Halloween party ideas 2015
.

 

1. போரினால் துன்புறும் உக்ரைன் மக்களுக்காக விண்ணப்பம்

 

2. விளையாட்டு, நற்பண்புகளை, விழுமியங்களை உள்ளடக்கியது

 

3. ஆயர்கள் மாமன்றத்தின் 14வது ஆணையத்தின் முதல் கூட்டம்

 

4. சமய நல்லிணக்கத்தை பயங்கரவாதம் அழிக்கின்றது

 

5. இரக்கம் என்பது, புண்படுத்தப்பட  தயாராக இருப்பது

 

6. மியான்மார் கைதிகள் விடுதலை, ஐ.நா. வரவேற்பு

 

7. இந்தியாவில் 33 கோடி மக்கள் வறட்சியால் பாதிப்பு

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. போரினால் துன்புறும் உக்ரைன் மக்களுக்காக விண்ணப்பம்

 

ஏப்.20,2016. ஆயுத மோதல்களால் நீண்ட காலமாகத் துன்புறும் மற்றும் பலரால் மறக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்காக, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப் பின்னர் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரைன் மக்களுக்கு உதவுவதற்கென, ஏப்ரல் 24, வருகிற ஞாயிறன்று, அனைத்து ஐரோப்பிய கத்தோலிக்க ஆலயங்களிலும் உண்டியல் எடுக்கப்படும் என்று, இம்மாதம் 3ம் தேதி, அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் தான் விடுத்த அழைப்பை, இப்புதனன்று நினைவுபடுத்தி, இந்நோக்கத்திற்காகத் தாராளமாக நிதி வழங்குபவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிறன்பின் இந்த அடையாளம், உக்ரைன் மக்களின் பொருளாதாரத் துன்பங்களை அகற்றுவதோடு, அம்மக்களோடு, தானும், உலகளாவியத் திருஅவையும் நெருக்கமாக இருப்பதன் அடையாளமாகவும் உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.

மேலும், செர்னோபில் அணுமின் நிலையத்தில், பேரிடர் இடம்பெற்றதன் முப்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இடம்பெறும் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த உக்ரைன் மற்றும் பெலாருஸ் திருப்பயணிகளை வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பேரிடரில் பலியானவர்களுக்காகச் செபிக்கும் அதேவேளை, இப்பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பத்தை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, தனது நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை.

இப்புதன் பொது மறைக்கல்வி நிகழ்வில் இஸ்பானிய மொழியில் பேசியபோது, கடந்த வார இறுதியில் ஈக்குவதோர் நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், 500க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதைக் குறிப்பிட்டு, அந்நாட்டு மக்களுடன் தனது தோழமையுணர்வையும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. விளையாட்டு, நற்பண்புகளை, விழுமியங்களை உள்ளடக்கியது

 

ஏப்.20,2016. விளையாட்டு, பொதுவில் இடம்பெறும் ஒரு நிகழ்வு மட்டும் அல்ல, ஆனால், அது நற்பண்புகளையும் விழுமியங்களையும் உள்ளடக்கியது என்று, ஆஸ்ட்ரிய பனிச்சறுக்கு விளையாட்டு கூட்டமைப்பினரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இப்புதன் காலை பத்து மணிக்கு, பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்கு, பொது மறைக்கல்வியுரை வழங்குவதற்கு முன்னர், அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த நூறு ஆஸ்ட்ரிய பனிச்சறுக்கு கூட்டமைப்பினரைச் சந்தித்து இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

இக்கூட்டமைப்பினரை முதலில் வாழ்த்திய பின்னர், இவர்கள் இளையோர்க்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ப்பணம், விடாமுயற்சி, மனவுறுதி, நேர்மை, தோழமை, குழு உணர்வு போன்ற விழுமியங்களை, விளையாட்டு குறித்து நிற்கின்றது என்றும் கூறினார்.

இக்கூட்டமைப்பினர், தங்களின் எடுத்துக்காட்டுகள் வழியாக, சமுதாயம் வடிவமைக்கப்படுவதற்கு உதவுகின்றார்கள் என்றும், விளையாட்டு, வரவேற்பு, சுற்றுச்சூழலையும், கடவுளின் படைப்பின் அழகையும் பாதுகாத்தல் ஆகியவற்றின் தூதுவர்களாக எப்பொழுதும் வாழுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆஸ்ட்ரியாவின் இயற்கை வளத்தையும் புகழ்ந்தார் திருத்தந்தை.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. ஆயர்கள் மாமன்றத்தின் 14வது ஆணையத்தின் முதல் கூட்டம்

 

ஏப்.20,2016. "ஒரு குடும்பத்தை அமைப்பது என்பது, கடவுளின் கனவின் ஒரு பகுதியாக இருப்பதாகும், எவரும் தனிமையை உணராத ஓர் உலகைச் சமைப்பதில் கடவுளோடு இணைவதாகும்" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியிடப்பட்டது. @Pontifex என்ற முகவரியில், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள், ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் பதிவு செய்யப்படுகின்றன.

