Halloween party ideas 2015
.

 1. நசுக்கப்படுதலும்,துன்பங்களும் கிறிஸ்தவத்தின் சான்றுகள்

 

2. பெற்றோர், பிள்ளைகளுக்கு விசுவாசத்தின் முதல் ஆசிரியர்கள்

 

3. ஆர்மேனியா, ஜார்ஜியா, அஜெர்பைஜான் நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம்

 

4. திருஅவையின் கோட்பாடுகள், மக்களுக்குத் தொண்டுபுரிவதற்காகவே

 

5. செங்கடலில், சவுதி அரேபியா-எகிப்தை இணைக்கும் பாலம்

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. நசுக்கப்படுதலும்,துன்பங்களும் கிறிஸ்தவத்தின் சான்றுகள்

 

ஏப்.09,2016. இயேசுவைப் பின்செல்லும்போது, பிறரின் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்ற விளம்பர நோக்கத்தைக் கொண்டு செயல்படுபவர்களை, கிறிஸ்தவ வாழ்வுமுறை சகித்துக் கொள்ளாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வத்திக்கானிலுள்ள Redemptoris Mater சிற்றாலயத்தில், Aletti மையத்தின் உறுப்பினர்களுக்குத் இவ்வெள்ளி மாலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, இயேசுவின் பெயருக்காக, அவமதிப்பை ஏற்படுத்தும் துன்பங்களின் மத்தியில், மகிழ்வாய் வாழ்வது பற்றி மறையுரையாற்றினார்.

உரோம் நகரில், இயேசு சபையினரால் நடத்தப்படும் பாப்பிறை ஓரியன்டல் நிறுவனத்தின், Aletti ஆய்வு மையம் ஆரம்பிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் உறுப்பினர்கள் கலந்துகொண்ட இத்திருப்பலியில், நசுக்கப்படுதலும், துன்பங்களும் கிறிஸ்தவச் சான்றின் அங்கங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய கிறிஸ்தவப் பாரம்பரியத்தைக் கொண்ட வல்லுனர்கள் மற்றும் கலைஞர்கள், தங்களையொத்த மேற்குலகினரைச் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் Aletti ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.

இத்திருப்பலியில், Redemptoris Mater சிற்றாலயத்தின் மொசைக் வண்ண வேலைப்பாடுகளை அமைத்த, Aletti ஆய்வு மைய இயக்குனர் இயேசு சபை அருள்பணி Marko Rupnik அவர்களும் பங்கு கொண்டார். இவரே, இரக்கத்தின் யூபிலி ஆண்டு இலச்சினையை வரைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. பெற்றோர், பிள்ளைகளுக்கு விசுவாசத்தின் முதல் ஆசிரியர்கள்

 

ஏப்.09,2016. "பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு விசுவாசத்தின் முதல் ஆசிரியர்களாக மாறும் இடம் குடும்பம்; இன்னல்களையும், துன்பங்களையும் அனுபவிக்கும் ஒவ்வொரு  குடும்பத்திற்கும் இறைவார்த்தை ஆறுதலின் ஊற்றாக உள்ளது; குடும்பத்தின் நல்வாழ்வு, உலகின் வருங்காலத்தைத் தீர்மானிக்கிறது; குடும்பம் இன்றி, சமுதாயம் செயல்படமுடியாது, எனவே குடும்பம் பாதுகாக்கப்பட வேண்டும்" என்பவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகளாக இவ்வெள்ளி மாலையில்  வெளியிடப்பட்டன.

ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒன்பது மொழிகளில், @Pontifex  என்ற முகவரியில், டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்ட அவரின் "அன்பின் மகிழ்வு"திருத்தூது அறிவுரை மடலை மையப்படுத்தி, இவ்வெள்ளி பிற்பகலில் நான்கு டுவிட்டர் செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், போலந்து நாடு திருமுழுக்குப் பெற்றதன் 1050ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்குத் தனது பிரதிநிதியாக, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதம் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை, போலந்து நாட்டின் Gniezno மற்றும் Poznań நகரங்களில், இப்பெருவிழா சிறப்பிக்கப்படவுள்ளது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. ஆர்மேனியா, ஜார்ஜியா, அஜெர்பைஜான் நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம்

 

ஏப்.09,2016. ஆர்மேனியா, ஜார்ஜியா மற்றும் அஜெர்பைஜான் நாடுகளுக்கு, இவ்வாண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

ஆர்மேனியாவின் முதுபெரும் தந்தை 2ம் Karekin, அந்நாட்டின் கத்தோலிக்கத் திருஅவை மற்றும் அரசு அதிகாரிகளின் அழைப்பின்பேரில், வருகிற ஜூன் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை, அந்நாட்டிற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

மேலும், ஜார்ஜியாவின் முதுபெரும் தந்தை 2ம் Ilia, இன்னும், ஜார்ஜியா மற்றும் அஜெர்பைஜான் நாடுகளின், அரசு மற்றும் சமயத் தலைவர்களின் அழைப்பின்பேரில், வருகிற செப்டம் 30ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை, அந்நாடுகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்றும், அச்செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு நாடுகளுக்குச் செல்லும்போது, Caucasusலும் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

4. திருஅவையின் கோட்பாடுகள், மக்களுக்குத் தொண்டுபுரிவதற்காகவே

 

ஏப்.09,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதி, வெளியிட்டுள்ள, "Amoris laetitia" அதாவது, "அன்பின் மகிழ்வு"என்ற திருத்தூது அறிவுரை மடல் குறித்த தங்களின் கருத்துக்களையும், பாராட்டுக்களையும், பல நாடுகளின் திருஅவைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்திருத்தூது மடல், திருஅவையின் எந்தக் கோட்பாட்டையும் மாற்றாமல், அதேநேரம், இக்கோட்பாடுகள், மக்களுக்குத் தொண்டுபுரிவதற்காக உள்ளன என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிகாகோ பேராயர் Blase Cupich அவர்கள் கூறியுள்ளார்.

