Halloween party ideas 2015
.

 

1. திண்டுக்கல் மறைமாவட்டப் புதிய ஆயர் தாமஸ் பால்சாமி

 

2. ராயகடா புதிய மறைமாவட்டம், புதிய ஆயர் Aplinar Senapati

 

3. மூடிய இதயங்களுடன் தீர்ப்பிடுபவர்க்கு திருத்தந்தை எச்சரிக்கை

 

4. திருத்தந்தையின் ஏப்.10,11 டுவிட்டர் செய்திகள்

 

5. கேரளாவில் வெடிவிபத்தில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்

 

6. புட்டிங்கல் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் கத்தோலிக்கர் ஒருமைப்பாடு

 

7. கடத்தப்பட்டுள்ள அருள்பணியாளர் விடுதலைக்கு திருத்தந்தை அழைப்பு

 

8. திருத்தந்தை கிறிஸ்துவைச் சந்திப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. திண்டுக்கல் மறைமாவட்டப் புதிய ஆயர் தாமஸ் பால்சாமி

 

ஏப்.11,2016. தமிழ்நாட்டின், திண்டுக்கல் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, பேரருள்திரு தாமஸ் பால்சாமி அவர்களை இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாக, 2007ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரைப் பணியாற்றிய, புதிய ஆயர் தாமஸ் பால்சாமி அவர்கள், தற்போது, கல்லுக்குளி புனித அந்தோணியார் ஆலயப் பங்குக் குருவாகப் பணியாற்றி வருகிறார்.

திருச்சி மறைமாவட்டத்தைச் சேர்ந்த என்.பூலாம்பட்டியில், 1951ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி பிறந்த புதிய ஆயர் தாமஸ் பால்சாமி அவர்கள், திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில். மெய்யியல், இறையியல் கல்வியை முடித்து, 1977ம் ஆண்டு, மே 25ம் தேதி, அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.

திருச்சி, மேலப்புதூரிலுள்ள புனித மரியாப் பேராலயம்(1977-1979) மற்றும், திருச்சி பழையகோவில் வியாகுல அன்னை ஆலயத்தில்(1979-1980) உதவிப் பங்குத் தந்தையாகவும், பின்னர் திருச்சி மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளில் 2007ம் ஆண்டுவரை பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார் புதிய ஆயர் தாமஸ் பால்சாமி  

2003ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திண்டுக்கல் மறைமாவட்டம், 6,266 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும், 1,45,213 கத்தோலிக்கரையும் கொண்டுள்ளது. இங்கு, 49 பங்குகளும், 163 அருள்பணியாளர்களும், 32 அருள்சகோதரர்களும், 365 அருள்சகோதரிகளும், 42 குருத்துவ மாணவர்களும் உள்ளனர்.

திண்டுக்கல் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிய, ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள், மதுரை உயர் மறைமாவட்டப் பேராயராகப் பணிமாற்றம் பெற்றதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மறைமாவட்டம், 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து  ஆயரின்றி இருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. ராயகடா புதிய மறைமாவட்டம், புதிய ஆயர் Aplinar Senapati

 

ஏப்.11,2016. இந்தியாவில், ராயகடா புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி, அதன் முதல் ஆயராக, அருள்பணி Aplinar Senapati அவர்களை, இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெர்ஹாம்பூர் மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ள புதிய ராயகடா மறைமாவட்டத்தின் முதல் ஆயர் Aplinar Senapati அவர்கள், பெர்ஹாம்பூர் மறைமாவட்டத்திலுள்ள, சுரதாவில் 1960ம் ஆண்டு பிறந்தவர். மறைபோதக சபையைச் சேர்ந்த இவர், புவனேஷ்வர், Utkal பல்கலைக்கழகத்தில் பொருளியியல் மற்றும் மெய்யியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்.

1988ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட ஆயர் Aplinar Senapati அவர்கள், உதவிப் பங்குத் தந்தை, பங்குத் தந்தை, நவதுறவியர் பயிற்சியாளர் என, பல பணிகளை ஆற்றியுள்ளார். இவர், 2014ம் ஆண்டிலிருந்து, குவாஹாத்தி உயர்மறைமாவட்டத்திலுள்ள Derapatharல், பங்குத் தந்தையாகவும், ஆங்கிலவழிக் கல்விப் பள்ளியின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.  