மேலும், உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலகத்தின் 14வது ஆலோசனை அவையின் முதல் கூட்டம், ஏப்ரல் 18,19 தேதிகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இச்செவ்வாயன்று நிறைவடைந்த இக்கூட்டத்தில், முதலில், உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி அவர்கள், திருத்தந்தையின் Amoris Laetitia அதாவது அன்பின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரை மடலுக்கு நன்றி தெரிவித்தார். அதோடு, இம்மடல், திருஅவைகளால், குறிப்பாக, உலகினரால் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும் கூறினார் கர்தினால் பால்திச்சேரி.

அடுத்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான தலைப்பு குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றும், திருப்பீடத் தலைமையகம், உலக ஆயர் பேரவைகள், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள், துறவு சபைகள் அதிபர்கள் அமைப்பு போன்று, பல்வேறு இடங்களிலிருந்து பெற்றுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டு, தலைப்புகள் அடங்கிய ஒரு பட்டியல் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இப்புதனன்று அறிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் இறுதியில், இந்த ஆலோசனைக் குழுவின் பங்களிப்புக்கும், அவர்கள் மத்தியில் காணப்படும் உடன்பிறப்பு உணர்வுக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

4. சமய நல்லிணக்கத்தை பயங்கரவாதம் அழிக்கின்றது

 

ஏப்.20,2016. மதத்தின் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாதம் பொய்யானது, என்று, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் ஐ.நா.வில் கூறினார்.

பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவை நடத்திய பொது விவாதத்தில் உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், மத்திய கிழக்குப் பகுதியில், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும், நூற்றாண்டுகளாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவந்த நிலை, அழிக்கப்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

மதத்தின் பெயரில் கொலை செய்கிறோம் என்றுரைக்கும் பயங்கரவாதக் குழுக்கள், பொய்யையும், தெய்வநிந்தனையையும் வெளிப்படுத்துகின்றன என்றும், எவ்வளவு கடுமையான சொற்களால் கண்டனம் செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு அக்குழுக்கள் கண்டனம் செய்யப்பட வேண்டும் என்றும், வன்முறைக்கு, மதத்தை கருவியாகப் பயன்படுத்துபவர்களை, கண்டனம் செய்வதற்கு, சமயத் தலைவர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்றும் பேராயர் கூறினார்.

பயங்கரவாதம், பொதுவான மனித சமுதாயத்திற்கு அடிப்படை அச்சுறுத்தலாக உள்ளது என்றும், இது நாடு கடந்தப் பண்பைக் கொண்டுள்ளது என்றும், ஐ.நா.வின் நூறு உறுப்பு நாடுகளிலிருந்து முப்பதாயிரம் வெளிநாட்டுப் போராளிகள், ஐ.எஸ். அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் நுழைந்துள்ளனர் என்றும் கூறினார் பேராயர் அவுசா.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

5. இரக்கம் என்பது, புண்படுத்தப்பட தயாராக இருப்பது

 

ஏப்.20,2016. இரக்கம் என்பது, சில காசுகளைத் தர்மம் போடுவது மற்றும் நல்லவர்களாய் இருப்பது தவிர, பிறரால் புண்படுத்தப்படவும், தவறாகப் புரிந்துகொள்ளப்படவும் தயாராக இருப்பதுமாகும் என்று, மணிலா கர்தினால் லூயிஸ் தாக்லே அவர்கள் கூறினார்.

பிறரிடம் இரக்கம் உள்ளவர்களாய் நடந்துகொள்ள நாம் விரும்பினால், இரக்கமுள்ளவராக இருந்த இயேசுவின் பாதையைப் பின்செல்ல வேண்டும் என்றும், பிறருக்கு, குறிப்பாக, சமுதாயத்தால் தாழ்த்தப்படுபவர்களுக்கு இரக்கத்தையும், பரிவன்பையும் காட்ட விரும்பினால், காயப்படுத்தப்பட தயாராக இருக்க வேண்டும் என்று, மனிலாவில் நடைபெற்ற ஒரு தியானக் கூட்டத்தில் கூறினார் கர்தினால் தாக்லே.

தாங்களாக முன்வந்து பிறருக்கு அன்பும் இரக்கமும் காட்ட விரும்புபவர்கள், தவறாகத் தீர்ப்பிடப்படவும், தவறாகப் புரிந்துகொள்ளப்படவும் நேரிடும் என்றும் எச்சரித்தார், அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் தலைவரான கர்தினால் தாக்லே.

பல ஆண்டுகளாக நில அபகரிப்பு ஆட்களால் துன்புற்ற மக்களுக்கு ஆதரவாகவும், அந்த ஆட்களுக்கு எதிராகவும் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைச் சந்தித்துத் திரும்பியபோது, தான் ஒரு கம்யூனிசவாதி என்று குற்றம் சாட்டப்பட்டதையும் குறிப்பிட்டார் கர்தினால் தாக்லே.

 

ஆதாரம் : CBCP/ வத்திக்கான் வானொலி

 

6. மியான்மார் கைதிகள் விடுதலை, ஐ.நா. வரவேற்பு

 

ஏப்.20,2016. மியான்மாரில் அரசுத்தலைவரின் பொது மன்னிப்பின்பேரில், 83 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வரவேற்றுள்ளார்.

