Halloween party ideas 2015
.

1. திருத்தந்தை : தூய ஆவியாருக்குப் பணிந்து நடங்கள்

 

2. துணிச்சல், இரக்கம் நிறைந்த அருள்பணியாளராக விளங்குங்கள்

 

3. திருத்தந்தையின் லெஸ்போஸ் தீவு பயண விபரங்கள்

 

4. ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் பற்றிக் கர்தினால்கள்

 

5. ஆஸ்ட்ரிய எல்லைக் கட்டுப்பாட்டிற்கு திருஅவை கவலை

 

6. இந்திய இயேசு இளையோர் இயக்கத்திற்கு திருப்பீடம் ஒப்புதல்

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. திருத்தந்தை : தூய ஆவியாருக்குப் பணிந்து நடங்கள்

 

ஏப்.14,2016. தூய ஆவியாரை எதிர்க்காமல் அவருக்குப் பணிந்து நடப்பது மிகவும் முக்கியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்.

எத்தியோப்பிய அரசி காந்தகியின் நிதியமைச்சருக்கு, திருத்தூதர் பிலிப் நற்செய்தி அறிவித்தது பற்றி விளக்கும் இந்நாளைய முதல் வாசகத்தை(தி.ப.8,26-40) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாருக்குப் பணிந்து நடக்கும் அருளுக்காக மன்றாடுவோம் என்று விசுவாசிகளிடம் கூறினார்.

சட்டத்திற்கு விசுவாசமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, தூய ஆவியாரை எதிர்ப்பவர்களை எச்சரித்த திருத்தந்தை, தூய ஆவியாருக்குப் பணிந்து நடப்பது, மகிழ்வை அளிக்கின்றது என்றும் கூறினார்.

திருத்தூதர் பிலிப், நற்செய்தி அறிவிப்பாளர், எத்தியோப்பிய நிதியமைச்சர், இயேசுவைப் பற்றி எதுவுமே அறியாதவர், ஆனால், தூய ஆவியார், இவ்விரு மனிதரில், புறணி பேசும் ஆர்வத்தை அல்ல, மாறாக, நல்லதோர் ஆர்வத்தை விதைத்தார் என்றும், இறுதியில் அலியாகிய நிதியமைச்சர் தூய ஆவியாருக்குப் பணிந்து நடந்ததில் கிடைத்த ஆவியாரின் மகிழ்வோடு திரும்பினார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையை வழிநடத்திச் செல்பவர் தூய ஆவியாரே என்றும், சிறுவன் சாமுவேல் போன்று, பேசும் ஆண்டவரே, அடியேன் கேட்கிறேன் என்ற அழகான செபத்தை நாம் எப்போதும் செபிக்கலாம் என்றும், தூய ஆவியாருக்குப் பணிந்து நடக்கும் அருளுக்காக மன்றாடுவோம் என்றும் கூறி மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. துணிச்சல், இரக்கம் நிறைந்த அருள்பணியாளராக விளங்குங்கள்

 

ஏப்.14,2016. துணிச்சலும், இரக்கமும் நிறைந்த அருள்பணியாளராக விளங்குங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவை அன்புகூருங்கள் என்றும், குருத்துவப் பயிற்சிக்கு மனத்தாராளத்துடன் தங்களைக் கையளிக்குமாறும், பாப்பிறை ஸ்காட்லாந்து குருத்துவக் கல்லூரி மாணவர்களை, இவ்வியாழனன்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாப்பிறை ஸ்காட்லாந்து குருத்துவக் கல்லூரி, குருத்துவப் பயிற்சிக்கான இடமாக மாறியதன் நானூறாம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்த திருத்தந்தை, புனித John Ogilvie அவர்கள் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டதன் நோக்கம் நிறைவேறுவதற்குப் பதிலாக, திருஅவையின் சுதந்திரத்தைப் பாதுகாத்து ஊக்குவித்துள்ளது என்று கூறினார்.

இன்று நாமும் மறைசாட்சியக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றும்,  நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உங்கள் முன்னோர், திருஅவை மற்றும் ஸ்காட்லாந்து மீது கொண்டிருந்த அன்பையே நீங்களும் கொண்டிருந்தால், இன்று நாம் நினைவுகூரும் வரலாற்றையும், அவர்களின் தியாகத்தையும் கவுரவப்படுத்துவீர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஸ்காட்லாந்தில் கடும் துன்பங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்தவர்களாய், அங்கு நற்செய்தி அறிவிப்பதற்காக, 1616ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி உரோம் நகரிலிருந்து, 16 அருள்பணியாளர்கள், துணிச்சலுடன் ஸ்காட்லாந்து சென்றதன் நானூறாம் ஆண்டை நினைவுகூரும் வகையில், பாப்பிறை ஸ்காட்லாந்து குருத்துவக் கல்லூரி மாணவர்களும், அக்கல்லூரிப் பொறுப்பாளர்களும் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. திருத்தந்தையின் லெஸ்போஸ் தீவு பயண விபரங்கள்

 

ஏப்.14,2016. "அன்பே, இருள் சூழ்ந்த உலகைத் தொடர்ந்து ஒளியேற்றக்கூடிய ஒரே ஒளி" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

மேலும், ஏப்ரல் 16, வருகிற சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவுக்குச் செல்வது குறித்த பயண விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சனிக்கிழமை காலை 7 மணிக்கு உரோம் Fiumicino பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து Mytileneவுக்குப் புறப்படும் திருத்தந்தை, காலை 10.20 மணிக்கு, Mytilene பன்னாட்டு விமான நிலையம் சென்றடைவார்.

