Halloween party ideas 2015
.

 

1. கிறிஸ்தவர்கள் இணைந்து, கடவுளன்புக்குச் சான்று பகர வேண்டும்

 

2. திருத்தந்தை, குரோவேஷியப் பிரதமர் சந்திப்பு

 

3. இக்கால மறைசாட்சிகள் திருஅவையை முன்னோக்கி நடத்துகின்றனர்

 

4. ஏப்ரல் 16, லெஸ்போஸ் தீவுக்கு திருத்தந்தையின் பயணம்

 

5. மறைசாட்சிகள், வன்முறைக்கு எதிரான அன்பு ஆயுதங்கள்

 

6. திருத்தந்தை - விளையாட்டு, ஓர் உலகளாவிய மொழி

 

7. அன்றாட வாழ்வு முறையைச் சீர்தூக்கிப் பார்க்க WHO அழைப்பு

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. கிறிஸ்தவர்கள் இணைந்து, கடவுளன்புக்குச் சான்று பகர வேண்டும்

 

ஏப்.07,2016. அதிகத் தீமையால் துன்பத்திற்குள்ளாகியுள்ள இன்றைய உலகில், கிறிஸ்துவின் உயிர்ப்பின் ஒளியில், கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து, கடவுளன்புக்குச் சான்று பகர வேண்டியது, எக்காலத்தையும்விட இக்காலத்தில், மிகவும் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

உலக மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபையின் ஆலோசனைக் குழுவினரை, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அச்சபையினர், உரோமையில் தொடங்கியுள்ள, மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ ஒன்றிப்பு அலுவலகத்திற்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

கத்தோலிக்கரும், மெத்தடிஸ்ட் சபையினரும் ஒருவரையொருவர் சந்திக்கவும், ஒருவர் ஒருவரின் விசுவாசத்தைப் பாராட்டி அதில் வளர்வதற்கும், இந்த அலுவலகம் உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்விரு சபையினரும் உரையாடலைத் தொடங்கி ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இச்சபையினர் இணைந்து தயாரித்துவரும், "தூய வாழ்வுக்கான அழைப்பு" என்ற தலைப்பிலான ஏடு பற்றியும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

தூய வாழ்வைப் புரிந்துகொண்டு வாழ்வது எப்படி என்பதை, கத்தோலிக்கரும், மெத்தடிஸ்ட் சபையினரும், ஒருவர் மற்றவரிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் கூறிய திருத்தந்தை, எல்லாவற்றிலும் நாம் ஒரே மாதிரி சிந்திக்காவிட்டாலும், நாம் ஒரே மாதிரி அன்பு கூரலாம் என்று, John Wesley அவர்கள் உரோமன் கத்தோலிக்கருக்கு எழுதிய கடிதத்தில் சொல்லியிருக்கின்றதையும் குறிப்பிட்டார். 

மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ ஒன்றிப்பு அலுவலகம், இப்புதனன்று உரோம் நகரில் திறக்கப்பட்டுள்ளது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. திருத்தந்தை, குரோவேஷியப் பிரதமர் சந்திப்பு

 

ஏப்ரல்,07,2016. குரோவேஷிய நாட்டின் பிரதமர் Tihomir Oreskovic அவர்களை, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையைத் தனியே சந்தித்துப் பேசிய பின்னர், தனது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளையும் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்து, பரிசுப் பொருளையும் அளித்தார் குரோவேஷிய பிரதமர் Oreskovic. திருத்தந்தையும், "Laudato si'", "Evangelii gaudium" ஆகிய தனது இரு திருத்தூது மடல்களையும் பிரதமருக்கு அளித்தார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கிடையே உறவுகளின் நேரடிச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri ஆகிய இருவரையும் சந்தித்தார் பிரதமர் Oreskovic.

