Halloween party ideas 2015
.

வெள்ளைகாரர்களுக்கு எதிராக துவங்கிய நயினார் குலசேகரனின் போரட்டம் மூன்று தலைமுறைகளை கடந்து இன்று இயற்கைவளக் கொள்ளைக்காரர்களுக்கு எதிராக தொடர்கிறது.
------------------------------------------------------------------------------------

நயினார் குலசேகரன் இந்திய சுதந்திரத்திற்காக ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் கிராமங்களில் விடுதலை முழக்கத்தை கொண்டு சென்றவர். சுதந்திர இந்தியாவில் பதிமூன்று  முறை சிறைபடுத்தப்பட்டவர். இன்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்களில் ரேசன்கடை அமைப்பதில் இருந்து தாமிரபரணியில் அணை கட்டுவது வரை சிறிய, பெரிய என எல்லா கோரிக்கைகளுக்குமான போராட்டங்களில் முன் நிற்கிறார். அந்த 92 வயது போராளியை  சந்திக்க துத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள அவரது சொந்த கிராமமான  நட்டாத்திக்கு சென்றோம்.

எங்கு இருந்து வருகிறீர்கள் என்றும், என்னை எப்படி தெரியும் என்றும் அவர் வினவியதில் துவங்கிய உரையாடலில் இருந்து.முதலில் அவரை பற்றி முன்னுரை கொடுத்தார்.  “வெள்ளைக்காரன் காலத்தில் சுதந்திரத்திற்காக காங்கிரசில் இருந்து போராடினேன். சுதந்திரத்திற்கு முன் காங்கிரசிலும் அதன் பின் கம்யூனிஸ்டு கட்சியிலும் இணைந்து போராடினேன். அப்போது ‘உழுபவனுக்கே நிலம்’ என்ற கோரிக்கையை முன் வைத்து போராடினோம். அப்போது ஆறுமுகமங்கலத்திலும் வெள்ளூரிலும் விவசாய சங்கத்தை பெரிய அளவில் உருவாக்கினோம். டவுனில் தொழிலாளர்கள் நான்கு பேர் இருந்தாலும் சங்கமாக மாறுவது எளிது. அதனால் ஏதாவது செய்ய முடியும். ஆனால், கிராமங்களில் நாலாயிரம் விவசாயிகள் இருந்தாலும் ஒன்று திரட்டுவது கடினம். ஆனாலும் நாங்கள் விவசாய சங்கத்தை உருவாக்கினோம். பல கிராமங்களில் ஒன்று திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தோம். அதன் பின், கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து வெளிவந்துட்டேன். இன்னும் விவசாயிகளுக்காக போராட்டம் செய்கிறேன். விவசாயிகளுக்கென்று பேச யாருமே இல்லை. நாங்களாக போராடிக் கொண்டு இருக்கோம்” என்றார்.

தாமிரபரணி பற்றி பேச துவங்கியதும், “தமிழ்நாட்டில் இருக்கும் வற்றாத ஜீவநதி தாமிரபரணியில் மொத்தம் எட்டு அணை இருக்கிறது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணை  திருவைகுண்டம் அணை என இரண்டு அணை இருக்கிறது. இதில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலம் விவசாயம் செய்யப்படுகிறது. இதில் பிசானம் சாகுபடி, கார் சாகுபடி என்று இரண்டு போக விவசாயம் நடைபெறும். பிசானம் சாகுபடி என்பது முதல் போகம்; இது மார்ச் மாதத்தோடு முடியும். அதன் பின் இரண்டு மாதங்கள் மராமத்து பணிகள் நடக்கும். ஜூன் மாதம் கார் சாகுபடி துவங்கும். இப்போது தூத்துக்குடியில்       ஸ் பிக், ஸ்டெர்லைட் மாதிரியான கம்பெனிகள் தண்ணி எடுப்பதால், இப்போ ஒரு போக சாகுபடியாக குறைந்துவிட்டது. அரசாங்கம் விவசாயிகள் பேச்சைக் கேட்பதே இல்லை. நாங்கள் எல்லாம் கோகோ கோலாவிற்கு  அனுமதி கொடுக்க கூடாது என்று போரட்டம் செய்தோம். ஆனால், அரசு இப்பொழுது பெப்சிக்கும் சேர்த்து அனுமதி கொடுத்து இருக்கிறது. தாமிரபரணி ஆற்றில் கரையைச் சுற்றியிருக்கும் பகுதியில் தற்போது தண்ணியை எடுக்கிறார்கள். இதனால் இப்பொழுது பிசான சாகுபடியும் சிக்கலாகும்” என்று சொல்லும் நயினார் குலசேகரன், தாமிரபரணி விவசாயிகளுக்கு தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுபதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஒரு புத்தகமும் எழுதி உள்ளார்.

