Halloween party ideas 2015
.

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாநிலம் தழுவிய ஜாதி-தீண்டாமை ஒழிப்பு பரப்புரை பயண முன்னேற்பாட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள தோழர்களை சந்தித்து நிகழ்ச்சிகளை திட்டமிடுதல், பொருளாதாரம் திரட்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்துவந்தோம். அதன் ஒரு பகுதியாக நான், தோழர்களுடன் அப்போதைய பெதிக மாவட்ட அமைப்பாளர் தோழர் பழனியின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி வட்டம், அலேசிபம் ஊராட்சி, பாலேபுரம் கிராமத்திற்கு சென்றிருந்தேன். ஒரு சாதாரண மண் சுவரால் ஆன கூரை வீடு. உட்காருவதற்கு நாற்காலி கூட இல்லை. உள்ளே சென்றவுடன் தனது மனைவியையும், மகனையும் அறிமுகம் செய்துவைத்தார். அவரது மனைவி ஒரு கோரைப்பாயை எடுத்து தரையில் விரித்து அமரச் செய்தார். அவரது மகனும், மனைவியும் எங்களோடு உரையாடியபோது தோழர் என்றே அழைத்தனர். 

அவர் குடும்பத்தினரிடம் சிறிது நேரம் உரையாடிய பின், தோழர் பழனியிடம் ‘வரும் ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்ததினத்தில் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திலிருந்து ஒரு பிரச்சாரப் பயணம் திட்டமிட்டுள்ளோம். மாநிலம் தழுவிய அளவில் நடத்த வேண்டும் அதற்கான பொருளாதாரத்துக்கு ஏதாவது உதவுங்கள் என்று சொன்னவுடன் அந்த கூரைவிட்டு மனிதன் சொன்ன தொகை மற்ற மாவட்டத் தோழர்கள் ஒப்புக்கொண்டதை விட அதிகம். இதில் நான் குறிப்பிட விரும்புவது அவர் வாழ்க்கை ஏழ்மையானது அல்ல. ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டின் மிக எளிமையான வாழ்க்கை. மேற்கொண்டு பேச்சு அவருடைய போராட்ட வாழ்க்கை நோக்கி நகர்ந்தது. அவருடைய நக்சல்பாரி வாழ்க்கை அனுபவங்கள், ஆயுதப்போராட்டங்கள், சிறை வாழ்க்கை, பெதிகவின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் என்று நீண்டது. இடையில் வாங்க தோழர் நம் தோட்டத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று வெளியில் அழைத்துச் சென்றார். வரப்பில் நடந்து கொண்டே பேச்சைத் தொடர்ந்தோம். அப்போது உள்ளூர் பிரச்சனைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். அவ்வப்போது பெரியார் முழக்கம் (பெதிக வார ஏடு) மூலம் அங்கு நடக்கும் பிரச்சனைகள் பற்றி அறிந்திருந்தாலும் அவர் பல்வேறு செய்திகளை தனிப்பட்ட முறையில் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது தீர்க்கமாக ஒரு செய்தியை சிறிதும் சலனமின்றி அவரின் ட்ரேட்மார்க் புன்னகையுடன் கூறினார்.

அது என்ன தெரியுமா?
இந்த தளி ராமச்சந்திரன் என்னை உயிரோடு விடமாட்டார். விரைவில் எப்படியும் என்னை கொன்றுவிடுவார். என்னிடம் இளைஞர்கள் இருக்கிறார்கள் தோழர். ஆனால் எனக்கு பிறகு இவர்களை வழிநடத்த ஆள் இல்லாமல் போய்விடக்கூடாது. வேகமாக ஏதாவது ஒரு ஏற்பாடு செய்யுங்கள் தோழர் என்றார். அதாவது ஒரு முழுநேர பணியாளரை அந்தப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள் என்றார். ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்த நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மனிதன் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று எப்படி சிரித்துக் கொண்டே சொல்ல முடிகிறது. அதுமட்டுமல்ல தான் இறப்பதைப் பற்றிக் கவலையில்லை ஆனால் தனக்கு பிறகு இங்குள்ள இளைஞர்களை கொள்கை ரீதியாக வழிநடத்த ஒரு ஆள் வேண்டும் என்கிறாரே என்று பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்ட நேரம் பேசியபின் உணவு அருந்திவிட்டு, அவரும் அவருடைய மகன் வாஞ்சிநாதனும் ஒசூர் பிரதான சாலை வரை வந்து புன்னகையுடன் வழியனுப்பி வைத்தனர். அன்றுதான் நான் அவரை இறுதியாகப் பார்த்தது.
ஜூலை 5 காலை 6 லிருந்து 6:30 மணி இருக்கும் என்னுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது. தோழர் ஒசூர் பழனி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை தெரிவிக்கிறார்கள். அதுவும் அவர் மகன் வாஞ்சிநாதன் கண்முன்னேயே. சாதரண கொலை அல்ல அது. 

