொழியின் எழுத்துகளை அறிமுகப்படுத்துவதிலும் கடைபிடிக்கின்றன இக்காலத் தனியார் பள்ளிகள்.

தமிழ் படிக்க / எழுதத் தெரியாமல் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன எனச் சிந்தியுங்கள்.

பெரும்பாலானோரது கனவு, அயல்நாட்டு வேலை அல்லது இங்கேயே செயல்படும் அயல்நாட்டு நிறுவனத்தில் வேலை என்பதாக இருக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உருவான பொருளாதார மந்தம், அந்நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரை உலுக்கி எடுத்தது. பல பெரு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. பல இலட்சம் மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி சென்ற காட்சியை நீங்கள் கவனித்தீர்களா எனத் தெரியவில்லை. அமெரிக்கா விழுந்தால், இந்தோனேசியாவிலும் தாய்லாந்திலும் பட்டினிச் சாவுகள் நிகழும் எனுமளவு நிலைமை உள்ளது. அந்தளவு இந்த நாடுகள் தமது சுயசார்பை இழந்துவிட்டன.

பழைய ரஷ்யாவின் பல பகுதிகளில் விபசாரம் முக்கியமான தொழிலாக உள்ளது. உலகின் பெரும்பாலான செல்வ நகரங்களின் விடுதிகளில் ரஷ்யப் பெண்கள் இருக்கிறார்கள். எந்தமொழி பேசினாலும், சொந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தாவிட்டால், இந்த நிலைதான் உருவாகும்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கும். திடீரென, ஒரு நாட்டின் கடன் சுமை அதிகரித்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் வீழும். அங்கே முதலீடு செய்திருந்த அயல் நிறுவனங்கள் வெளியேறிய பின்னர், வேலைக்கான திண்டாட்டம் மிகும். இப்போது, நடைமுறையில் உள்ள கல்விமுறை, இவ்வாறான தற்சார்பற்ற பொருளாதாரத்திற்காகவே வடிவமைக்கப்பட்டது என்பதைச் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

மருத்துவம், கணினி, பொறியியல் ஆகிய மூன்று துறைகளைக் குறிவைத்துதான் ஏறத்தாழ எல்லாக் குழந்தைகளும் கல்விக் கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இவை மூன்றுமே தனியார் துறைகளை நம்பியவைதான். இவற்றிலும் அயல்நாட்டு நிறுவனங்களையும் அயல்நாட்டு வேலைகளையும் நம்பியிருக்கும் நிலைதான் மிகுதி. எதிர்காலத்தில் உருவாகப் போகும் பொருளாதாரப் பேரிடர்கள், அயல்நாட்டு நிறுவனங்களை முடக்கிப்போடவுள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் ஆகிய பகுதிகளில் இந்த நிலை இப்போதே துவங்கிவிட்டது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் ஊதியக் குறைப்பும், பணிச் சுரண்டலும் நடைமுறைக்கு வந்துவிட்டன.

உடல்நலம் முழுமையும் அயல்நாட்டு மருத்துவமுறைகளால் சூறையாடப்படும் இந்தக் காலத்தில், மரபுவழி மருத்துவ முறைகள்தான் தீர்வுகளாக மாறியுள்ளன. உணவை நஞ்சாக்கிய இந்தச் சமூகத்தில், மரபுவழி வேளாண்முறைகள்தான் உயிர் காக்கும் தொழில்நுட்பங்களாகியுள்ளன. இந்த இரு துறைகளும் உங்கள் காலத்தில் நல்ல மாற்றம் பெறத் துவங்கியுள்ளன அல்லவா. இவைபோலவே, எல்லாத் துறைகளிலும் தீர்வுகளை நமது மரபுவழிகளில் மட்டுமே காண இயலும்.

மரபுவழி மருத்துவம், மரபுவழி வேளாண்மை ஆகிய இரு துறைகளும் மீட்டெடுக்கப்படாவிட்டால் இந்தச் சமூகத்தின் நிலையைக் கற்பனை செய்ய இயலுமா? நஞ்சை நிலத்தில் கொட்டி, நஞ்சை விளைவித்து, நஞ்சை உண்டு, நோயுற்று, நஞ்சையே மருந்தென விழுங்கி உடல் நலிவுற்று அழிவதைத் தடுக்க இயலாது போயிருக்கும். இவ்வாறான சிக்கலிலிருந்து சமூகம் காப்பாற்றப்படுகிறது என்றால், இத்துறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்த அனைவரும் மரபு வேர்களைத் தேடிச் சென்று, தீர்வுகளைத் தாய்மொழியாம் தமிழில் எழுதுவதும் பேசுவதும்தான் காரணம்.

