Halloween party ideas 2015
.

 

செய்திகள்

30.03.16

------------------------------------------------------------------------------------------------------

 

1. துணிவுடன் செயலாற்றும் பெண்களுக்கு திருப்பீடம் மரியாதை

 

2. திருப்பீடம், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை உறவில் வளர்ச்சி

 

3. கடத்தப்பட்ட அருள்பணியாளர் உண்மைநிலை அறிய வேண்டுகோள்

 

4. அடிப்படைவாதத்தை அகற்ற பாகிஸ்தான் ஆயர்கள் விண்ணப்பம்

 

5. சிரியா-புலம் பெயர்ந்தவர்களுக்கு கொரிய காரித்தாஸ் உதவி

 

6. ஈக்குவதோர்: வாழ்வுக்கு ஆதரவாக 25,000 மக்கள் பேரணி

 

7. சீனாவில் உயிர்ப்புப் பெருவிழாவன்று 20,000 பேருக்குத் திருமுழுக்கு

 

8. ஏமனில், ஒவ்வொரு நாளும் ஆறு சிறார் கொல்லப்படுகின்றனர்

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. துணிவுடன் செயலாற்றும் பெண்களுக்கு திருப்பீடம் மரியாதை

 

மார்ச்,30,2016. மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கென, பெண்கள் பல துறைகளில் உழைத்து வருவதை இவ்வுலகம் வெளிப்படையாகக் கண்டுவருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

'பெண்கள், அமைதி, மற்றும் பாதுகாப்பு' என்ற மையக்கருத்துடன், ஐ.நா. பாதுகாப்பு அவை மேற்கொண்ட ஒரு கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட பேராயர், பெர்னதித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

குடும்பம், மதநம்பிக்கைக் குழுமங்கள், மனிதாபிமான முயற்சிகள், கல்வி மற்றும் நலவாழ்வுப் பணிகள், அமைதி முயற்சிகள் என்று, பல்வேறு துறைகளில், பெண்கள் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுக்குரியன என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பெண்களை அடக்கியாளும் பல நாடுகளில், துணிவுடன், அமைதியாகச் செயலாற்றிவரும் பெண்களுக்கு, திருப்பீடம், மரியாதை கலந்த வணக்கம் செலுத்துகிறது என்று, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஏமன் நாட்டில் கொல்லப்பட்ட நான்கு அருள்சகோதரிகளையும் தன் உரையில் பெயர் சொல்லிக் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், வறுமைப்பட்ட வயதான பெண்களுக்கு, இவ்வருள் சகோதரிகள் ஆற்றிவந்த பணியை, இன்று உலகம் முழுவதும் அறிந்துள்ளது என்று எடுத்துரைத்தார்.

இனப் படுகொலைகள் பெருகியுள்ள ஆப்ரிக்க நாடுகளில், துன்புறுவோருக்கு உதவிகள் செய்வதிலும், அந்நாடுகளில் அமைதியை உறுதிப்படுத்துவதிலும் அயராது உழைத்துவரும் பெண்களுக்கு அனைத்து ஆதரவையும் திருப்பீடம் வழங்கி வருகிறது என்றும், பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருப்பீடம், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை உறவில் வளர்ச்சி 

 

மார்ச்,30,2016. திருப்பீடத்திற்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்கும் இடையேயுள்ள உறவு, கடந்த 25 ஆண்டுகளில் வளர்ந்துள்ளது என்று, இரஷ்யக் கூட்டமைப்புக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Ivan Jurkovic அவர்கள் கூறினார்.

மாஸ்கோ திருப்பீடத் தூதரகத்தில் ஒன்பது ஆண்டுகள் (1992-1996, 2011-2016) தங்கி, பணியாற்றிய அனுபவத்தை ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்ட பேராயர் Jurkovic அவர்கள், சோவியத் யூனியன் கலைந்தது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவரான மாஸ்கோ முதுபெரும்தந்தை கிரில் அவர்களுக்கும் இடையே கியூபாவில் இடம்பெற்ற சந்திப்பு போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பற்றிப் பேசினார்.

வருகிற அக்டோபரில், மாஸ்கோ முதுபெரும் தந்தையும், பில்லி கிரகாம் அவர்களின் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ இயக்கமும் இணைந்து நடத்தவுள்ள மாபெரும் கிறிஸ்தவ கருத்தரங்கிற்குத் திருப்பீடம் தனது பிரதிநிதிகளை பெருமளவில் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார் பேராயர் Jurkovic.

