Halloween party ideas 2015
.

 1. திருத்தந்தை : தூய ஆவிக்கு பணிவுள்ளவர்களாக செயல்படுவோம்

 

2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு வயது 89

 

3. பொருளாதார பொறுப்புணர்வும்  அக்கறையும், நம்மிடம் எதிர்பார்க்கப்படுபவை

 

4. சகிப்பற்ற மற்றும் பாகுபாட்டு நிலைகளால் உருவாக்கப்படும் சவால்கள்

 

5. உரையாடல் விளம்பரத்திற்காக அல்ல, தாய்லாந்து ஆயர்

 

6. திருச்சூர் பூரம் கட்டுப்பாட்டிற்கு எதிராக பேராயர்

 

7. பணக்கார நாடுகளில் சிறார் மத்தியில் சமத்துவமின்மை

 

8. டில்லி - எல்லா விதமான புகையிலைப் பொருட்களுக்கும் தடை

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. திருத்தந்தை : தூய ஆவிக்கு பணிவுள்ளவர்களாக செயல்படுவோம்

 

ஏப்.,15,2016. எந்த ஒரு கடினமான இதயமும் தூய ஆவியானவருக்குரிய பணிவுடன் தன்னைத் திறக்கும்போது, அருளையும் மாண்பையும் வழங்கி, அந்த இதயத்தை எழும்பி நிற்க வைக்கிறார் இறைவன், என இவ்வெள்ளி காலை திருப்பலி மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பவுல் மனம் மாறிய நிகழ்வை மையமாக வைத்துத் தன் கருத்துக்காளை அளித்தார்.

தன் விசுவாசக் கோட்பாடுகளில் மிக உறுதியானவராக இருந்த காரணத்தால், இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிமடுக்காதவராக செயல்பட்ட புனித சவுல், கிறிஸ்தவர்களை சித்ரவதைப்படுத்தி கொல்லும் நிலைக்குச் சென்றார். ஆனால், சாலையில் அவருக்கு ஏற்பட்ட நிகழ்வு, அவரை தாழ்மைப்படுத்தியதுடன், அவர் இதயத்தையும் உருக வைத்தது என்றார் திருத்தந்தை.  தன் குறிக்கோளை அடையச் செல்லும் சாலையில் பேரொளியால் சூழப்பட்ட சவுல், தற்காலிகமாக பார்வையை இழப்பதுடன், உண்மையை கண்டுகொள்ளவும் துவங்குகிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்சவுல் தரையிலிருந்து எழுந்த போது அவர் கண்கள் திறந்திருந்தும் அவரால் பார்க்கமுடியவில்லை, அதனால் அவரின் கை பிடித்து வழி நடத்த வேண்டியிருந்தது  என நாம் வாசிப்பது, அவரின் இதயம் இறைவனை நோக்கி திறக்கத் துவங்கியதை காண்பிக்கிறது என்றார்.

தரையில் வீழ்ந்த சவுல், தன் தாழ்நிலையை உணர்கிறார் என்பதை நாம் அறியும்போது, இறைவன் நம்மையும் தாழ்மைப்படுத்துவது, அல்லது நம்மை அவமான நிலைக்கு உள்ளாக அனுமதிப்பது என்பது, அவரை நோக்கி நம் இதயங்கள் திறக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தினாலேயே எனவும் கூறினார் திருத்தந்தை.

மூன்று நாட்கள் உண்ணாமலும் குடிக்காமலும் இருந்த பவுல், அனனியா மூலம் பார்வைப் பெற்றதை நாம் பார்க்கும்போது, இந்நிகழ்வில் மைய நபராக தூய அவியானவரைப் பார்க்கின்றோம்தன் பார்வையைத் திரும்ப பெற்ற பவுல், தூய ஆவியாவனவருக்கு தன்னைத் திறந்தவராக, பணிவுள்ளவராக செயலாற்றினார், இறுகிய இதயம் கொண்டவர்களக செயல்படும் நாம் ஒவ்வொருவரு,ம், அவரைப்போல் இறை அருளைப் பெற்று, தூய ஆவியானவருக்கு பணிவுள்ளவர்களாக செயல்பட உதவுமாறு இறைவனை வேண்டுவோம் என தன் மறையுரையில் அனைவரையும் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு வயது 89

 

ஏப்.15,2016. மூன்றாண்டுகளுக்கு முன்னர் தனது பாப்பிறைப் பணியிலிருந்து விலகிய, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஏப்ரல் 16, இச்சனிக்கிழமையன்று தனது 89வது வயதைச் சிறப்பிக்கிறார்.

