Halloween party ideas 2015
.

1. கடவுள் ஆற்றும் செயல்களை நினைவில் வைத்திருக்க வேண்டும்

 

2. இத்தாலிய காரித்தாஸ் உறுப்பினர்களுக்கு திருத்தந்தை வாழ்த்து

 

3. உரோம் யூத சமூகத்திற்கு திருத்தந்தை பாஸ்கா செய்தி

 

4. வளர்இளம் பருவத்தினர் யூபிலி ஏப்ரல் 23-25

 

5. ஒரு நாட்டின் சிறுபான்மையினருக்கு கல்வி கற்கும் உரிமை

 

6. ஈராக் கிறிஸ்தவ மாணவர்க்கு ஆதரவாக ப்ரெஞ்ச் ஆயர்கள்

 

7. உரோம் த்ரேவி நீர் ஊற்று ஏப்ரல் 29ல் சிவப்பு நிறத்தில்

 

8. ஆசியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. கடவுள் ஆற்றும் செயல்களை நினைவில் வைத்திருக்க வேண்டும்

 

ஏப்.21,2016. வாழ்வில் கடவுள் பிரசன்னமாக இருக்கும் பாதை மற்றும் சூழல்களை, நாம் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும், ஏனெனில் இவை, நம் விசுவாசத்தை ஆழப்படுத்த உதவும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இந்நாளைய வாசகங்களிலிருந்து மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள், தங்கள் வாழ்வில், கடவுள் பிரசன்னமாக இருந்த அனைத்து முக்கிய தருணங்களையும், அடையாளங்களையும் நினைவுகளில் சேமித்து வைத்து, அவற்றைத் திரும்பிப் பார்ப்பதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.

கடவுள் ஆற்றிய அழகான செயல்களையும், அதேநேரம், நாம் எதிர்கொண்ட தடைகள் மற்றும் புறக்கணிப்புக்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டும், ஏனென்றால், கடவுள் நம்மோடு எப்பொழுதும் இருக்கிறார் மற்றும் நம் தீய செயல்களைக் கண்டு அஞ்சுவதில்லை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள், நம் இதயங்களிலும் மனங்களிலும் இருந்து, நம்மை எவ்வாறு மீட்டுள்ளார் என்பதை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றும், திருஅவை, திருநற்கருணை அருளடையாளத்தை, ஒரு நினைவாக, எவ்வாறு விளக்குகிறது என்றும் விசுவாசிகளிடம் கூறினார் திருத்தந்தை.

நினைவு, நம்மைக் கடவுளிடம் நெருக்கமாக அழைத்துச் செல்கின்றது என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்மோடு என்றும், எவ்வேளையிலும் இருக்கிறார் என்றும் கூறினார். 

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. இத்தாலிய காரித்தாஸ் உறுப்பினர்களுக்கு திருத்தந்தை வாழ்த்து

 

ஏப்.21,2016. ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, ஒவ்வொரு மனிதருக்கும் அன்பைத் தெளிவான முறையில் காட்டுவதே, இத்தாலிய காரித்தாஸ் அமைப்பினரின் பணியாகும்  என்று இவ்வியாழனன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய மறைமாவட்டங்களின் காரித்தாஸ் அமைப்புகள், உரோம் நகரில் நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய 700 உறுப்பினர்களை, இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தன்னார்வலப் பணியாளர்களைப் பல்வேறு பணிகளுக்கு நியமிக்கும்போது, சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்தல் அவசியம் என்றும் கூறினார்.

இக்காலத்தின் சவால்கள் மற்றும் முரண்பாடுகள் மத்தியில் காரித்தாசின் பணிகள் கடினமானவையாக உள்ளன, ஆயினும், பிறரன்புப் பணியே ஒவ்வொருவரின் தலையாயக் கடமை என்பதை கோடிட்டுக் காட்டினார் திருத்தந்தை.