 

கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே இடம்பெறும் உரையாடல், இரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே புதுப்பிக்கப்பட்ட அரசியல் உரையாடலுக்கு வழியமைக்கும் என்ற தனது நம்பிக்கையையும் வெளியிட்டார் பேராயர் Jurkovic.  

64 வயது நிரம்பிய பேராயர் Ivan Jurkovic அவர்கள், தற்போது ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்குத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

ஆதாரம் : Asianews /வத்திக்கான் வானொலி

 

3. கடத்தப்பட்ட அருள்பணியாளர் உண்மைநிலை அறிய வேண்டுகோள்

 

மார்ச்,30,2016. ஏமன் நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அருள்பணியாளர், தாமஸ் உழுன்னலில் (Thomas Uzhunnalil) அவர்கள் கொல்லப்பட்டுள்ளார் என்று பரவிவரும் வதந்திகளைத் தடுக்க, இந்திய அரசு, அருள்பணியாளரைப் பற்றிய உண்மை நிலையைக் கண்டறிந்து விரைவில் தெரிவிக்கவேண்டும் என்று, இந்திய ஆயர்கள், அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.

இந்திய ஆயர் பேரவையின் இணைச் செயலராகப் பணியாற்றும் அருள்பணி ஜோசப் சின்னய்யன் அவர்கள், வெளியுறவுத் துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் அவர்களையும், ஏனைய அதிகாரிகளையும் இச்செவ்வாயன்று சந்தித்துப் பேசினார் என்று, ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கையொன்று கூறுகிறது.

இந்திய அரசு இதுவரை மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து இந்திய ஆயர் பேரவை சார்பில் அனுப்பப்பட்டுள்ள ஒரு மடலில், பரவிவரும் வதந்திகளைத் தடுக்கும் வகையில், இந்திய அரசு விரைவில் செயல்பட்டு, உண்மை நிலவரத்தைக் கூறவேண்டும் என்றும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று, UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

இதற்கிடையே, தெற்கு அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பணியாற்றும் பேராயர் பால் ஹிண்டர் அவர்கள், சமூக வலைத்தளங்கள் வழியே இதுவரை பரவி வந்துள்ள தகவல்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

ஆஸ்திரிய நாட்டின், வியென்னா கர்தினால் Christoph Schönborn அவர்கள், அருள்பணி உழுன்னலில் அவர்கள் கொல்லப்பட்டார் என்று தான் கூறிய செய்தி தவறு என்று கூறி, மறு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று, ஆசியச் செய்தி கூறுகிறது.

 

ஆதாரம் :  UCAN       / வத்திக்கான் வானொலி

 

4. அடிப்படைவாதத்தை அகற்ற பாகிஸ்தான் ஆயர்கள் விண்ணப்பம்

 

மார்ச்,30,2016. மாசற்ற மக்களை, மதத்தின் பெயரால் கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம் என்று, பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழுவின் தலைவர் ஆயர் ஜோசப் அர்ஷத் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

இத்தகையக் கொடுமைகள் நிகழும்போது, இராணுவத்தின் உதவியுடன் அரசு செயல்படுவது மட்டும் போதாது, மாறாக, இக்கொடுமைகள் நிகழ்வதற்குக் காரணமாக விளங்கும் அடிப்படைவாதப் போக்கினை, நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றுவதற்கு, பாகிஸ்தான் அரசு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, ஆயர் அர்ஷத் அவர்களின் அறிக்கை கூறுகிறது.

நாட்டின் சட்டங்களைத் துச்சமாக எண்ணி, செயல்படுவோரை, நீதிக்கு முன் கொணர்வதற்கு, அரசு, விரைவாகவும், நாடுதழுவிய பெரிய அளவிலும் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் சார்பில், ஆயர் அர்ஷத் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

வாழ்வு என்பது நிச்சயமற்றது என்ற கசப்பான உண்மையை, பாகிஸ்தான் மக்களுக்கு அடிக்கடி நினைவுறுத்தும் இத்தகைய கொடுமைகளின் நடுவில், சகிப்புத்தன்மை, அமைதி ஆகிய உணர்வுகளில் மக்கள் வளர்வதற்கு இறைவன் உதவி செய்யவேண்டும் என்று, ஆயர் அர்ஷத் அவர்கள், தன் அறிக்கையில் வேண்டுதலை எழுப்பியுள்ளார்.

