Halloween party ideas 2015
.

1. துன்பத்திற்குள்ளாவது திருஅவையின் அன்றாட உணவு

 

2. அடுத்திருப்பவர்க்குப் பணியாற்றுவதற்கு கற்றுக்கொள்ளும் இடம் குடும்பம்

 

3. மரண தண்டனை இரத்து செய்யப்படுமாறு திருத்தந்தை கோரிக்கை

 

4. வன்முறையை, பிரச்சனைகளுக்குத் தீர்வாக ஏற்க முடியாது

 

5. "அன்பின் மகிழ்வு" மடல், ஆசியத் திருஅவைக்கு மாபெரும் கொடை

 

6. கொரியாவில் கத்தோலிக்கர் கொல்லப்பட்டதன் 150ம் ஆண்டு

 

7. சிரியாவில் கிறிஸ்தவ ஆலயங்களைச் சீரமைப்பதற்கு கூட்டு முயற்சி

 

8. இயேசுவின் கல்லறையைச் சீரமைப்பதற்கு, ஜோர்டன் அரசர் உதவி

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. துன்பத்திற்குள்ளாவது திருஅவையின் அன்றாட உணவு

 

ஏப்.12,2016. ஏரோது அரசனால் கொல்லப்பட்ட குழந்தை மறைசாட்சிகள் மற்றும் முதல் மறைசாட்சி ஸ்தேவானுக்கு நிகழ்ந்தது போன்று, இன்றும், ஏராளமான கிறிஸ்தவர்கள், கிறிஸ்து மீது தாங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்திற்காகக் கொலை செய்யப்படுகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், புனித ஸ்தேவானின் மறைசாட்சிய நிகழ்வை விளக்கும் முதல் வாசகத்தை(தி.ப.7,51-8,1) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு என்று கூறினார்.

துன்புறுத்தப்படுவது, திருஅவையின் அன்றாட உணவு என்று இயேசுவும் சொன்னார்; உரோம் நகரைச் சுற்றி வந்தாலும், கொலோசேயும் சென்றாலும், மறைசாட்சிகள் சிங்கங்களால் கொல்லப்பட்டதை நினைத்துப் பார்க்கிறோம்; ஆனால் இவர்கள் மட்டும் மறைசாட்சிகள் அல்ல, இன்றும் ஒவ்வொரு நாளும் ஆண்களும் பெண்களும் கொல்லப்படுகின்றனர்; பாகிஸ்தானில் உயிர்ப்பு ஞாயிறைக் கொண்டாடிய கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், ஏனெனில் அவர்கள் உயிர்த்த கிறிஸ்துவைக் கொண்டாடினர் என்று கூறினார் திருத்தந்தை.

அரிதாகப் பேசப்படும் இன்னொருவிதமான அடக்குமுறை உள்ளது என்றும், கலாச்சாரம், நவீனம், முன்னேற்றம் ஆகிய போலித் தோற்றத்துடனும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, கிறிஸ்துவின் பெயரை அறிவிப்பவர்கள் மட்டும் துன்புறுத்தப்படுவதில்லை,  இறைவனின் பிள்ளைக்குரிய விழுமியங்களைக் கொண்டிருந்து, அவற்றை வெளிப்படுத்த விரும்புவர்களும் துன்புறுத்தப்படுகின்றனர், இது, கடவுள் தம் பிள்ளைகளில் துன்புறுத்தப்படுவதாகும் என்றும் கூறினார். இது, மனிதரின் சுதந்திரத்தைப் பறிக்கும் உலகின் துன்புறுத்தலாகும் என்றுரைத்த திருத்தந்தை, நம் ஆண்டவர் நம்மைக் கைவிடமாட்டார் என்ற அவரின் வாக்குறுதியையும் மறையுரையின் இறுதியில் நினைவுபடுத்தினார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. அடுத்திருப்பவர்க்குப் பணியாற்றுவதற்கு கற்றுக்கொள்ளும் இடம் குடும்பம்

 

ஏப்.12,2016. "விசுவாசத்தின் அழகைப் பாராட்டுவதற்கும், செபிப்பதற்கும், நமக்கு அடுத்திருப்பவர்க்குப் பணியாற்றுவதற்கும் கற்றுக்கொள்ளும் இடமாக குடும்பம் அமைந்துள்ளது(287); செபம், தங்களின் பெற்றோர்க்கு, உண்மையிலேயே முக்கியமானதாக இருப்பதை, பிள்ளைகள் பார்ப்பது அவசியம்(288) என்பவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகளாக இச்செவ்வாய் காலையில்   வெளியிடப்பட்டன.

