Halloween party ideas 2015
.

1. திருத்தந்தையின் லெஸ்போஸ் தீவு திருத்தூதுப் பயணம்

 

2. திருத்தந்தை பிரான்சிஸ் : நம்பிக்கையை இழக்காதீர்கள்

 

3. கரைகளில் ஒதுங்கும் சிறாரின் உடல்களை இனிமேலும் பார்க்கக் கூடாது

 

4. மத்திய தரைக் கடல், கல்லறையாக மாறக் கூடாது

 

5. திருத்தந்தை பிரான்சிஸ் - Mytilene குடிமக்கள் சந்திப்பு

 

6. லெஸ்போஸ் தீவு ஒரு முன்னோட்டம்

 

------------------------------------------------------------------------------------------------------

 

 

1. திருத்தந்தையின் லெஸ்போஸ் தீவு திருத்தூதுப் பயணம்

 

ஏப்.16,2016. "புலம்பெயர்ந்தவர்கள் எண்கள் அல்ல, அவர்கள், முகங்களையும், பெயர்களையும், கதைகளயும் கொண்டவர்கள், அவ்வாறு முறையாக நடத்தப்பட வேண்டியவர்கள்" என்ற டுவிட்டர் செய்தியை இச்சனிக்கிழமை காலையில் பதிவுசெய்து, லெஸ்போஸ் தீவுக்கு, ஒருநாள் திருத்தூதுப் பயணமாகப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். கிரேக்க நாட்டுத் தீவான லெஸ்போஸில், உடலளவிலும், ஆன்மீகளவிலும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், இச்சனிக்கிழமை காலை 7.20 மணியளவில், A320 ஆல்இத்தாலியா விமானத்தில், உரோம் Fiumicino பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து Mytilene பன்னாட்டு விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டார் திருத்தந்தை. ஏப்ரல் 16,  இச்சனிக்கிழமையன்று தனது 89வது பிறந்த நாளைச் சிறப்பித்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு, நல்வாழ்த்தைத் தெரிவிக்கும் செய்தியை அனுப்பியதோடு, தான் கடந்து செல்லும் அல்பேனிய நாட்டிற்கும், இன்னும், இத்தாலி, கிரேக்க நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கும் தனது செபங்களையும், ஆசிரையும் தெரிவிக்கும் தந்திச் செய்திகளையும் அனுப்பினார். திருத்தந்தையின் இந்தத் தந்திச் செய்திக்கு, நன்றி தெரிவித்து, பதில் அனுப்பிய இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்கள், ஐரோப்பாவில் அமைதியையும், நம்பிக்கையையும் தேடும், புலம்பெயர்ந்த மக்களுக்கு, திருத்தந்தையின் இப்பயணம் நம்பிக்கையை அளிக்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.

லெஸ்போஸ் தீவின் தலைநகர் Mytilene, பன்னாட்டு விமான நிலையத்தை இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 9 மணியளவில் சென்றடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு அவரை, கிரேக்கப் பிரதமர் Alexis Tsipras, கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவரும், ஏத்தென்ஸ் பேராயருமான 2ம் Hieronimus, கிரேக்க கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் கப்புச்சின் சபையைச் சேர்ந்த பேராயர் Fragkiskos Papamanolis ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் கிரேக்கப் பிரதமர் Alexis Tsipras அவர்களைத் தனியே சந்தித்துப் பேசினார். கிரேக்க நாடு, புலம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றி வரும் உதவிகளைப் பாராட்டி, இந்நாடு உலகுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது என்று கூறினார் திருத்தந்தை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இத்தாலியின் லாம்பெதூசா தீவுக்கும் சென்று இத்தகைய மக்களைப் பார்த்தேன் என்றார் திருத்தந்தை. இச்சந்திப்புக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் பேராயர் 2ம் Hieronimus ஆகிய மூன்று தலைவர்களும், விமான நிலையத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற, Mòria புலம்பெயர்ந்தவர் முகாமுக்கு, சிறிய வாகனத்தில் சென்றனர். ஏறக்குறைய 2,500 புலம்பெயர்ந்தவர்கள் வாழும் இம்முகாமில், நுழைவாயிலில், ஏறக்குறைய 150 இளம் புலம்பெயர்ந்தவர்கள் அணிவகுத்து நின்றனர். அவர்களின் வரவேற்பில் மகிழ்ந்து, அம்முகாமில் அமைக்கப்பட்டிருந்த பெரிய கூடாரம் சென்றனர். அங்கு ஏறக்குறைய 250 பேரை, ஒவ்வொருவராக வாழ்த்தினர். அம்மக்கள் திருத்தந்தையின் கரங்களைப் பிடித்துக்கொண்டு கதறி அழுதனர். அந்த முகாமில், பேராயர் 2ம் Hieronimus அவர்கள் உரையைத் தொடங்கினார். அப்போது உள்ளூர் நேரம் பகல் 12 மணி 25 நிமிடங்களாகும். முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய இரு தலைவர்களும் உரையாற்றினர்.

