Halloween party ideas 2015
.

 

1. திருத்தந்தையின் "அன்பின் மகிழ்வு" திருத்தூது அறிவுரை மடல்

 

2. திருஅவை, குடும்பத்தில் நம்பிக்கை வைத்துள்ளது

 

3. பாப்பிறை பிறரன்பு நிறுவனத்தின் ஆதரவுக்கு திருத்தந்தை நன்றி

 

4. குடும்பங்களின் அன்பின் மகிழ்வு, திருஅவையின் மகிழ்வு

 

5. நமக்கு அடுத்திருப்பவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல

 

6. பீஹாரில் மதுபானத்திற்குத் தடை, திருஅவை வரவேற்பு

 

7. மியான்மாரில் அரசியல் கைதிகள் விடுதலை ஆரம்பம்

 

8. மின்சாரமின்றி தானியங்களைப் பிரித்தெடுக்கும் கருவி

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. திருத்தந்தையின் "அன்பின் மகிழ்வு" திருத்தூது அறிவுரை மடல்

 

ஏப்.08,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள, "Amoris laetitia" அதாவது, "அன்பின் மகிழ்வு" என்ற திருத்தூது அறிவுரை மடல், ஏப்ரல் 8, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளது.

குடும்பங்களை மையப்படுத்தி, வத்திக்கானில், 2014ம் ஆண்டு நடைபெற்ற உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம், 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றம் ஆகிய இரு கூட்டங்களிலும் கலந்து பேசப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கி, திருத்தந்தையின் இத்திருத்தூது மடல் வெளியிடப்பட்டுள்ளது.

குடும்பத்தில் அன்பு என்ற மையக் கருத்தைக் கொண்டுள்ள இம்மடல், 200 பக்கங்களையும், ஒன்பதுக்கு மேற்பட்ட பிரிவுகளையும், 325 பத்திகளையும் உள்ளடக்கியுள்ளது. இம்மடலை, உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி, வியன்னா கர்தினால் Christoph Schönborn ஆகிய இருவரும், பத்திரிகையாளர் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று வெளியிட்டனர். குடும்பம் பற்றிய, 2014, 2015ம் ஆண்டுகளின் மாமன்றங்களில் முக்கிய உறுப்பினராக இயங்கியவர் கர்தினால் Schönborn.

"முன்னுரை"(1-7);"இறைவார்த்தையின் ஒளியில்" (8-30); "குடும்பங்களின் அனுபவங்களும், சவால்களும்"(31-57); "குடும்பத்தின் அழைப்பு"(58-88); "திருமணத்தில் அன்பு"(89-164); "அன்பைப் பலனுள்ளதாக ஆக்குதல்"(165-198); "சில மேய்ப்புப்பணி கூறுகள்"(199-258); "குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியை நோக்கி"(259-290); "பலவீனமான நேரங்களில் வழிநடத்தி, தேர்ந்து தெளிதல்"(291-312); "திருமணம் மற்றும் குடும்பத்தின் ஆன்மீகம்"( 313-325) ஆகிய தலைப்புகளில், ஒன்பதுக்கு மேற்பட்ட பிரிவுகளாக இம்மடல் வழங்கப்பட்டுள்ளது.

உறுதியான குடும்பங்களே, நலமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவை என்றும், அன்பு, மதிப்பு மற்றும் பிறரோடு உறவில் வளர்வதற்கு, பிள்ளைகள், இத்தகைய குடும்பங்களிலே கற்றுக்கொள்வார்கள் என்றும் இம்மடல் கூறுகிறது. 

அதேநேரம், குடும்ப வாழ்வில் எதிர்நோக்கப்படும் பல சவால்களுக்குக் காரணம் காட்டுவதையும், திருஅவையின் போதனைகளுக்கு ஏற்ப வாழாதவர்களைக் குறை கூறுவதையும் தவிர்த்து, அவர்கள்மீது அக்கறை காட்டுமாறு, கத்தோலிக்கரை விண்ணப்பித்துள்ளது இம்மடல்.

குடும்பங்கள் பற்றிய தெளிவான புரிதல் அவசியம் என்றுரைக்கும் திருத்தந்தையின் "அன்பின் மகிழ்வு" மடல், தனி நபர்களுக்குத் தேவைப்படும், தனிப்பட்ட மற்றும் மேய்ப்புப்பணி சார்ந்த அக்கறை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. திருஅவை, குடும்பத்தில் நம்பிக்கை வைத்துள்ளது

 

ஏப்.08,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் "அன்பின் மகிழ்வு" திருத்தூது அறிவுரை மடல் பற்றி, இவ்வெள்ளியன்று, வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் Christoph Schönborn அவர்கள், கடவுள் வகுத்துள்ள திட்டத்திற்கேற்ப அமைந்துள்ள குடும்பத்தில், திருஅவை கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் வெளிப்பாடாக, இம்மடல் உள்ளது என்று தெரிவித்தார்.