"புரிந்துகொள்தல், மன்னித்தல், உடனிருத்தல் போன்ற மனப்போக்கே, திருஅவையில் மேலோங்கியிருக்க வேண்டும்(312); எவ்விதப் பாகுபாடுமின்றி, எல்லாரிடமும் சென்ற இறைமகனின் நடைமுறைப் பண்பே, திருஅவையின் பண்பாக இருக்க வேண்டும்(309)" என்பவையும், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளாக இச்செவ்வாய் மாலையில் வெளியிடப்பட்டன.

@Pontifex  என்ற முகவரியில், வெளியிடப்படும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள், இந்நாள்களில், அன்பின் மகிழ்வு(Amoris Laetitia)" என்ற அவரின் திருத்தூது அறிவுரை மடலிலிருந்து வெளியிடப்படுகின்றன.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. மரண தண்டனை இரத்து செய்யப்படுமாறு திருத்தந்தை கோரிக்கை

 

ஏப்.12,2016.  மரண தண்டனை இரத்து செய்யப்படுமாறும், விசுவாசத்தின் பயனாக, கிறிஸ்தவர்கள் அறிவிப்பதை, நன்மனம் கொண்ட அனைவரும் ஏற்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கும் அனைத்துலக பாக்ஸ் கிறிஸ்டி கத்தோலிக்க அமைப்பு, திருப்பீட நீதி, அமைதி அவையின் ஒத்துழைப்புடன் உரோம் நகரில் இத்திங்களன்று தொடங்கியுள்ள மூன்று நாள் கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பீட நீதி, அமைதி அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன் அவர்களுக்கு இச்செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, நம்முடன் வாழ்வோரை, சகோதர சகோதரிகளாக நோக்குவதால் மட்டுமே, மனித சமுதாயத்தால் போர்களையும், மோதல்களையும் முடிவுக்குக் கொண்டுவர இயலும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"வன்முறையின்மையும் நீதியுடன்கூடிய அமைதியும் : வன்முறையற்ற நிலையை, கத்தோலிக்க முறையில் புரிந்துகொள்தலும், அர்ப்பணமும்" என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.  

மேலும், இக்கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், திருத்தந்தையின் இச்செய்தியை முதலில் வாசித்து, பின்னர் தனது உரையை வழங்கினார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

4. வன்முறையை, பிரச்சனைகளுக்குத் தீர்வாக ஏற்க முடியாது

 

ஏப்.12,2016. வன்முறையற்ற வழியில், அமைதியை ஏற்படுத்துவது பற்றி, திருப்பீட நீதி, அமைதி அவையின் ஒத்துழைப்புடன், பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பு உரோம் நகரில் நடத்தும் கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், அமைதியின் உண்மையான அர்த்தம் பற்றிப் பேசினார்.

வன்முறை நிறைந்த சூழல்களைக் கிறிஸ்தவர்கள் நோக்கும் முறை பற்றி இரு கருத்துக்களை முன்வைத்த கர்தினால் டர்க்சன் அவர்கள், பதட்டநிலைக்கும் வன்முறைக்கும் இடையேயுள்ள வேறுபாடு பற்றி முதலில் விளக்கினார்.

வன்முறை தீயது, பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக, வன்முறையை ஏற்க முடியாது என்று, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கூறியதைக் குறிப்பிட்ட கர்தினால் டர்க்சன், அமைதியை ஏறக்படுத்துவதற்கு தேவையானது எது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

5. "அன்பின் மகிழ்வு" மடல், ஆசியத் திருஅவைக்கு மாபெரும் கொடை

 

ஏப்.12,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், "அன்பின் மகிழ்வு(Amoris Laetitia)" திருத்தூது அறிவுரை மடல், ஆசியச் சமுதாயத்திற்கும், குடும்பங்களுக்கும், ஆசியத் திருஅவைக்கும் மாபெரும் கொடை என்று கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரும், இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவைத் தலைவரும், மும்பைப் பேராயருமான கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இம்மடல் வெளிவந்திருப்பதால், இது இன்னும் சிறந்த கொடையாக உள்ளது என்று கூறினார்.

