Halloween party ideas 2015
.


அறிவிப்பு

புனித வார நிகழ்வுகளின் காரணமாக மின்னஞ்சல் செய்திகள், வெள்ளி, சனிக்கிழமைகளில் வெளிவராது. எமது அடுத்த மின்னஞ்சல், உயிர்ப்புப் பெருவிழாவன்று, திருத்தந்தை வழங்கும் 'ஊருக்கும் உலகுக்கும்' (Urbi et Orbi) செய்தியைத் தாங்கி வரும்.


செய்திகள்
24.03.16
------------------------------------------------------------------------------------------------------

1. புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலி, மாலை வழிபாடு

2. புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

3. மக்களின் நன்மதிப்பில் முதலிடம் பெற்றுள்ளவர், திருத்தந்தை பிரான்சிஸ்

------------------------------------------------------------------------------------------------------

1. புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலி, மாலை வழிபாடு

மார்ச்,24,2016. அன்பு இதயங்களே, புனித வியாழன், அருள்பணியாளர்களுக்குச் சிறப்பு நாள். இந்நாளில், நற்செய்தியின் மகிழ்வைப் பிறருக்கு வழங்குவதற்கு, மகிழ்வெனும் எண்ணெய்யால் திருப்பொழிவு செய்யப்படுவோம் என்ற செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், புனித வியாழன் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். புனித வியாழன், அருள்பணியாளர்களுக்கு முக்கியமான நாள் என்பதால், இத்திருப்பலியில், கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அருள் பணியாளர்கள் பங்கேற்றனர். பசிலிக்காவில் விசுவாசிகள் கூட்டமும் நிறைந்திருந்தது.
மேலும், இத்தாலியில் புகலிடம் கேட்டுக் காத்திருக்கும், பல நாடுகளின் குடியேற்றதார இளையோரை வரவேற்கும் மையம் அமைந்துள்ள Castelnuovo di Portoக்கு, புனித வியாழன் மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்கிறார்.
புனித வியாழன் மாலை வழிபாட்டின் ஒரு பகுதியாக, Castelnuovo di Portoவில், பன்னிரண்டு குடியேற்றதார இளையோரின் பாதங்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கழுவுகிறார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

2. புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

இவ்வியாழன் காலை, புனித பேதுரு பசிலிக்காவில் நிகழ்ந்த புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியில், அருள்பணியாளர்களுக்கென, சிறப்பான வகையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறையுரை வழங்கினார்.
அன்பு சகோதர, சகோதரிகளே, இயேசு தான் வளர்ந்த ஊராகிய நாசரேத் தொழுகைக் கூடத்தில் இறைவாக்கினர் எசாயாவின் பகுதியிலிருந்து வாசித்தபோது, நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று (லூக்.4,21) என்றார். அப்போது அங்கிருந்த மக்கள் ஆனந்தக் கண்ணீர் உதிர்த்து மகிழ்வுக் கரவொலிகளை எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அதற்கு மாறாக நடந்துகொண்டார்கள் என்று நற்செய்தி சொல்கிறது. ஏழைகள், புறவினத்தார் ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு இறைத்தந்தையின் வரையறையற்ற இரக்கத்தை இயேசு அறிவித்த இடத்தில் நாமும் நின்று, விசுவாச வாழ்வுக்கான நல்போராட்டத்தில் ஈடுபட அழைக்கப்படுகிறோம். நம் இறைவனின் இரக்கம் எல்லையற்றது மற்றும் விவரிக்க முடியாதது. புறக்கணிப்பும் வன்முறையும் ஆதிக்கம் செலுத்தும் பயனற்ற நிலத்தில் நாம் இந்த இரக்கத்தின் வல்லமையை அறிவிப்பதற்கு ஒவ்வொரு நாளும் வழிகளைத் தேடி, அதில் முன்னேற வேண்டும். நல்ல சமாரியரின் பாதை இதுவாக இருந்தது. இறைவனின் இரக்கம், நம் வாழ்வில் நாம் கற்பனை செய்வதற்கு அதிகமாகவே பொழியப்படுவதை நாம் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒருதுளி இரக்கத்தைப் பிடித்து வைப்பதற்காக, எதுவும் வீணாவதை இயேசு விரும்புகிறார். அருள்பணியாளர்களாகிய நாம், என்றென்றும் அதிகரிக்கும் மற்றும் அளவற்ற இறைத்தந்தையின் இரக்கத்திற்குச் சான்றுகளாகவும், திருப்பணியாளர்களாகவும் இருக்கின்றோம்.  இரக்கத்தின் யூபிலி ஆண்டின் இந்தப் புனித வியாழனன்று, நம் ஆண்டவர் இயேசு, மிக அதிக அளவில் இரக்கம் காட்டிய இரு பகுதிகள் பற்றிப் பேச விழைவதாக மறையுரையில் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்று, சந்திப்பு மற்றது இறைவனின் மன்னிப்பு என்று சொல்லி இவையிரண்டு பற்றி விளக்கினார்.
சந்திப்பில் இறைவன் தமது எல்லையற்ற இரக்கத்தை அதிகமதிகமாகக் காட்டுகிறார். ஒவ்வொரு சந்திப்பும் அகமகிழ்ச்சியைத் தருவதாக அமைகின்றது. இதை, இரக்கமுள்ள தந்தை உவமையில், தந்தை தனது மகன்மீது காட்டிய இரக்கத்தை வியந்து நோக்குகையில் உணர்கிறோம். திரும்பி வந்த தனது மகனை, சுதந்திரமாகவும், கரையற்ற அன்போடும் ஏற்ற தந்தையின் மகிழ்வை நாம் தியானிக்கும்போது, நம் நன்றியை அதிகமாகக் காட்டுவதற்குப் பயப்படத் தேவையில்லை. இயேசு குணப்படுத்திய பத்து தொழுநோயாளர்களுள், இயேசுவின் காலடியில் வீழ்ந்து நன்றி சொன்ன அந்த ஓர் ஏழைத் தொழுநோயாளியின் எண்ணம் நமக்கும் இருக்க வேண்டும். இரக்கம் ஒவ்வொரு மனிதரின் மாண்பைக் காக்கிறது. இதனாலேயே, அதிகப்படியான நன்றியுணர்வு, இரக்கத்திற்கு நாம் காட்டும் தகுந்த பதிலாக அமைகின்றது. நாம் விருந்தில் கலந்துகொள்ளும்போது, காணாமற்போன மகன் திரும்பிவந்ததை விரும்பாத மூத்த மகனின் பண்பைக் கைவிட்டு, முதல் தரமான ஆடைகளை அணிந்து, அகமகிழ்ந்து நன்றிகூரவேண்டும். இத்தகைய மகிழ்வுடன் பங்குகொள்வதன் வழியாகவே, நாம் செய்த தீமைகளைக் களைவது எப்படி என, தெளிவாகப் பார்க்க முடியும்.
ஒப்புரவு அருளடையாளத்திற்குச் சென்று திரும்பிய பின்னர், உண்மையிலேயே நான் மகிழ்கின்றேனா? அல்லது, மருத்துவரைச் சந்தித்து, நோய் பற்றிய ஆய்வு முடிவுகள் அவ்வளவு மோசமில்லை என்று தெரிந்துகொண்டு, அவற்றை ஒரு கவரில் போட்டு விடுவது போல, ஒப்புரவு அருளடையாளத்திற்குச் சென்ற பின்னர் அடுத்த காரியத்தில் உடனடியாக இறங்குகிறேனா? தர்மம் கொடுக்கும்போது, அதைப் பெறும் மனிதர் நன்றி சொல்வதைப் பார்த்து மகிழ்வதற்கும் நேரமில்லாமல், அடுத்த சொந்த காரியத்தில் வேகமாக இறங்கிவிடுகிறேனா? என்று சிந்தித்துப் பார்ப்போம் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அடுத்து, இறைவன் தமது மன்னிப்பில் எவ்வாறு அளவற்ற இரக்கத்தைக் காட்டுகிறார் என்பது பற்றியும் மறையுரையில் விளக்கினார் திருத்தந்தை.
நற்செய்தியில், இரக்கத்திற்காக மன்றாடிய ஊழியருக்குச் செய்தது போன்று, இறைவன், கணக்கிட முடியாத நம் கடன்களை மட்டும் மன்னிக்கவில்லை, ஆனால், கடன்பட்டதால் ஏற்பட்ட வெட்கத்திலிருந்தும் மீட்டு, உயர்ந்த மாண்பையும் நமக்கு அளிக்கிறார். மன்னிப்புப்பெற்ற பெண், கண்ணீரால் தம் கால்களைக் கழுவ, இயேசு அனுமதிக்கிறார். ஆதாம், ஏவாள் போன்று, நம் பாவங்களால் வெட்கமடையும்போது, நம்மை மறைத்துக்கொண்டு, தலையைக் கவிழ்ந்த வண்ணம் நடக்கின்றோம். இறைவன் நம்மை அளவுகடந்து மன்னிப்பதற்கு நாம் கொடுக்கும் பதில், மறைப்பணியின் நன்மைக்காக ஆண்டவரால் உயர்த்தப்படுவதற்கு அனுமதிப்பதாகும். அருள்பணியாளர்கள் என்ற முறையில், ஒதுக்கப்பட்ட மக்களோடு நம்மை ஒன்றுபடுத்துகிறோம். அதேநேரம், நாமும் அடிக்கடி விசுவாச ஒளியை இழந்தவர்களாய், பார்வையற்றவர்களாய் இருக்கிறோம் என்பதை நினைவுகூர வேண்டும். இயேசு இந்நிலையிலிருந்து நம்மை மீட்டு, இரக்கம் மற்றும் ஆறுதலின் திருப்பணியாளர்களாக நம்மை மாற்றுவதற்காக இவ்வுலகிற்கு வந்தார். இந்த யூபிலி ஆண்டில், நன்றி நிறைந்த உள்ளத்தோடு, இறைத்தந்தையைக் கொண்டாடுகிறோம். அவரின் இரக்கத்தை எப்பொழுதும் நினைவில் கொள்வதற்குச் செபிக்கின்றோம். நம்மை, பாவங்கள் மற்றும் தீமைகள் அனைத்திலுமிருந்து காப்பாற்றுமாறு செபிப்போம். இறைவனின் இரக்கத்தை எல்லா மனிதருக்கும் கொண்டு செல்வதற்கு ஏற்றவகையில் நம்மைப் புதுப்பிப்பதற்குத் தூய ஆவியாரின் அருளை இறைஞ்சுவோம்.
இவ்வாறு தனது மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

