Halloween party ideas 2015
.
செய்திகள்
22.03.16
------------------------------------------------------------------------------------------------------

1. பிரசல்ஸ் தாக்குதல்கள், திருத்தந்தை கடும் கண்டனம்

2. Castelnuovo di Portoவில் புனித வியாழனன்று திருத்தந்தை

3. துன்புறும் அனைவருக்காவும் புனித வெள்ளி சிலுவைப்பாதை

4. புனித வாரத்தில் திருப்பயண ஆலயங்களைத் தரிசிக்க வேண்டுகோள்

5. ஒற்றுமை, மாண்பு, வேலை சமுதாயத்தின் வளமைக்குத் தூண்கள்

6. அ.பணி. Tomன் விடுதலைக்காக புனித வியாழனன்று செபம்

7. உலக தண்ணீர் தினம் 2016 : தண்ணீரும் தொழில்களும்

8. கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை அவசியம்

9. கல்வியை கட்டாய உரிமையாக்கியும் 60 இலட்சம் பேருக்கு எட்டாக்கனி

------------------------------------------------------------------------------------------------------

1. பிரசல்ஸ் தாக்குதல்கள், திருத்தந்தை கடும் கண்டனம்

மார்ச்,22,2016. பெல்ஜிய நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில், அதிகத் துன்பங்களை வருவிக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதற்குத் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரசல்ஸில் Zaventem விமான நிலையத்திலும், பாதாள இரயில் நிலையங்களிலும் இத்திங்களன்று இடம்பெற்றுள்ள குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பெல்ஜிய நாட்டு மக்களுக்குத் தனது செபங்களையும்  ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ள திருத்தந்தை, அமைதிக்காக இறைவனிடம் செபிப்பதாகக் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்திகள் கொண்ட தந்திச் செய்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில், பிரசல்லஸ் பேராயர் Jozef De Kesel அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
மேலும், மரணத்தை வருவிக்கும் இப்பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதற்குத் தங்களின் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் பெல்ஜிய ஆயர்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களின் செபத்துடன்கூடிய ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ள ஆயர்கள், இத்தாக்குதல்களுக்குத் தீர்வு காண்பதற்கு, தேசிய அளவில் ஒற்றுமையுடன் செயல்படுமாறு கூறியுள்ளனர்.
Zaventem விமான நிலையக் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியிருப்பதாகவும் பெல்ஜிய ஆயர்களின் கண்டன அறிக்கை கூறுகிறது.
இந்தப் பயங்கர குண்டுவெடி தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளதாகவும், விமான நிலையத்தில் 81 பேரும், இரயில் நிலையத்தில் 55 பேரும் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி, கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரஸ்சல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டதற்குப் பதிலடியாக, இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. Castelnuovo di Portoவில் புனித வியாழனன்று திருத்தந்தை

மார்ச்,22,2016. இத்தாலியில் புகலிடம் கேட்டுக் காத்திருக்கும், பல நாடுகளின் குடியேற்றதார இளையோரை வரவேற்கும் மையம் அமைந்துள்ள Castelnuovo di Portoக்கு, மார்ச் 24,  வருகிற புனித வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் இந்நிகழ்வு குறித்து அறிவித்த, நற்செய்தியை புதிய வழியில் அறிவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள், Castelnuovo di Portoவில், புனித வியாழனன்று பன்னிரண்டு குடியேற்றதார இளையோரின் பாதங்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கழுவுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
இக்காலத்தில் அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் மக்கள் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி சொல்லி வருவதையும் பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இரக்கச் செயல்களாக, கடந்த டிசம்பரில், வீடின்றி இருக்கும் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து, தினமும் உணவு வழங்கும் Ostelloவிலுள்ள "don Luigi di Liegro" மையத்தில் புனிதக் கதவைத் திறந்து வைத்தார் திருத்தந்தை. கடந்த சனவரியில் முதியோர் இல்லம் ஒன்றைப் பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த பிப்ரவரியில், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் மையம் ஒன்றிற்கும் சென்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. துன்புறும் அனைவருக்காவும் புனித வெள்ளி சிலுவைப்பாதை