உரோம் ஆயர் பணியிலிருந்து முழு சுதந்திரத்துடன் விலகுவதாக  அறிவித்து, பணி ஓய்வு பெற்று, தற்போது வத்திக்கானில் வாழ்ந்து வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அதன் பின்னர் பொது நிகழ்வுகளில் அரிதாகவே கலந்து கொள்கிறார்.

கடந்த டிசம்பர் 8ம் தேதி, இரக்கத்தின் யூபிலி ஆண்டு புனிதக் கதவு திறக்கும் நிகழ்வில்  கடைசியாக கலந்து கொண்டுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், புதிய திருத்தந்தைக்கு உதவுவதே தனது ஒரே பணி என்றும் கூறியிருக்கிறார்.

திருஅவைக்கு அறிவார்ந்த பலவற்றை அளித்துள்ளதுடன், தனது பணியிலிருந்து ஓய்வுபெறும் தீர்மானத்தினால், தாழ்மையும், மனிதமும் நிறைந்த அழகான பாடத்தை நமக்கெல்லாம் அளித்துள்ளார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தொடங்கியுள்ள ஜோசப் இராட்சிங்கர் நிறுவனம் என்ற முகநூலின் வழியாக, அவரது அண்மைத் தனிப்பட்ட சந்திப்புகள் குறித்த புகைப்படங்களைப் பார்க்க முடிகின்றது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. பொருளாதார பொறுப்புணர்வும்  அக்கறையும், நம்மிடம் எதிர்பார்க்கப்படுபவை

 

ஏப்.15,2016. உண்மையான வளர்ச்சியின் அர்த்தத்தைப் புரிந்து, பொருளாதாரத்தை பொறுப்புணர்வுடன் நிர்வகிக்க நாம் ஒவ்வொருவரும் அழைப்புப் பெற்றுள்ளோம் என்றார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

திருத்தந்தையின் 'லவ்தாத்தோ சி' என்ற மடலின் ஒளியில், நீடித்த நிலைத்த வளர்ச்சித் திட்டங்கள் என்பது குறித்து உரோம் நகரில் இடம்பெறும் கருத்தரங்கில் இவ்வெள்ளி காலை தலைமையுரை நிகழ்த்திய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இயற்கை வளங்கள் அனைவருக்கும் பயன்படும்படியாக முன்வைக்கப்பட வேண்டும், தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவது என்பது, ஏழைகளையும் இயற்கையையும் சுரண்டுவதற்கு ஒப்பாகும், இலவசமாக கொடுக்கப்பட்ட இயற்கையை நம் வருங்கால சந்ததியினர்க்காக, மேலும் வளமுள்ளதாக மாற்றவேண்டியது நம் கடமை என்ற தலைப்புகளில் உரையாற்றினார்.

நிதி நிர்வாகத்தில் நம் ஒவ்வொருவரின் பொறுப்புணர்வையும் வலியுறுத்திய கர்தினால், மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய தலைமுறைகள் உருவாவது நம்பிக்கைத் தருவதாக உள்ளது என்றார்.

இயற்கையை பராமரிப்பவர்கள் என்ற நிலையையும் தாண்டி, அதில் அக்கறையுடையவர்கள் என்பது நோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும் எனவும் விண்ணப்பித்தார் கர்தினால் டர்க்சன்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

4. சகிப்பற்ற மற்றும் பாகுபாட்டு நிலைகளால் உருவாக்கப்படும் சவால்கள்

 

ஏப்.15,2016. சகிப்பற்ற தன்மைகளாலும் பாகுபாட்டு நிலைகளாலும் உருவாக்கப்படும் சவால்கள் என்ற தலைப்பில் ஐ.நா.வில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடப் பிரதிநிதி, இத்தகைய நிலைகள் உருவாவதற்கான காரணங்கள் ஆராய்ந்தறியப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சகிப்பற்ற தன்மைகள் மற்றும் பாகுபாட்டு நிலைகளின் உண்மையான அடிப்படைக் காரணங்கள் அறியப்படாமல் கொணரப்படும் எந்த ஒரு பதிலுரையும் அதற்குரிய தீர்வைக் கொணர முடியாது என்ற திருப்பீடப் பிரதிநிதி Mons. Janus Urbanczyk, அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள சரிநிகர் உரிமைகள் சரியாக கடைப்பிடிக்கப்படாமையாலேயே பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படும் நிலை உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

அமைதி, சகிப்பு நிலைகள், மற்றவர்களின் மாண்பு மற்றும் உரிமைகளுக்கான மதிப்பு போன்றவைகளுக்காக அனைத்து மதங்களின் விசுவாசிகளும் குரலெழுப்ப வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் திருப்பீட பிரதிநிதி Mons. Urbanczyk.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

5. உரையாடல் விளம்பரத்திற்காக அல்ல, தாய்லாந்து ஆயர்

 

ஏப்.15,2016. சமுதாயத்தில், நம்மைப் பிரிக்கும் காழ்ப்புணர்வையும், முற்சார்பெண்ணச் சுவர்களையும் தகர்த்து, மேலும் உறுதியான பாலங்களைக் கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று, தாய்லாந்து தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார். 