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. மூடிய இதயங்களுடன் தீர்ப்பிடுபவர்க்கு திருத்தந்தை எச்சரிக்கை

 

ஏப்.11,2016. இறைவார்த்தைக்கு மூடிய இதயம், உண்மைக்கும், இறைமக்களை முன்னோக்கிச் செல்ல வைக்கும் மற்றும், இறைவாக்கைத் தாங்கிச் செல்லும் கடவுளின் தூதுவருக்கும், மூடிய இதயமாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று கூறினார்.

ஸ்தேவான் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும், அரும் அடையாளங்களையும் செய்து இறைவார்த்தையைப் போதித்து வந்தபோது, அவருக்கு எதிராகப் பேசி, அவரைத் தலைமைச் சங்கத்திற்கு இழுத்துச் சென்றது பற்றிக் கூறும் இத்திங்கள் திருப்பலியின் முதல் வாசகத்தை(தி.ப.6,8-15) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞானத்தோடும், தூய ஆவியாரால் நிறைந்தவராயும் பேசிய ஸ்தேவானை எதிர்த்து நிற்க இயலாதவர்கள், அவருக்கு எதிராகப் போலியாகச் சான்று சொல்ல, மக்களைத் தூண்டினர் என்றும் கூறினார். மக்களின் வாழ்வையும், மனந்திரும்பும் மக்களையும் கருத்தில் கொள்ளாமல், சட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, மூடிய இதயங்களுடன் தீர்ப்பிடுபவர்க்கு எதிராக எச்சரிக்கை விடுத்தார்.

அனைத்து இறைவாக்கினர்கள், மற்றும் இயேசு போன்று, மறைசாட்சி ஸ்தேவான் அவர்களின் வாழ்வும் முடிந்தது, திருஅவையின் வரலாற்றில் இது தொடர்ந்துகொண்டே இருக்கின்றது என்றும் கூறினார்.

குற்றமற்றவர்களாய் இருந்தும், பலர் தீர்ப்பிடப்பட்டு கொல்லப்பட்டதை வரலாறு நமக்குக் கூறுகிறது, இந்த அப்பாவி மக்கள், இறைவார்த்தைக்கு எதிராகத் தீர்ப்பிடப்பட்டவர்கள் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

4. திருத்தந்தையின் ஏப்.10,11 டுவிட்டர் செய்திகள்

 

ஏப்.11,2016. "மணமுறிவு பெற்று, மீண்டும் புதிதாகத் திருமணப் பந்தத்தில் இணைந்துள்ளவர்கள், தாங்கள் திருஅவையின் அங்கம் என்று உணர்வதற்கு வழிசெய்யப்பட வேண்டும், இவர்கள் திருஅவைக்குப் புறம்பானவர்கள் அல்ல(243); பிரமாணிக்கம், பொறுமையைச் சார்ந்தது, அதன் தியாகங்களும், பலன்களும், ஆண்டுகள் செல்லச் செல்லக் கனிகளைத் தரும்(231); மன்னிப்பது எப்படி என்பதும், மன்னிக்கப்பட்டதாக உணர்வதும், குடும்ப வாழ்வில், அடிப்படை அனுபவமாகும் (236);" போன்றவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகளாக இத்திங்களன்று  வெளியிடப்பட்டன.

"இயேசுவின் கனிவைப் பின்பற்றுவதற்கு, நம் குடும்பங்களில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்(100); அன்பு, நம் கண்களைத் திறந்து, மனிதரின் மாபெரும் மதிப்பைப் பார்க்கச் செய்கின்றன(128); ஒவ்வொரு புதிய வாழ்வும், அன்பின் இலவசக் கூறைப் பாராட்டுவதற்கு நம்மை அனுமதிக்கின்றது(166); ஒரு குழந்தை, தான் விரும்பப்படுகிறேன் என்பதை உணர்வது முக்கியம், அக்குழந்தை, சில தனிப்பட்ட தேவைக்கான தீர்வு அல்ல(170); திறந்த மனம் கொண்ட குடும்பங்கள், ஏழைகளுக்கு ஓர் இடத்தைக் காண்கின்றன(183)" என்பவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகளாக இஞ்ஞாயிறன்று வெளியிடப்பட்டன.

ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒன்பது மொழிகளில், @Pontifex  என்ற முகவரியில், வெளியிடப்பட்டுவரும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள், ஏப்ரல் 8, கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட, "அன்பின் மகிழ்வு"திருத்தூது அறிவுரை மடலை மையப்படுத்தி, இத்திங்கள் மற்றும் இஞ்ஞாயிறு டுவிட்டர் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், திருப்பீடத் தலைமையகத்தின் சீர்திருத்தங்களுக்குத் திருத்தந்தைக்கு உதவுவதற்கென உருவாக்கப்பட்டுள்ள ஜி 9 கர்தினால்கள் அவையின் 14வது கூட்டம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் இத்திங்களன்று வத்திக்கானில் தொடங்கியுள்ளது. இக்கூட்டம், வருகிற புதனன்று நிறைவடையும்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

5. கேரளாவில் வெடிவிபத்தில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்

 

ஏப்.11,2016. கேரள மாநிலம், கொல்லம் அருகேயுள்ள புட்டிங்கல் தேவி கோவில் வளாகத்தில், இஞ்ஞாயிறு காலை 3.10 மணியளவில் இடம்பெற்ற, பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவுகளுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெடி விபத்தில் பாதிக்கபட்டுள்ள மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள எல்லாருக்காகவும், வல்லமையும் அமைதியும் நிறைந்த இறையாசீர், நாட்டினர் அனைவர் மீதும் பொழியப்படச் செபிப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபங்களும், அனுதாபங்களும் நிறைந்த தந்திச் செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ளார்.

புட்டிங்கல் தேவி கோவில் திருவிழாவின்போது, அவ்வளாகத்தில், தடையை மீறி இருதரப்பைச் சேர்ந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பட்டாசு வெடித்தனர். அப்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 110க்கும் மேற்பட்ட பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 350க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இவ்வெடி விபத்தில் அங்கிருந்த கட்டடமும் இடிந்து விழுந்தது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

6. புட்டிங்கல் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் கத்தோலிக்கர் ஒருமைப்பாடு

 

ஏப்.11,2016. இந்திய கத்தோலிக்கத் திருஅவையும், Paravurல், புட்டிங்கல் இந்துக் கோவில் வளாகத்தில், ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பது மற்றும் காயமடைந்திருப்பது குறித்த தனது ஆழ்ந்த கவலையையும், வேதனையையும் தெரிவித்துள்ளது.

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவைத் தலைவரும், மும்பைப் பேராயருமான கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இதில் உயிரிழந்த மற்றும் காயமடைந்துள்ளவர்களின் குடும்பங்களுக்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

இதில் காயமடைந்துள்ள 350க்கும் மேற்பட்ட மக்களுக்கு, இந்திய கத்தோலிக்கத் திருஅவை, மருத்துவ உதவிகளை வழங்கும் என்று உறுதி கூறியுள்ளார் கர்தினால் கிரேசியஸ். 

இந்து புத்தாண்டை முன்னிட்டு, இக்கோவில் வளாகத்தில், இரவு முழுவதும் பட்டாசு வெடித்து நடைபெற்ற கொண்டாட்டத்தில், ஏறக்குறைய 15 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 

7. கடத்தப்பட்டுள்ள அருள்பணியாளர் விடுதலைக்கு திருத்தந்தை அழைப்பு

 

ஏப்.11,2016. அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்களும், போர் இடம்பெறும் பகுதிகளில் பிணையல் கைதிகளாக, கடத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து மக்களும் விடுதலை செய்யப்படுமாறு, இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நண்பகலில், அல்லேலூயா வாழ்த்தொலி உரையைக் கேட்பதற்காக, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில், இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, உயிர்த்த கிறிஸ்து நமக்கு அளித்துள்ள நம்பிக்கையில், இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று கூறினார்.

குறிப்பாக, ஏமன் நாட்டின் ஏடன் நகரில், கடந்த மார்ச் 4ம் தேதி கடத்தப்பட்டுள்ள இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்களை, சிறப்பாக நினைக்கின்றேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏடன் நகரில், பிறரன்பு மறைபோதக சகோதரிகள் சபை நடத்திய வயதானவர் இல்லத்தில், கடந்த மார்ச் 4ம் தேதி தீவிரவாதிகள் நுழைந்து 4 அருள்சகோதரிகள் உட்பட 16 பேரைக் கொலை செய்த பின்னர், அங்கிருந்த, கேரளாவைச் சேர்ந்த அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே, ஏமனில் அமலுக்கு வந்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் நிறுவனம் இத்திங்களன்று வரவேற்றுள்ளது. அந்நாட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த மோதல்களில் ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

8. திருத்தந்தை கிறிஸ்துவைச் சந்திப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி

 

ஏப்.11,2016. திபேரியக் கடல் அருகே இயேசு தம் திருத்தூதர்களுக்குத் தோன்றியது பற்றிக் கூறும், பாஸ்கா கால மூன்றாம் ஞாயிறு நற்செய்தி வாசகத்தை(யோவா.21:1-19) மையமாக வைத்து, அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவைச் சந்திப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி பற்றி விளக்கினார்.