திருப்பீடத்திற்கும், குரோவேஷிய நாட்டிற்கும் இடையே தொடர்ந்து நிலவும் நல்லுறவுகள், குரோவேஷியாவில் வாழும் போஸ்னிய-எர்செகொவின சிறுபான்மை மக்களின் நிலைமை, அருளாளர் Alojzije Stepinac அவர்கள் மீது குரோவேஷிய மக்கள் கொண்டுள்ள பக்தி(1937ம் ஆண்டு முதல் 1960ம் ஆண்டுவரை Zagreb பேராயராகப் பணியாற்றிய அருளாளர் Alojzije Stepinac அவர்கள், கம்யூனிச அரசால் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டவர் மற்றும் 1998ம் ஆண்டில் இவரை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்) போன்றவை பற்றி, இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து புலம்பெயரும் மக்களின் நிலைமை, உலகின் பல பகுதிகளில் இடம்பெறும் போர்கள், குடிமக்கள் சமுதாயத்தின் அடித்தளத்தையே பலவீனப்படுத்த முயற்சிக்கும் நடவடிக்கைகள் போன்ற பன்னாட்டு விவகாரங்கள் குறித்தும் இத்தலைவர்கள் கலந்துரையாடினர் என்றும் கூறியது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. இக்கால மறைசாட்சிகள் திருஅவையை முன்னோக்கி நடத்துகின்றனர்

 

ஏப்ரல்,07,2016. சாதாரண வாழ்வின் புனிதர்களும், இக்கால மறைசாட்சிகளும் திருஅவையை முன்னோக்கி நடத்துகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று கூறினார்.

உயிர்த்த கிறிஸ்துவுக்கு உறுதியுடனும், துணிச்சலுடனும் சான்று பகர்வதன் வழியாக, இதை இவர்கள் ஆற்றுகின்றனர் என்றும், தூய ஆவியாரின் வல்லமையாலே இதனைச் செய்கின்றனர் என்றும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலையில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முடமான மனிதரைக் குணப்படுத்திய பின்னர், யூதத் தலைமைச் சங்கத்தின் முன்னர் தூய பேதுரு துணிச்சலுடன் பேசிய நிகழ்வை விளக்கும் இத்திருப்பலியின் முதல் வாசகத்தை (தி.ப.5,27-33) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட, கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும் என்று தூய பேதுரு துணிச்சலுடன் கூறியது, அவர், தனது சான்று வாழ்வில் உறுதியாய் இருந்ததைக் காட்டுகின்றது என்று கூறினார்.

தூய ஆவியாரின் உதவியின்றி, நம்மால் சான்று பகர முடியாது என்றும், உண்மையான சான்று வழங்குவதன் வழியாக, கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைச் சரியான பாதையில் அமைக்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

தான் சொல்வதிலும், செயல்படுவதிலும், பெற்றுக்கொண்டதிலும் உறுதியாய் இருக்கும் மனிதரே உண்மையான சான்று என்றும், இதுவே கிறிஸ்தவத் துணிச்சல் என்றும்,   இக்கால மறைசாட்சிகளின் சான்று இதுவே என்றும் கூறினார் திருத்தந்தை.

வரலாற்றின் இக்கட்டான நேரங்களில், நாட்டிற்கு, துணிச்சல்மிக்க ஹீரோக்கள் தேவைப்படுகின்றனர் என்று சொல்லப்படுவதை கேள்விப்படுகிறோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலத்தில் திருஅவைக்குச் சான்று பகர்பவர்களும், மறைசாட்சிகளும் தேவை என்று மறையுரையில் கூறினார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

4. ஏப்ரல் 16, லெஸ்போஸ் தீவுக்கு திருத்தந்தையின் பயணம்

 

ஏப்.07,2016. புலம்பெயர்ந்தோர் ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்துள்ள கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் (Lesbos) தீவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 16, சனிக்கிழமையன்று செல்வார் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெஸ்போஸ் தீவுக்குச் செல்லவிருப்பது குறித்து, இவ்வியாழனன்று அறிவித்த, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, கிரேக்க நாட்டு அரசுத்தலைவர் Prokopis Pavlopoulos ஆகிய இருவரின் அழைப்பின்பேரில் செல்கிறார் என்று அறிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவரும், ஏத்தென்ஸ் பேராயருமான 2ம் Hieronimus ஆகிய மூவரும், இம்மாதம் 16, சனிக்கிழமையன்று, லெஸ்போஸ் தீவிலுள்ள, புலம்பெயர்ந்த மக்களைச் சந்திப்பார்கள் என்றும், அருள்பணி லொம்பார்தி அவர்கள் தெரிவித்தார்.