மார்ச்,22,2016. உரோம் நகரில், கொலோசேயும் எனும் இடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்றும் நடத்தும் புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சி தியானச் சிந்தனைகள், குடிபெயர்ந்தவர், பயன்படுத்தப்பட்ட சிறார், முறிந்த குடும்பங்கள் போன்ற தலைப்புகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிலுவைப் பாதைக்குத் தியானச் சிந்தனைகளை வழங்குவதற்கு, ஒவ்வோர் ஆண்டும் யாராவது ஒருவரைக் கேட்கும் திருத்தந்தை, வருகிற புனித வெள்ளியன்று இடம்பெறும் சிலுவைப்பாதை பக்தி முயற்சிக்கு, இத்தாலியின் பெரூஜியா பேராயர் கர்தினால் குவால்த்தியெரோ பஸ்ஸெத்தி (Gualtiero Bassetti) அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தான் எழுதியுள்ள தியானச் சிந்தனைகள் பற்றிக் கூறியுள்ள கர்தினால் பஸ்ஸெத்தி அவர்கள், இக்காலத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து, சிலுவைப் பாதையின் ஒவ்வொரு நிலைக்கும் சிந்தனைகளை எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துவின் திருப்பாடுகள் பற்றித் தியானிக்கும்போது, மனிதரின் பாவமும், துன்பங்களும் இக்காலத்தில் தொடர்ந்து இடம்பெறுவது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார் கர்தினால் பஸ்ஸெத்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. புனித வாரத்தில் திருப்பயண ஆலயங்களைத் தரிசிக்க வேண்டுகோள்

மார்ச்,22,2016. இரக்கத்தின் பயணத்தை நடைமுறை அளவில் தொடங்குவதன் ஓர் அடையாளமாக, விசுவாசிகள், புனித வாரத்தில் திருப்பயண ஆலயங்களைத் தரிசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார் பிலிப்பைன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே.
ஒவ்வொரு திருப்பயண ஆலயத்தையும் தரிசித்த பின்னர், அத்திருப்பயணத்தில் இரக்கத்தின் பணிகளை ஆற்ற வேண்டும் என்றும், விசுவாசிகளின் செயல்களும், எண்ணங்களும், வாழும்முறையும் இரக்கத்தின் தூய்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் பிலிப்பைன்ஸ் மக்களைக் கேட்டுள்ளார் மனிலா கர்தினால் தாக்லே.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏராளமான கத்தோலிக்கர், புனித வாரத்தில், எட்டு முதல் பதினான்கு ஆலயங்களைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.   அச்சமயத்தில் திருப்பயணிகளுக்குத் திருப்பயணக் கடவுச்சீட்டும் வழங்கப்படுகின்றது. ஐந்தாவது திருப்பயண ஆலயத்தைத் தரிசித்த பின்னர், திருப்பயணிக்கு ஒரு சான்றிதழும் வழங்கப்படுகின்றது.
இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மனிலா உயர்மறைமாவட்டத்தில் ஐந்து யூபிலி ஆலயங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

5. ஒற்றுமை, மாண்பு, வேலை சமுதாயத்தின் வளமைக்குத் தூண்கள்

மார்ச்,22,2016. ஒற்றுமை, மனித மாண்பு, வேலை ஆகிய மூன்று விழுமியங்களும் எந்த ஒரு சமுதாயத்தின் வளமைக்கும் தூண்களாக உள்ளன என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆப்ரிக்காவின் பெரிய ஏரிகள் பகுதியில் இடம்பெறும் சண்டைகளைத் தடுப்பது மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பது குறித்து, இத்திங்களன்று ஐ.நா. பாதுகாப்பு அவையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
ஆப்ரிக்காவின் பெரிய ஏரிகள் பகுதியில் இடம்பெறும் ஆயுதம் ஏந்திய சண்டைகளின் சிக்கல் நிறைந்த பிரச்சனைகளுக்கும், அப்பகுதியின் வளர்ச்சியின்மைக்கும் தீர்வு காண்பதற்கு இந்த மூன்று விழுமியங்களும் மிகப்பெரும் உதவியாக அமையும் என்றும் எடுத்துரைத்தார் பேராயர் அவுசா.
ஆப்ரிக்காவின் இப்பகுதிக்கு கடந்த நவம்பரில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, ஒற்றுமை, மனித மாண்பு, வேலை ஆகிய மூன்று விழுமியங்களைத் தனது விருதுவாக்காகக் கொண்டிருப்பது கண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூண்டுதல் பெற்றார் என்பதையும் ஐ.நா.வில் குறிப்பிட்டார் பேராயர் அவுசா.
ஒற்றுமையின்றி பிரிவினைகளும், அனைவரின் மாண்பை மதிக்காமல் கடும் மனித உரிமை மீறல்களும், எல்லாருக்கும் மாண்புடன்கூடிய வேலை இல்லாமல் கடும் ஏழ்மையும் நிலவினால் ஆப்ரிக்காவின் இப்பகுதியில் காணப்படும் பல பிரச்சனைகளுக்கு எந்தத் தீர்வும் காண்பது கடினம் என்பதையும் கோடிட்டுக் காட்டினார் பேராயர் அவுசா.
இப்பகுதியின் ஏராளமான இயற்கை வளங்கள், சலுகை பெற்ற சிலரால் சுரண்டப்படுவதைத் தடைசெய்து, அவை அனைவரின் பொது நன்மைக்குப் பயன்படுத்தப்பட அனைத்துலக சமுதாயம் ஆதரவு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார் பேராயர் அவுசா.
இப்பகுதியில் ஆயுதங்களும், ஆயுதம் ஏந்திய குழுக்களும் பரவி வருவதைக் குறிப்பிட்ட  பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், இக்குழுக்கள் ஆயதங்களைக் கைவிட்டு, தங்கள் நாடுகளின் வளர்ச்சியில் ஒத்துழைப்பதற்கு அர்ப்பணிக்குமாறும் வலியுறுத்தினார். 
ஆப்ரிக்காவில் ஆயுதம் வர்த்தகம் கட்டுப்படுத்தப்பட உலக சமுதாயம் உழைக்குமாறும் கேட்டுக்கொண்டார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. அ.பணி. Tomன் விடுதலைக்காக புனித வியாழனன்று செபம்

