Halloween party ideas 2015
.


 

1. இறைவனின் வல்லமை என்பது அன்பு, அவரின் நீதி என்பது இரக்கம்

 

2. பாகிஸ்தான் தாக்குதல் குறித்து WCC வன்மையான கண்டனம்

 

3. லாகூர் பூங்கா வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்கு வழிபாடு

 

4. ஏமனில் கடத்தப்பட்ட அருள்பணியாளர், உயிருடன் இருப்பதாக நம்பிக்கை

 

5. உயிர்ப்பு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள காசா கிறிஸ்தவர்களுக்கு அனுமதி

 

6. இஸ்லாமை தழுவியோர் தங்கள் தாய் மதத்திற்கு திரும்ப மலேசியா அனுமதி

 

7. சூதாட்ட அரங்குகள் குறித்து பிலிப்பீன்ஸ் ஆயர்கள் கவலை

 

------------------------------------------------------------------------------------------------------

 

 

1. இறைவனின் வல்லமை என்பது அன்பு, அவரின் நீதி என்பது இரக்கம்

 

மார்ச்,29,2016. இறைவனின் வல்லமை அன்பிலும், அவரின் நீதி இரக்கத்திலும் வெளிப்படுத்தப்படுகின்றது என்பதை மையமாக வைத்து இச்செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் உண்மை முகத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார் இயேசு. இறைவனைப் பொருத்தவரையில், உண்மை வல்லமை என்பது, அழிவில் அல்ல, மாறாக, அன்பிலும், நீதி என்பது பழிவாங்கலில் அல்ல, மாறாக,  இரக்கத்திலும் வெளிப்படுத்தப்படுகின்றது என்கிறது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.

மேலும், இத்திங்களன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி, ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவைத் தாங்கிச் செல்பவராகச் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கிறது.

ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்தோபர், அதாவது, கிறிஸ்துவை எடுத்துச் செல்பவர் என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. பாகிஸ்தான் தாக்குதல் குறித்து WCC வன்மையான கண்டனம்

 

மார்ச்,29,2016. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களை இலக்காக்கி மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ள உலக கிறிஸ்தவ கூட்டமைப்பு, பொதுமக்களின் பாதுகாப்பை அரசு உறுதிச் செய்யவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளது.

லாகூர் குழந்தைகள் பூங்காவில், உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டங்களை மேற்கொண்டிருந்த கிறிஸ்தவர்கள்மீது, இஸ்லாம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து, தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்ட WCC உலக கிறிஸ்தவ கூட்டமைப்பின் பொதுச் செயலர், கிறிஸ்தவ போதகர் Olav Fykse Tveit  அவர்கள், மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், பேரதிர்ச்சியைத் தருவதாக உள்ளது என்றார்.

கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் லாகூரின் கிழக்குப் பகுதியிலுள்ள பூங்காவில், அதுவும் கிறிஸ்தவர்களின் பெருவிழாவின்போது நடத்தப்பட்ட இத்தாக்குதல் பெரும் கண்டனத்துக்குரியது என்று, Tveit அவர்கள் கூறினார்.

மதத்தின் பெயராலோ, அல்லது மதத்தால் தூண்டப்பட்டதாகவோ இருக்கும் எந்த ஒரு வன்முறையும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது, மற்றும் ஆபத்து நிறைந்தது எனவும் கூறினார் WCC அமைப்பின் பொதுச் செயலர் Tveit.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. லாகூர் பூங்கா வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்கு வழிபாடு

 

மார்ச்,29,2016. பாகிஸ்தானின் லாகூர் வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக, நூற்றுக்கணக்கான மக்கள், தாக்குதல் நடந்த அதே பூங்கா வாசலில், மெழுகுத்திரிகளை ஏந்தி, வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

லாகூரின் குல்ஷான் இ இக்பால் பூங்காவில், கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா விடுமுறைக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது, பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதக் குழுவின் ஒரு பிரிவான ஜமாத் உல் அஹ்ரார் என்ற அமைப்பு நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, ஏறத்தாழ 300 பேர் காயமுடைந்துள்ள நிலையில், பல மதத்தினர் இணைந்து திங்களிரவு, அதே பூங்கா வாசலில். மெழுகுத்திரிகளை ஏந்தி, வழிபாட்டை மேற்கொண்டனர்.

பாகிஸ்தான் அரசு, தீவிரவாதத்திற்கு எதிராக பேசி வருவது மட்டும் போதாது, தீவிரவாதத்தை அடக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த வழிபாட்டில் கலந்துகொண்டோர் குரலெழுப்பினர்.

பாகிஸ்தான் குழந்தைகள் எப்போதும் அச்சத்திலும் திகிலிலும் வாழ்ந்துகொண்டிருக்க முடியாது என்பதால், நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்றார், பாகிஸ்தான் பல்சமய அவையின் தலைவர் சாம்சன் சலமாட்.