பின்னர், இம்மூன்று தலைவர்களும் சேர்ந்து ஒரு பொதுவான அறிக்கையில் கையெழுத்திட்டனர். பின்னர், அங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரம் சிறிய பேருந்தில் சென்று, புலம்பெயர்ந்த மக்களுடன் மதிய உணவருந்தினர். அதன் பின்னர் Mytilene நகர் குடிமக்களையும் கத்தோலிக்க சமூகத்தையும் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மூன்று கிறிஸ்தவத் தலைவர்களும் உயிரிழந்த புலம்பெயர்ந்த மக்களுக்காகச்  செபித்தனர். உயிரிழந்துள்ள புலம்பெயர்ந்த மக்களின் நினைவாகக் கடலில் போடுவதற்கென மூன்று சிறார் மலர்வளையங்களை அளித்தனர். பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தலைவர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசினார். மாலை 3.15 மணிக்கு, Mytilene பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலை 4.30 மணியளவில் உரோம் Ciampino விமான நிலையம் வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் லெஸ்போஸ் தீவுக்கான, ஆறு மணி நேரத் திருத்தூதுப் பயணம் நிறைவடைந்தது. இரக்கத்தின் யூபிலி ஆண்டில், துன்புறும் புலம்பெயர்ந்த மக்களை நேரில் பார்த்து, ஆறுதல் கூறி, கடவுள் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையையும் ஊட்டி வந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். உரோம் நகருக்குத் திரும்பியபோது, லெஸ்போஸ் தீவிலிருந்த மூன்று சிரியா நாட்டு அகதிக் குடும்பங்களை தன்னுடன் அழைத்து வந்துள்ளார் திருத்தந்தை. ஆறு குழந்தைகள் உட்பட 12 பேர் வந்துள்ளனர். இவர்கள் எல்லாருமே முஸ்லிம்கள். இரு குடும்பங்கள் தமாஸ்கு நகரையும், ஒரு குடும்பம் Deir Azzor நகரையும் சேர்ந்தவர்கள். இவர்களின் வீடுகள் குண்டுத் தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ளன. உரோம் சான் எஜிதியோ அமைப்பு, இவர்களுக்கு முதல் கட்ட உதவிகளை ஆற்றும் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். மேலும், இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் புதிய அருள்பணியாளர்களைத் திருப்பொழிவு செய்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. திருத்தந்தை பிரான்சிஸ் : நம்பிக்கையை இழக்காதீர்கள்

 