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்ப்பைத் தொடர்ந்து, மீனவர்களாகிய திருத்தூதர்கள், தங்களின் அன்றாட வாழ்வுக்குத் திரும்புவதை, இந்நற்செய்திப் பகுதி விவரிக்கின்றது என்றும், இரவெல்லாம் மீன்பிடித்தும், மீன்கள் ஒன்றும் அகப்படாமல், காலியான வலைகளுடன் திருத்தூதர்கள் திரும்பினர் என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசுவின் வார்த்தையின்படி மீன்கள் ஏராளமாய்க் கிடைத்தன, கரையில் நிற்கும் இயேசுவை அறிந்து, அவர் ஆண்டவர்தான் என்று திருத்தூதர்கள் மகிழ்வோடு அறிவித்ததே, உயிர்ப்பு விசுவாசம், இது மகிழ்வும் வியப்பும் நிறைந்தது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்த்த இயேசுவின் பிரசன்னம், அனைத்தையும் மாற்றுகின்றது என்றும், இதே உணர்வே, திருஅவையை உயிர்த்துடிப்புடன் வாழச் செய்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்கள், தாங்கள் சந்திக்கும் எல்லாரிடமும், குறிப்பாக, நோயுற்றோர், ஓரங்கட்டப்பட்டவர் மற்றும் புலம்பெயர்ந்தவர்களிடம், இந்த உயிர்ப்புச் செய்தியை அறிவிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

இது இரக்கத்தின் காலம்...

 

வாடுவோரைக் கண்டு இரங்கும் இதயம்

 

அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைநகர் வாஷிங்டன் நகரில் வாழ்ந்து வருபவர் சிறுமி ஹைலி போர்ட். ஒன்பது வயது நிரம்பிய இச்சிறுமி, ஒருநாள், தன் அம்மா, அப்பாவுடன் கடைக்குப் போகும்போது, வீடில்லாத ஒருவர், தெருவோரம் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அந்தக் காட்சி ஹைலியின் மனதைப் பாதித்தது. நாம் மட்டும் பாதுகாப்பான வீட்டில் தூங்கும்போது, அந்த மாமா மட்டும் வீடில்லாமல், குளிரிலும் வெயிலிலும் வாடுகிறாரே என வருந்தினார். ஹைலியின் தாத்தா ஒரு கட்டட ஒப்பந்தக்காரர். தாத்தா வீடுகள் உருவாக்குவதை ஹைலி அடிக்கடிப் பார்த்திருக்கிறார். வீடில்லாத அந்த மனிதருக்கு நாமே ஏன் ஒரு வீட்டைக் கட்டித்தரக் கூடாது என முடிவெடுத்தார். வீட்டில் தான் சேர்த்து வைத்த காசைக் கொண்டு பழைய மரப் பலகைகளைக் கடைகளில் வாங்கினார். தன் குட்டித் தங்கையைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு வீட்டுத் தோட்டத்தில் வேலையைத் தொடங்கினார். இதைக் கவனித்த ஹைலியின் அம்மா, ஹைலிக்குப் பணம் கொடுத்து உதவினார். வேலை மளமளவென நடந்தது. ஆனால், ஹைலியின் அப்பாவோ, வீடு கட்டும் வேலையால் படிப்பு கெட்டுவிடக் கூடாது, அதனால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும்தான் வீடு கட்ட வேலை செய்ய வேண்டும் என்று, கண்டிப்பாகச் சொன்னார். அதனால் அந்த வீட்டைக் கட்டி முடிக்க சில மாதங்கள் ஆயின. ஹைலி கட்டிய இந்த வீடு 32 சதுர அடி பரப்பளவு கொண்டது. வீட்டை நகர்த்திக்கொள்ள வசதியாக, சக்கரங்களையும் ஹைலி பொருத்தியுள்ளார். குட்டி ஜன்னல், மின்சாரத்துக்காகச் சூரிய மின்சக்தி பேனலை வைத்து, வீட்டை உருவாக்கியிருக்கிறார் சிறுமி ஹைலி. இப்போது வீடு இல்லாதவர்களுக்கு, வீடு கட்டித்தர நிதியும் திரட்டிவருகிறார். உணவுத் தானியங்களைப் பயிரிட்டு அவற்றை ஏழைகளுக்குக் கொடுக்க ஹைலி முடிவு செய்துள்ளார். இது இரக்கத்தின் காலம்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


Post a Comment

Powered by Blogger.