Halloween party ideas 2015
.

1. திருத்தந்தை:வாழ்வின் பாதையில், இயேசுவைப் பின்செல்லுங்கள்

 

2. திருத்தந்தை, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு அரசுத்தலைவர் சந்திப்பு

 

3. நம் வாழ்வு இயேசுவின் கரங்களில் முழுவதும் பாதுகாப்பாக உள்ளது

 

4. திருத்தந்தை : லெஸ்போஸ் தீவில் அவ்வளவு வேதனைகளைப் பார்த்தேன்

 

5. ஈக்குவதோர், ஜப்பானில் நிலநடுக்கத்தில் பலியானவர்க்குச் செபம்

 

6. 11 புதிய அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தை திருப்பொழிவு

 

7. போலியோ நோயை ஒழிக்க நாடுகள் நடவடிக்கை

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. திருத்தந்தை:வாழ்வின் பாதையில், இயேசுவைப் பின்செல்லுங்கள் 

 

ஏப்.18,2016. வாழ்வின் பாதையில், இயேசுவைப் பின்செல்லுங்கள்  என்றும், எதிர்காலம் பற்றிச் சொல்லும் ஜோதிடர்களையும், காட்சி காண்பதாகச் சொல்லிக் கொள்பவர்களையும் நம்பாதீர்கள் என்றும், இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலை நிறைவேற்றிய திருப்பலியில், நல்ல ஆயரின் குரல் (யோவா.10,1-10) பற்றிய சிந்தனைகளை மையமாக வைத்து வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு நாளின் வாழ்விலும், நாம் பின்செல்லவேண்டிய பாதையில், இயேசுவே வாயிலாக இருக்கிறார், இயேசு என்ற இந்த வாயிலைத் தவிர, வேறு வழியே கிடையாது என்றும், வேறு பாதையைப் பயன்படுத்துவோர் திருடர் மற்றும் கொள்ளையர் என்றும் கூறினார் திருத்தந்தை. 

நாம் எப்போதுமே இயேசுவின் பெயரில் தீர்மானங்கள் எடுக்கின்றோமா? என்று நம்மை நாமே கேள்வி கேட்போம் என்றும், இயேசுவைப் பின்தொடர்பவர் தவறிழைக்க மாட்டார் என்றும், ஆயர், தனது மந்தையை அறிந்து அவற்றை வழிநடத்துவார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசுவின் குரலை, பேறுபெற்றோர் பற்றிக் கூறும் அவரின் மலைப்பொழிவில் கேட்கலாம் என்றும், கிறிஸ்தவ வாழ்வு, உண்மையிலேயே மிகவும் எளிதானது, இயேசுவே நம் வாயில், அவர் நம் பாதையை வழிநடத்துகிறார், அவரின் குரலுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும் என்றும், இத்திங்களன்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. திருத்தந்தை, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு அரசுத்தலைவர் சந்திப்பு

 

ஏப்.18,2016. மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் அரசுத்தலைவர் Faustin Archange Touadéra அவர்கள், இத்திங்கள் நண்பகலில், திருப்பீடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர், "Laudato si" திருமடலையும், "Evangeli gaudium" மற்றும் "Amoris laetitia" திருத்தூது அறிவுரை மடல்களையும், அரசுத்தலைவர் Touadéra அவர்களிடம் கொடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஆண்டில், மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு, பாங்குய் நகரில் புனிதக் கதவைத் திறந்ததற்கும், அந்நாட்டில் அமைதி மற்றும் ஒப்புரவு ஏற்படுவதற்குத் திருப்பீடத்தின் பங்கிற்கும் நன்றி தெரிவித்தார் அரசுத்தலைவர் Touadéra.

இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் சந்தித்துப் பேசினார் அரசுத்தலைவர் Touadéra.