ஏப்.16,2016. நான் உங்களோடு இன்று இருப்பதற்கு விரும்பினேன். நீங்கள் தனியாக இல்லை என்பதை இன்று சொல்ல விரும்புகிறேன். நல்லதொரு வாழ்வைத் தேடுவதில், வாரங்கள் மற்றும் மாதங்களாக, நீங்கள் பல துன்பங்களை எதிர்கொண்டுள்ளீர்கள். உங்கள் கதைகளைக் கேட்பதற்காக, முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, பேராயர் எரோனிமுஸ் ஆகிய எனது சகோதரர்களுடன் இங்கு வந்துள்ளேன். இந்தக்  கடும் மனிதாபிமான நெருக்கடி குறித்து உலகின் கவனத்தைத் திருப்பி, இதற்கு ஒரு தீர்வு காண்பதற்கு, கெஞ்சுவதற்காக வந்துள்ளோம். கடவுள், மனித குலத்தை ஒரே குடும்பமாகப் படைத்தார். நம் சகோதர, சகோதரிகள் துன்புறும்போது, நாம் எல்லாருமே பாதிக்கப்படுகிறோம். துன்புறும் மக்களைப் புறக்கணித்து, அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்துவது, சிலருக்கு எளிதாக இருப்பதை அனுபவத்தால் பார்க்கிறோம். ஆயினும், இந்த நெருக்கடி, நம்மில் சிறந்ததைக் கொண்டுவரும் என்பதையும் அறிந்துள்ளோம். அதற்கு கிரேக்க மக்களே சான்று. ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமிருந்து உங்களுக்கு உதவ வரும் பல மக்களில், குறிப்பாக இளையோரில் இதைப் பார்க்கின்றீர்கள். ஆயினும், மேலும் அதிகம் செய்யப்பட வேண்டியுள்ளது. நம் துன்பங்களில் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். அவர் நம்மை ஒருபோதும் தனியாக விடுவதில்லை. யாராவது ஒருவர் நமக்கு உதவ எப்போதும் வருகிறார்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள் என்ற செய்தியை இன்று விட்டுச் செல்ல விரும்புகிறேன். நாம் அடுத்தவருக்குக் கொடுக்கும் மிகப்பெரும் கொடை அன்பு, இரக்கமுள்ள பார்வை, செவிமடுத்துப் புரிந்துகொள்ளத் தயாராய் இருத்தல், ஊக்கமூட்டும் வார்த்தை மற்றும் செபம். இந்தக் கொடையை ஒருவர் ஒருவருடன் பகிர்ந்துகொள்வீர்களாக. கிறிஸ்தவர்களாகிய நாங்கள், நல்ல சமாரியர் கதையைச் சொல்வதற்கு விரும்புகிறோம். இது, கடவுளின் இரக்கம் பற்றிச் சொல்லும் கதையாகும். அன்பு நண்பர்களே, உங்கள் எல்லாரையும், குறிப்பாக, சிறார், வயதானவர்கள் மற்றும் உடலிலும், உள்ளத்திலும் துன்புறும் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக. உங்களை அன்போடு தழுவிக்கொள்கிறேன் என்று, மொரியா முகாமில் தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. கரைகளில் ஒதுங்கும் சிறாரின் உடல்களை இனிமேலும் பார்க்கக் கூடாது

 

ஏப்.16,2016. உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர், கிரேக்கத் திருஅவையின் பகுதிக்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. மனிதர், அவர்களின் சொந்த இடங்களிலிருந்து வேரோடு நகர்த்தப்படுவது, அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான அவமதிப்புகள் இவற்றிற்கு எதிராக இன்று, ஒன்றுசேர்ந்து எம் குரல்களை எழுப்புகிறோம். நாடுகளின் தலைவிதியை தங்கள் கரங்களில் வைத்திருப்பவர்கள், இம்மக்களின் தற்போதைய நிலையை மாற்றும்பொருட்டு, இம்மக்களுக்கென, இந்த லெஸ்போஸ் தீவிலிருந்து உலகளாவிய விழிப்புணர்வைத் தொடங்குகிறேன். இத்தகைய நிலைக்கு இம்மக்களை ஆளாக்கிய அரசியலுக்கு எதிராகக் கண்டனம் எழுப்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி கண்டனம் எழுப்புவது முதல்முறை அல்ல இது. ஏஜியன் கடலில் இறந்த ஏராளமான புலம்பெயர்ந்த மக்களுக்கு, நானும் கிரேக்கத் திருஅவையும் அஞ்சலி செலுத்துகின்றோம். இம்மக்களுக்கு கிரேக்க நாடு ஏற்கனவே நிறைய உதவிகளை ஆற்றியுள்ளது, தொடர்ந்தும் ஆற்றும். ஏஜியன் நீரில் அடித்துவரப்பட்டு கடற்கரைகளில் ஒதுங்கும் சிறாரின் உடல்களை இனிமேலும் நாம் பார்க்கமாட்டோம் என நம்புகின்றேன். ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன் என்று, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் 2ம் Hieronimus அவர்கள் தனது உரையை நிறைவு செய்தார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