குடும்பத்தின் பிரச்சனைகள் பற்றி முதலில் பேசாமல், அதன் சாதனைகள் பற்றி முதலில் நாம் பேச வேண்டும் என்பதே, இம்மடலின் முக்கிய செய்தியெனத் தான் கருதுவதாகத் தெரிவித்தார் கர்தினால் Schönborn.

ஆபத்துகள், நெருக்கடிகள், பிரச்சனைகள் போன்றவற்றில், எல்லா இடங்களிலும், திருஅவை எச்சரிக்கை கொடுப்பதாகவே நோக்கப்படுகிறது, ஆனால், திருமணத்தையும், குடும்பத்தையும் எண்ணற்ற கொடைகளைக் கொண்டதாக முதலில் பாருங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலில் கெஞ்சிக் கேட்டுள்ளார் என்றும் கூறினார் கர்தினால் Schönborn.

முறையான திருமண உறவுகளின்றி வாழ்வோர் அருளடையாளங்களைப் பெறுவதற்கு அனுமதிப்பது குறித்த கருத்துப் பகிர்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பேசியுள்ளார் என்றும் கர்தினால் Christoph Schönborn அவர்கள் தெரிவித்தார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. பாப்பிறை பிறரன்பு நிறுவனத்தின் ஆதரவுக்கு திருத்தந்தை நன்றி

 

ஏப்.08,2016. பாப்பிறை பிறரன்பு நிறுவனம், தனக்கும், உலகளாவியத் திருஅவைக்கும் மிகுந்த தாராளத்துடன் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாப்பிறை பிறரன்பு நிறுவனத்தின் 225 பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இரக்கத்தின் பேருண்மையைத் தியானிக்கும் இந்த யூபிலி ஆண்டில், இப்பிரதிநிதிகள், உரோமைக்கு மேற்கொண்டுள்ள இத்திருப்பயணம்,   இவர்களின் தூய வாழ்வுக்குப் புதிய உந்துதலைக் கொடுக்கட்டும் என்று வாழ்த்தினார்.

இரக்கத்தின் உடல் மற்றும் ஆன்மீகப் பணிகள் வழியாக, எல்லா நிலைகளிலும் இரக்கம் தேவைப்படும் அனைவருக்கும் உதவுவதற்கு, கிறிஸ்துவால் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையரின் திருப்பணிக்கு ஆதரவுதரும் நோக்கத்தில், 1988ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பாப்பிறை பிறரன்பு நிறுவனம், 22 கோடிக்கு மேற்பட்ட டாலர் பெறுமான உதவிகளை வழங்கியுள்ளது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

4. குடும்பங்களின் அன்பின் மகிழ்வு, திருஅவையின் மகிழ்வு

ஏப்.08,2016. "குடும்பங்கள் அனுபவிக்கும் அன்பின் மகிழ்வு, திருஅவையின் மகிழ்வும் ஆகும்" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒன்பது மொழிகளில், @Pontifex  என்ற முகவரியில், வெளியிடப்படும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, இவ்வெள்ளியன்று, குடும்பத்தில் அன்பு பற்றிய, அவரின் திருத்தூது அறிவுரை மடலை மையப்படுத்தியுள்ளது.

மேலும், நவீன அடிமைத்தனமும், மனித வர்த்தகமும் என்ற தலைப்பில், இவ்வியாழனன்று நடைபெற்ற ஐ.நா. கருத்தரங்கிற்கு, ஐ.நா.வுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் பெர்னதித்தோ அவுசா வழியாக, செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இக்காலத்தில் உலகெங்கும், ஓர் அவமானமாகத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நவீன அடிமைத்தனம் மற்றும் மனித வர்த்தகத்தில் சிக்குண்டுள்ள எண்ணற்ற மனிதரின் துயர் துடைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு மேலும் ஒத்துழைப்பு வழங்கப்படுமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித சமுதாயத்திற்கெதிரான இக்குற்றத்தை ஒழிப்பதற்கு, ஐ.நா. உறுப்பு நாடுகளும், பல்வேறு அரசு, தன்னார்வ மற்றும் சமய நிறுவனங்கள் எடுத்துவரும் முயற்சிகளை ஊக்குவிப்பதாகவும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

5. நமக்கு அடுத்திருப்பவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல

 

ஏப்.08,2016. யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அடுத்திருப்பவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல, தங்களின் விசுவாசத்திற்காக நசுக்கப்படுபவர்களுமே என்று, அனைத்துலக கத்தோலிக்க-யூதக் கூட்டமைப்பின் அறிக்கை கூறுகின்றது.