கிரேக்கப் பிரதமர், கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவரும், ஏத்தென்ஸ் பேராயருமான 2ம் Hieronimus, கிரேக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Fragkiskos Papamanolis ஆகியோர் விமான நிலையத்தில் திருத்தந்தையை வரவேற்பார்கள்.

பின்னர், அங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற, Mòria புலம்பெயர்ந்தவர் முகாமுக்கு, சிறிய வாகனத்தில் இத்தலைவர்கள் செல்வார்கள். இம்முகாமில் ஏறக்குறைய 2,500 புலம்பெயர்ந்தவர்கள் உள்ளனர்.

12.25 மணிக்கு, இத்தலைவர்கள் அங்கு உரையாற்றுவார்கள். 12.40 மணிக்கு பொதுவான அறிக்கை ஒன்றிலும் கையெழுத்திட்டு வெளியிடுவார்கள். 12.45 மணிக்கு, சில புலம்பெயர்ந்த மக்களுடன் இவர்கள் மதிய உணவருந்துவார்கள். பின்னர் அந்நகர் மக்களையும் சந்திப்பார்கள். 

பிற்பகல் 2:30 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தலைவர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசுவார். 3.15 மணிக்கு, Mytilene பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலை 4.30 மணிக்கு உரோம் Ciampino விமான நிலையம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

4. ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் பற்றிக் கர்தினால்கள்

 

ஏப்.14,2016. திருஅவையில் ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள், அவற்றில் திருப்பீடத் தூதர்களின் பங்கு போன்றவை, சி-9 கர்தினால்கள் அவையின் 14வது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்தது. 

இப்புதனன்று நிறைவடைந்த சி-9 கர்தினால்கள் அவையின் மூன்று நாள் கூட்டம் பற்றி பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்த, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், அப்போஸ்தலிக்கப் புதிய சட்ட அமைப்பின் அடிப்படையில், திருப்பீடத்தில் புதிய துறைகள் உருவாக்கப்படுவது குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கைகளை, கர்தினால்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பித்துள்ளனர் என்று கூறினார்.

பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு என்ற ஒரு துறையும், நீதி, அமைதி, குடிபெயர்வோர் என்ற ஒரு துறையும் புதிதாக உருவாக்கப்படுவது குறித்த பரிந்துரைகளைக் கர்தினால்கள் சமர்ப்பித்துள்ளனர்.

இக்கூட்டத்தில், உடல்நிலை காரணமாக, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் தவிர, மற்ற அனைவரும் கலந்து கொண்டனர் என்றும் திருத்தந்தை அனைத்து அமர்வுகளிலும் கலந்துகொண்டார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அடுத்தக் கூட்டங்கள், வருகிற ஜூன் 6-8, செப்டம்பர் 12-14, டிசம்பர் 12-14 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

5. ஆஸ்ட்ரிய எல்லைக் கட்டுப்பாட்டிற்கு திருஅவை கவலை

 

ஏப்.14,2016. ஈராக், சிரியா போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயரும் மக்கள் நாட்டுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ஆஸ்ட்ரிய நாடு, இத்தாலி எல்லையிலுள்ள Brennerல், தடுப்புகளைக் கட்டுவதற்குத் தீர்மானித்திருப்பதைக் குறை கூறியுள்ளனர் திருஅவைத் தலைவர்கள்.

தட்டுவோரை வரவேற்பதற்குப் பதிலாக, இவ்வாறு தடுப்புகளை அமைக்கத் திட்டமிடுவது குறித்து குறைகூறியுள்ள, இத்தாலியின் வெனிஸ் முதுபெரும் தந்தை Francesco Moraglia அவர்கள், தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் புலம்பெயர்ந்தவர்களைத் தடுப்பதற்கு, ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தினர் இவ்வாறு தீர்மானித்திருப்பது பலவீனத்தின் வெளிப்பாடு என்று கூறியுள்ளார். 

ஆஸ்ட்ரியத் தடுப்புத் திட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ள, Bolzano-Bressanone ஆயர் Ivo Muser அவர்கள், எல்லையில் வேலிகள், தீவிரத் தேசப்பற்று, தன்னிலிருந்து மற்றவரைப் பிரித்துப் பார்ப்பது போன்றவை, நம் அறிவிலும், இதயங்களிலும் அச்சத்தையும், தடைகளையும் தூண்டிவிடும் என்று எச்சரித்துள்ளார்.

