Halloween party ideas 2015
.


 

1. திருத்தந்தை விசுவாசிகளிடம் : எனது நம்பிக்கையாகிய கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்

 

2. லாகூர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு திருத்தந்தை கண்டனம்

 

3. பாகிஸ்தான் குண்டுவெடிப்புத் தாக்குதல் மிகுந்த வேதனையளிக்கிறது

 

4. பாகிஸ்தான் தாக்குதலுக்கு தலத்திருஅவை கடும் கண்டனம்

 

5. ஈராக் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்

 

6. கர்தினால் போ கிறிஸ்துவின் உயிர்ப்பு மியான்மார்க்கு நம்பிக்கை

 

7. திருத்தந்தையின் வார்த்தைக்குச் செவிகொடுக்க ஜப்பானுக்கு அழைப்பு

 

8. மன்னார் வளைகுடாவில் பவளப்பாறைகள் அழியும் அபாயம்

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. திருத்தந்தை விசுவாசிகளிடம் : எனது நம்பிக்கையாகிய கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்

 

மார்ச்,28,2016. எனது நம்பிக்கையாகிய கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என்ற ஆறுதலளிக்கும் உயிர்ப்பின் அறிவிப்பை, இந்த யூபிலி ஆண்டில் மீண்டும் ஆழமாகக் கண்டுணர்ந்து அதனை வரவேற்போம் என்று இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்துவரும் திங்களை, வானதூதரின் திங்கள் என்று அழைக்கிறோம் என்று சொல்லி, கிறிஸ்துவின் உயிர்ப்பின் மகிழ்வு பற்றிய சிந்தனைகளை, இத்திங்கள் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் வழங்கினார் திருத்தந்தை.

வாழ்வு, மரணத்தையும், இரக்கமும், அன்பும் பாவத்தின் மீது வெற்றியையும் கண்டுள்ளன என்றும், இந்த வியத்தகு புதிய எல்லையைத் திறப்பதற்கு விசுவாசமும் நம்பிக்கையும் அவசியம் என்றும் கூறிய திருத்தந்தை, கிறிஸ்து உண்மையிலேயே உயிர்த்தெழுந்தார் என்ற உயிர்ப்புச் செய்தி நம்மில் எதிரொலித்துக்கொண்டே இருக்கட்டும் என்றும் கூறினார்.

இத்திங்களன்று நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்களிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, எனது நம்பிக்கையாகிய கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்ற சொற்களை மூன்று முறை அனைவரும் சப்தமாகச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். 

கிறிஸ்து உயிர்த்தெழுந்துள்ளார் எனில், நம் வாழ்வின் எதிர்மறை நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளையும் புதிய கண்களோடும், புதிய இதயத்தோடும் நாம் பார்க்கலாம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் துன்பங்கள் மற்றும் பலவீனங்களால் துவண்டு கிடக்கும்போது நாம் எழுந்து நடப்பதற்கு, உயிர்த்த கிறிஸ்து சக்தியைத் தருகின்றார், நாம் உண்மையிலேயே அவரைச் சார்ந்திருந்தால் அவரின் அருள் நம்மை மீட்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்த கிறிஸ்து, இரக்கத்தின் முழுமையான வெளிப்பாடு, இவர் வரலாற்றில் பிரசன்னமாய் இருந்து செயலாற்றுகிறார், இந்த உயிர்ப்புச் செய்தி, இன்றும், இந்த உயிர்ப்புக் காலம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும் என்றும் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. லாகூர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு திருத்தந்தை கண்டனம்

மார்ச்,28,2016. பாகிஸ்தானின் லாகூர் நகர், பொதுமக்கள் பூங்கா ஒன்றில், இஞ்ஞாயிறன்று, கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுவெடிப்புத் தாக்குதலில், பல அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கின்றது என்று சொல்லி, இத்தாக்குதலுக்கு எதிரான தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

இத்திங்கள் நண்பகலில், அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய பின்னர், பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ள இப்பயங்கரவாதத் தாக்குதலை நினைவுகூர்ந்த  திருத்தந்தை, இது மிகவும் கண்டனத்துக்குரியது, மற்றும், இந்நாள் இரத்தம் சிந்தப்பட்ட உயிர்ப்பு நாள் என்றும் கவலையோடு கூறினார்.

இந்தக் கோழைத்தனமான மற்றும் அறிவற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் தோழமை உணர்வு கொண்டு செபிப்பதாகவும் தெரிவித்தார், திருத்தந்தை.