இம்மாதம் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை, போலந்து நாட்டின் வார்சா நகரில் நடைபெற்ற, 23வது அனைத்துலக கத்தோலிக்க-யூதக் கூட்டமைப்பின் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இவ்வுலகில், நமது மிக முக்கிய கவனத்துக்குரியவர்கள் புலம்பெயர்ந்தவர்களே என்று கூறப்பட்டுள்ளது. 

எனினும், ஐரோப்பாவிலும், மற்ற இடங்களிலும், யூத மத விரோதப் போக்கிற்குப் பலியாகும் மக்களும், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களும் நமக்கு அடுத்திருப்பவர்கள்தான் என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.

நோஸ்த்ரா ஏத்தாத்தே (Nostra Aetate) என்ற, கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருஅவைக்குள்ள உறவு பற்றிக் கூறும் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்க அறிக்கை வெளியிடப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு, இவ்வாண்டில் சிறப்பிக்கப்படும்வேளை, வரலாற்றில் முக்கியமான நேரத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது. 

ஒரு மதத்தினர் பிற மதத்தவர் மீது கொள்ளும் முற்சார்பு எண்ணங்கள், துன்புறுத்தப்படும் சமயத்தவர், புலம்பெயர்ந்தோர் ஆகிய தலைப்புகள், இவ்வறிக்கையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

6. பீஹாரில் மதுபானத்திற்குத் தடை, திருஅவை வரவேற்பு

 

ஏப்.08,2016. இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், இந்த ஏப்ரல் மாதத்திலிருந்து, மதுபான உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதை, தலத்திருஅவை அதிகாரிகளும், பெண்ணுரிமை ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த, பாட்னா பேராயர் வில்லியம் டி சூசா அவர்கள், இந்நடவடிக்கை, ஒரு துணிச்சலான முயற்சி மற்றும் குடும்பங்களுக்கு உண்மையிலேயே ஒரு பெரிய ஆசிர்வாதம் என்று கூறினார்.

மதுபானத்திற்கு முழுவதும் தடை விதித்திருப்பது, சமுதாயத்தில், குற்ற நடவடிக்கைகளையும், விபத்துக்களையும் குறைப்பதோடு, குடும்ப மற்றும் சமூக வாழ்வு, சிறப்பாக அமைவதற்கும் வழி அமைத்துள்ளது என்றும் கூறினார் பேராயர் வில்லியம் டி சூசா.

பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அவர்களின் அரசு கொண்டு வந்துள்ள மதுபானத் தடை, இம்மாதம் 5ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

இதனால் அரசுக்கு, ஆண்டு வருவாயில், ஏறக்குறைய 75 கோடியே 20 இலட்சம் டாலர் இழப்பு ஏற்படும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

எனினும், குடும்பங்களில், வறுமை, வன்முறை மற்றும் நச்சரிப்புக்களுக்குக் காரணமாகும் மதுபானங்களுக்கு முழுவதுமாகத் தடை விதித்திருப்பது, அம்மாநிலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்று கூறப்படுகின்றது.

 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

 

7. மியான்மாரில் அரசியல் கைதிகள் விடுதலை ஆரம்பம்

 

ஏப்.08,2016. மியான்மாரில் அடுத்த வாரத்தில் சிறப்பிக்கப்படும் புத்தாண்டை முன்னிட்டு, ஏறக்குறைய 500 அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள, அந்நாட்டின் புதிய அரசு, இவ்வெள்ளியன்று அறுபதுக்கு மேற்பட்ட மாணவர் கைதிகளை விடுதலை செய்துள்ளது.

சிறையிலுள்ள மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் கைதிகளுக்கு விடுதலை வழங்குவது குறித்து, இவ்வியாழனன்று அறிவித்த, அந்நாட்டின் தேசிய சனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூ சி அவர்கள், அரசியல் காரணங்களுக்காகச் சிறையிலுள்ள கைதிகளுக்கு இவ்விடுதலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.

மியான்மார் சிறைகளில், ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்ட நூறு அரசியல் கைதிகள் உள்ளனர் என்றும், மேலும், ஏறக்குறைய 400 அரசியல் கைதிகளின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும், அரசியல் கைதிகளுக்கு உதவும் கழகம் அறிவித்துள்ளது. 

மியான்மாரில் புதிதாக உருவாக்கப்பட்ட அரச ஆலோசகர் என்ற பதவியை ஏற்றுக்கொண்டதற்குப் பின்னர், ஆங் சான் சூ சி அவர்கள் வழங்கிய முதல் உரையில், அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, தனது நிர்வாகத்தின் முன்னுரிமைகளில் ஒன்று என்று குறிப்பிட்டார்.

