Halloween party ideas 2015
.


செய்திகள்
27.03.16

உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும்
'ஊர்பி எத் ஓர்பி' ஆசீர்
------------------------------------------------------------------------------------------------------

1. பாஸ்கா திருவிழிப்புத் திருவழிபாடு

2. திருத்தந்தை: நம்பிக்கையின்மை, நம்மை மூடியிருக்கும் முதல் கல்

3. தூய பேதுரு வளாகத்தில் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி

4. திருத்தந்தை வழங்கிய 'ஊர்பி எத் ஓர்பி' செய்தி

------------------------------------------------------------------------------------------------------

1. பாஸ்கா திருவிழிப்புத் திருவழிபாடு

மார்ச்,27,2016. கிறிஸ்தவ வாழ்வுக்கு அடித்தளமாக இருந்து, அர்த்தம் தருவது, கிறிஸ்துவின் உயிர்ப்புதான். சாவின் சக்திகள் இறைவன்முன் பலமற்றவை என்ற செய்தியைப் பறைசாற்றிக் கொண்டேயிருக்கிறது கிறிஸ்துவின் உயிர்ப்பு. இச்சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் பாஸ்கா திருவிழிப்புத் திருவழிபாட்டைத் தலைமையேற்று நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்கள், திருத்தந்தையுடன் சேர்ந்து கொண்டாடிய இத்திருப்பலியில், பல்லாயிரக்கணக்கான பல நாடுகளின் விசுவாசிகளும் பக்தியுடன் பங்கு பெற்றனர். பசிலிக்கா நிரம்பி வழிந்ததால், வளாகத்திலும் பெருமளவில் விசுவாசிகள் கூடிநின்று பெரிய திரைகளில் இத்திருவழிபாட்டில் கலந்து கொண்டனர். இத்திருவழிபாட்டில், இத்தாலிக்கான கொரியத் தூதுவர் Yong Joon Lee, அவரின் மனைவி Hee Kim ஆகியோர் உட்பட, இந்தியா, சீனா, கொரியா, இத்தாலி, அல்பேனியா, காமரூன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 12 பேர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் திருமுழுக்கு, உறுதிபூசுதல் அருளடையாளங்களைப் பெற்றனர். மூன்று மணி நேரம் நடைபெற்ற இத்திருவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறிய, ஆனால், கருத்தாழமிக்க, நம்பிக்கையூட்டும் மறையுரையும் ஆற்றினார். வாழ்வின் இன்னல்களுக்கு மத்தியில் கவலையால் ஆட்கொள்ளப்படாமல், உயிர்த்த கிறிஸ்துவின்மீது நம்பிக்கையோடு இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை: நம்பிக்கையின்மை, நம்மை மூடியிருக்கும் முதல் கல்