இதற்கிடையே, இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்று செய்தி வெளியிட்டுள்ள ஜமாத் உல் அஹ்ரார் தீவிரவாத அமைப்பு, கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா விடுமுறையைச் சிறப்பித்துக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களை தாக்குவதே தங்கள் நோக்கம் என்றும், இதில் எதிர்பாராத விதமாக சில இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டு விட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.

 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 

4. ஏமனில் கடத்தப்பட்ட அருள்பணியாளர், உயிருடன் இருப்பதாக நம்பிக்கை

 

மார்ச்,29,2016. ஏமனில் கடத்தப்பட்ட இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் கொல்லப்பட்டு விட்டார் என்ற ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்ற போதிலும், அவர் உயிருடனேயே இருக்கின்றார் என உறுதியாக நம்புவதாக, ஏமன் ஆயரும், சலேசிய துறவு சபை அதிகாரிகளும் அறிவித்துள்ளனர்.

ஏமனில் கடத்தப்பட்டுள்ள இந்திய அருள்பணியாளர், Tom Uzhunnalil அவர்கள், புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என சில தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இவை ஆதாரமற்ற வதந்திகள் எனவும், அருள்பணி Tom அவர்கள் உயிருடனேயே இருக்கிறார் என தாங்கள் உறுதியாக நம்புவதாகவும் சலேசிய சபை அதிகாரிகளும், ஏமனின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Paul Hinder அவர்களும் அறிவித்துள்ளனர்.

ஏமனின் ஏடன் நகரில் அமைந்துள்ள அன்னை தெரேசா சபை அருள் கன்னியர்கள் இல்லத்தில், இம்மாதம் 4ம் தேதி, நான்கு அருள் சகோதரிகளைக் கொன்றபின், அங்கிருந்த அருள்பணியாளர் Tom அவர்களைக் கடத்திச் சென்ற இஸ்லாமியத் தீவிரவாதிகள், அவரை புனித வெள்ளியன்று சிலுவையிலறைந்து கொல்வார்கள் என ஆதாரமற்ற வதந்திகள்  ஏற்கனவே பரப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி

 

5. உயிர்ப்பு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள காசா கிறிஸ்தவர்களுக்கு அனுமதி

 

மார்ச்,29,2016. எருசலேமில், கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள, எட்டாண்டுகளில் முதன்முறையாக காசா பகுதியின் பெருவாரியான கிறிஸ்தவர்களுக்கு அனுமதியை வழங்கியுள்ளது இஸ்ரேல் அரசு.

எருசலேமில் மத வழிபாடுகளில் கலந்துகொள்ளும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, அதிலும் குறிப்பாக 35 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு அனுமதியை மறுத்து வரும் இஸ்ராயேல் அரசு, இந்த ஆண்டில் விண்ணப்பித்தவர்களுள் 95 விழுக்காட்டினருக்கு அனுமதியை வழங்கியுள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி தங்கள் விண்ணப்பத்தை இஸ்ரேல் இராணுவத்திடம் சமர்ப்பித்த 890 பேருள், 847 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார், காசா பகுதி பங்குதந்தை அருள்பணி மாரியோ தே சில்வா.

காசா பகுதி கிறிஸ்தவர்களுக்கு 45 நாள் அனுமதியை வழங்கி, இஸ்ரேல் பகுதியில் நுழைய வழி வகுத்துள்ளதால், கிறிஸ்து உயிர்ப்புக் கொண்டாட்டங்களில் காசா கிறிஸ்தவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர் என்றார் அருள்பணி தெ சில்வா.

 

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி

 

6. இஸ்லாமை தழுவியோர் தங்கள் தாய் மதத்திற்கு திரும்ப மலேசியா அனுமதி

 

மார்ச்,29,2016. தங்கள் சொந்த மதத்திலிருந்து மாறி, இஸ்லாம் மதத்தைத் தழுவியவர்கள், பின்னர் தங்கள் சொந்த மதத்திற்கு திரும்ப விரும்பினால், அதற்கு தடை விதிக்கக்கூடாது என மலேசியாவின் மாநில உயர் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளதை பல மதத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இஸ்லாமிய சட்டங்களைக் கொண்ட ஷாரியா நீதிமன்றத்தின் அனுமதி பெற்றபின்னரே ஒருவர் இஸ்லாமிலிருந்து வேறு மதத்திற்குச் செல்லமுடியும் என்றிருந்த மலேசிய அரசின், எழுதாத நடைமுறைச் சட்டத்தைப் புரட்டிப்போடும் வகையில் தற்போது Sarawak மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