மேலும், "திருஅவையில் ஒவ்வோர் அழைப்பும், நம்மை மன்னிப்பவரும், தம்மைப் பின்செல்ல அழைப்பவருமான இயேசுவின் பரிவன்புமிக்கப் பார்வையில் தனது மூலத்தைக் கொண்டுள்ளது" என்பது, திருத்தந்தையின் இஞ்ஞாயிறு டுவிட்டர் செய்தியாக வெளியிடப்பட்டது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. நம் வாழ்வு இயேசுவின் கரங்களில் முழுவதும் பாதுகாப்பாக உள்ளது

 

ஏப்.18,2016. நம் வாழ்வு, இயேசு மற்றும் இறைத்தந்தையின் கரங்களில் முழுவதும் பாதுகாப்பாக உள்ளது என்பதால், நாம் பயப்படத் தேவையில்லை என்று, விண்ணக அரசியே மனமகிழ்வாய் என்ற, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

எருசலேமில் கோவில் அர்ப்பண விழா பற்றிக் கூறும் தூய யோவான் நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து, அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் குரலுக்குச் செவிசாய்க்காத எவரும், அவரைப் பின்செல்பவர் என்று கூற முடியாது என்று கூறினார். 

இந்தச் செவிமடுத்தல், மேலோட்டமாக நோக்கப்படக் கூடாது, மாறாக, இயேசு ஒருவரையே தாராளமாகப் பின்செல்லலாம் என்ற உண்மையானப் புரிதலுடன்  அமைதல் வேண்டும் என்றும், அவருக்குச் செவிசாய்ப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தம்மை நல்ல ஆயர் என்று விளக்கிய இயேசு, என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன, எனக்கும் அவற்றைத் தெரியும், அவையும் என்னைப் பின்தொடர்கின்றன என்று கூறியிருப்பது, இயேசுவின் குரலுக்கு ஒருவர் செவிசாய்க்கவில்லையெனில், அவர் இயேசுவைப் பின்செல்வதாகச் சொல்ல முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது என்றார் திருத்தந்தை.

இயேசு நம் ஒவ்வொருவருடனும் நெருங்கிய உறவை உருவாக்க விரும்புகிறார். அவர் நம் வழிகாட்டி, நம் ஆசிரியர், நம் நண்பர், நம் எடுத்துக்காட்டு. அவரே நம் மீட்பர், என் கரங்களிலிருந்து எவரும் என் மக்களைப் பறித்துக் கொள்ள முடியாது என்கிறார் இயேசு என்று மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு நம்மீது வைத்துள்ள அன்பை யாராலும் வெல்ல முடியாது என்றும், தீயவனான சாத்தான் நம்மிலிருந்து நித்திய வாழ்வைப் பறித்துக்கொள்ள முயற்சி செய்தாலும், நாம் நம் இதயக் கதவுகளைத் தீயவனுக்குத் திறக்காமல் இருக்கும்வரை அவனால் எதுவும் செய்ய இயலாது என்றும், இஞ்ஞாயிறு வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

4. திருத்தந்தை : லெஸ்போஸ் தீவில் அவ்வளவு வேதனைகளைப் பார்த்தேன்

 

ஏப்.18,2016. இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர், கடந்த சனிக்கிழமையன்று தான் சென்ற லெஸ்போஸ் தீவுத் திருத்தூதுப் பயணம் பற்றிப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு அவ்வளவு வேதனைகளைப் பார்த்தேன் என்றார்.

லெஸ்போஸ் தீவில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் கிரேக்க மக்களுக்கு, திருஅவையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்ததாகக் கூறிய திருத்தந்தை, கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவரும், ஏத்தென்ஸ் பேராயருமான 2ம் எரோணிமுஸ் ஆகிய இருவருடன் அங்குச் சென்றதாகவும் கூறினார்.

இத்திருத்தூதுப் பயணத்தில், செபத்தால் தனக்கு உதவிய எல்லாருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, அத்தீவிலுள்ள மோரியா முகாமுக்கு மூன்று கிறிஸ்தவத் தலைவர்களும் சென்றதை நினைவுகூர்ந்தார்.