மார்ச்,27,2016. மார்ச் 26, சனிக்கிழமை இரவு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெற்ற உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருவழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை:
அன்பு சகோதர, சகோதரிகளே, 'பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார்' (லூக்கா 24:12) என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். கல்லறைக்கு விரைந்த பேதுருவின் மனதில் எவ்வகை எண்ணங்கள் ஓடியிருக்கும்? பேதுரு உட்பட, பதினொரு சீடர்களும், பெண்கள் அளித்த உயிர்ப்பு அறிக்கையை நம்பவில்லை. பேதுருவின் மனதில், இதைத் தவிர, வேறு கவலைகளும் இருந்தன. தன் அன்புக்குரியத் தலைவரை மும்முறை மறுதலித்த துயரம் அவர் மனதை நிறைத்திருந்தது.
ஆயினும், அவரில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது - 'பேதுரு எழுந்தார்' (லூக்கா 24:12). தன்னுடைய துயரத்திலும், கவலைகளிலும் ஆழ்ந்து, அவர் வீட்டிலேயே தங்கிவிடவில்லை. அவர், தன்னைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு, இயேசுவைத் தேடிச் சென்றார். இதுவே, அவர் மனதில் உயிர்ப்பை ஆரம்பித்து வைத்தது. இறைவனின் ஒளி, தன் உள்ளத்தில் நுழைவதற்கு அவர் அனுமதியளித்தார்.
அந்தப் பெண்களும் விடியற்காலையில் இதே போன்றதொரு அனுபவத்தைப் பெற்றனர். 'உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?' (24:5) என்று வானதூதர் சொன்ன வார்த்தைகள், அச்சமுற்று, தலைகுனிந்து நின்ற அப்பெண்களுக்குள், மாற்றங்களை உருவாக்கின.
பேதுருவைப்போல், அப்பெண்களைப் போல், நாமும், சோகத்திலும், நம்பிக்கையற்ற நிலையிலும் வாழ்வைக் கண்டுகொள்ள முடியாது என்பதை உணரவேண்டும். நமக்குள் நாமே சிறைப்பட்டிருக்க வேண்டாம். முற்றலும் மூடி, முத்திரையிடப்பட்ட கல்லறைகளைத் திறந்து, அங்கு, ஆண்டவர் நுழைவதற்கு அனுமதிப்போமாக. நம்பிக்கையின்மையே, நம்மை மூடியிருக்கும் முதல் கல். இந்தச் சிறையிலிருந்து இறைவன் நம்மை மீட்பதற்கு அவரை அனுமதிப்போமாக.
நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும், தொடர்ந்து, பிரச்சனைகளைச் சிந்திப்போம். ஆயினும், அச்சமும், இருளும் நம்மை ஆதிக்கம் செலுத்த விடாதிருப்போம். அச்சத்தையும், இருளையும் கண்டு, "அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்துவிட்டார்" (24:6) என்று முழக்கமிடுவோம்.
இறைவனே நம் பெரும் மகிழ்வு; அவர் நம்மைக் கைவிடாமல், எப்போதும் நம்முடன் இருக்கிறார். இது, வெறும் மனநிலையில் ஆர்வத்தைத் தரும் எண்ணம் அல்ல, இதுவே, நம் நம்பிக்கை. நம்மிலிருந்து வெளியேறி, இறைவனுக்கு நம் உள்ளத்தைத் திறக்கும்போது, இறைவன் நமக்கு வழங்கும் கொடையே, கிறிஸ்தவ நம்பிக்கை. தூய ஆவியார் நம் உள்ளங்களில் பொழியப்படுவதால் வரும் நம்பிக்கை இது.
தூய ஆவியார், ஒரு மந்திரக்கோல் கொண்டு, நம்மைச் சுற்றி நடப்பன அனைத்தையும் ஒரு நொடியில் மாற்றிவிடமாட்டார். ஆனால், அவர் நமக்குள் வாழ்வைப் பொழிகிறார்.
அவர் பொழியும் வாழ்வு, பிரச்சனைகள் அற்ற வாழ்வல்ல; மாறாக, இறைவனால், கிறிஸ்துவால் அன்பு செய்யப்படுகிறோம் என்ற உறுதியால் வரும் வாழ்வு. பாவம், மரணம், அச்சம் அனைத்தையும் வென்ற கிறிஸ்து வழங்கும் வாழ்வு.
ஆண்டவர் வாழ்கிறார்; அவரை வாழ்வோர் நடுவில் தேடவேண்டும் என்று அவர் விழைகிறார். அவரைத் தேடிக் கண்டபின், அவர் உயிர்த்துவிட்டார் என்ற செய்தியை அறிவிக்க நாம் ஒவ்வொருவரும் அனுப்பப்படுகிறோம்.
வாழ்வின் பொருளைக் காணமுடியாமல் போராடும் அனைவருக்கும், இந்த அறிவிப்பு மிக்க அவசியம். இந்த அறிவிப்பில், நாம் நம்மைப் பறைசாற்றுவதில்லை; மாறாக, நம்பிக்கையின் ஊழியர்களாக, உயிர்த்த இறைவனைப் பறைசாற்றுகிறோம்.
இந்த நம்பிக்கையில் எவ்விதம் உறுதி பெறுவது? இன்றைய இரவு வழிபாடு நமக்கு வழி காட்டுகிறது. "அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்" (24:6) என்று வானதூதர் சொன்னது, நமக்கு இந்த வழியைக் காட்டுகிறது. இயேசு சொன்னவற்றை, செய்தவற்றை எப்போதும் நினைவுபடுத்திக் கொள்வோம்; இல்லையேல், நாம் நம்பிக்கை இழந்துவிடுவோம்.
ஆண்டவர் இயேசுவின் சொற்களை, செயல்களை, நன்மைத்தனத்தை எப்போதும் நினைவில் கொள்வோம்; உயிர்த்த ஆண்டவரை, அனைவரும் காண்பதற்கு நாம் உதவியாக இருப்போம்.
அன்பு சகோதர, சகோதரிகளே, கிறிஸ்து உயிர்த்துவிட்டார்! நம்பிக்கையே, அவர் அளிக்கும் கொடை. இந்த நம்பிக்கையை உள்ளத்தில் ஏற்று, புறப்படுவோம்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. தூய பேதுரு வளாகத்தில் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி

மார்ச்,27,2016. மார்ச், 27, இஞ்ஞாயிறு, இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா. "இயேசு கிறிஸ்து உயிர்த்துவிட்டார். அன்பு, வெறுப்பையும், வாழ்வு, மரணத்தையும், ஒளி, இருளையும் வெற்றி கண்டுள்ளன" என்ற டுவிட்டர் செய்தியையும் இந்நாளில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் உயிர்த்தெழுதல் பெருவிழாத் திருப்பலியை தலைமையேற்று நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பலி மேடையில் திருத்தந்தை அமர்ந்த இடமும், திருப்பலி நிறைவேற்றிய பீடமும், அதற்கு முன்புறமும், வண்ண மலர்களால், குறிப்பாக, மஞ்சள் நிற மலர்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தன. இத்திருப்பலியில் கலந்து கொள்வதற்கு வளாகத்திற்குச் செல்லும் மக்கள், காவல்துறையினரால் நன்கு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுப்பப்படுவதால் பெருந்திரளான மக்கள் அதிகாலையிலே வளாகத்தைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். பெல்ஜியம் நாட்டின் அரசர் 4ம் பிலிப்பே அவர்கள் தன் குடும்பத்தினரோடு கலந்துகொண்ட இத்திருப்பலியில், பெல்ஜியம் முன்னாள் அரசர் 2ம் ஆல்பர்ட் அவர்களும், முன்னாள் அரசி பவுலா அவர்களும் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரையும், திருப்பலிக்குப் பின்னர், திருத்தந்தை சந்தித்து, அண்மையில் பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை வழங்கிய 'ஊர்பி எத் ஓர்பி' செய்தி