பாகிஸ்தானில், குறிப்பாக, மிகவும் நலிவடைந்த சிறுபான்மை மத மக்களுக்குப்  பாதுகாப்பையும் அமைதியையும் கொண்டு வருவதற்குப் பொறுப்புடைய அதிகாரிகளும், சமூக அமைப்புகளும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வன்முறையும், கொலைக்கு இட்டுச்செல்லும் வெறுப்பும், வேதனை மற்றும் அழிவையே கொணரும், ஒருவரையொருவர் மதிப்பதும், உடன்பிறப்பு உணர்வுமே அமைதியை அடையும் ஒரே வழி என்று மீண்டும் சொல்கிறேன் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.    

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த அனைவரோடும் சேர்ந்து அன்னைமரியை நோக்கிச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. பாகிஸ்தான் குண்டுவெடிப்புத் தாக்குதல் மிகுந்த வேதனையளிக்கிறது

 

மார்ச்,28,2016. லாகூர் நகரில் நடந்துள்ள மிகக் கொடூரமான குண்டுவெடிப்புத் தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், இதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பது மிகுந்த வேதனையையும், கவலையையும் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

இது, மிகவும் பாதுகாப்பற்ற மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கோழைத்தனமும், வெறுப்பும் நிறைந்த கொலைச் செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருத்தந்தையுடன் இணைந்து, இதில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காகச் செபிப்பதாகவும், தீவிரவாத வன்முறையால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்துடன் ஒன்றித்திருப்பதாகவும் கூறியுள்ளார், அருள்பணி லொம்பார்தி.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவன்று கூறியுள்ளது போன்று, வெறுப்பின் கொடூர வெளிப்பாடுகள் தொடரும் இவ்வேளையில், துன்புறும் மக்களோடு பரிவும், தோழமையும் கொள்ளவும், உரையாடல், நீதி, ஒப்புரவு மற்றும் அமைதிப் பாதையில் நாட்டைக் கட்டியெழுப்பவும், சிலுவையில் அறையுண்டு உயிர்த்த கிறிஸ்து நமக்குத் தொடர்ந்து துணிச்சலையும் நம்பிக்கையையும் தருகிறார் என்றும் கூறியுள்ளார் அருள்பணி லொம்பார்தி.

லாகூர் நகர்ப் பூங்காவில் இஞ்ஞாயிறு மாலையில், பல கிறிஸ்தவக் குடும்பங்கள், உயிர்ப்பு ஞாயிறு நிகழ்வுகளை கொண்டாடிக் கொண்டிருந்தவேளை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 29 சிறார் உட்பட எழுபதுக்கும் மேற்பட்டோர்  பலியாகியுள்ளனர். மேலும் 350 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், கிறிஸ்தவக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள். 

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

4. பாகிஸ்தான் தாக்குதலுக்கு தலத்திருஅவை கடும் கண்டனம்

 

மார்ச்,28,2016. பாகிஸ்தானில், லாகூர் நகரில் பூங்கா ஒன்றில், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடந்துள்ள குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு அந்நாட்டுத் தலத்திருஅவையும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

லாகூரை மையமாகக் கொண்டு இயங்கும் கத்தோலிக்கத் தொலைக்காட்சி மையத்தைத் தொடங்கியவரும், அதன் நிகழ்ச்சிப் பொறுப்பாளருமான அருள்பணி மோரிஸ் ஜலால் அவர்கள், இத்தாக்குதல் மிகவும் வேதனையளிக்கின்றது என்றும், எம் மக்களைச் சுற்றி நடக்கும் செயல்களுக்கு எங்களால் கண்டனம் தெரிவிக்க மட்டுமே முடியும் என்றும் கூறியுள்ளார்.

இத்தாக்குதல், லாகூர் கிறிஸ்தவ சமூகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது என்றும், எங்களால் செபிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்றும் கூறியுள்ளார் அருள்பணி மோரிஸ் ஜலால்.