அன்பின் மகிழ்வு மடல் குறித்து, ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்தியத் தலத்திருஅவைக்கு இது விலைமதிப்பில்லாத கொடை என்றும் தெரிவித்தார்.

ஒதுக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களைத் தேடிச்சென்று, அவர்களுக்கு மேய்ப்புப்பணியாற்றுவதை ஊக்குவிப்பதன் வழியாக, இரக்கம் மற்றும் கனிவென்ற மருந்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இம்மடல் ஓர் அழைப்பாக உள்ளது என்றும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.

ஆசியாவில், பாரம்பரியமாகவே, குடும்பங்கள் மிகவும் ஒன்றித்திருக்கின்றன என்றும், திருத்தந்தை, குடும்பங்களை, சமூக அக்கறையோடு இணைத்துப் பேசியுள்ளார் என்றும், சமூகங்கள், குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கினால் மட்டுமே, குடும்பங்கள் செழிக்க முடியும் என்றும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.

 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 

6. கொரியாவில் கத்தோலிக்கர் கொல்லப்பட்டதன் 150ம் ஆண்டு

 

ஏப்.12,2016. கொரியாவில் கத்தோலிக்கர் மிகக் கொடூரமாய்த் துன்புறுத்தப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர்கள், மறைசாட்சிகளின் வாழ்வைப் பின்பற்றி நடக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

1886ம் ஆண்டின் Byeongin அடக்குமுறையை மறக்க வேண்டாமென்று, கொரியக் கத்தோலிக்கரைக் கேட்டுள்ள ஆயர்கள், தொடக்ககாலக் கத்தோலிக்கர், இக்காலக் கத்தோலிக்கருக்கு எவ்வாறு எடுத்துக்காட்டுகளாய் உள்ளனர் என்பதை விளக்கியுள்ளனர்.

அன்புக்குச் சாட்சி பகர்வது, ஏழைகளுக்குப் பிறரன்புப் பணி செய்வது மற்றும், இரக்கப் பண்பின் அடிப்படையில் அர்த்தமுள்ள திருஅவை சமூகங்களை அமைப்பதன் வழியாக, தொடக்ககாலக் கத்தோலிக்கர், இக்காலத்தவருக்கு எடுத்துக்காட்டுகளாய் உள்ளனர் என்று ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.

மூன்று ப்ரெஞ்ச் மறைபோதகர்கள் மற்றும் இரு கொரியப் பொதுநிலையினர் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டதை நினைவுகூரும் மார்ச் 30ம் தேதியன்று ஆயர்களின் அறிக்கை வெளியிடப்பட்டது.

கொரியாவில், 1886ம் ஆண்டில் இடம்பெற்ற கத்தோலிக்கருக்கு எதிரான அடக்குமுறையில், ஒன்பதாயிரம் பேர், தங்கள் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டனர். 

 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

 

7. சிரியாவில் கிறிஸ்தவ ஆலயங்களைச் சீரமைப்பதற்கு கூட்டு முயற்சி

 

ஏப்.12,2016. சிரியாவில், போரினால் அழிக்கப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களை மீண்டும் சீரமைப்பதற்கு மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை முதுபெரும் தந்தையின் அலுவலகமும், வத்திக்கானும் இணைந்து செயலாற்றவுள்ளன என்று, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தந்தை கிரில் ஆகிய இரு தலைவர்களுக்கும் இடையே, கியூபாவில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புக்குப் பின்னர், இவ்விரு சபைகளுக்கும் இடையே ஒத்துழைப்பின் தெளிவான அடையாளமாக இச்செயல் உள்ளது என ஊடகங்கள் கூறுகின்றன. 

