Halloween party ideas 2015
.

தூத்துக்குடியில் ஆண்டுக்கு ஆண்டு புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.

முத்துக் குளித்தலுக்கு பெயர் பெற்ற தூத்துக்குடி நகரைச் சுற்றி பெருகி வரும் அனல்மின் நிலையங்கள் மற்றும் தனியார் ரசாயன தொழிற்சாலைகள் போன்றவற்றால் மிக அதிகமான சுற்றுச்சூழல் மாசு கொண்ட மாநகரமாக தூத்துக்குடி மாறி வருகிறது. மாசு மிகுந்த தொழிற்சாலைகளால் மாநகர மக்கள் புற்றுநோய், சுவாசக்கோளாறு போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகளவு நோய்கள் வருகின்றன. 

இந்நிலையில் தூத்துக்குடியில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக நிரூபணமாகியுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கிராம வாழ் மக்கள் நலச்சங்கத்தின் தலைவரும், தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு ஆகியவற்றின் அமைப்பாளருமான ”தாமிரபரணித் தாத்தா” நயினார் குலசேகரன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுள்ள கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உள்நோயாளிகள் சேர்ந்தது தொடர்பான கேள்விக்கு 6ஆயிரத்து 852 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். அதாவது ஜனவரியில் அனுமதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 580 பேரில், 3ஆயிரத்து 421 பேர் விடுவிக்கப்பட்டனர் என்றும், 111 பேர் இறந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதேபோன்று பிப்ரவரி மாதத்தில் 3 ஆயிரத்து 201 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு 3 ஆயிரத்து 272 பேர் விடுக்கப்பட்டுள்ளனர் என்றும், 80 பேர் இறந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜனவரியில் 53 ஆயிரத்து 718 பேரும், பிப்ரவரியில் 45 ஆயிரத்து 156 பேர் புறநோயாளிகளாகவும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு முழுவதும் புற்றுநோயாளிகள் தொடர்பான கேள்விக்கான பதில் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 2 ஆயிரத்து 552 பேர் புற்றுநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

தூத்துக்குடியை பொறுத்தவரை புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக நிரூபணமாகியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நயினார்குலசேகரன் கூறியுள்ளார். 

புற்றுநோயாளிகள் பெருகுவதற்கு தூத்துக்குடியை சுற்றி பெருகிவரும் மாசு நிறைந்த தொழிற்சாலைகளே காரணம் என்று மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Powered by Blogger.