இஞ்ஞாயிறு மாலையில், லாகூரிலுள்ள Gulshan-e-Iqbal பூங்காவில் நடத்தப்பட்ட இத்தாக்குலுக்கு, தாலிபானைச் சேர்ந்த Tehreek-i-Taliban Pakistan Jamaatul Ahrar என்ற குழு பொறுப்பேற்றுள்ளது.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் Shehbaz Sharif அவர்கள், இதில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளதோடு, அம்மாநிலத்தில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

 

5. ஈராக் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்

 

மார்ச்,28,2016. புனித வெள்ளியன்று, ஈராக் நாட்டின் Iskanderiyeh விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் செபத்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பாக்தாத் திருப்பீடத் தூதர் பேராயர் ஆல்பெர்த்தோ ஒர்த்தேகா மார்ட்டின் அவர்களுக்கு அனுப்பியுள்ள அனுதாபத் தந்திச் செய்தியில், இத்தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்குத் திருத்தந்தையின் செபமும், ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஈராக்கிலும், சிரியாவிலும் இயங்கும் ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகள் இப்பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

6. கர்தினால் போ கிறிஸ்துவின் உயிர்ப்பு மியான்மார்க்கு நம்பிக்கை

 

மார்ச்,28,2016. நீண்ட பாலைநிலத்தில் ஆறு ஒன்று பெருக்கெடுத்து ஓடுவது போன்று கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா, மியான்மார் நாட்டிற்கு அமைந்துள்ளது என்று, யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார். 

அண்மையில் வரலாற்று சிறப்புமிக்க அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றுள்ள மியான்மார் மக்களுக்கு இந்தக் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா மிகவும் சிறப்பானது என்று, இப்பெருவிழாச் செய்தியில் கூறியுள்ளார், கர்தினால் போ.

நம்பிக்கையின்மையின் நீண்டகால பாலைநிலத்தில் சனநாயக ஆறு மெதுவாக தனது அழகைப் பரப்பி வருகிறது என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், மியான்மார் மக்களாகிய நாம், நம்மைச் சுற்றிலும் காணப்படும் உயிர்ப்பின் அடையாளங்களோடு இப்பெருவிழாவைக் கொண்டாடுகிறோம் என்று தெரிவித்தார்.

இது நம்பிக்கையின் காலம் என்றும், மனித இதயங்களிலும், மனித வரலாற்றிலும் உயிர்ப்பு, நம்பிக்கையாகத் தொடர்ந்து இடம்பெறுகின்றது என்பதை வரலாறு நிரூபிக்கின்றது என்றும், தனது செய்தியில் கூறியுள்ளார், யாங்கூன் கர்தினால், சார்லஸ் போ.

15 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையிலிருந்த ஆங் சான் சூச்சி அவர்கள், துன்பத்தின் மரத்திலிருந்து உயிர்த்தெழுந்துள்ளார், மியான்மாரை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இருள் கவ்வியிருந்தது என்றும், துன்பங்களின் மத்தியில் சூச்சி அவர்களின் துன்பமும், மனத்துணிவும் விடுதலையின் உயிர்ப்பைக் கொணர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார் கர்தினால் போ.

மியான்மாரின் புதிய அரசில், சூச்சி அவர்கள், வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 

7. திருத்தந்தையின் வார்த்தைக்குச் செவிகொடுக்க ஜப்பானுக்கு அழைப்பு

 

மார்ச்,28,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஜப்பானுக்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்தால், அவர் சொல்வதற்குச் செவிசாய்க்க வேண்டும் என்று, ஜப்பான் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜப்பானில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, புனித வெள்ளியன்று, அந்நாட்டு நீதி அமைச்சர் உறுதி செய்ததையடுத்து, ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய, ஆசிய காரித்தாஸ் அமைப்பின் தலைவரும், ஜப்பானின் Niigata ஆயருமான Tarcisio Isao Kikuchi அவர்கள் இவ்வாறு கூறினார்.

புனித வாரத்தின் மூன்று முக்கிய நாள்களில், அதிலும் குறிப்பாக, புனித வெள்ளியன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் கவலை தருகிறது என்றும், அரசின் போக்கு வியப்பாக உள்ளது என்றும் கூறினார் ஆயர் Kikuchi

ஜப்பானில், பெருமளவான மக்கள் மரண தண்டனைக்கு ஆதரவாக உள்ளனர் என்று கூறிய ஆயர் Kikuchi அவர்கள், இத்தண்டனை இரத்து செய்யப்பட வேண்டுமென திருத்தந்தை விடுத்துவரும் அழைப்பையும் நினைவுபடுத்தினார்.

56 வயது நிரம்பிய செவிலி Junko Oshida என்பவருக்கும், 75 வயது நிரம்பிய Yasutoshi Kamata என்பவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 1950ம் ஆண்டுக்குப் பின்னர் ஜப்பானில் தூக்குமேடை ஏறியிருக்கும் ஐந்தாவது பெண் Oshida ஆவார். மேலும், 75 வயதான Kamata, 1985ம் ஆண்டுக்கும், 1994ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 9 வயது சிறுமி உட்பட ஐந்து பேரைக் கொலை செய்தவர்.