3. மக்களின் நன்மதிப்பில் முதலிடம் பெற்றுள்ளவர், திருத்தந்தை பிரான்சிஸ்

மார்ச்,24,2016. உலகின் அனைத்து அரசியல் தலைவர்களைவிட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மக்களிடையே அதிக நன்மதிப்பை பெற்றுள்ளார் என்று, இவ்வியாழனன்று வெளியான ஒரு கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.
WIN/Gallup International என்ற ஒரு கருத்துக்கணிப்பு நிறுவனம், 64 நாடுகளில், 1000க்கும் அதிகமான மக்களிடையே மேற்கொண்ட ஒரு கருத்துக்கணிப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதம் என்ற எல்லையைத் தாண்டி, அனைத்து மதத்தினரிடையிலும், மத நம்பிக்கையற்றவர் நடுவிலும் நன்மதிப்பு பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மதம் என்ற எல்லையைக்  கடந்து, பெரும்பான்மையான உலக மக்களிடையே நேர்மறையான தாக்கங்களை உருவாக்கியுள்ளார் என்பதை அறிய முடிகிறது என்று, WIN/Gallup International கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் தலைவர், Jean-Marc Leger அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
கத்தோலிக்க மக்கள் மத்தியில், 85 விழுக்காட்டினர், திருத்தந்தை மீது உயர்ந்த மதிப்பு வைத்துள்ளனர் என்றும், அதற்கு அடுத்தபடியாக, யூதர்கள் மத்தியில், 65 விழுக்காட்டினர் அவர் மீது உயர்ந்த மதிப்பு கொண்டுள்ளனர் என்றும் இக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட 64 நாடுகளில், பிலிப்பைன்ஸ் நாட்டில், 93 விழுக்காட்டினர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை தாங்கள் மிகவும் மதிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுவரை WIN/Gallup International நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்புகளில் உயர்ந்த நிலைகளை வகித்துவந்த அமெரிக்க அரசுத் தலைவர் ஒபாமா, ஜெர்மன் அரசுத் தலைவர் ஆஞ்செலா மெர்க்கெல் போன்ற அனைத்துத் தலைவர்களையும் விட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் கொண்டுள்ள மதிப்பில் முதலிடம் பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் :  BBC / வத்திக்கான் வானொலி

இது இரக்கத்தின் காலம்...

எப்பொழுதும் நல்லவர் இறைவன்

ஒருசமயம், ஆசிரமக் குரு ஒருவர், தன் சீடர்களுடன் பயணம் செய்தார். பயணம் சென்ற வழியில் எந்த ஊரும் தென்படவில்லை. மரம், செடி, கொடிகளும் பார்வையில் படவில்லை. தாகத்துக்கு நீர் நிலைகள்கூட எங்கும் இருந்ததாகத் தெரியவில்லை. அதனால் சீடர்கள் அனைவரும் சோர்ந்து போயினர். இருட்டியதும் ஓரிடத்தில் எல்லாரும் தங்கினார்கள். களைப்புடனிருந்த சீடர்கள் உடனே படுத்துவிட்டனர். ஆனால் குரு அப்படிச் செய்யவில்லை. இறைவா, இன்று நீர் அருளிய எல்லாவற்றுக்கும் எனது உளமார்ந்த நன்றி என்று மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார். அச்செபத்தைக் கேட்டு வியப்புடன் எழுந்த சீடர் ஒருவர், குருவே, இறைவன் இன்று நமக்கு ஒன்றுமே தரவில்லையே என்று வினவினார். அதற்கு குரு, யார் சொன்னது? என்றார் புன்னகையுடன். பின்னர் சொன்னார் : இன்று இறைவன் நமக்குப் பசியை அளித்தார், அற்புதமான தாகத்தை அளித்தார். அதற்காகத்தான் நான் நன்றி செலுத்துகிறேன் என்று.
ஆம். உணர்ந்தோர் உரையார், உரைப்போர் உணரார் என்று சொல்வார்கள். எவ்வேளையிலும், என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றிகூறச் சொல்கிறார் பவுலடிகளார். இறைவன் நல்லவர், கருணையுள்ளவர். இன்பம் எதனால் வருகிறதோ அதனாலேயே துன்பமும் வருகிறது. எதில் இன்பம் இல்லையோ அதில் துன்பம் என்பதும் இல்லை. ஞானிகள் எதையும் வெறுப்பதில்லை. அவர்கள் அனைத்தையும் சமமாகப் பார்க்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலிPost a Comment

Powered by Blogger.