ஆப்கானிஸ்தான், சிரியா, வட ஆப்ரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களைச் சந்தித்தோம், இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறார், இவர்களில் பலர், தங்கள் பெற்றோர் அல்லது தோழர்களின் இறப்புகளை நேரிடையாகப் பார்த்தவர்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரு இளம் சிறாருடன் ஒரு முஸ்லிம் மனிதரைச் சந்தித்தேன், அவரின் மனைவி கிறிஸ்தவர் என்பதாலும், கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்ததாலும், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார், அத்தாய் ஒரு மறைசாட்சி என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெஸ்போஸ் தீவிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பியபோது, அங்கிருந்த மூன்று சிரியா நாட்டு முஸ்லிம் அகதிக் குடும்பங்களை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். ஆறு குழந்தைகள் உட்பட 12 பேர் வந்துள்ளனர். இரு குடும்பங்கள் தமாஸ்கு நகரையும், ஒரு குடும்பம் Deir Azzor நகரையும் சேர்ந்தவர்கள். இவர்களின் வீடுகள், குண்டுத் தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ளன. உரோம் சான் எஜிதியோ அமைப்பு, இவர்களுக்கு முதல் கட்ட உதவிகளை ஆற்றும் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

5. ஈக்குவதோர், ஜப்பானில் நிலநடுக்கத்தில் பலியானவர்க்குச் செபம்

 

ஏப்.18,2016. ஈக்குவதோர் மற்றும் ஜப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, தனது செபங்களையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர், இதனைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனே அவர்களுக்கு வலிமையும், ஆறுதலுமாக இருப்பாராக என்றும் கூறினார்.

இன்னும், குருத்துவ மற்றும் துறவற வாழ்வுக்கான அழைத்தலுக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, வருகிற ஜூன் மாதம், முதல் மூன்று நாள்களில் நடைபெறவுள்ள யூபிலியில், எல்லா அருள்பணியாளர்களும், குருத்துவ மாணவர்களும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

வத்திக்கான் வளாகத்தில் தனது உரையைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றும் அனைத்து இளையோர், சிறுவர், சிறுமியர், ஆண்டவர் அவர்களை இறையழைத்தலுக்கு அழைப்பது பற்றிச் சிந்திக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

தென் அமெரிக்க நாடான ஈக்குவதோரில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 11.58 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 260க்கும் அதிகமாகியுள்ளது. மேலும், 2,500 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பலர் இறந்துள்ளனர். 2,50,000 பேர், சொந்த இடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

6. 11 புதிய அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தை திருப்பொழிவு 

 

ஏப்.18,2016. இறையழைத்தலுக்காகச் செபிக்கும் 53வது உலக இறையழைத்தல் ஞாயிறாகிய, இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், 11 இளம் தியாக்கோன்களை, அருள்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்து நிறைவேற்றிய திருப்பலியில், அவர்கள் தங்களின் வரலாற்றை நினைவில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புதிய அருள்பணியாளர்கள், தங்களின் அன்னையர் மற்றும் பாட்டிமார்களிடமிருந்தும், வேதியர்கள் மற்றும் உலகளாவியத் திருஅவையிடமிருந்தும் பெற்ற ஆண்டவரின் வார்த்தை எனும் கொடையையும் நினைத்துக் கொள்ளுமாறும் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்துவின் இறப்பைத் தங்களில் தாங்கி, வாழ்வின் புதுமைத் தன்மையில் கிறிஸ்துவோடு உடன்நடக்குமாறும் அழைப்பு விடுத்த திருத்தந்தை, சிலுவையின்றி, உண்மையான கிறிஸ்துவை ஒருபோதும் கண்டு கொள்ள முடியாது என்றும், இயேசு இல்லாத சிலுவைக்கு அர்த்தமே இல்லை என்றும் கூறினார்.