4. மத்திய தரைக் கடல், கல்லறையாக மாறக் கூடாது

 

ஏப்.16,2016. புலம்பெயரும் மக்களை வரவேற்று கவனித்துவரும் கிரேக்க மக்களுடன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்து, அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக, நானும், திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் பேராயர் 2ம் எரோனிமுஸ் அவர்களும் இன்று இங்கு இருக்கின்றோம். "கடவுளே நம் புகலிடம் மற்றும் வலிமை. நம் துன்ப நேரங்களில் உதவுபவர் அவரே. எனவே நாம் பயப்படத் தேவையில்லை"(தி.பா.45,2-3). போர், பசி மற்றும் துன்பங்கள் நிறைந்த இடங்களிலிருந்து நீங்கள் வந்துள்ளீர்கள் என்பதும், உங்களின் ஏக்கங்களையும், பாதுகாப்பான, ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்த்திருக்கிறீர்கள் என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். மத்திய தரைக் கடல், உங்கள் அன்புள்ளங்களின் புதைகுழிகளாக மாறியிருப்பதையும், உங்களுக்கு எல்லைகள் மூடப்படுவதையும் பார்த்து கண்ணீர் சிந்தினோம். உங்களைப் பார்த்துப் பயப்படுகிறவர்கள், உங்கள் கண்களையும், உங்கள் முகங்களையும், உங்கள் குழந்தைகளையும் உற்றுநோக்கவில்லை. மாண்பும், சுதந்திரமும், அச்சத்தையும், பிரிவினையையும் அகற்றும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. மத்திய கிழக்கு, வட ஆப்ரிக்கா, ஐரோப்பா, கிரேக்கம் ஆகியவற்றுக்கும் மட்டும் உரிய விவகாரம் அல்ல குடிபெயர்வு, மாறாக, இது உலகுக்கான விவகாரம் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர். உங்களை உலகம் நடத்தும் முறையைப் பொருத்தே அது தீர்ப்பிடப்படும். நீங்கள் வருகின்ற பகுதிகளின் சண்டைகளுக்கும், கலவரங்களுக்கும் பதில்சொல்லும் முறைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மத்திய தரைக் கடல், கல்லறையாக மாறக் கூடாது. அது, வாழ்வின், கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகள் சந்திக்கும், பரிமாற்றம் மற்றும் உரையாடலின் இடமாகும். நாம் கூடியுள்ள நோஸ்த்ரும் கடல், குறிப்பாக ஏஜியன் கடல், அமைதியின் கடலாக மாற வேண்டும். குடிபெயர்வின் ஆணிவேராக அமைந்துள்ள மத்திய கிழக்குப் பகுதியின் சண்டை முடிந்து, அமைதி காக்கப்பட வேண்டும். அப்பகுதியிலுள்ள மக்கள் எல்லாருக்காவும் செபிக்கின்றோம். மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் கடும் நெருக்கடியான நிலையையும், அப்பகுதியின் பிற சிறுபான்மையின மற்றும் மதத்தினரையும் குறிப்பிட விரும்புகிறோம். அவர்கள் அழிவுறாமல் இருப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் அவசியம். நாங்கள் உங்களை ஒருபோதும் மறக்கமாட்டோம் என, வாக்குறுதி அளிக்கிறோம். உங்களுக்காகப் பேசுவதை நாங்கள் நிறுத்தவே மாட்டோம். உலகின் கண்களும், இதயங்களும் திறப்பதற்கு எங்களால் இயன்ற அனைத்தையும் ஆற்றுவோம். அமைதி, வரலாற்றின் முடிவு அல்ல. இது எதிர்காலத்தோடு தொடர்புடைய வரலாற்றின் தொடக்கமாகும். இதனை, மற்ற கண்டங்களைவிட, ஐரோப்பா நன்றாக அறிந்திருக்க வேண்டும். உங்களைக் கடவுள் ஆசிர்வதித்து உறுதிப்படுத்துவாராக என்று, உரையை நிறைவு செய்தார் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