லெஸ்போஸ் தீவில் துன்புறும், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்தும் நோக்கத்தில், இக்கிறிஸ்தவத் தலைவர்களின் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

லெஸ்போஸ் தீவு, துருக்கி நாட்டுக் கடற்பரப்பில் அமைந்துள்ள கிரேக்க நாட்டுத் தீவாகும். அண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், துருக்கி நாட்டிற்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி, கிரேக்க நாட்டிற்கு வரும் புலம்பெயர்ந்தவர்கள் துருக்கிக்கு அனுப்பப்பட வேண்டும்.  

98 விழுக்காட்டு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபை கிறிஸ்தவர்கள் வாழ்கின்ற கிரேக்க நாட்டின் ஏத்தென்ஸ் நகருக்கு, 2001ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர், அந்நாட்டுக்கு ஒரு திருத்தந்தை சென்றது அதுவே முதன்முறையாக அமைந்தது. அடுத்து, 2016ம் ஆண்டு, ஏப்ரல் 16ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவுக்குச் செல்கிறார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

5. மறைசாட்சிகள், வன்முறைக்கு எதிரான அன்பு ஆயுதங்கள்

 

ஏப்.07,2016. அல்ஜீரிய நாட்டின் Tibhirineல் 1996ம் ஆண்டில் கடத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட, ஏழு கத்தோலிக்க டிராப்பிஸ்ட் துறவியர் பற்றிய ப்ரெஞ்ச் மொழி நூலுக்கு, அணிந்துரை எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த ஏழு துறவியரும், கொலை செய்யப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகியுள்ள இவ்வேளையில், நாம் கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நம் அன்றாட வாழ்வில், எளிமை மற்றும் இரக்கத்தின் அடையாளங்களாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 6, இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ள, L'he'ritage என்ற நூலில் இவ்வாறு எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நம் உலகைத் துன்புறுத்தும் தீமையோடு போராடுவதற்கு, இவ்வாறு வாழ்வதே சிறந்தது என்றும் எழுதியுள்ளார்.

இத்துறவிகள், வன்முறையைக் கண்டு அஞ்சி ஓடாமல், அன்பின் ஆயுதங்களோடும், சமய வேறுபாடின்றி, உடன்பிறப்பு உணர்வோடு அனைவரையும் வரவேற்பதன் வழியாகவும், குழு செபத்தாலும் வாழ்ந்தனர் என்றும் எழுதியுள்ளார் திருத்தந்தை.

Tibhirineவில், இந்த மறைசாட்சித் துறவிகள், முஸ்லிம்களுடன் உரையாடல் நடத்தி அமைதியிலும், நல்லிணக்கத்திலும் வாழ்ந்து வந்தனர் என்றும், கிறிஸ்தவர்களாகிய நாமும், எல்லாரோடும், ஆன்மீக நட்புறவு கொண்டு, வன்முறையை வெல்லும் சகோதரத்துவ உரையாடலில் வாழ வேண்டுமெனவும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Christophe Henning என்பவர் எழுதிய 180 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை 14.90 யூரோக்களாகும்.

 

ஆதாரம் : Oss.Rom. / வத்திக்கான் வானொலி

 

6. திருத்தந்தை - விளையாட்டு, ஓர் உலகளாவிய மொழி

 

ஏப்.07,2016. அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் விளையாட்டு, ஓர் உலகளாவிய மொழி என்றும், மக்கள் சந்திக்கவும், சண்டைகள் ஒழிக்கப்படவும் இது உதவும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இப்புதனன்று ஐ.நா. கடைப்பிடித்த, வளர்ச்சி மற்றும் அமைதிக்கான மூன்றாவது அனைத்துலக விளையாட்டு நாளுக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, இப்புதன் மறைக்கல்வியுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"உறுதியான வளர்ச்சித்திட்ட இலக்குகளுக்காக விளையாடுவோம்" என்ற தலைப்பில், ஐ.நா. விளையாட்டு அலுவலகம் இந்த உலக நாளைச் சிறப்பித்தது.  