எல்லாக் கிறிஸ்தவ சமூகமும், பிறரன்புப் பணியாற்ற கடமைப்பட்டுள்ளது என்றும், கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகளுக்கு இடையே, மதிப்புமிக்க, சகோதரத்துவச் சந்திப்பு இடம்பெற வேண்டுமென்றும், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. உரோம் யூத சமூகத்திற்கு திருத்தந்தை பாஸ்கா செய்தி

 

ஏப்.21,2016. பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்குத் தயாரித்துவரும் உரோம் யூத சமூகத்திற்கு, இவ்வியாழனன்று செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்தும், அடிமை வாழ்விலிருந்தும் மீட்டதை நினைவுகூரும் பாஸ்கா விழா, ஏப்ரல் 22, இவ்வெள்ளிக்கிழமை சூரியன் மறையும் நேரத்தில் ஆரம்பித்து, ஏப்ரல் 30, சனிக்கிழமையன்று நிறைவடைகிறது. 

இவ்விழாவை முன்னிட்டு, உரோம் யூதமத ரபி Riccardo Di Segni அவர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் ஏராளமான ஆசிர்வாதங்களுடன், யூத சமூகத்துடன் இருந்து, அவர்கள் ஒவ்வொருவரையும் பாதுகாத்து, அமைதியை அருள்வாராக என்று வாழ்த்தியுள்ளார். 

இச்செய்தியின் இறுதியில், தனக்காகச் செபிக்குமாறு கேட்டுள்ள திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவையும், யூத சமூகமும் நட்பில் வளர்வதற்கு கடவுள் உதவுவாராக  என்றும் கூறியுள்ளார்.

மேலும், காலநிலை மாற்றம், இன்றைய மனித சமுதாயம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக உள்ளது, இதற்குத் தீர்வு காண்பதற்கு அனைவரின் ஒருமைப்பாட்டுணர்வு தேவைப்படுகின்றது என்பது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

4. வளர்இளம் பருவத்தினர் யூபிலி ஏப்ரல் 23-25

 

ஏப்.21,2016. சிறுவர், சிறுமியர் யூபிலியை முன்னிட்டு, உலகின் பல பகுதிகளிலிருந்து ஏறக்குறைய அறுபதாயிரம் வளர்இளம் பருவத்தினர் முதன்முறையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கவுள்ளனர் என்று, நற்செய்தியை புதிய வழியில் அறிவிக்கும் திருப்பீட அவை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 23, வருகிற சனிக்கிழமை முதல், ஏப்ரல் 25 திங்கள்கிழமை வரை வத்திக்கானிலும், உரோம் நகரிலும் நடைபெறும் யூபிலி நிகழ்வுகளில், பல நாடுகளைச் சேர்ந்த அறுபதாயிரம் வளர்இளம் பருவத்தினர் கலந்து கொள்கின்றனர்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தைச் சுற்றி அமைந்துள்ள தூண்கள் பகுதியில், ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறும் வசதிகளும், இரக்கத்தின் கூடாரங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.

வருகிற சனிக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் புனிதக் கதவிற்குச் செல்லும் திருப்பயணத்துடன், வளர்இளம் பருவத்தினரின் யூபிலி நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

ஏப்ரல் 24, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களுக்கு யூபிலி திருப்பலி நிறைவேற்றுவார். இது, இந்த யூபிலியின் மாபெரும் நிகழ்வாக அமைந்திருக்கும். 

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

5. ஒரு நாட்டின் சிறுபான்மையினருக்கு கல்வி கற்கும் உரிமை

 

ஏப்.21,2016. கல்வி, குறிப்பாக, பள்ளிக்கூடத்தில் கற்கப்படும் கல்வி, சமய சகிப்புத்தன்மையையும், பாகுபாடற்ற உணர்வையும் ஊக்குவிப்பதில் பெரிய பங்கு வகிக்கின்றது என்று, திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

ஒரு நாட்டின் சிறுபான்மையினரின் கல்வி கற்கும் உரிமை குறித்து, ஹாக் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டதன் இருபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஹாக் நகரில் நடைபெற்ற, OSCE நிறுவனத்தின் உயர்மட்ட கூட்டத்தில், இப்புதனன்று உரையாற்றிய பேராயர் Janusz Urbanczyk அவர்கள் இவ்வாறு கூறினார்.

பிற மதத்தவர் பற்றிய அறிவு, வன்முறையைத் தூண்டும் புரிந்துகொள்ளாமை மற்றும் மாறாத நிலைப்பாட்டைக் குறைக்கும் என்றும், பல்வேறு இன, கலாச்சார மற்றும் மதங்களை நன்றாகப் புரிந்து மதிப்பதற்கு, கல்வித் திட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார் பேராயர் Urbanczyk.

