Halloween party ideas 2015
.

வத்திக்கான் வானொலி செய்திகள்



முக்கிய அறிவிப்பு :

மார்ச் 27, வருகிற ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வத்திக்கான் வானொலியின் தினசரி இரவு 8.20 மணி ஒலிபரப்பு 25 மீ.பா., 11,660 கி.ஹெ., 19 மீ.பா. 15,470 கி.ஹெ.லும், தினசரி காலை 6.30 மணி மறு ஒலிபரப்பு 25 மீ.பா., 11,730 கி.ஹெ., 19 மீ.பா. 15,470 கி.ஹெ.லும், காலை 7.50 மணி ஒலிபரப்பு 19 மீ.பா. 15,460 கி.ஹெ.லும் இடம் பெறும்.


செய்திகள்
23.03.16
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் Instagram செயலியைப் பார்ப்பவர் 15 இலட்சம்

2. உலக இளையோரின் கரங்களில் இரக்கத்தின் சுடரொளி

3. திருமுழுக்குப் பெற தீர்மானித்திருப்போரின் எண்ணிக்கை கூடியுள்ளது

4. பிலிப்பைன்ஸ் - தங்களையே சிலுவையில் அறைதலைக் கைவிட அழைப்பு

5. அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு பிலிப்பைன்ஸ் ஆயர்கள் எதிர்ப்பு

6. பிரசல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு WCC கண்டனம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் Instagram செயலியைப் பார்ப்பவர் 15 இலட்சம்

மார்ச்,23,2016. "தங்களின் உயிரை இழந்த அனைவரையும் இறைவனின் இரக்கத்தில் ஒப்படைக்கின்றேன்" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.
ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் டுவிட்டரில் சிந்தனைகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரசல்ஸ் நகரில் பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை இச்செவ்வாய் டுவிட்டரில் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், படங்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் Instagram என்ற வலைத்தள செயலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 19, கடந்த சனிக்கிழமையன்று செயலாற்றத் துவங்கியதற்குப் பின்னர், 15 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அதனைப் பார்த்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் ஊடகத் துறையால் நடத்தப்படும், 'Franciscus' என்ற திருத்தந்தையின் Instagram செயலியில், "இறைவனின் இரக்கம் மற்றும் கனிவு வழியில் உங்களோடு இணைந்து நான் நடக்க விழைகிறேன்" என்ற வார்த்தைகளோடும், திருத்தந்தை செபிக்கும் வண்ணம் அமைந்திருந்த படத்துடனும் அவரது முதல் வெளியீடு இருந்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தை ஏற்கனவே 2 கோடியே 70 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பின்பற்றிவரும்வேளை, Instagram வலைத்தள செயலி தொடங்கிய சில நாள்களிலேயே 15 இலட்சத்துக்கு மேற்பட்டோர் அதனைப் பின்பற்றி வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. உலக இளையோரின் கரங்களில் இரக்கத்தின் சுடரொளி

மார்ச்,23,2016. போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நடைபெறும் உலக இளையோர் தினம், இத்தினத்தை உருவாக்கிய திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், புனிதர் பட்டம் பெற்றபின் நடக்கும் முதல் உலக இளையோர் தினம் என்றும், இப்புனிதர் பிறந்த கிராக்கோவ் உயர் மறைமாவட்டத்தில் முதன்முறை நிகழும் இளையோர் தினம் என்றும், போலந்து கர்தினால் Stanislaw Dziwisz அவர்கள் கூறினார்.
வருகிற ஜூலை 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம் பற்றி, செனிட் மற்றும் நான்கு இத்தாலிய பத்திரிகையாளர்க்குப் பேட்டியளித்த கிராக்கோவ் பேராயர் கர்தினால் Dziwisz அவர்கள், இந்த இரக்கத்தின் ஆண்டில், உலக இளையோர் தினம் மிக முக்கிய நிகழ்வாக அமையும் என்று கூறினார்.
இந்த உலக நிகழ்வில் கலந்துகொள்ள வருகின்ற 174 நாடுகளின் இளையோர் பிரதிநிதிகளை ஏற்பதற்கு கிராக்கோவ் நகரம் தயாராகிக் கொண்டு வருகிறது என்றும், இந்நிகழ்வில் இந்த இளையோர் பெறும் இரக்கத்தின் சுடரொளியை, அமைதி தேவைப்படும் இன்றைய உலகுக்கு எடுத்துச் செல்ல, அவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் கூறினார் கர்தினால் Dziwisz.
இரக்கமே நிறைந்த இயேசுவின் பக்கம் பார்வையைச் செலுத்தாமல் அமைதியை அடைய முடியாது என்று அருள்சகோதரி, புனித ஃபவுஸ்தீனா கொவால்ஸ்கா (Faustina Kowalska) அவர்கள் கூறியிருப்பதையும் நினைவுகூர்ந்த கர்தினால் Dziwisz அவர்கள், 1930களில் கிராக்கோவ் மறைமாவட்டத்தில் இரக்கத்தின் இயேசு இப்புனிதருக்குத் தம்மை வெளிப்படுத்தினார் என்றும் கூறினார்.
குடிபெயர்ந்தவர் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் Dziwisz அவர்கள், போலந்து இம்மக்களை வரவேற்கும், ஏனெனில் போலந்து மக்களும் குடிபெயர்ந்தவர்களே என்றும் கூறினார்.
வருகிற ஜூலை 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை கிராக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்து கொள்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