மார்ச்,27,2016. இஞ்ஞாயிறு காலை, உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை நிறைவுசெய்து, பகல் 12 மணிக்கு, வத்திக்கான் பசிலிக்காவின் மேல்மாடத்தின் நடுப்பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு கர்தினால்களுடன் தோன்றி, ஊர்பி எத் ஓர்பி என்ற, உரோம் நகருக்கும், உலகுக்குமான செய்தியை வழங்கினார்.  
"ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர். என்றும் உள்ளது அவரது பேரன்பு" (தி.பா.136,1) என்ற திருப்பா வசனத்துடன் ஊர்பி எத் ஓர்பி செய்தியைத் தொடங்கி, அன்புச் சகோதர சகோதரிகளே, உங்களுக்கு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள் என்று சொல்லி, தனது செய்தியைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனின் இரக்கத்தின் மனித உருவான இயேசு கிறிஸ்து, நம்மீது வைத்துள்ள அன்பினால், சிலுவையில் மரித்தார். நம்மீது கொண்டுள்ள அன்பினால், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். இதனாலே, இயேசு, ஆண்டவர் என்று இன்று நாம் அறிக்கையிடுகிறோம். இறைவனின் இரக்கம் என்றென்றும் உள்ளது, அது ஒருபோதும் இறப்பதில்லை என்ற திருப்பாடல் இறைவாக்கு, இயேசுவின் உயிர்ப்பில் நிறைவுறுகின்றது. நாம் அவரை முழுமையாக நம்பலாம். நாம் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். ஏனெனில், அவர் நமக்காக, பாதாளத்தின் ஆழத்திற்குச் சென்றார். மனித குலத்தின் ஆன்மீக மற்றும் அறநெறிப் படுகுழிகளுக்கு முன்னர், வெறுப்பையும் மரணத்தையும் இதயங்களில் தூண்டுகின்ற பாழ்வெளிகளுக்கு முன்னர், எல்லையற்ற இரக்கமே நமக்கு மீட்பைக் கொண்டு வரும். இறைவன் மட்டுமே, இந்தப் பாதாளங்களில் நாம் வீழ்ந்து விடாமல் தடுத்து, தம் அன்பால் அவற்றை நிரப்ப முடியும். சுதந்திரம் மற்றும் வாழ்வின் நிலம் நோக்கிய நம் பாதையில் தொடர்ந்து செல்வதற்கு நமக்கு உதவ முடியும்.
சிலுவையில் அறையுண்ட இயேசு இங்கே இல்லை, அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் (காண்க. மத். 28,5-6) என்ற மகிமையான உயிர்ப்புச் செய்தி, மரணத்தின் பிடியிலிருந்தும், அழுகை, துன்பம், வேதனை ஆகியவற்றிலிருந்தும் நாம் கடந்து விட்டோம் என்ற ஆறுதல் தரும் உறுதியை அளிக்கின்றது. தம் சீடர்கள் கைவிட்டுவிட்டதாலும், அநியாயமான தீர்ப்பின் சுமையாலும், இழிவான மரணத்தின் வெட்கத்தாலும் துன்புற்ற ஆண்டவர், இப்போது தம் அழியா வாழ்வின் பங்குதாரர்களாக நம்மை ஆக்குகிறார். பசித்திருப்பவர், தாகமாயிருப்பவர், அந்நியர், கைதிகள், ஓரங்கட்டப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், அடக்குமுறை, வன்முறைக்குப் பலியாகுபவர் ஆகியோரை, அவரின் கண்களால் அன்போடும், பரிவோடும் நாம் பார்ப்பதற்கு உதவுகிறார். இந்த நம் உலகம், உடலிலும், ஆவியிலும் துன்புறும் மக்களால் நிறைந்துள்ளது. அன்றாடச் செய்திகளும் கொடும் குற்றங்கள் நிறைந்த கதைகளால் முழுவதும் நிறைந்துள்ளன. இவை, அடிக்கடி வீடுகளிலும், மக்கள் அனைவருக்கும் விவரிக்க முடியாத துன்பங்களை ஏற்படுத்தும் பெருமளவில் ஆயுதம் ஏந்திய சண்டைகளிலும் இடம்பெறுகின்றன.