இவ்வாரத்தில், பாங்காக் இஸ்லாமிய மையத்தில், புதிய மசூதி திறப்பு விழாவிலும், இஸ்லாமியத் தலைவர்களுடன் அங்கு நடைபெற்ற கருத்தரங்கிலும் கலந்து கொண்டு உரையாற்றிய, தாய்லாந்து ஆயர் பேரவையின் உதவிப் பொதுச் செயலர் ஆயர் Andrew Thanya Vissanu Anan அவர்கள், இவ்வாறு கூறினார்.

இஸ்லாமியத் தலைவர்களுடன் அமைதி ஊர்வலத்திலும் கலந்து கொண்ட  ஆயர் Vissanu அவர்கள், மதங்களிடையே நிலவும் வேறுபாடுகள், மோதல்களுக்குக் காரணமாக அமையக் கூடாது என்று கூறினார்.

93 விழுக்காட்டினர் புத்த மதத்தினராக உள்ள தாய்லாந்து நாட்டில், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் பங்கு பற்றியும், பல்சமய உரையாடல் பற்றியும், ஆழமான கருத்துக்களை முன்வைத்த ஆயர் Vissanu அவர்கள், பல கலாச்சார மற்றும் பல சமயத்தவரைக் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது இயலக்கூடியதே என்றும் கூறினார்.

மதங்கள் மற்றும் மரபுகளுக்கு இடையே நிலவும் வேறுபாடுகள், சண்டைகளுக்குக் காரணமாக அமையக் கூடாது என்றும், அனைத்து மதத்தவரும் அமைதிக்கான தாகத்தைக் கொண்டிருப்பது அவர்களின் கடமை என்றும் உரையாற்றினார் தாய்லாந்து ஆயர் Vissanu.

 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

                               

6. திருச்சூர் பூரம் கட்டுப்பாட்டிற்கு எதிராக பேராயர்

 

ஏப்.15,2016. கேரளாவில் கொல்லம் இந்துக் கோவிலில் ஏற்பட்ட பட்டாசு வெடிவிபத்தைத் தொடர்ந்து, திருச்சூர் பூரத்திற்கு(Thrissur Pooram) விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டிற்கு எதிராக இடம்பெறும் போராட்டத்திற்கு, திருச்சூர் கத்தோலிக்க ஆயரும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

பூரம் விழா சுமுகமாக நடைபெறுவதற்கு, பாதுகாப்பு நிறைந்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ளார் திருச்சூர் பேராயர் Andrews Thazhathu.

பூரம் விழாவின்றி திருச்சூர் எப்படியிருக்கும்? என்ற கேள்வியை எழுப்பியுள்ள பேராயர் Andrews Thazhathu அவர்கள்,  புகழ்பெற்ற Vadakkumnatha கோவில் வாயில்கள் முன்பாக நடந்த போராட்டத்திலும் கலந்துகொண்டுள்ளார்.

இது இந்து மத விழாவாக இருந்தபோதிலும், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கலந்து கொள்கின்றனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகின்றது.

 

ஆதாரம் : Indian Express / வத்திக்கான் வானொலி

 

7. பணக்கார நாடுகளில் சிறார் மத்தியில் சமத்துவமின்மை

 

ஏப்.15,2016. கல்வி, திருப்தியான வாழ்க்கைமுறை போன்ற துறைகளில், அதிக வருவாய் உள்ள நாடுகளில் நிலவும் சமத்துவமின்மை, சிறாரை வெகுவாய்ப் பாதிக்கின்றது என்று, ஐ.நாவின் யூனிசெப்(UNICEF) குழந்தை நல நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொருளாதார ஒன்றிப்பு-வளர்ச்சி நிறுவனத்தைச்(OECD) சேர்ந்த 41 நாடுகளில், சிறார் நலன் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், சிறார் மத்தியில் நிலவும் சமத்துவமின்மையில் டென்மார்க் நாடு முதலிடத்திலும், இஸ்ரேல், துருக்கி ஆகிய நாடுகள் கடைசி இடத்திலும் உள்ளன என்று தெரியவந்துள்ளது. 