 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 

8. மன்னார் வளைகுடாவில் பவளப்பாறைகள் அழியும் அபாயம்

 

மார்ச்,28,2016. மன்னார் வளைகுடாவில், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால் பவளப்பாறைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், பவளப் பாறையைப் பாதுகாக்கவும், அவற்றை அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வனத்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் மன்னார் வளைகுடாத் தீவு பாதுகாப்பு ஆர்வலர் என்.ஜெயகாந்தன் அவர்கள் கூறியுள்ளார்.

இராமேஸ்வரம் அருகே, பாம்பன் முதல் துாத்துக்குடி வரை, 21 தீவுகளைக் கொண்டுள்ள, மன்னார் வளைகுடாக் கடலில் அமைந்துள்ள பவளப்பாறைகளில், உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும், 250 வகையான, அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.

பவளப்பாறைகள், கடல் அரிப்பை தடுத்து, அரிய மீன்களின் புகலிடமாகத் திகழ்வதால், அப்பகுதியில் மீன்பிடிக்க, வனத்துறை தடை விதித்துள்ளது. ஆனால், பாம்பன், மண்டபம், துாத்துக்குடி பகுதி மீனவர்கள், தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி உள்ளிட்ட வலைகளைப் பயன்படுத்தி, மீன் பிடிக்கின்றனர்.

இதனால், பவளப்பாறைகள் சேதமடைந்து கரை ஒதுங்குகின்றன. பவளப்பாறைகள் அழிவதுடன், அதை நம்பி வாழும் கடல் வாழ் உயிரினங்களும், அழியும் சூழல் உருவாகியுள்ளது என்று என்.ஜெயகாந்தன் அவர்கள் மேலும் கூறியுள்ளார்.

 

ஆதாரம் : தினமலர்/ வத்திக்கான் வானொலி

 

இது இரக்கத்தின் காலம்...

 

கருணை, தகுதியைப் பார்த்து செய்யப்படுவது அல்ல

 

ஒருசமயம், ப்ரெஞ்ச் பேரரசர் நெப்போலியன் அவர்களிடம் பிடிபட்ட இளைஞர் ஒருவர் தப்பியோட முயற்சித்தார். அந்நாள்களில் தப்பியோடுவது மரணதண்டனைக்குரிய குற்றம். எனவே இக்குற்றம் தொடர்பாக இராணுவ விசாரணை நடந்த நாளில் அந்த இளைஞரின் தாய் அங்கு வந்தார். பேரரசர் நெப்போலியனிடம், அரசே, இவன் எனது ஒரே மகன். திருமணம் ஆகாதவன். ஆகவே என் குலம் அழியாமலிருக்க, இவனுக்கு உயிர்ப்பிச்சை தர வேண்டும் என்று கண்ணீரோடு கெஞ்சினார். அதற்கு பேரரசர் நெப்போலியன், இவன் செய்தது கடுமையான குற்றம் என்றார். அப்போது அந்தத் தாய், என் மகன் நிரபராதி என்று சொல்லவில்லையே, கொஞ்சம் கருணை காட்டும்படித்தானே நான் தங்களிடம் வேண்டுகிறேன் என்றார். மீண்டும் பேரரசர் நெப்போலியன், உன் மகன் கருணை காட்டவும் தகுதியற்றவன் என்றார். பேரரசரே, கருணை என்பது தகுதியைப் பார்த்து செய்யப்படுவது அல்லவே என்றார் அத்தாய். இந்தக் கூற்று, பேரரசர் நெப்போலியன் அவர்களின் மனதை மாற்றியது. ஆதலால் அந்த இளைஞரை மன்னித்து விடுதலை செய்தார். இரக்கமற்ற வீரர்களாகச் செயல்பட்ட தைமூர், செங்கிஸ்கான், அட்டிலா போன்றவர்கள், வரலாற்றில் அழியாப் பழியுடன் அவப்பெயருடன் விளங்குகிறார்கள். தைமூர் பேரரசு இன்று இல்லை. செங்கிஸ்கானின் அரசு, இருந்த சுவடுகூட இப்போது இல்லை. ஆனால் பேரரசர் நெப்போலியன் அவர்களின் பிரான்ஸ் இன்றும் வலிமையுள்ள ஒரு நாடாகவேத் திகழ்கின்றது. ஆம். தன்னில் இரக்கம் உடையதே வீரம். இரக்கம், என்றென்றும் இறைவனின் ஆயுதம். நிலைத்த வெற்றியைத் தருவதும் இரக்கமே.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


Post a Comment

Powered by Blogger.