 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 

5. சிரியா-புலம் பெயர்ந்தவர்களுக்கு கொரிய காரித்தாஸ் உதவி

 

மார்ச்,30,2016. சிரியா நாட்டுப் புலம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கென, கொரிய காரித்தாஸ் நிறுவனம், 2012ம் ஆண்டிலிருந்து 11 இலட்சம் டாலரைக் கொடுத்துள்ளது.

சிரியாவிலிருந்து புலம் பெயரும் மக்களுக்கு உதவுவதற்கு, "சிரியாவில் உள்நாட்டுச் சண்டை தொடங்கி ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் : அம்மக்களின் கண்ணீரைத் துடைப்போம்" என்ற தலைப்பில், கொரிய கத்தோலிக்க வார இதழுடன் இணைந்து, கொரிய காரித்தாஸ் நிறுவனம் நிதி திரட்டி வருகிறது.  

இந்நடவடிக்கையின் ஒரு கட்டமாக, The Catholic Times என்ற வார இதழ், சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்த மக்களின் நிலை குறித்த கதைகளை வெளியிட்டு வருகிறது.

சிரியாவில், 2011ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி உள்நாட்டுச் சண்டை தொடங்கியது. இவ்வன்முறைக்கு அஞ்சி, அந்நாட்டின் 2 கோடியே 30 இலட்சம் பேரில், ஏறக்குறைய பாதிப்பேர் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.  

 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி

 

6. ஈக்குவதோர்: வாழ்வுக்கு ஆதரவாக 25,000 மக்கள் பேரணி

 

மார்ச்,30,2016. "செயல்பாடுகளில் விளங்கும் அன்பு" என்ற தலைப்பில் ஈக்குவதோர் நாட்டில் 25,000க்கு மேற்பட்ட மக்கள், மனித வாழ்வுக்கும், குடும்ப அமைப்புக்கும் ஆதரவாக, பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

கருவில் வளரும் குழந்தையின் வாழ்வுக்கு ஆதரவாக, ஈக்குவதோர் நாட்டின் பல நகரங்களில், ஒன்பதாவது ஆண்டாக, இப்புதனன்று நடைபெற்ற பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

ஈக்குவதோர் ஆயர் பேரவையின் வாழ்வு மற்றும் குடும்ப ஆணைக்குழுத் தலைவர் Quito துணை ஆயர் Danilo Echeverría அவர்கள், பல்வேறு பொதுநிலை கத்தோலிக்க இயக்கங்கள், பெண்கள் குழுக்கள், பங்குத்தள இளையோர் அமைப்புகள், பன்னாட்டுக் குடும்பக் கழகங்கள், மனித மற்றும் குடும்ப வாழ்வுக்கு ஆதரவு இயக்கங்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்து இப்பேரணியை நடத்தியுள்ளார்.

 

ஆதாரம் : CNA  /வத்திக்கான் வானொலி

 

7. சீனாவில் உயிர்ப்புப் பெருவிழாவன்று 20,000 பேருக்குத் திருமுழுக்கு

 

மார்ச்,30,2016. சீனாவின் பெய்ஜிங் பேராலயத்தில் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருவழிபாட்டில் நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில், வயது வந்தவர்கள் திருமுழுக்கு பெற்றனர் என்று, ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.

சீனாவில் கிறிஸ்தவர்களாக மாறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும், இதை ஒரு புதுமை என்றும், செய்தி வெளியிட்டுள்ள அந்நிறுவனம், உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருவழிபாட்டில், சீனாவின் மற்ற ஆலயங்களிலும் மக்கள் புதிதாகத் திருமுழுக்குப் பெற்றனர் என்றும் கூறியுள்ளது.   

அண்மை ஆண்டுகளில், இதே உயிர்ப்புப் பெருவிழா திருவழிபாட்டில் இருபதாயிரத்துக்கு அதிகமான மக்கள் புதிதாகத் திருமுழுக்குப் பெற்றுள்ளனர் என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அதேபோல், கிறிஸ்மஸ், தூய ஆவியார் பெருவிழா, மரியின் விண்ணேற்பு விழா ஆகிய நாள்களிலும், மக்கள் புதிதாகத் திருமுழுக்குப் பெறுகின்றனர் என்றும், கத்தோலிக்கத் திருஅவையில், ஒவ்வோர் ஆண்டும், ஏறக்குறைய ஒரு இலட்சம் வயது வந்தவர்கள் திருமுழுக்கு பெறுகின்றனர் என்றும் ஆசியச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

 

ஆதாரம் : Asianews /வத்திக்கான் வானொலி

 

8. ஏமனில், ஒவ்வொரு நாளும் ஆறு சிறார் கொல்லப்படுகின்றனர்

 

மார்ச்,30,2016. ஏமன் நாட்டில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், சவுதி அரேபியா தலைமையில் வான்வழித் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதிலிருந்து, ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆறு சிறார் கொல்லப்படுகின்றனர், அல்லது, உறுப்புக்களை இழக்கின்றனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.

ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யூனிசெப், அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏமனில் கொல்லப்பட்டுள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் சிறார் என்று கூறியுள்ளது.

ஏமனில் பணியாற்றும் யூனிசெப் நிறுவனப் பிரதிநிதி Julien Harneis அவர்கள், ஏமன் நாட்டில், சிறார்க்குப் பாதுகாப்பு இல்லை என்றும், அவர்களுக்கு, விளையாடுவதும், தூங்குவதும்கூட அச்சுறுத்தலாக உள்ளன என்றும் கூறினார்.

ஏமனில் 82 விழுக்காட்டினருக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும், 3,20,000 சிறார் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பாதுகாப்புக் காரணங்களுக்காக ஏறக்குறைய 1,600 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்றும், Harneis அவர்கள் தகவல்களை வெளியிட்டார்.

2015ம் ஆண்டு சனவரியில் ஏமனில் தொடங்கிய சண்டையில் 6,200க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி

 

இது இரக்கத்தின் காலம்...

 

கருத்து உணர்த்தப்பட்ட பின்னரும் வார்த்தைகளில் தொங்குவதேன்?

 

சுவாங் ட்ஸு என்பவர் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன மேதை, ஜென் துறவி. ஒருமுறை அவருடைய சீடர் ஒருவர், "குருவே, நீங்கள் எத்தனையோ பெரிய மனிதர்களைச் சந்தித்திருக்கிறீர்கள். அவர்களில் உங்களுடைய மனதைக் கவர்ந்தவர் யார்?" என்று கேட்டார்.

சுவாங் ட்ஸு சிரித்தார். "வார்த்தைகளை மறந்த ஒருவரே, என்னுடைய மனதைக் கவர்ந்தவர். அப்படிப்பட்ட ஒருவரை நான் இன்னும் சந்திக்கவில்லை" என பதிலளித்தார் மேதை.

"புரியவில்லையே!" என சீடர் முழிக்க, சுவாங் ட்ஸு விளக்கத் தொடங்கினார். "நீங்கள் ஓர் இடத்திற்குச் செல்ல பயணச்சீட்டு பதிவு செய்கிறீர்கள். பயணம் முடிந்தபின் அந்தப் பயணச்சீட்டை என்னச் செய்வீர்கள்?" என அவர் கேட்க,

"தூர வீசிவிடுவோம்!" என்றார் சீடர்.

"ஆக, பயணச்சீட்டு தூர வீசப்படும்வரை, அந்தப் பயணம் முடிக்கப்படவில்லை என்று அர்த்தம். இல்லையா?" என துறவி கேட்க, "ஆமாம் குருவே!" என பதிலளித்தார் சீடர்.

"அதேபோல், பாட்டிலில் இருக்கும் மருந்தைப் பயன்படுத்தி முடிந்தவுடன், பாட்டிலைத் தூர வீசிவிடுகிறோம். இல்லையா?" என சுவாங் ட்ஸு கேள்வி கேட்க, "உண்மைதான். அதற்கென்ன?" என்றார் சீடர்.

"பயணச்சீட்டு மற்றும் பாட்டில் போலதான், நாம் பேசும் வார்த்தைகளும். அவை உயர்ந்த கருத்துகளைக் கொண்டுசெல்லும் வாகனங்கள். நாம் அந்தக் கருத்தைப் புரிந்துகொண்டவுடன், வார்த்தைகள் மறந்துபோகும். ஆனால் நான் சந்தித்த எவரும் வார்த்தைகளை இன்னும் மறக்கவில்லை. தொடர்ந்து அவற்றோடுதான் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அப்படியானால் உலகப் பேருண்மைகளை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்?" என்றார் சுவாங் ட்ஸு.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 
--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு

SEO/SMO Team

Post a Comment

Powered by Blogger.