எந்த ஒரு நாட்டிலும், சிறாரின் நலன், கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டுமென்று, யூனிசெப் நிறுவனத்தின் ஆய்வு அலுவலக இயக்குனர்  Sarah Cook அவர்கள் கூறினார்.

2002ம் ஆண்டுக்கும், 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், நலவாழ்வு வசதிகள், கல்வி வாய்ப்பு, திருப்தியான வாழ்வுமுறை போன்ற துறைகளில் சமத்துவமின்மை அதிகரித்து காணப்பட்டதாக, Innocenti என்ற இவ்வறிக்கை கூறுகிறது.

 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி

 

8. டில்லி - எல்லா விதமான புகையிலைப் பொருட்களுக்கும் தடை

 

ஏப்.15,2016. டில்லியில் பான் மசாலா, குட்கா, ஜர்தா உள்ளிட்ட, மென்று சாப்பிடும் அனைத்து வகையிலான புகையிலைப் பொருட்களை விற்பதற்கும், சேமித்து வைப்பதற்கும், தயாரிப்பதற்கும் தடை விதித்து டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமையிலிருந்து அமலுக்கு வந்துள்ள, இந்தத் தடை, அடுத்த ஓராண்டிற்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் நலன் கருதி, பாக்கெட் செய்யப்பட்ட அல்லது உதிரியான, மென்று சாப்பிடும் வகையிலான புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அமைச்சகம், அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தது. இதன் அடிப்படையில், அனைத்து வகையிலான புகையிலை பொருட்களுக்கும் தடை விதித்து டில்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தப் புதிய தடை உத்தரவு தொடர்பாக டில்லி அரசின் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் Satyendra Jain அவர்கள் கூறுகையில், வாய்ப் புற்றுநோயால் ஆண்டுக்கு, பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறக்கின்றனர் என்றும், மக்களின் நலன் கருதி அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.  

புகையிலைப் பொருட்களைத் தயாரித்தாலோ, தேக்கி வைத்திருந்தாலோ, விநியோகம் அல்லது விற்பனை செய்தாலோ, அவர்களுக்கு மீது கடுமையான தண்டனை அளிக்கப்படும். சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். தடையை மீறி விற்பனை செய்தால் அவர்களின் விற்பனை உரிமமும் ஓராண்டுக்குத் தடை செய்யப்படும்.

2012ம் ஆண்டே டில்லி அரசு இதனை அறிவித்திருந்தது. இருப்பினும், சில சில்லறை வியாபாரிகள், வெற்றிலைக்குள் மடித்து வேறு விதமாக புகையிலைப் பொருட்களை, தொடர்ந்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின்  வழிகாட்டுதலின்பேரில் தற்போது, அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்கும் பணியில் நலவாழ்வுத் துறையும் இறங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் Satyendra Jain.

 

ஆதாரம் : PTI / வத்திக்கான் வானொலி

 

 

 

இது இரக்கத்தின் காலம்...

 

கோபம் வேண்டாமே!

 

ஜென் துறவி ஒருவர் எப்போதுமே கோபப்படாமல், நீண்ட நாட்களாக, உடலில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார். அப்போது ஒருவர் வந்து அவரிடம், "நீங்கள் கோபப்படாமல் இருக்க காரணம் என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த குரு "எனக்கு சிறு வயதிலிருந்தே படகில் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் நான் தினமும் அருகிலிருக்கும் ஏரிக்கு சென்று, படகிலேயே நீண்ட நேரம் இருப்பேன். மேலும், படகிலேயேதான் தியானம் செய்வேன். ஒரு நாள் அதேப் போன்று படகில் அமைதியாக தியானம் செய்து கொண்டிருக்கையில், ஒரு காலிப் படகு வந்து என் படகை இடித்தது. அதனால் நான், யாரோ கவனக்குறைவால் என் படகை இடித்துவிட்டார்கள் என்று நினைத்து, கண்களைத் திறந்து திட்டுவதற்கு முற்பட்டேன். ஆனால் என்னை இடித்த படகோ காலியாக இருந்தது. அதனால் நான், காலிப் படகிடம் கோபத்தை காண்பிப்பது முட்டாள் தனம் என்று எண்ணி, அன்றிலிருந்து என் கோபத்தை விட்டுவிட்டேன். அன்று முதல் என்னை எவர் என்னதான் திட்டினாலும், அவமானப்படுத்தினாலும், கோபப்படாமல், அந்த காலிப்படகை நினைத்து அமைதியாக சென்று விடுவேன். சொல்லப்போனால் அந்த காலிப்படகு எனக்கு ஒரு நல்ல பாடத்தை புரிய வைத்தது." என்று கூறினார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 
--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு

SEO/SMO Team

Post a Comment

Powered by Blogger.