இந்தக் கல்வித் திட்டங்கள், ஒவ்வொரு மனிதரையும் மதிக்கவும், மக்கள் மத்தியில் ஒருமைப்பாட்டுணர்வை ஏற்படுத்தவும் உதவது உட்பட, முக்கிய விழுமியங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய பேராயர் Urbanczyk அவர்கள், மனித உரிமைகளையும், அடிப்படை சுதந்திரங்களையும் மதிக்கக் கற்றுக்கொள்வதில், கல்விக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் கூறினார்.

பேராயர் Janusz Urbanczyk அவர்கள், OSCE என்ற, ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்திற்குத், திருப்பீடத் தூதராகப் பணியாற்றுகின்றார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

6. ஈராக் கிறிஸ்தவ மாணவர்க்கு ஆதரவாக ப்ரெஞ்ச் ஆயர்கள்

 

ஏப்.21,2016. புலம்பெயர்ந்தவர் முகாம்களில் வாழும், ஈராக் நாட்டின் இளம் கிறிஸ்தவ மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில், ப்ரெஞ்ச் ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் பிரதிநிதிகள் குழு ஒன்று ஐந்து நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டது.

இம்மாதம் 17ம் தேதியன்று சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய இக்குழு, இவ்வியாழனன்று நிறைவு செய்துள்ளது.

2014ம் ஆண்டில், ஐ.எஸ். இஸ்லாமிய அரசு, ஈராக்கின் நினிவே பகுதியைத் தாக்குவதற்குத் தொடங்கிய பின்னர், அங்கிருந்து வெளியேறிய ஒரு இலட்சத்து இருபதாயிரம் கிறிஸ்தவர்களில், இளம் கிறிஸ்தவ மாணவர்களும் உள்ளடங்குவர்.

எர்பில் நகருக்குச் சென்ற அரபு மொழி பேசும் இம்மாணவர்கள், குர்த் மொழி தெரியாததால் தங்களின் படிப்பைத் தொடர முடியாமல் இருந்தனர் என்றும், ப்ரெஞ்ச் ஆயர்களின் முயற்சியால் தற்போது ஏறக்குறைய நானூறு மாணவர்கள், கிர்குக் நகரில் பல்கலைக்கழகம் செல்கின்றனர் என்றும், CNA கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறியது.  

 

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி

 

7. உரோம் த்ரேவி நீர் ஊற்று ஏப்ரல் 29ல் சிவப்பு நிறத்தில்

 

ஏப்.21,2016. கிறிஸ்தவ விசுவாசத்திற்காக இன்றும் தங்கள் உயிர்களை இழக்கும் எல்லாக் கிறிஸ்தவர்களின் நினைவாக, உரோம் நகரில் சுற்றுலாப் பயணிகள் குவிகின்ற மற்றும் மிக முக்கியமான இடமாகவும் அமைந்துள்ள த்ரேவி நீர் ஊற்று, ஏப்ரல் 29ம் தேதி சிவப்பு நிறத்தில் ஒளிரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் நடவடிக்கைகளில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை, மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்கத்தில், Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனம், இந்நிகழ்வை ஏற்பாடு செய்கின்றது.

உலகெங்கிலும் ஒரு தெளிவான மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய முடிவுகள் எடுக்கப்படவும், 21ம் நூற்றாண்டில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள், தங்களின் அடிப்படை உரிமையாகிய சமய சுதந்திரத்தை முழுமையாய் அனுபவிக்க வழியமைக்கவும் இந்நிகழ்வு உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளது Aid to the Church in Need பிறரன்பு நிறுவனம்.

ஏப்ரல் 29ம் தேதி இடம்பெறும் இந்நிகழ்வில், அலெப்போ கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்கப் பேராயர் அந்துவான் அவ்தோ, Church in Need நிறுவனத்தின் அனைத்துலகத் தலைவர் கர்தினால் மவ்ரோ பியாச்சென்சா போன்றோர் உரை நிகழ்த்துவார்கள். 