3. திருமுழுக்குப் பெற தீர்மானித்திருப்போரின் எண்ணிக்கை கூடியுள்ளது

மார்ச்,23,2016. இவ்வாண்டு, உயிர்ப்புப் பெருவிழாவன்று, வயது வந்தோர் பலர், திருமுழுக்குப் பெற தீர்மானித்து, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் என்று, வசாய் பேராயர், பீலிக்ஸ் மச்சாடோ அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.
ஆசிய ஆயர் பேரவையின், பல்சமய உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக்குழுவின் தலைவரான பேராயர் மச்சாடோ அவர்கள், தன் உயர் மறைமாவட்டத்தில், கிறிஸ்தவர்களாக மாற தீர்மானித்திருப்போரின் எண்ணிக்கை கூடியுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
வயது வந்தவர்கள் மேற்கொள்ளும் இந்த முடிவு, கிறிஸ்துவின் மீது அவர்கள் உணரும் ஆழ்ந்த ஈர்ப்பினால் உருவாகிறது என்றும், வேறு எந்த காரணங்களும் அல்ல என்றும் பேராயர் மச்சாடோ அவர்கள் தெரிவித்தார்.
தாங்கள் பிறந்து வளர்ந்த மதத்தை வெறுத்து இவர்கள் வெளிவரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் மச்சாடோ அவர்கள், கிறிஸ்து என்ற உண்மையில் பொதிந்துள்ள கருவூலங்களை இவர்கள் கண்டுகொண்டதால், அவரைப் பின்பற்ற விழைகின்றனர் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
இறை இரக்கத்தின் தெளிவான வெளிப்பாடாக விளங்கும் கிறிஸ்துவின் முகம், அவரது வாத்தைகள் போன்றவையே தங்களை ஈர்த்துள்ளன என்று கூறும் இவர்களைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதையும், பேராயர் மச்சாடோ அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

4. பிலிப்பைன்ஸ் - தங்களையே சிலுவையில் அறைதலைக் கைவிட அழைப்பு

மார்ச்,23,2016. பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கரில் பலர், புனித வாரத்தில் தங்களைச் சிலுவையில் அறைதல், கசையால் அடித்தல் போன்ற கடுமையான தப முயற்சிகளைச் செய்துகொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருக்கும்வேளை, தங்களை வேதனைப்படுத்தும் இப்பழக்கத்தைக் கைவிட்டு ஏழைகளுக்கு உதவுமாறு கேட்டுள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.
புனித வாரத்தை உண்மையிலேயே நல்ல விதமாகச் செலவிட விரும்பினால், பிறரை அதிகமதிகமாக அன்புகூருங்கள், மற்றும் ஏழைகளுக்குக் கொடுத்து உதவுங்கள் என்று, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Socrates Villegas அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏழைகளுக்குக் கொடுத்து உதவும் திருப்பயணம், நாம் வாழும் இக்காலத்தில் புனித வாழ்விற்கு மெருகூட்டும் என்று குருத்தோலை ஞாயிறன்று கூறிய பேராயர் Villegas அவர்கள், தங்களையே துன்புறுத்துவதும், பக்திமுயற்சியை விளம்பரப்படுத்துவதும், பகல்கனவு காணும் தியானங்களும் புனித வாரத்தைப் புனிதமாக்காது என்று கூறினார்.
மேலும், பரிவன்பு எங்கே இருக்கின்றது? இரக்கம் எங்கே இருக்கின்றது? என்ற கேள்விகளை விசுவாசிகளிடம் குருத்தோலை ஞாயிறன்று முன்வைத்தார் மனிலா கர்தினால் லூயிஸ் தாக்லே.