உங்களால் இந்தக் கட்டுரையைப் படிக்க முடிகிறது, உங்கள் பிள்ளைகளால் முடியுமா என்று சிந்தியுங்கள். அவர்களின் வாசிப்புப் பழக்கம் ஆங்கிலத்தில் உள்ளது. எந்த நிலத்தில் பிறந்து வளர்கிறார்களோ அந்த நிலத்தின் மொழியை அவர்களால் படிக்கவும், எழுதவும், பேசவும் முடியவில்லை. இவர்களுக்கான வழிகாட்டுதல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதுவோரால் மட்டுமே முடிவு செய்யப்படும்.

திருக்குறளில் உள்ள வாழ்வியல் கருத்துகள் இவர்களுக்குத் தெரிவதற்கான வாய்ப்பில்லை. சித்தர்களின் மெய்யறிவு, திருவாசகத்தின் இறைமை, இராமாயணம், பாரதம், பொன்னியின் செல்வன், பாரதியாரின் பாடல்கள், பாவேந்தரின் எழுச்சிக் கவிதைகள்,  கண்ணதாசன் பாடல்களின் வாழ்க்கை அறிவு எதுவும் இந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கப்போவதில்லை.

இன்னும் பத்தாண்டுகளுக்குப் பின்னர் நம்மாழ்வார் நூல்களை, கட்டுரைகளை வாசிக்கும் மனிதர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும் நிலை உள்ளது.

உங்கள் வாழ்க்கையில் உருவான மாற்றங்களில் இந்த மொழி இருக்கிறதா இல்லையா? உங்கள் சிந்தனையை, வாழ்வியலை மாற்றியவர்கள் தமிழில்தானே உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலம் மட்டுமே தெரிந்த அரைகுறையாக நீங்கள் இருந்திருந்தால், உங்களால் நம்மாழ்வாரைப் புரிந்துகொள்ள முடியுமா? மரபுவழி மருத்துவங்களைத் தெரிந்துகொள்ள முடியுமா? உணவுக்கும் உடல்நலனுக்கும் உள்ள உறவை விளங்கிக்கொள்ள முடியுமா?

உங்கள் பிள்ளைகள் தமது இளமைக் காலத்தில் தமிழ் படிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் உங்களுக்குக் கவலையாக இல்லையா? நான் வருந்துகிறேன். இப்போதைய குழந்தைகளின் எதிர்காலம் எனக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

ஒருபக்கம், செல்வ நாடுகளின் பொருளாதார ஆதிக்கம், மறுபக்கம் மரபு வாழ்வியலின் மீட்சி ஆகிய இரு முனைகளில் இந்தக் கால குழந்தைகள் எந்த முனையிலும் பொருந்தாதவர்களாக வளர்கிறார்கள். அயல் நிறுவனங்களின் பொருளாதாரத்தை நம்பி வளர்க்கப்படும் குழந்தைகள், எதிர்வரும் பொருளாதார வீழ்ச்சிகளைச் சமாளிக்கப்போவதில்லை. தாய்மொழியே தெரியாததாலும், மரபு கல்விமுறையிலிருந்து விலகி விட்டதால், மரபு மீட்சியிலும் இவர்களால் பங்கெடுக்க இயலாது.

ஆங்கிலம் கற்பது இன்றைய தேவைதான். ஆங்கிலத்தை நிராகரிக்க வேண்டாம். கற்றலில் முதலிடம் தாய் மொழிக்குத்தான் இருக்க வேண்டும். இன்றைக்கு ஆங்கிலம் கோலோச்சுகிறது, அதைக் கற்போம். எதிர்காலத்தில் வேறு மொழியில் தொழில்கள் வளர்ந்தால், அதைக் கற்போம். மனிதகுல வளர்ச்சியில் இது வெகு இயல்பான போக்கு.

தாய்மொழி கற்க வேண்டும் என்பது வெறி அல்ல; இயல்பு. அயல்மொழி மொழியைக் கற்றால் போதும், தாய்மொழி தேவையில்லை என்பதுதான் வெறிபிடித்த சிந்தனை. உண்மையில் இது, வணிகச் சிந்தனை.
உங்கள் பொருளாதாரத்தைச் சூறையாடுவதற்காக தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டி வைத்த மிக மோசமான கண்ணி இது.