உயிர்த்த கிறிஸ்து, அன்புக்குரிய சிரியா நாட்டுக்கு நம்பிக்கையின் பாதையைக் காட்டுகின்றார். இந்நாடு, நீண்டகாலச் சண்டையாலும், அழிவு, மரணம், அவமதிக்கப்பட்ட மனிதாபிமானச் சட்டம் மற்றும் அமைதி ஒப்பந்தம் முறிவுபட்ட சோகத்தாலும்     பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்நாடு குறித்து இடம்பெற்றுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள், அமைதியிலும், அனைவரின் நன்மனமும், ஒத்துழைப்பும் அமைதியைக் கொணர நல்ல பலன்களைத் தருவதற்கும், ஒவ்வொரு குடிமகனின் மாண்பும் உரிமைகளும் மதிக்கப்படும் உடன்பிறப்பு உணர்வு மிக்க சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பணிகளைத் தொடங்கவும், உயிர்த்த ஆண்டவரின் வல்லமையில் அர்ப்பணிப்போம். கல்லறை வாயிலில் புரட்டப்பட்ட கல் அருகே நின்ற வானதூதர்   அறிவித்த வாழ்வின் செய்தி, மத்திய தரைக்கடல் பகுதி, மத்திய கிழக்கு, குறிப்பாக, ஈராக், ஏமன் மற்றும் லிபியா நாடுகளில் கடின இதயங்களை மாற்றி, கலாச்சாரங்கள் மற்றும் மக்களின் பலனுள்ள சந்திப்பை ஊக்குவிக்கட்டும். கிறிஸ்துவின் திருமுகத்தில் ஒளிரும் புதிய மனிதரின் உருவம், புனித பூமியில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனாவுக்கும் இடையே சாதகமான ஒப்பந்தத்தைக் கொண்டுவரட்டும். நேரடியான மற்றும் உண்மையான பேச்சுவார்த்தைகள் வழியாக, நீதி மற்றும் நிலையான அமைதிக்கு அடித்தளங்களை அமைக்க, பொறுமை, திறந்த மனம் மற்றும் அன்றாட அர்ப்பணத்திற்கு வழி அமைப்பதாக. வாழ்வின் ஆண்டவர், உக்ரேய்னில் இடம்பெறும் சண்டை முடிவுபெறுவதற்கு முடிவான தீர்வை எட்டும் முயற்சிகளுக்குத் துணை நிற்பாராக. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலை பெறுவது உட்பட, மனிதாபிமான உதவிகள் சென்றடைய உறுதியான முயற்சிகள் எடுக்கப்பட உள்ளங்களைத் தூண்டுவாராக.
நமக்கு அமைதி அருளும் இயேசு ஆண்டவர், தம் உயிர்த்தெழுதலால் தீமையையும், பாவத்தையும் வெற்றி கண்டார். பெல்ஜியம், துருக்கி, நைஜீரியா, சாட் (Chad), காமரூன், ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற அண்மைத் தாக்குதல்கள் போன்று, உலகின் பல்வேறு பாகங்களில் தொடர்ந்து இடம்பெறும் இரத்தம் சிந்தும், கண்மூடித்தனமான கொடும் வன்முறையின் வடிவமான பயங்கரவாதத்திற்குப் பலியாகுபவரிடம் இந்த உயிர்ப்புப் பெருவிழா நெருக்கமாக நம்மை இட்டுச் செல்லட்டும். ஆப்ரிக்காவில் அமைதி நிலவுவதற்கு, உயிர்த்த ஆண்டவர், நம்பிக்கை மற்றும் வளமை விதைகளைத் தெளிப்பாராக. அரசியல் மற்றும் சமூகப் பதட்டநிலைகளால் நிறைந்துள்ள புருண்டி, மொசாம்பிக், காங்கோ சனநாயகக் குடியரசு, தென் சூடான் ஆகிய நாடுகளைச் சிறப்பாக நினைத்துப் பார்க்கின்றேன்.
இறைவன், அன்பின் ஆயுதங்களால், தன்னலத்தையும், மரணத்தையும் தோற்கடித்தார். அவரின் திருமகன் இயேசு, இரக்கத்தின் கதவை நம் எல்லாருக்கும் அகலத் திறந்துள்ளார். இக்கட்டான சூழல்களை அனுபவிக்கும் அன்புக்குரிய வெனெசுவேலா நாட்டு மக்கள் உயிர்ப்புச் செய்தியை மிகவும் சக்திமிக்கதாய் உணரட்டும். நாட்டின் வருங்காலத்திற்குப் பொறுப்பானவர்கள் அனைவரோடும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பைத் தேடி பொது நலனுக்காக உழைப்பார்களாக.
