Halloween party ideas 2015
.

புதியதலைமுறை இதழில் எழுத்தாளர் கவிதா முரளிதரன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை:

இனிய திருமாவளவன் அவர்களுக்கு,

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நீங்கள் வெறும் 87 வாக்குகளில் தோல்வியடைந்த தகவல், கட்சிப் பாகுபாடுகள் தாண்டி பலரையும் பலரையும் கவலை கொள்ள வைத்திருக்கிறது. உங்களைப் போன்றோரின் குரல் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாததன் இழப்பு சாதாரணமானதல்ல. சமூக வலைத்தளங்களிலும் அறிவுஜீவிகளிடத்திலும் இந்த தேர்தலில் நீங்கள் பெற்ற வரவேற்பு தமிழகத்தில் சாதாரணமாக எந்த தலைவருக்கும் கிடைக்காதது.
ஆனால் வெகுஜன அரசியலில் இது எதுவும் வாக்குகளாக மாறவில்லை என்பதே வருத்ததிற்குரிய உண்மை. போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் 3 அல்லது 4 ஆவது இடங்களைதான் பிடிக்க முடிந்திருக்கிறது என்பதுதான் கள யதார்த்தம். இதன் பின்னுள்ள உளவியல் என்ன? பணம், மாற்றத்துக்கு தயாராகாத வாக்காளர் மனநிலை, கூட்டணியின் சில தவறான முடிவுகள் என்று பல காரணங்களைச் சொல்லலாம். ஆனால் அறிவு ஜீவிகள் மத்தியில்/சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நீங்கள் இந்த தோல்விக்கு பிறகு பாமரர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று உங்களை ஒரு முழுமையான வெகுஜன மக்களின் தலைவனாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

மக்கள் நலக் கூட்டணியின் கூட்டங்களில் வேறு எந்த தலைவரையும் விட உங்களுக்கு கிடைத்த கூடுதல் வரவேற்புக்கு காரணம் விடுதலைச் சிறுத்தைகள் என்பதே உண்மை. அது அசலான ஒரு தலைவன் மீது சாதாரண தொண்டர்களுக்கு உள்ள ஈர்ப்பு. தனது தலைமையை ஒரு தொண்டன் சாதாரணமாக அணுகக் கூட முடியாத, அவரை வழிபாட்டு மனநிலையில் மட்டுமே வைத்திருக்கக் கூடிய தமிழக அரசியல் சூழலில் நீங்கள் மிக எளிதில் அணுகக் கூடியவராகவும் தொண்டர்களோடு பயணிக்கக் கூடியவராகவும் இருக்கிறீர்கள் என்பது உங்களது பெரும்பலம்.  அந்த பலத்தை கட்சியினரை தாண்டி பரவலாக்குங்கள்.
போட்டியிட்ட தொகுதிகளில் மட்டுமல்லாமல் முடிந்தால் தமிழ்நாடு முழுவதிலும் கட்சிக் கட்டமைப்பு பற்றியும் வெகுஜன மக்களிடம் அதற்குள்ள தொடர்பு பற்றியும் ஆழமாக ஆய்வும் பரிசீலனையும் செய்ய வேண்டிய தேவையை விடுதலைச் சிறுத்தைகளுக்கு இந்த தேர்தல் முடிவுகள் உருவாக்கியிருப்பதாகதான் நான் கருதுகிறேன். இதன் மூலம் கட்சிக் கட்டமைப்பை வெகுஜன மக்களுக்கு கூடுதல் நெருக்கமாக்கும் வழிகளை நீங்கள் கண்டடைய வேண்டும்.

திருமாவளவன் என்கிற ஒற்றை பிம்பமே இன்று விடுதலைச் சிறுத்தைகளின் ஆதாரமாக இருக்கிறது. அரசியல் தளத்தில் மட்டுமன்றி அறிவுத்தளத்திலும் இன்று தவிர்க்க முடியாத ஒரு பெயராக உருவாகி வருகிறீர்கள். ஆனால் அடுத்த ந்லையாக இன்னும் பல திருமாவளவன்கள் உருவாக்கப்பட வேண்டும். இதன் முன்னெடுப்பாக கட்சிக்குள் கட்சி பணிகளைப் பரவலாக்கும் வகையில் புதிய இரண்டாம் கட்ட தலைமைகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அது குடும்ப ஆதிக்கம் இல்லாத உங்களைத் தலைவராக கொண்ட விடுதலைச் சிறுத்தைகளில் மட்டுமே சாத்தியம்.
ஜாதிக் கட்டமைப்பு இறுகிக் கொண்டிருக்கும் அரசியல் சூழலில், பாமக போன்ற ஒரு கட்சி வெற்றி பெறாவிட்டாலும் பரவலாக வாக்குகளை பெற்று வரும் சூழலில் தலித் பிரச்னைகளின் மீதான கவனத்தையும் அக்கறையையும் கைவிடாமல், அதே நேரம் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை இன்னமும் தீவிரத்தன்மையோடு முன்னெடுக்க உங்கள் இயக்கம் முன் வர வேண்டும்.

தமிழக அரசியலில் இனியொரு வரலாற்றுத் தருணம் உருவாகுமானால் அது உங்களால் உருவாகவே நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. அந்த மாற்றத்தை நோக்கிய உங்களது அரசியல் பயணத்தில் இந்த தோல்வி புதிய திசைகளை காட்டும் வரைப்படம் மட்டுமே.

Post a Comment

Powered by Blogger.