புதிய அருள்பணியாளர்களே, நீங்கள் இரக்கமுள்ளவர்களாக, மிக மிக இரக்கமுள்ளவர்களாக வாழுமாறு, ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் பெயரால், திருஅவையின் பெயரால் விண்ணப்பிக்கிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். நீங்கள் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், இதை மறக்க வேண்டாம், ஆண்டவர் ஒருவர் ஒருவராக உங்களை அழைத்துள்ளார் என்றும், மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

7. போலியோ நோயை ஒழிக்க நாடுகள் நடவடிக்கை

 

ஏப்.18,2016. போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளை, 150க்கும் அதிகமான நாடுகள் தொடங்கியுள்ளன.

போலியோன நோயானது, தற்காலிக அல்லது நிலையான பக்கவாதத்தை ஏற்படுத்துவதுடன், உயிருக்கு ஆபத்தானதாகவும் அமைகிறது.

அண்மைக் காலமாக, குறைந்த எண்ணிக்கையிலேயே, போலியோவால் சிறார் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்நோயைத் தடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் எடுக்கப்படாவிட்டால், அது மீண்டும் பரவும் அபாயம் இருப்பதாக, உலக நலவாழ்வு நிறுவனம், கவலை தெரிவித்துள்ளது.

போலியோ நோயை ஒழிப்பதற்கு, Rotary அமைப்பு முயற்சிகளைத் தொடங்கிய காலக் கட்டத்தில், ஒவ்வோர் ஆண்டும், 3,50,000த்துக்கும் அதிகமான சிறார், இந்த உயிர்க்கொல்லி நுண்கிருமியால், பக்கவாதத்தால் தாக்கப்பட்டனர் என்று, இந்த அமைப்பின் போலியோ ஒழிப்பு நடவடிக்கையின் Michael K. McGovern அவர்கள் கூறினார்.

 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

 

 

இது இரக்கத்தின் காலம்...

 

ஓர் உயிருக்காக, இன்னோர் உயிர் துன்புறுவதா?

 

ஒரு சமயம், ஒரு பெரிய மகானிடம், பெண் ஒருவர் சென்று, ஐயா, நான் விலைமகளாக இருந்து தவறு செய்துவிட்டேன், என் பாவத்திற்குத் தண்டனை கொடுங்கள் என்று வேண்டினார். அந்த மகான் மிகுந்த கருணையோடு, இன்னும் நான்கு மாதங்கள் கழித்து வா என்று சொல்லி அனுப்பினார். அந்தப் பெண்ணும் நான்கு மாதங்கள் கழித்துச் சென்றார். இப்போது உன் நிலைமை என்ன? என்று கேட்டார் அவர். ஐயா, நான் தாய்மை அடைந்திருக்கிறேன் என்று அப்பெண் சொன்னதும், அப்படியா, நீ, குழந்தை பெற்ற பிறகு என்னை வந்து பார் என்றார் மகான். அந்தப் பெண்ணும் குழந்தை பெற்ற பிறகு சென்று பார்த்தார். ஒரு குழந்தை தன் தாயிடத்தில் இரண்டு ஆண்டு காலம் பால் குடிக்கக் கடமைப்பட்டது, எனவே, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என்னை வந்து பார் என்று சொல்லியனுப்பினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தாய்க்கு உரிய தண்டனையைச் சொன்னாராம் அந்த மகான். அப்பெண் தவறுக்குத் தண்டனைக்கு உரியவரே என்றாலும், அந்தப் பெண்ணின் குழந்தை எவ்வகையிலும் தண்டனைக்குரியது அல்ல, குழந்தை பாதிக்கப்படக் கூடாது என்பதில் அந்த மகான் கவனமாக இருந்தார். ஆம். ஓர் உயிருக்காக, இன்னோர் உயிர் துன்புறக் கூடாது. பிற உயிர்களை மதிக்கவும், அன்புகூரவும் தெரிந்தவர்களே மனிதர்கள் எனப்படுபவர்கள்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 
--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு

SEO/SMO Team

Post a Comment

Powered by Blogger.