 

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி

 

8. ஆசியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு

 

ஏப்.21,2016. உலகளவில், பத்திரிகை சுதந்திரம் தொடர்பான தரவரிசைப் பட்டியலில் வட கொரியா, சீனா, வியட்நாம், லாவோஸ் போன்ற ஆசிய நாடுகள் கடைசி இடங்களில் உள்ளன. எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் என்ற ஆர்.எஸ்.எப் அமைப்பு வெளியிட்டுள்ள, உலகளவில் பத்திரிகை சுதந்திரம் தரவரிசைப் பட்டியலில், 6-வது ஆண்டாக, பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2வது, 3வது இடங்களை முறையே நெதர்லாந்து, நார்வே நாடுகள் பிடித்துள்ளன.

180 நாடுகளில் எடுக்கப்பட்ட, ஊடக சுதந்திரம் குறித்த ஆய்வுப் பட்டியலில், அமெரிக்கா 44வது இடத்திலும், இரஷ்யா 148வது இடத்திலும் உள்ளன. வட கொரியா 179வது இடத்திலும், சீனா 176வது இடத்திலும், வியட்நாம் மற்றும் லாவோஸ் 173வது இடத்திலும், மியான்மார் 143வது இடத்திலும் உள்ளன.

இந்தியா 133வது இடத்தில் உள்ளது, கடந்த 2015ம் ஆண்டில் இந்தியா 136வது இடத்தில் இருந்தது. இந்தியாவில் பத்திரிகையாளர்களும், வலைப்பதிவர்களும் எளிதில் மத அமைப்புகளால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்றும், பதட்டமான பகுதியாக காணப்படும் காஷ்மீர் போன்ற மாநிலங்களைப் பத்திரிகையாளர்கள் எளிதில் அணுக முடிவதில்லை என்றும் அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் மிரட்டல்களையும், சவால்களையும் பிரதமர் நரேந்திர மோடி கண்டு கொள்ளாதவராகவே இருக்கிறார் எனவும், இந்தியாவில் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்க, போதிய வழிவகைகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி

           

 

இது இரக்கத்தின் காலம்...

 

பணிவைக் கற்றுத்தரும் பெரியோர்

 

அந்த இரயிலில், ஒரு பெரியவரும், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும் எதிர் எதிரே அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். இருவருமே முன்பின் அறிமுகமில்லாதவர்கள். ஒரு நகரில் இருவரும் இறங்கினார்கள். பெரிய டிரங்க் பெட்டியுடன் இறங்கினார் பெரியவர். சிறிய பெட்டியுடன் இறங்கிய அதிகாரி, கூலி..கூலி என்று கூப்பிட்டார். அதைப் பார்த்த பெரியவர், ஐயா, இந்தப் பெட்டிதானே, நானே கொண்டு வருகிறேன் என்று, அதைக் கேட்டு வாங்கிக் கொண்டார். ஐயா, சுமை கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம் என்கிற மாதிரி, இப்போதைய நாகரீகம் இருக்கிறது என்று பேசிக்கொண்டே, அதிகாரி தங்கும் இடம் வரை சென்றார் பெரியவர். அங்கே போய் பெரியவர் பெட்டியை வைத்ததும், பணம் கொடுப்பதற்கு பர்சை எடுத்தார் அதிகாரி. ஐயா, எனக்குக் கூலி எதுவும் வேண்டாம். உங்களுக்குச் சேவை செய்வது என் கடமை. நான் இதைச் செய்தது அன்புக்காக என்றார் பெரியவர். நன்றியுடன் இருவரும் பிரிந்து சென்றனர். அன்று மாலை அந்த நகரில் ஒரு கூட்டம். அக்கூட்டத்திற்கு அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சென்றிருந்தார். மக்கள் கூட்டம் அலைமோதியது. அன்றைய முக்கிய விருந்தினர் மேடையில் பேசுவதற்காக வந்தார். மேடையில் அமர்ந்திருந்த பெரியவர்கள் எல்லாரும் எழுந்து நின்று, முக்கிய விருந்தினருக்கு மாலை அணிவித்தனர். அதைக் கவனித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு அதிர்ச்சி. அவர்தான், அன்று காலையில் அவரது பெட்டியைத் தூக்கி வந்த பெரியவர். அந்தப் பெரியவர்தான் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். பணத்துக்காக அல்ல, அன்புக்காகச் சேவைபுரிவதன் முக்கியத்துவத்தையும், அடக்கத்தையும் கற்றுத் தருகின்றனர் பெரியவர்கள்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 




--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு

SEO/SMO Team

Post a Comment

Powered by Blogger.