சிரியாவில் இடம்பெறும் சண்டையில் அழிக்கப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட கிறிஸ்தவ இடங்கள் குறித்த விரிவான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிரியாவிலும், லெபனானிலும் மனிதாபிமான உதவிகள் மற்றும் பிற உதவிகளை ஒன்றிணைந்து ஆற்றும் நோக்கத்தில், இம்மாதம் 6,7 தேதிகளில், அந்நாடுகளுக்கு, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் பிரதிநிதிகள் குழு மேற்கொண்ட பயணத்தில் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 

8. இயேசுவின் கல்லறையைச் சீரமைப்பதற்கு, ஜோர்டன் அரசர் உதவி

 

ஏப்.12,2016. எருசலேம் நகரில் அமைந்துள்ள திருக்கல்லறை ஆலயத்திலுள்ள இயேசுவின் கல்லறையைச் சீரமைப்பதற்கு, ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா அவர்கள் நிதியுதவி அளிப்பதற்குத் தீர்மானித்துள்ளார்.

ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா அவர்களின் இத்தீர்மானத்தை மகிழ்வோடு வரவேற்றுப் பேசியுள்ள, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் வில்லியம் ஷோமாலி அவர்கள், திருக்கல்லறை அனைத்துக் கிறிஸ்தவ சபையினருக்கும் மிகவும் புனிதமான இடமாக இருப்பதால், இத்தீர்மானம் உயரிய அடையாளப் பண்பாக உள்ளது என்று கூறினார்.

ஜோர்டன் அரசர் அலுவலகம், அரசரின் இத்தீர்மானத்தை, எருசலேம் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 3ம் தெயோபிலோஸ் அவர்களுக்கு அறிவித்துள்ளது.

எருசலேமிலுள்ள இயேசுவின் திருக்கல்லறை, 1947ம் ஆண்டுக்குப் பின்னர் சீரமைக்கப்படவில்லை என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் அலுவலகம் கூறியது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

 

இது இரக்கத்தின் காலம்...

 

'இரக்கம்' என்ற 'இரப்பர்'

 

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க அருள்பணியாளரும், பேராசிரியருமான ஹென்றி நூவென் (Henri Nouwen) அவர்கள், 'Compassion', அதாவது, 'பரிவு' என்பதைக் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். தன் ஆய்வின் ஒரு பகுதியாக, அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர், ஹுபர்ட் ஹம்ஃப்ரி (Hubert Humphrey) அவர்களைச் சந்திக்கச் சென்றார். தன்னைச் சந்திக்கவந்த காரணம் என்ன என்று ஹம்ஃப்ரி அவர்கள் கேட்டபோது, அருள்பணி நூவென் அவர்கள், "பரிவு என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள உங்களைத் தேடி வந்துள்ளேன்" என்று கூறினார். இதைக் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிது ஆச்சரியம் அடைந்தார். விரைவில் சமாளித்துக் கொண்டு, தன் மேசையின் மீதிருந்த ஒரு 'பென்சிலை'க் கையில் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்:

"இந்தப் பென்சிலின் முழு நீளமும், 'போட்டி' என்ற கருத்திற்கு ஓர் அடையாளம். பென்சிலின் அடியில் இணைக்கப்பட்டுள்ள 'இரப்பர்' பரிவுக்கு அடையாளம். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் நம்மில் பலர், வாழ்நாளின் பெரும்பகுதியை 'போட்டி'க்கெனப் பயன்படுத்துகிறோம். இதனால், நாம் பல கிறுக்கல்களை உருவாக்குகிறோம். குழப்பங்கள் பெருகிவிடும்போது, 'பரிவு' என்ற 'இரப்பரைக்' கொண்டு, நாம் உருவாக்கிய கிறுக்கல்களை அழித்துத் திருத்த முயல்கிறோம்" என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹுபர்ட் ஹம்ஃப்ரி அவர்கள் பதில் அளித்தார்.

'பரிவு' அல்லது, 'இரக்கம்' என்ற 'இரப்பர்', பல தாறுமாறான கிறுக்கல்களைத் திருத்தி அமைக்க உதவும்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

 

 

 

 
--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு

SEO/SMO Team

Post a Comment

Powered by Blogger.