மேலும், “தாமிரபரணி ஆற்றில் நூற்றி ஐம்பதுக்கும் மேலான இடங்களில் கழிவுகள் கலப்பதால் ஆற்று நீர் முழுமையாக மாசுபடுகிறது; இளைய தலைமுறைக்கு நீர் பற்றிய அக்கறை இல்லை; தேர்தலுக்குபின் நீருக்கான புதிய சுதந்திர போராட்டத்தை துவங்க போறேன்.” என்றவர், தனது சட்ட போராட்டத்தை பற்றி விவரித்தார். “திருவைகுண்டம் அணை கட்டியதிலிருந்து தூருவாரப்படவேயில்லை. நான் கடந்த நாற்பது வருடமாக இதற்காக போராடி வருகிறேன். எட்டு அடி ஆழம் உள்ள அணை, இப்பொழுது ஒரு அடியாக குறைந்துவிட்டது. இதற்காக பசுமை தீர்ப்பாயத்தில் மூன்று முறை நேரில் சென்று வாதாடினேன். இப்பொழுது அணை தூர் வாரப்படுகிறது. அதிலும் அரசு விதிகளுக்கு உட்பட்டு மணல் கொள்ளை நடக்காமல், அணையை தூர் வார வேண்டும் என்று போராடி வென்றுள்ளோம். மூன்று மாதங்களாக தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இது நாற்பது ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” என்றார். தாமிரபரணியில் மணல் அள்ளுவதற்கு ஐந்தாண்டுகள் தடை வாங்கிய வழக்கை தொடர்ந்தவர்களில் ஒருவரான இவர், தடைகாலம் முடிய போவதால் மீண்டும் வழக்கு தொடுக்க தயாராகி கொண்டு இருக்கிறார்.

முன் கார் சாகுபடி நடக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் இப்பொழுது கார் சாகுபடியே சந்தேகமான  சுழலில் இந்த ஆண்டு குளங்களிலும் அணைகளிலும் தண்ணீர் உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி தண்ணிர் திறக்க வேண்டும். அதற்கான அறிவிப்புகள் வந்தால் நாற்று போட விவசாயிகள் தயாராக உள்ளனர். எனவே, கார் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று இவர் முதல்வருக்கு மனு கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் தாமிரபரணி ஆற்று நீர் உரிமைகளுக்கு போராடும் இவர், கிராமப்புற மக்கள் மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் பல கிராம மக்களின் அடிப்படை தேவைகளுக்கு போராடி வருகிறார். பல கிராமங்களில் உள்ள மக்கள் பேருந்து வசதிகளுக்கான போராட்டங்களுக்கும் இவரைத்தான் அனுகுகிறார்கள். சமீபமாக பட்டாண்டிவிளை கிராமத்திற்கு ரேசன்கடை வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கிறார். அதுபற்றி பேசும்போது, “150 குடும்ப அட்டைகள் இருக்கும் கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. பட்டாண்டிவிளையில் 215 குடும்ப அட்டைகள் உள்ளன. அங்கு 1300 க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஆனாலும், அங்கு ரேசன்கடை திறக்கவில்லை. பல மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிராமத்துக்காரனுக்கு அரசு விதி எதுவும் தெரியாது என்று அதிகாரிகள் இப்படி நடந்து கொள்கிறார்கள். அதனால் தான் கிராமத்து மக்கள் அவர்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் போராடிக்கொண்டு இருக்கிறேன்” என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பொது தேர்வில், முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரு மேடையில் பாராட்டு விழா எடுத்து  கிராமபுறமானவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்படுகிறார்.

வெள்ளைகாரர்களுக்கு எதிராக துவங்கிய நயினார் குலசேகரனின் போரட்டம் மூன்று  தலைமுறைகளை கடந்து இன்றும் தொடர்கிறது. முதலில் மனு கொடுப்பது; பின் போராட்டம்; அடுத்து வழக்கு; என்று மூன்று வழிகளிலும் சாமானிய மக்களுக்கான போராட்டத்தை தனது 92வது வயதிலும் எந்த சோர்வும் இன்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறார்.

Post a Comment

Powered by Blogger.