மேலும், இந்த உலக நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், 2015ம் ஆண்டுக்குப் பின்னான ஐ.நா.வின் புதிய வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதற்கு, விளையாட்டு முக்கிய அங்கம் வகிக்கின்றது என்று கூறியுள்ளார்.

மனிதக் குடும்பத்திலுள்ள ஒவ்வோர் உறுப்பினரின் அடிப்படை உரிமைகள், சமத்துவம் மற்றும் மாண்பை ஊக்குவிப்பதற்கு, விளையாட்டு, தனித்துவமிக்க மற்றும் சக்திவாய்ந்த கருவியாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

 

7. அன்றாட வாழ்வு முறையைச் சீர்தூக்கிப் பார்க்க WHO அழைப்பு

 

ஏப்.07,2016. நீரிழிவு நோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை, 1980ம் ஆண்டிலிருந்து நான்கு மடங்காகியுள்ளது என்றும், இவர்களில் அதிகமான பேர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர் என்றும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

ஏப்ரல் 7, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக நலவாழ்வு தினத்தை முன்னிட்டு இவ்வாறு தெரிவித்துள்ள இந்நிறுவனம், உலகளவில் நீரிழிவு நோய் குறித்த அறிக்கையை வெளியிட்டு, மக்கள், தங்களின் அன்றாட வாழ்வு முறையைச் சீர்தூக்கிப் பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

உலகில் 42 கோடியே, 20 இலட்சம் வயதுவந்தவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்நோயாளர்களின் எண்ணிக்கை, 1980ம் ஆண்டிலிருந்து 4.7 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

2012ம் ஆண்டில் நீரிழிவு நோயின் நேரடிப் பாதிப்பால் மட்டும் 15 இலட்சம் பேர் இறந்துள்ளனர். இவர்களில் எண்பது விழுக்காட்டினர் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

 

இது இரக்கத்தின் காலம்...

 

எளியமனம் பிறர் மகிழ்வில் கவனம் செலுத்தும்

 

யமோரா தெஸ்ஸோ (Yamora Tessho) என்ற ஜென் குரு, அந்த நாட்டு அரசருக்கும் ஆசிரியராக இருந்தார். அவருடைய வீடு ஒரு சத்திரம் போலத்தான் இருக்கும். அவர் எப்பொழுதும் வறுமை நிலையிலேயே இருந்தார். அவரிடம் ஓர் ஆடைக்கு மாற்று ஆடைகூட இல்லை. அந்த அளவுக்கு அவரது வாழ்வு எளிமையாக இருந்தது. இந்த ஜென் குருவின் வறுமை நிலையைக் கண்ட அரசர், அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து, புதிய ஆடைகளை வாங்கிக் கொள்ளும்படிக் கூறினார். ஆனால், அடுத்த முறை, யமோரா அவர்கள் அரசரிடம் சென்றபோது, தனது பழைய ஆடையையே உடுத்தியிருந்தார். இதைப் பார்த்த அரசர், குருவே, புதிய ஆடை என்னவாயிற்று?" என்று கேட்டார். அதற்கு யமோரா அவர்கள், "அரசே, உங்கள் குழந்தைகளுக்கு நான் புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்துவிட்டேன்" என்றார்.

அன்பர்களே, ஓர் எளிய மனம் பிறர் மகிழ்விலேதான் குறியாக இருக்கும். அது ஒருபோதும் தன்னைப் பற்றிச் சிந்திக்காது. இது இரக்கத்தின் காலம்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 
--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு

SEO/SMO Team

Post a Comment

Powered by Blogger.