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி

5. அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு பிலிப்பைன்ஸ் ஆயர்கள் எதிர்ப்பு

மார்ச்,23,2016. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஐந்து மாநிலங்களில், வருகிற மாதங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவப் பயன்பாட்டுத் தளங்களை அமைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், பிலிப்பைன்ஸ் ஆயர்கள்.
இத்திட்டம் பற்றிக் கருத்து தெரிவித்த Nueva Ecija மாநிலத்தின் San Jose ஆயர் Roberto Mallari அவர்கள், பிலிப்பைன்ஸில் அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவப் பயன்பாட்டுத் தளங்களை அமைப்பது, பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் கொணர்வதைவிட மேலும் பிரச்சனைகளையே உருவாக்கும் என்று கூறினார்.
San Jose மறைமாவட்டத்தில் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், பிலிப்பைன்ஸ்க்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், நியாயமற்ற கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டிருக்கின்றது என்றும், இது நாட்டில் அமெரிக்காவின் இராணுவ இருப்பை அதிகரிக்கும் என்றும் எச்சரித்தார் ஆயர் Mallari.
மேலும், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த Palawan ஆயர் Pedro Arigo அவர்கள், இந்த ஒப்பந்தம், சீனக் கடற்படைக்கும், பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கும் இடையே நிலவும் பதட்டநிலைகளை அதிகரிக்கும் என்று கூறினார்.
பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், பிலிப்பைன்ஸ்க்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே 2014ம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி

6. பிரசல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு WCC கண்டனம்

மார்ச்,23,2016. பெல்ஜிய நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் இடம்பெற்றுள்ள நச்சுவாயு கலந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றப் பொதுச் செயலர் Olav Fykse Tveit.
பெல்ஜிய அரசர் Philippe அவர்களுக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில் இக்குண்டுவெடிப்புத் தாக்குதல்கள், கொடூரமானவை மற்றும் அறிவற்ற செயல் என்று குறிப்பிட்டுள்ள Tveit அவர்கள், இதில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது செபங்களையும் தெரிவித்துள்ளார்.
பிரசல்ஸில் Zaventem பன்னாட்டு விமான நிலையத்திலும், ஐரோப்பிய ஒன்றியக் கட்டடம் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு மையத்திற்கு அருகிலுள்ள பாதாள இரயில் நிலைத்தில் இச்செவ்வாயன்று இடம்பெற்ற இத்தாக்குதல்களில் முப்பதுக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் துன்பங்களிலிருந்து தப்பித்து வரும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க முயற்சிக்கும்  ஐரோப்பாவுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இத்தாக்குதல்கள் கடினமான சூழலை உருவாக்குகின்றன என்றும்   கூறியுள்ளார் Tveit.
WCC மன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு காட்டி அவர்களுக்காகச் செபிக்குமாறு வலியுறுத்தியுள்ளார் Tveit.
மேலும், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபைத் தலைவர் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
பிரசல்ஸ் விமான நிலையத்தில் இச்செவ்வாயன்று தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய இரண்டு பேரும் சகோதரர்கள் என பெல்ஜியத்தின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

இது இரக்கத்தின் காலம்...

உண்மையான புதுமை என்பது எது?

ஜென் துறவி ஒருவர், ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தபோது, அன்பைப் போதிக்கும் புத்தரின் பெயரைச் சொல்லி நிர்வாண நிலையை அடையலாம் என்று நம்பி வந்த போதகர் ஒருவர், துறவியின் பேச்சைக் கேட்கத் திரளாக மக்கள் வந்து கூடுவதைக் கண்டு பொறாமை கொண்டார். அவரிடம் வாதம் செய்ய விரும்பி, பெரிதாகச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அதனால் உரையை நிகழ்த்த முடியாமல் தடை ஏற்பட்டது. துறவி தனது பேச்சை நிறுத்தி, என்ன சத்தம் என்று கேட்டார்.
அந்தப் போதகர், "எங்கள் பிரிவை நிறுவியவர் ஒரு கரையிலும் அவரது சீடர் எதிர்க் கரையிலும் நின்றபோது அவர் ஓர் அற்புதம் புரிந்தார். கையில் ஒரு தூரிகையை என் குரு இந்தக் கரையில் வைத்திருக்க, சீடர் எதிர்க்கரையில் காகிதத்தை வைத்திருக்க, எனது குருவோ, கடவுளின் பெயரை வானத்தின் வழியே எழுதி அனுப்பினார். உங்களால் அப்படிப்பட்ட அற்புதத்தை நிகழ்த்த முடியுமா?" என்று கேட்டார்.
ஜென் துறவி பதில் கூறினார், 'ஒருவேளை உனது குரு அப்படிப்பட்ட வித்தையைச் செய்து காட்டி இருக்கலாம். ஆனால், அதற்குப் பெயர் ஜென் இல்லை! நான் நிகழ்த்தும் அற்புதம் என்னவென்றால், எனக்குப் பசி ஏற்படும்போது நான் சாப்பிடுவேன். எனக்குத் தாகம் எடுக்கும்போது நான் தண்ணீரைக் குடிப்பேன்! அவ்வளவுதான்' என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி



Post a Comment

Powered by Blogger.