5. திருத்தந்தை பிரான்சிஸ் - Mytilene குடிமக்கள் சந்திப்பு

 

ஏப்.16,2016. லெஸ்போஸ் தீவு, பல தன்னார்வலப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு கழகங்களால் நிறைந்துள்ளது. லெஸ்போஸ் தீவின் மக்களாகிய நீங்கள், மனித சமுதாயத்தின் இதயம் தொடர்ந்து துடித்துவரச் செய்கின்றீர்கள். புலம்பெயர்ந்த மக்கள் குறித்து கிரேக்கத்திலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும் வெளிப்படுத்தப்படும் கவலைகள் புரிந்துகொள்ளத்தக்கவை மற்றும் நியாயமானவையே. எனினும், இம்மக்கள் எண்ணிக்கையில் அல்ல, முதலில் அவர்கள் முகங்களையும், பெயர்களையும், தனிப்பட்ட கதைகளையும் கொண்டிருக்கும் மனிதர்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. ஐரோப்பா மனித உரிமைகளின் தாய்பூமி. இக்கண்டத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் இதை உணர வேண்டும். கலாச்சாரத்தின் தொட்டிலாகிய இந்நிலத்தில் வாழும் லெஸ்போஸ் தீவு மக்கள், அவசரகாலத்தில் உதவுவதோடு மட்டும் நிறுத்திவிடக் கூடாது. பரந்துபட்ட அளவில் இவர்களுக்கு உதவுவதற்கு அரசியல் அளவில் முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். நாடுகள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் மத்தியில் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, ஆயுத வர்த்தகம் மற்றும் மனித வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அடுத்த மாதத்தில், இஸ்தான்புல் நகரில் நடைபெறும், முதல் உலக மனிதாபிமான உச்சி மாநாடு, ஆக்கப்பூர்வமான தீர்மானங்களை எடுக்கும் என நம்புகிறேன். மக்கள், தங்கள் தாயகங்களைவிட்டு வெளியேறுவதற்கான காரணங்கள் அகற்றப்பட வேண்டும். நாம் ஒன்றிணைந்து உழைத்தால், இதனைச் சாதிக்க முடியும். அன்போடு பணியாற்றுபவர் மட்டுமே அமைதியைக் கட்டியெழுப்ப இயலும். மனித சமுதாயத்தின் காவலர்களாகிய உங்களுக்கு நன்றி... இப்படி ஆறுதலளிக்கும் பல வார்த்தைகளைச் சொல்லி இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

6. லெஸ்போஸ் தீவு ஒரு முன்னோட்டம்

 