இம்மாதம் 8ம் தேதி 199 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக, அந்நாட்டின் புத்தாண்டு தினத்தில், 83 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், உக்ரைன் நாடும், இரஷ்யாவும் கைதிகளை விடுதலை செய்வதற்கு இசைவு தெரிவித்துள்ளன என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இரஷ்யாவில் 22 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவிக்கும், உக்ரைன் நாட்டு விமான ஓட்டுனர் Nadezhda Savchenko அவர்களின் விடுதலைக்கு, உக்ரைன் அரசுத்தலைவர் Petro Poroshenko அவர்களிடம் உறுதியளித்துள்ளார், இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putin.

பயங்கரவாதம் உட்பட, பல்வேறு குற்றங்களுக்காக, இரு இரஷ்ய சிறப்புப் படைவீரர்களை, உக்ரைன் நாடு, 14 ஆண்டுகள் தண்டனை வழங்கி, சிறையில் வைத்ததைத் தொடர்ந்து, நாட்டுக்கு மிகுந்த ஆபத்தை வருவிக்கக்கூடிய கைதிகளைப் பரிமாற்றம் செய்வது குறித்து இவ்விரு நாடுகளின் அரசுத்தலைவர்களும், தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர். 

உக்ரைனில், இரஷ்யாவுக்கு ஆதரவாகப் போரிடும் புரட்சியாளர்களுடன் Yevgeny Yerofeyev, Alexander Alexandrov ஆகிய இரு படைவீரர்களும் சேர்ந்து செயல்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டு, உக்ரைன் நாடு, இவ்விருவருக்கும் 14 ஆண்டுகள் தண்டனை வழங்கியது.

 

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி

 

7. இந்தியாவில் 33 கோடி மக்கள் வறட்சியால் பாதிப்பு

 

ஏப்.20,2016. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 33 கோடி மக்கள், வறட்சியினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாட்டில் வறட்சியினால் 33 கோடி மக்கள் குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்றும், வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் பேரிடர் நிதியில் இருந்து நிதி வழங்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் ஏற்கனவே 12,230 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மூலம், ஏறக்குறைய 21 இலட்சத்திற்கு மேலான குடும்பத்தினருக்கு 100 நாட்களுக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 254 மாவட்டங்களில் 2 இலட்சத்து 55 ஆயிரம் கிராமங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், பீகார் மற்றும் அரியானா மாநிலங்களில், மழை பற்றாக்குறை இருந்தபோதிலும் வறட்சி நிலையானது அறிவிக்கப்படவில்லை.

மத்திய அரசு அளித்துள்ள தகவலில், வறட்சியினால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், ஜார்கண்ட் மற்றும் கர்நாடகா, முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

மேலும், ஐதராபாத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர், முதல்முறையாக குடிநீர் நெருக்கடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

ஆதாரம் : தினத்தந்தி/வத்திக்கான் வானொலி

 

 

இது இரக்கத்தின் காலம்...

 

ஆணவம் என்பது எது?

 

ஒரு நாட்டின் தலைமை அமைச்சராக, டாங் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர் ஆட்சியை நன்முறையில் நடத்துவதில் மிகவும் சிறந்தவர். அவருக்கு புகழ், அதிகாரம் மற்றும் செல்வங்கள் இருப்பினும், புத்த சமயக் கருத்துகள் பற்றி அறிவதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். அதற்காக, அந்த ஊரில் இருக்கும் ஒரு ஜென் குருவிடம் அடிக்கடி சென்று கற்றுக் கொண்டார். அவ்வாறு கற்கும் அவர், தான் ஓர் அமைச்சர் என்ற எந்த ஒரு அகங்காரமும் இல்லாமல், ஓர் உண்மையான சீடன் போல நன்கு கற்று வந்தார். ஒரு நாள் அந்த அமைச்சர், ஜென் குருவிடம், "புத்த சமயத்தின்படி, ஆணவம் என்றால் என்ன?" என்று கேட்டார். அதைக் கேட்டதும், குருவின் முகம் சிவந்தது. பின் குரு கோபமாகத் தனது குரலை சற்று உயர்த்தி, "என்ன முட்டாள்தனமான கேள்வி இது?" என்று கேட்டார். இந்த மறுமொழியை எதிர்பாராத அந்த அமைச்சருக்கும் கோபமும், அதிர்ச்சியும் ஏற்பட்டன. பின் குரு சிரித்துக் கொண்டே, "இதுதான் உண்மையான ஆணவம்" என்றார். இதுவரை குருவிடம் கோபம் கொள்ளாத சீடனாக இருந்த அமைச்சருக்கு, குரு கோபப்பட்டு பேசியதைக் கேட்டதும், 'நான் ஒரு நாட்டின் அமைச்சர், என்னைப் பார்த்து எப்படி கோபத்தோடு பேசலாம்' என்று எண்ணியபோது, தன்னுள் எழும்பிய கோபமே, உண்மையான ஆணவம் என்பது நன்கு புரிந்தது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

 
--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு

SEO/SMO Team

Post a Comment

Powered by Blogger.