Halloween party ideas 2015
.

#தி.க க்காரர் இரத்தினசாமி, இதுதான் பிற அமைப்பினர் மற்றும் அரசியல்வாதிகளிடம் இவருக்கு ஈரோட்டில் பெயர். தன் சிறு வயதில் சித்தப்பாவுடன் பெரியார் பேசும் கூட்டங்களுக்கு சென்று தூரத்தில் இருந்து, "அதோ  அங்க பேசிட்டிருக்கார் பார்.அவர்தான் பெரியார் என்று சித்தப்பாவால் பெரியாரை அறிமுகமாக்கிக் கொண்டவர்..

#வாலிப முறுக்கு இளைஞனாக இருக்கும் போதே பெரியார் கொள்கையில் பிடிப்பு ஏற்பட்டு 60 ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் இன்று வரை கொள்கைப்படி வாழ நினைப்பவர். வாழ்பவர். அண்ணனது துணைவியாரும் அப்படியே.. இன்னும் சொல்லப்போனால் இவர் இவ்வளவு தூரம் பெரியார் அமைப்பில் ஈடுபாட்டுடன் இருக்க பிரேமா அக்காவும் ஒரு காரணம்..

#நத்தக்காடையூரில் ஒரு லேத் பட்டறை வைத்து வாழ்வைத் தொடங்கியவர். அப்பகுதியில் திகவினர் பலரை உருவாக்கியவர். நத்தக்காடையூர் அருகிலுள்ள பழைய கோட்டை பட்டக்காரர் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர்.(இதற்குக் காரணம் பழைய கோட்டை பட்டக்காரர் அர்ச்சுணன் அவர்கள் தான் திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளராக இருந்தவர்.அதற்கு பிறகு அவர்கள் குடும்பத்தில் யாரும் இயக்க ஈடுபாடு இல்லை என்றாலும் கூட., தன் குடும்பத்தில் பெரியார் கொள்கையைப் பின்பற்றிய ஒருவரைப் போல இவரும் உள்ளாரே என்ற ஈடுபாடு)

#1984 ஆம் ஆண்டு சென்னிமலை முருகன் கோவிலில்,1300 படிக்கட்டுகள் ஏறி ஒரு மாட்டு வண்டி மேலே செல்கிறது என்று "பக்திப் பரவசம் "கிளம்பிய போது, மாடு மேலே செல்ல கடவுள் சக்தி தேவையில்லை. உடல் வலு இருந்தால் போதும் என்று கூறி, பழையகோட்டை பட்டக்காரர் தோட்டத்தில் இருந்து காளை மாட்டை வாங்கி, அதற்கு பயிற்சி கொடுத்து, சென்னிமலையில்  மாட்டை மலையேற்ற அனுமதி கிடைக்காததால், பெருமாள் மலையில் ஏற்றி, உண்மையை நிரூபித்தவர்.

#தன் ஒரே மகள் ஒருவரை விரும்பிய போது, சாதி  மறுப்புத் திருமணம் செய்து வைத்தவர்..

#திராவிடர் கழகத்தில் ஈரோடு மாவட்டத் தலைவராகவும், மாவட்டச் செயலாளராகவும் ஏறத்தாழ 30 ஆண்டுகள் பணியாற்றியவர்..

#ஈழப் போராட்டத்தில் தீவிர ஆதரவாளர். "தடா சட்டத்தில் " தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக கைது செய்யப்பட்டவர்.

#வேலூர் சிறையில் இருந்து 46 புலிகள் தப்பிய வழக்கில் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு கழகத் தலைவர்  தோழர்.கொளத்தூர் மணி அவர்களுடன் வேலூர் சிறையில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்.

#புலிகளுக்கு உதவியதாக மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறை தண்டனை அனுபவித்தவர்.

#தான் வாழும் தற்போதைய பகுதிக்கு எந்தப் பெயரும் இல்லாத நிலையில் அதற்கு "யாழ் நகர்" என்று பெயர் சூட்டியவர்.இன்று திண்டலில் அந்தப் பெயர் பிரபலம்.

#ஈழப்போரில் குண்டடிபட்ட போராளிகளை எல்லாம், ஈரோடு மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்தவர்.

#பெரியார் கொள்கை என்பது, வெறும் எழுத்துக் கொள்கையல்ல. அது ஒரு வாழ்வியல் முறை என்பதை தனக்கும், இளைஞர்களாகிய எங்களுக்கும் அடிக்கடி வலியுறுத்திக் கொண்டே இருப்பவர்.

#நமது இயக்கத்தில் இருப்பவர்கள் கொள்கையில் கூட சற்று முன்னபின்ன இருந்தாலும் போகட்டும்.ஆனால் நாணயத்திலும் ஒழுக்கத்திலும் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்.

#கடுமையான உழைப்பாளி.தனது "பெரியார் ஜே.சி.பி " பணிமனைக்கு சென்றால் தொழிலாளியாக மாறி உழைப்பவர்.

#தீவிர களப்பணியாளர்.தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பயிற்சி வகுப்புகள்  , முழக்கம் சந்தா சேர்ப்பு என்று இவர் எங்களை விரட்டும் போது இளைஞர்கள் சற்று சோர்ந்துதான் போவோம்.ஆனால் இவர் சோர்வடைய மாட்டார்.

#என்னை உபயோகித்துக் கொள்ளுங்கள்.என்னைத் தொந்தரவு செய்யுங்கள். என்பது தான் இவர் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை..

#சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர்.டைமிங் ஜோக்கடிப்பதில் வல்லவர்.

#பணவசதி வாய்ப்புகள் இருந்தாலும் கூட எளிமையாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்.வாழ்பவர்.

#சமரசமில்லாதவர்.கொள்கை சமரசம் கூடவே கூடாது என்பவர்.

#ஜாதி ஒழிப்புக் களத்தில் முண்ணனியில் நிற்பவர். நாம் பிரச்சாரம் செய்வதை விடவும் மக்களுக்கான களப்பணியில் முண்ணனியில் நிற்க வேண்டும் என்பவர்.

#கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஈரோடு ஆளுங்கட்சி துணைமேயருடன் நேருக்கு நேர் நின்று வாக்குவாதம் செய்து, மக்கள் திசை திரும்புவதைத் தடுத்து, பொதுசுடுகாட்டில் புதைப்பது தங்களது உரிமை என்பதை மக்களுக்கு உணர்த்தி, அந்த நிகழ்வு வெற்றியடைந்ததில் முழுப்பங்காற்றியவர்

#அனைத்து நிகழ்வுகளிலும் பெண்கள் முண்ணனியில் நிற்க வேண்டும்.ஆண்களுக்கு நிகராக அனைத்துப் பணிகளையும் பெண்கள் செய்ய வேண்டும். குறிப்பாக ஓட்டுநர் பயிற்சி பெற்று ஜே.சி.பி போன்ற கடினமான வாகனங்களையும் இயக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்துபவர்.

#ஈரோட்டில் உள்ள அனைத்து முற்போக்கு அமைப்புகளுடனும் நெருங்கிய தொடர்புள்ளவர்.அவர்களை ஒருங்கிணைக்கக் கூடியவர்.

# திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொருளாளராக இருந்து,தற்போது அமைப்புச் செயலாளராக தமிழ்நாடு முழுதும் சுற்றி வருபவர்..

""இரத்தினசாமி அண்ணன் எங்களுக்கு பலம்""

நன்றி..

-ப.சி திவிக

Post a Comment

Powered by Blogger.