துப்பாக்கியால் சுட்டு கீழே விழுந்தபின் தலையை தனியாக வெட்டியெடுத்து கிட்டத்தட்ட 700 மீட்டர் தொலைவில் காரில் அமர்ந்திருந்த தளி இராமச்சந்திரன் மற்றும் அவருடைய மாமனார் லகுமய்யாவிடம் காட்டிவிட்டு தலையை தூக்கி எறிந்துவிட்டு சென்றனர். தோழர் பழனி மீது தூப்பாக்கி குண்டு பாய்ந்ததும், ‘வாஞ்சி ஓடிடுடா வாஞ்சி ஓடிடு’ என்று அவர் கத்தியிருக்கிறார். வாஞ்சிநாதனையும் அந்த கொலைகாரர்கள் துரத்தியிருக்கிறார்கள். எப்படியோ வாஞ்சி வேகமாக ஓடி தப்பித்துவிட்டார். சிறிது தூரம் ஓடி ஒரு மறைவான இடத்தில் நின்று பார்த்தபோதுதான் தோழர் பழனியின் தலைவெட்டப்பட்டதையும், அதை காரில் அமர்ந்திருந்த ரவுடி ராமசந்திரன் உள்ளிட்டவர்களுக்கு காட்டப்பட்டதையும் பார்த்திருக்கிறார் வாஞ்சி. நாங்கள் எந்த வரப்பில் நின்று உரையாடிக் கொண்டிருந்தோமோ, எந்த இடத்தில் நின்றுகொண்டு தீர்க்கதரிசனமாக என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று புன்னகையுடன் சொன்னாரோ, அதே இடத்தில் எங்கள் அன்பு தோழர் பழனியை தலை தனியாக, உடல் தனியாகக் கண்டோம்.

இந்த தளி ராமச்சந்திரன் வெறும் ரவுடி மட்டுமல்ல. அரசாங்கத்தை ஏமாற்றி அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு செயல்படும் கிரனைட் கொள்ளைக்காரன். சிறு விவசாயிகளின் நிலத்தை பறித்து ஏழை மக்களை விவசாயக் கூலிகளாக்கியவர். தனக்கு எதிராக எவரையும் அரசியல் செய்யவிடாத ஜனநாயக விரோதி. தனது அரசியல் எதிரிகளை தாக்கி அச்சுறுத்துவது, பச்சை படுகொலைகள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் வன்முறையாளன். இவரால் கொல்லப்பட்டவர் பழனி மட்டுமல்ல. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தோழர் ஒருவரை நடு ஊருக்குள் வைத்து பட்டப்பகலில் தளி ராமச்சந்திரன் ஆட்கள் கொலை செய்தனர் என்று தோழர் பழனியே என்னிடம் கூறியுள்ளார். இதுபோன்ற எண்ணற்ற கொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் காரணமானவர். இவர் மீது அரசை ஏமாற்றி கிரனைட் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கு, நில அபகரிப்பு வழக்கு, தோழர் பழனி கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. தோழர் பழனி கொலை வழக்கில் மட்டும் இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் 10 மாத காலம் சிறையில் இருந்தார். நான் எழுதுவதில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்று அந்தப்பகுதி மக்களிடம் கேட்டுப் பாருங்கள் அல்லது தோழர் பழனி கொலைக்கு பின்பு அமைப்புசாராத சில உண்மை அறியும் குழுக்கள் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். அவற்றைப் படித்துப் பாருங்கள். தேர்தலில் கூட போட்டியிடாத இயக்கத்தை சேர்ந்த தோழர் பழனியை தன் அராகஜகத்தை எதிர்த்து மக்கள் பக்கம் நிற்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக மிக வன்மமான முறையில் கொலை செய்திருக்கிறார் என்றால் இந்த தளி ராமச்சந்திரன் எப்படிபட்டவராக இருப்பார் என்று எண்ணிப்பாருங்கள்.

மேற்கூறிய தளி ராமச்சந்திரன் யார் தெரியுமா தோழர்களே?
மாசற்ற மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் (தற்போதை சட்டமன்ற உறுப்பினரும் கூட). ஊழல், லஞ்சம் இல்லாத வெளிப்படையான மக்களாட்சியை வழங்கப்போகும் மக்கள் நலக்கூட்டணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் அதை மக்கள் நலக்கூட்டணியால் மட்டுமே வழங்க முடியும். ஏற்றுக்கொள்ளுங்கள் மக்களே! நன்றி!!

-- Whatsapp பகிர்வு

Post a Comment

Powered by Blogger.