ஏப்.16,2016. ஏஜியன் கடலின் வடகிழக்கே, மத்திய தரைக் கடலின் கிழக்கில் அமைந்துள்ள கிரேக்க நாட்டுத் தீவான லெஸ்போஸ், மனிதகுலத்தின் முதல் தொட்டில்களில் ஒன்றாகும். இதன் தலைநகர் Mytilene. சில நேரங்களில் இத்தீவு, Mytilene என்றே குறிப்பிடப்படுகிறது. 1,632 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட லெஸ்போஸ் தீவு, 320 கிலோ மீட்டர் நீள கடற்கரையையும் கொண்டுள்ளது. கிரேக்க நாட்டின் மூன்றாவது பெரிய தீவாகிய லெஸ்போஸ் பற்றிக் குறிப்பிடும் கிரேக்க எழுத்தாளர்கள், கி.மு.11ம் நூற்றாண்டில் Penthilidae என்ற குடும்பத்தினரால் Mytilene உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளனர். கி.மு.590க்கும் 580க்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற பெரிய கிளர்ச்சிவரை, அக்குடும்பத்தினர் அத்தீவை ஆட்சி செய்தனர். பின்னர், பைசான்டைன் உட்பட பல்வேறு அரசுகள் இத்தீவை ஆட்சி செய்தன. 1462ம் ஆண்டில் இத்தீவைக் கைப்பற்றிய ஒட்டமான் பேரரசு, 1912ம் ஆண்டில் முதல் பால்கன் போர் வரை ஆட்சி செய்தது. 1912ம் ஆண்டில் லெஸ்போஸ் தீவு கிரேக்க அரசின் ஆட்சிக்குக் கீழ் வந்தது. மாவீரர் அலெக்சாண்டர், சின்ன ஆசியாவைக் கைப்பற்றத் தொடங்கியவுடன், லெஸ்போஸ் மக்கள் பேரரசருடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இத்தீவு, பல்வேறு புகழ்பெற்ற மனிதர்களின் பிறப்பிடமாகும். மத்திய கிழக்குப் பகுதி நாடுகளில் இடம்பெறும் போர், அச்சுறுத்தல், துன்புறுத்தல், வறுமை போன்ற காரணங்களால் இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள், ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு லெஸ்போஸ் தீவுக்குச் செல்கின்றனர். இம்மக்கள், ஜெர்மனிக்கும், சுவீடனுக்கும் செல்வதைத் தடுப்பதற்காக, பால்கன் நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியிருப்பதால், தற்போது, 52 ஆயிரம் பேர் கிரேக்க நாட்டில் உள்ளனர். 12 ஆயிரம் சிரியா நாட்டுப் புலம்பெயர்ந்தவர்கள், கிரேக்கத்திற்கும் மாசிடோனியாவுக்கும் இடையேயான வடக்கு எல்லையில் சிக்கியுள்ளனர். 2011ம் ஆண்டில் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர், ஏறக்குறைய ஐந்து இலட்சம் பேர் இறந்துள்ளனர். ஐம்பது இலட்சம் சிரியா நாட்டினர், தங்களின் சொந்த வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

இது இரக்கத்தின் காலம்...

 

ஒரு தலைவருக்குத் தேவையான பண்புகள்

 

மாவீரர் அலெக்சாண்டர் ஒருமுறை தன் படையுடன் மக்ரான் என்ற பாலைநிலத்தைக் கடக்கவேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். மன்னரின் தாகத்தை அறிந்த இரு தளபதிகள் பல இடங்களில் அலைந்து, அவ்வழியே சென்ற பயணிகளிடம் கெஞ்சி மன்றாடி, தங்கள் தலைக்கவசத்தில் சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அத்தளபதிகளின் விசுவாசத்தை அலெக்சாண்டர் பாராட்டினார். பின்னர், அவர்களிடம், "வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், "இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது" என்று சொன்னார்கள். அலெக்சாண்டர் கவசத்தைக் கையில் எடுத்தார். வீரர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர். வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, தனக்கும் தண்ணீர் தேவையில்லை என்று சொல்லியபடி, கவசத்தில் இருந்த நீரை மணலில் ஊற்றினார், அலெக்சாண்டர். துன்பம் என்று வந்தால், தங்களுடன் தலைவரும் சேர்ந்து துன்புறுவார் என்பதை உணர்ந்த வீரர்கள், தங்கள் தலைவரைப் பெருமையுடன் எண்ணி ஆர்ப்பரித்தனர்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 




--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு

SEO/SMO Team

Post a Comment

Powered by Blogger.