மியான்மாரின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர்கள், அரசியல் காரணங்களுக்காக பலரைக் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளனர்.

 

ஆதாரம் : Agencies/ வத்திக்கான் வானொலி

 

8. மின்சாரமின்றி தானியங்களைப் பிரித்தெடுக்கும் கருவி

 

ஏப்.08,2016. சிவகாசி S.I.P.T. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மின்சாரமின்றி தானியங்களைப் பிரித்தெடுக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர்.

அரவைக்கு முன்பு அரிசி, பருப்பு, நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் புழுதி, குப்பை மற்றும் கற்களை, மின்சார உதவியின்றி பிரித்தெடுக்கும் புதிய கருவியை சிவகாசி S.I.P.T. கல்லூரி மாணவர்களான ராஜ்கரண், கருப்பசாமி, பால முருகன், முனீஸ்வரன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

இக்கருவி கூம்பு வடிவில், ஏணி விளையாட்டுப் பொருள்போல் உள்ளது. விவசாயப் பொருட்களை கருவியின் மேலே, புனலில் கொட்ட, கீழேயுள்ள வளைவுச்சுருள் பாதை வழியே கீழே விழ ஆரம்பிக்கும்.

வளைவில் வரும்போது ஏற்படும் மைய விலக்கு விசையினால் எடை மிகுந்த பொருட்கள் வெளிவட்டப் பாதையிலும், எடை குறைந்த பொருட்கள் உள்வட்டப் பாதையிலும் வந்து, கீழே தனித் தனி பெட்டிகளில் விழும். மின்சாரம் இல்லாமல் எளிதாக, களத்து மேட்டிலேயே, அனைத்து விவசாயப் பொருட்களையும் தரம் பிரித்து ஏற்றுமதித் தரத்துடன் அனுப்ப முடியும்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், இந்தக் கருவியானது, centrifugal force (மைய விலக்கு) விசை, புவிஈர்ப்பு விசையினாலும் இயங்கக் கூடியது. இதை இயக்க மின்சாரம் தேவையில்லை. இதன்மூலம், நவதானியம் மற்றும் எடை குறைந்த பொருட்களைத் தரம் பிரிக்க முடியும்.

எளிதில் குப்பை மற்றும் கற்களை அகற்றவும் முடியும். இக்கருவி கோவையில் நடந்த மாநில அளவிலான "பிராஜக்ட் ஒர்க் ஸ்பாப்'' போட்டியில் பங்கேற்று முதல் பரிசு, பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசும் பெற்றது என்று மாணவர்கள் கூறினர்.

 

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி

 

 

இது இரக்கத்தின் காலம்...

 

உண்மையான நல்ல வாழ்க்கை...

 

ஜென் துறவி ஒருவர், தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவர்களிடம், "ஒருவருடைய நல்ல வாழ்க்கையின் ஆயுள்காலம் என்ன?" என்று கேட்டார். அதற்குச் சீடர்களுள் ஒருவர், "வேறு என்ன, நூறு வயதுதான்" என்று கூறினார். குருவோ, "இல்லை" என்றார். "அப்படியெனில், 90 வயது" என்று மற்றவர் கூறினார். அதற்கும் "இல்லை" என்று குரு கூறினார். அப்படியே சீடர்கள், 80? 70? என்று சொல்ல, அதற்கும் மறுத்தார். பின் அவர்கள் பொறுமையிழந்து, "வேறு என்னவென்று நீங்களே சொல்லுங்கள்" என்று கூறினர். அதற்கு குரு, "ஒரு வினாடிதான்" என்று கூறினார். "அது எப்படி ஒரு வினாடியில் நல்ல வாழ்க்கையை வாழ்ந்ததாகச் சொல்ல முடியும்?" என்று அனைவரும் கேட்டனர். பின் குரு, "நல்ல வாழ்க்கை என்பது ஒரு வினாடியில்தான் தெரியும். எப்படியெனில் ஒவ்வொரு வினாடியையும், வாழ்க்கையின் தொடக்கமாக நினைக்க வேண்டும். மேலும், அதையே முடிவு என்றும் நினைக்க வேண்டும். அதிலும், அந்த வினாடியில் எந்த ஒரு பழையதையோ அல்லது வருங்காலத்தையோ நினைத்து வாழக் கூடாது. ஒரு வினாடி பிறக்கிறதென்றால், அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அதுதான் உண்மையான நல்ல வாழ்க்கை" என்று சீடர்களுக்குச் சொல்லி, உண்மையான வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிய வைத்தார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 




--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு

SEO/SMO Team

Post a Comment

Powered by Blogger.