 

ஆதாரம் : CCN / வத்திக்கான் வானொலி

 

6. இந்திய இயேசு இளையோர் இயக்கத்திற்கு திருப்பீடம் ஒப்புதல்

 

ஏப்.14,2016. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், கேரளாவில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பன்னாட்டுக் கழகமாக இயங்கிவரும், இயேசு இளையோர் (Jesus Youth) இயக்கத்திற்கு, திருப்பீடம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆசியக் கத்தோலிக்கத் திருஅவையில், இரண்டாவது பெரிய இயக்கமான, இயேசு இளையோர் அமைப்பு, 1980களில் கேரளாவில் தொடங்கப்பட்டு தற்போது 25 நாடுகளில் இயங்கி வருகின்றது.

ஏப்ரல் 20ம் தேதி வத்திக்கானில், திருப்பீடப் பொதுநிலையினர் அவை நடத்தும் நிகழ்வு ஒன்றில், இந்த அமைப்பின் தலைவர் சுபின் ஜேக்கப் அவர்கள், இந்த அனுமதி ஆவணத்தைப் பெற்றுக்கொள்வார்.

இயேசு இளையோர் இயக்கம், ஒரு திருஅவை அமைப்பாக, 2008ம் ஆண்டில், இந்திய ஆயர் பேரவையின் ஒப்புதல் பெற்றது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

 

இது இரக்கத்தின் காலம்...

 

 

என்னுடைய உயிர் உங்களைவிடப் பெரியதா?

 

பிரான்ஸ் நாட்டில் 1884ம் ஆண்டில் பிறந்து, இயேசு சபையில் சேர்ந்து, மதுரை மறைப்பணித்தளத்தில் நற்செய்திப் பணிசெய்யும் ஆர்வத்தில், தனது 24வது வயதில், தமிழகம் வந்து சேர்ந்தவர் இறையடியார் இயேசு சபை அருள்பணி லூயி லெவே. இவர் சிவகங்கை மறைமாவட்டம் ஆண்டாவூரணியில் 23 ஆண்டுகள் பங்குக் குருவாக அரும்பணியாற்றினார். அப்போது அவ்வூரில் மழையே இல்லாமல், கடும் வறட்சியால் மக்கள் துன்புற்றபோது, இவர் நெறிஞ்சி முள்ளில் முழங்காளிலிருந்து செபித்தார். மழையும் பெய்தது. 1938ம் ஆண்டில் அவ்வூர் மக்கள் காலரா நோயால் கதிகலங்கி நின்றபோது, அருள்பணி லெவே, காலராவினால் மரணத்தோடு போராடியவர்களைத் தொட்டுத் தூக்கி, அவர்களை, உடனுக்குடன் தொலைதூரத்திலிருந்த மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று, ஒரு தீயணைப்புப் படைவீரரைப்போல் செயல்பட்டார். சாமி, இது கொடுமையான தொற்றுநோய், இது உங்களுக்கு வந்துவிடக் கூடாது, எங்களுக்கென்று இருக்கின்ற ஒரே நாதி நீங்கதான் சாமி என்று மக்கள் கெஞ்சிக் கேட்டபோது, என்னுடைய உயிர் உங்களைவிடப் பெரியதா?, உங்களுக்காக நான் இறந்தால், அது பெரிய பாக்கியம் இல்லையா? தன்னுடைய மந்தைக்காக உயிர் கொடுப்பதுதானே இயேசுவின் விருப்பம் என்று சொன்னார். காலராவால், ஆங்காங்கே மக்கள் இறந்துபோனதால் கதிகலங்கிய மக்கள், இறந்தவர்களை லெவே சாமி பார்த்துக்கொள்வார் என்று, வீட்டிலேயே அவர்களை விட்டுவிட்டு வேறு இடங்களுக்குச் சென்று விட்டனராம். "! இயேசுவே, அன்பின் அரசரே, உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்" என்னும் சிறிய செபத்தை இவர் அடிக்கடி சொல்வார். அருள்பணியாளர்கள் இரக்கம் உள்ளவர்களாய் விளங்க வேண்டும். தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களுக்குப் பொறுப்பேற்று, உடனிருந்து பயணிப்பதோடு, அவர்களின் இதயங்களில் அன்புத் தீயை மூட்டிவிட வேண்டும், நல்ல சமாரியர் போன்று உடனடியாகச் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்று, இந்த யூபிலி ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லியிருக்கிறார். இந்த விதத்தில், இறையடியார் லூயி லெவே இறை இரக்கத்தின் தூதுவர் என்று சொல்லலாம்.  

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 




--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு

SEO/SMO Team

Post a Comment

Powered by Blogger.