"அன்பின் மகிழ்வு"திருத்தூது அறிவுரை மடல், திருஅவையின் அதிகாரப்பூர்வப் போதனை ஏடு என்றும், உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொண்ட ஆயர்களில், மூன்றில் இரண்டு பாகத்தினர் ஏற்றுக்கொண்டதற்கு விசுவாசமாக இது அமைந்துள்ளது என்றும் கூறினார் பேராயர் Cupich. இவர், உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏப்ரல் 8, இவ்வெள்ளியன்று இம்மடலை பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்ட குழுவில் ஒருவரும், கத்தோலிக்க குடும்பக் கல்வியில் வல்லுனருமான, அருள்பணி José Granados அவர்கள், இம்மடலை, கத்தோலிக்கப் போதனையின் பாரம்பரிய ஒளி கொண்டு நோக்க வேண்டும் என்று கூறினார்.

குடும்பங்களை மையப்படுத்தி, வத்திக்கானில், 2014ம் ஆண்டில் நடைபெற்ற உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம், 2015ம் ஆண்டில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றம் ஆகிய இரு கூட்டங்களிலும் கலந்து பேசப்பட்ட கருத்துக்கள், உலகக் கத்தோலிக்கக் குடும்பங்களிலிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் போன்றவற்றை உள்ளடக்கி, திருத்தந்தையின் இத்திருத்தூது மடல் வெளியிடப்பட்டுள்ளது.

குடும்பத்தில் அன்பு என்ற மையக் கருத்தைக் கொண்டுள்ள இம்மடல், 264 பக்கங்களையும், ஒன்பதுக்கு மேற்பட்ட பிரிவுகளையும், 325 பத்திகளையும் கொண்டுள்ளது.

உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி, வியன்னா கர்தினால் Christoph Schönborn உள்ளிட்ட குழு, இவ்வெள்ளியன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் இம்மடலை வெளியிட்டது.

 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

 

5. செங்கடலில், சவுதி அரேபியா-எகிப்தை இணைக்கும் பாலம்

 

ஏப்.09,2016. சவுதி அரேபியாவையும், எகிப்தையும் இணைக்கும் வகையில், செங்கடலின் குறுக்கே பாலம் கட்டப்படும் என, சவுதி அரேபியாவின் அரசர் சல்மான் அவர்கள் அறிவித்திருக்கிறார்.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய அரசர் சல்மான் அவர்கள், இந்தப் பாலத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் பெருமளவு மேம்படுமென தெரிவித்திருக்கிறார்.

இந்த வரலாற்று நடவடிக்கையின் மூலம் ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய இரண்டு கண்டங்களும் இணைக்கப்படும் எனவும், இரு கண்டங்களுக்கும் இடையிலான வர்த்தகமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மேம்படும் எனவும் அரசர் சல்மான் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பாலத்தைக் கட்டி முடிப்பதற்கு, மூன்று முதல் நான்கு பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என ஏற்கனவே மதிப்பிடப்பட்டிருந்தது. எகிப்தின் அதிபராக 2013ம் ஆண்டில் சிசி அவர்கள் பதவியேற்ற பிறகு, சவுதி அரேபியாவும், பிற வளைகுடா நாடுகளும் கோடிக்கணக்கான டாலர்களை நிதியுதவியாக அளித்துள்ளன.

 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி

 

இது இரக்கத்தின் காலம்...

 

"அண்ணா, உங்க பேர் என்ன, ஜீசஸா?"

 

இளைஞர் ஒருவர், தன் மாத ஊதியத்திலிருந்து ஒரு கணிசமானத் தொகையை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கிவைப்பார். மாதத்தின் இறுதி ஞாயிறன்று, அருகில் உள்ள சேரியில் வாழும் சில சிறுவர்களை அழைத்துக்கொண்டு, நாள் முழுவதும் பல சுற்றுலா இடங்களுக்குச் செல்வார். மாலையில், ஒரு நல்ல உணவகத்திற்குச் சென்று, அனைவரும் சேர்ந்து விருந்து உண்பர். ஒரு நாள் அவர்கள் அவ்விதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அச்சிறுவர்களில் ஒருவர், இளைஞரை நோக்கி, "அண்ணா, உங்க பேர் என்ன, ஜீசஸா?" என்று கேட்டார்.

"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர். (யோவான் 13: 34-35)

இயேசுவின் சீடர்கள் என்று மட்டுமல்ல, இயேசுவின் பிம்பங்கள் என்றும் நம்மை மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ள, இரக்கத்தின் காலம் வாய்ப்பை வழங்குகிறது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 
--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு

SEO/SMO Team

Post a Comment

Powered by Blogger.