உயிர்த்த கிறிஸ்துவின் உயிர்ப்புச் செய்தி, அனைத்து மனித சமுதாயத்தின் வாழ்வுக்கான செய்தி. இது எல்லாக் காலங்களிலும் பிரதிபலிக்கும் செய்தி. போர், பசி, வறுமை மற்றும் சமூக அநீதிக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறும் ஏராளமான சிறார் உட்பட, புலம்பெயர்ந்தவர் மற்றும் அகதிகள் என, நல்லதோர் எதிர்காலத்தைத் தேடும் அனைவரையும் மறக்க வேண்டாம் என இச்செய்தி அழைப்பு விடுக்கின்றது. இவர்கள் வரும் வழியில் அடிக்கடி மரணத்தையும், இவர்களை வரவேற்று உதவியளிக்கக் கூடியவர்களால் புறக்கணிப்பையும் எதிர்கொள்கின்றனர். நடக்கவிருக்கும் உலக மனிதாபிமான உச்சி மாநாடு, மனிதரையும், அவர்களின் மாண்பையும் மையப்படுத்தி நடப்பதிலிருந்து தவறாதிருக்கட்டும்.
இந்தப் பூமி, பேராசையால் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருவதால் அதன் சமத்துவநிலையில் மாற்றம் இருந்தாலும், இந்த மகிமையான நாளில் பூமி அகமகிழட்டும். காலநிலை மாற்றத்தால் வறட்சி அல்லது பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளைச் சிறப்பாக நினைத்துப் பார்க்கின்றேன்.
தங்களின் விசுவாசத்திற்கும், கிறிஸ்துவின் பெயருக்கு விசுவாசமாக இருப்பதாலும் நசுக்கப்படும் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து, நம் ஆண்டவரின் ஆறுதல் தரும் வார்த்தைகளை மீண்டும் கேட்போம். "துணிவுடன் இருங்கள், நான் உலகின்மீது வெற்றி கண்டுவிட்டேன்" (யோவா.16,33). கிறிஸ்து சாவை அழித்து மரணத்தை வென்றுள்ளார் (காண்க. 2திமொ.1,10). எனவே இவ்வெற்றியின் சுடர்விடும் நாள் இது. நம் சமுதாயத்தில், வாழ்வில் நம்பிக்கை மற்றும் மகிழ்வை இழந்த அனைவருக்கும், தனிமையாகப் போராடி தங்களின் சக்தி தேய்ந்து வருவதாக உணரும் வயதானவர்கள், எதிர்காலம் இல்லாததாக உணரும் இளையோர் என, எல்லாருக்கும் மீண்டும் உயிர்த்த ஆண்டவரின் வார்த்தைகளைச் சொல்கிறேன். இதோ நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்... தாகமாய் இருப்போருக்கு வாழ்வு அளிக்கும் நீரூற்றிலிருந்து நான் இலவசமாய்க் குடிக்கக் கொடுப்பேன். (திருவெளிப்பாடு 21: 5-6) இந்த ஆறுதலளிக்கும் இயேசுவின் செய்தி, இறைவனோடும், நம் சகோதர சகோதரிகளோடும் ஒப்புரவாகுவதற்கு அதிகத் துணிச்சலுடன் மீண்டும் வாழ்வைத் தொடருவதற்கு நமக்கு உதவுவதாக.
இவ்வாறு ஊர்பி எத் ஓர்பி செய்தியை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளாகத்திலும், அதன் முன்புறமுள்ள அகன்ற சாலையிலும் கூடிநின்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துச் சொன்னார். பின்னர் தனது சிறப்பு ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த ஆசிரை, வானொலி, தொலைகாட்சி வழியாக உட்பட, தகுந்த தயாரிப்போடும், மரியாதையோடும் பெறுபவர்க்குப் பரிபூரண பலன் உண்டு. ஊர்பி எத் ஓர்பி செய்தி மற்றும் ஆசிர், ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் மற்றும் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா நாள்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை பல நாடுகளுக்கு நேரடியாகவும் ஒளிபரப்பப்படுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


Post a Comment

Powered by Blogger.