நம் பிள்ளைகள் ஒன்றல்ல இரண்டல்ல பத்து அயல்மொழிகளைக் கூட கற்கட்டும். அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக தமிழ் கற்பது இன்றியமையாதது. தாய்மொழியைக் கற்பதுதான் அயல்மொழிகளுக்கான சிறந்த அடித்தளம்.

நமது மரபு மிக அற்புதமான வாழ்வியல் சேதிகளை, இறையியல் கொடைகளைத் தாங்கி வளர்ந்துள்ளது. இந்த மொழியில் எண்ணற்ற நன்மைகள் பொதிந்துள்ளன. பல்லாயிரம் ஆண்டுகாலமாக தமிழ் மொழி செம்மாந்து வளர்ந்து வந்துள்ளது. உங்கள் காலத்தோடு அதன் உயிர் ஓய்ந்துபோனது என்ற நிலையை உருவாக்கிவிடாதீர்கள்.

நெல், அரிசி, மிளகு, சீரகம், இலை, வேர், மரம், தண்டு, கிளை, கிளி, பருந்து, மலை, முகடு, சோறு, குழம்பு, தண்ணீர், தாகம், வறட்சி, மாமன், அத்தை, சித்தி, தாய்மாமன், கிளிஞ்சல், நத்தை, வேங்கை, புலி, எந்திரம், தூரிகை, ஓவியம், சாணம், வைக்கோல் – ஆகிய சொற்களில் கணிசமானவை இந்தக் கால நகரத்துப் பிள்ளைகளுக்கு அந்நியமானவை. இவற்றில் பல சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களும் இவர்களுக்குத் தெரியாது என்பதுதான் கொடுமை. அதாவது, தன்னைச் சுற்றியுள்ள உயிரினங்கள் மற்றும் பொருட்களின் பெயர்களைத் தாய்மொழியிலும் அழைக்கத் தெரியாது, அயல்மொழியிலும் உச்சரிக்க இயலாது.

ஆனால், இந்தப் பிள்ளைகள் பக்கம் பக்கமாக படிக்கிறார்கள், எழுதுகிறார்கள். அவற்றுக்கான மதிப்பெண்களையும் வாரிக் குவிக்கிறார்கள். எல்லாம் மனப்பாடம் செய்யும் மாயம்!

குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தாருங்கள், தமிழில் பேசுங்கள், எழுதுங்கள். எந்தப் பள்ளியாவது, தமிழில் பேசுவதைத் தடை செய்தால் அந்தப் பள்ளியின் விதிமுறைகளைக் குப்பையென வீசி எறியுங்கள். இவ்வாறெல்லாம் தடை விதிப்பது, சட்டத்திற்கே எதிரானது, அடிப்படை மனித உரிமைக்கு மாறானது. நீங்கள் வளைந்துகொடுப்பதால் அவர்கள் உங்கள் முதுகில் சவாரி செய்கிறார்கள்.

இயன்றவரை, உங்கள் பிள்ளைகளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்க வையுங்கள்.

உங்களுக்கென ஓர் அரசு இருக்கிறது, அந்த அரசு கல்விக்கென பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளை நம்மால் எளிதில் சரி செய்ய இயலும். தனியார் கொள்ளைக் கூடங்களில் நீங்களே அடிமைபோலத்தான் நடத்தப்படுகிறீர்கள். அங்கே எந்தச் சீர்திருத்த முயற்சியும் செல்லுபடியாகாது.

தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு நீங்கள் செலுத்தும் பெருந்தொகையைச் சேமித்து வைத்தால், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான வேளாண் பண்ணையே அமைத்துவிடலாம். அல்லது வேறு தொழிலைத் துவங்கித் தரலாம். குறைந்தபட்சம் கடன் வாங்கிச் சீரழியாமலாவது வாழலாம்.

ஒரு தோட்டத்திலிருந்து செடியைப் பிடுங்கி நடும்போது, பிடுங்கப்படும் இடத்தின் மண்ணிலிருந்து ஒரு பிடியை அள்ளி செடியின் வேரில் அணைப்பது வழக்கம். தாய்மண் என்று அதற்குப் பெயர். ஓரறிவு கொண்ட செடி கூட தாய்மண்ணின் மணத்தை விட்டுக்கொடுக்காமல் புதிய நிலத்தில் வேர் இறக்குகிறது. இதற்கும் மேல் விளக்கம் தேவையில்லை என நம்புகிறேன்.

Post a Comment

Powered by Blogger.