கிறிஸ்தவராகப் பிறந்த 41 வயது Roneey Anak Rebit என்பவர், அவரின் 10வது வயதில், பெற்றோர்களால், இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது தன் தாய் மதத்திற்கே திரும்ப நினைத்தபோது, ஷாரியா நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்துபொது நீதிமன்றத்தில் Roneey அவர்கள் தொடர்ந்த வழக்கில்,  அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவதில் தடைவிதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியரை பெரும்பான்மையினராகக் கொண்டு, ஷாரியா சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் மலேசியாவில் இத்தகையதொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து, மலேசியாவின் பல மதங்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளன. இருப்பினும், மலேசிய மத்திய அரசின் அணுகுமுறை மாற்றங்களுக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

 

7. சூதாட்ட அரங்குகள் குறித்து பிலிப்பீன்ஸ் ஆயர்கள் கவலை

 

மார்ச்,29,2016. பிலிப்பீன்ஸ் நாட்டில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் சூதாட்ட அரங்குகள் குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

சட்டத்திற்கு புறம்பாக பணத்தை புழக்கத்தில் விட இத்தகைய சூதாட்ட அரங்குகள் உதவுவதன் மூலம், பொருளாதார அமைப்புமுறையே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறும் தலத்திருஅவை அதிகாரிகள், மக்களின் பொழுதுபோக்கு என்பது தற்போது சூதாட்டமாக மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷில் இருந்து திருடப்பட்ட 8 கோடியே 10 இலட்சம் டாலர்கள், பிலிப்பீன்சின் ஒரு வங்கி வழியாக, ஒரு பணமாற்றும் நிறுவனத்திற்கும் பின்னர் சூதாட்ட அரங்கிற்கும் பரிமாற்றம் செய்யப்பட்ட குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ள நிலையில், இது குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிட்ட ஆயர்கள், இது தனி ஒரு நபரால் ஆற்றப்பட்டதல்ல, மாறாக, இதற்குப் பின்னால் ஒரு குற்றக் கும்பலே செயல்பட்டிருக்கலாம் என்ற தங்கள் சந்தேகத்தையும் வெளியிட்டுள்ளனர்.

சூதாட்ட அரங்குகளுக்கு கொணரப்படும் பணம், பின்னர் அங்கு சூதாட்டத்தில் வென்ற பணமாக, அதாவது சட்ட அனுமதியுடன் சம்பாதிக்கப்பட்ட பணமாகக் காட்டப்படும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என கூறினார், பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை தலைவர், பேராயர் Socrates Villegas.

 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

 

இது இரக்கத்தின் காலம்...

 

சிறைக்குள் புகுந்த இறை இரக்கம்

 

"இறைவன், தன் இரக்கத்தால் என் வாழ்வை எவ்விதம் மாற்றினார் என்பதற்குச் சாட்சியம் சொல்லவே நான் இங்கு வந்துள்ளேன்" என்று, ஒரு சிறைக்கைதி, வத்திக்கானில் நடைபெற்ற ஒரு விழாவில் கூறினார். சீனாவில் பிறந்து, இத்தாலியில் குடியேறி, தற்போது, பதுவை நகரில், பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஜாங் அகோஸ்தீனோ ஜியான்கிங் (Zhang Agostino Jianqing) என்ற 30 வயது இளையவர், இறைவன் எவ்விதம் தன்னை சிறையில் சந்தித்தார் என்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இளையவர் ஜியான்கிங் அவர்கள், 12 வயது சிறுவனாய் இருந்தபோது, தன் பெற்றோருடன் இத்தாலிக்கு வந்து சேர்ந்தார். 16 வயதில் அவரது வாழ்வு தடம்புரண்டது. 19வது வயதில், அவர் ஒரு பெரும் குற்றத்தில் பிடிபட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். சிறையில் அவருக்கு ஆறுதலாக இருந்த ஒரு சிலர் வழியே, கிறிஸ்து அவருக்கு அறிமுகமானார். 2014ம் ஆண்டு, அவர் திருமுழுக்கு பெற்றபோது, அகஸ்டின் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். தாயான புனித மோனிகாவின் கண்ணீராலும், செபங்களாலும் மனம் மாறிய புனித அகஸ்டினைப் போல, தானும், தன் அன்னையின் கண்ணீராலும், கிறிஸ்துவின் அறிமுகத்தாலும், மனம் மாறியதாகக் கூறினார், இளையவர் ஜியான்கிங். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இறைவனின் இரக்கம், சிறையில் தன்னை பாதுகாத்து வந்துள்ளது என்பதை, இளையவர் ஜியான்கிங் அவர்கள், வத்திக்கான் விழாவில் வலியுறுத்திக் கூறினார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

 

 




--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு

SEO/SMO Team

Post a Comment

Powered by Blogger.