மார்ச்,22,2016. ஏமனில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட நான்கு அருள்சகோதரிகள் மற்றும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்களின் விடுதலைக்காக, இப்புனித வாரத்தில், சிறப்பாக, புனித வியாழன் திருவழிபாட்டிற்குப் பின்னர் செபிக்குமாறு கேட்டுள்ளார், உலகளாவிய சலேசிய சபைத் தலைவர் அருள்பணி Ángel Fernández Artime.  
சலேசிய சபை இணையத்தளத்தில் காணொளிச் செய்தி வழியாக சலேசிய சபையினர் அனைவரிடமும் இவ்வாறு கேட்டுள்ள அருள்பணி Artime அவர்கள், புனித வியாழன் திருவழிபாட்டிற்குப் பின்னர் இடம்பறும் திருநற்கருணை ஆராதனையில் இக்கருத்துக்காகச் செபிக்குமாறு கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தின் ராமபுரத்தில் பிறந்த 56 வயது அருள்பணி Tom Uzhunnalil அவர்கள், நான்காண்டுகளாக ஏமனில் மறைப்பணியாற்றி வந்தார். இம்மாதம் நான்காம் தேதியிலிருந்து இவர் ஜிகாதிகளிடம் உள்ளார். இந்த அருள்பணியாளரைக் கடத்தியிருப்பவர்கள், இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததை நினைவுகூரும் மார்ச் 25, வருகிற புனித வெள்ளியன்று, இவரைச் சித்ரவதைப்படுத்தி, கொலை செய்து, சிலுவையில் அறைவார்கள் என்று, எந்தவொரு அடிப்படையுமில்லாத வதந்தி ஒன்று   இந்தியாவில் பரவுவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

7. உலக தண்ணீர் தினம் 2016 : தண்ணீரும் தொழில்களும்

மார்ச்,22,2016. 1990ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலகில் 230 கோடிப் பேர் குடிநீர் வசதியைப் பெற்றிருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்று, யுனெஸ்கோ இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள் கூறியுள்ளார்.
மார்ச் 22, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக தண்ணீர் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட, ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவன இயக்குனர் பொக்கோவா அவர்கள், இன்று உலகில் எழுபது கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு இன்னும் சுத்தமான தண்ணீர் வசதி கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
தண்ணீரும் தொழில்களும் என்ற தலைப்பில், இவ்வாண்டின் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ள பொக்கோவா அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இடம்பெறும் தொழில் தொடர்புடைய 23 இலட்சத்துக்கு மேற்பட்ட இறப்புகளில் 17 விழுக்காட்டிற்கு, தொற்று நோய்கள் மற்றும் சுத்தமற்ற குடிநீரே காரணம் என்று தெரிவித்துள்ளார். 
1993ம் ஆண்டு மார்ச் 22ம் தேதியன்று முதல் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்பின்னர், தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22ம் நாளன்று இந்த உலக தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

8. கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை அவசியம்

மார்ச்,22,2016. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததைவிட தற்போது பூமி ஒரு செல்சியுஸ் டிகிரி அதிக வெப்பமாக உள்ளது என்றும், பூமியின் வெப்பநிலை மூன்று செல்சியுஸ் டிகிரியை எட்டாதபடி தவிர்ப்பதற்கு, தேசிய அளவில், நாடுகள் எடுத்துள்ள திட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் ஐ.நா. நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.
மார்ச் 23, இப்புதனன்று, உலக வானிலை ஆய்வு தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, 2015ம் ஆண்டில் இப்பூமியின் வெப்பநிலை குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள, WMO என்ற உலக வானிலை ஆய்வு நிறுவனம் இவ்வாறு எச்சரித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையை ஜெனீவாவில் இத்திங்களன்று வெளியிட்டுப் பேசிய இந்நிறுவனப் பொது இயக்குனர் Petteri Taalas அவர்கள், வருங்காலம் இப்போதே நடந்துகொண்டிருக்கிறது, எனவே கார்பன் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தினார்.
தற்போதைய எரிபொருள் பயன்பாட்டில் வரையறைகள் இல்லையெனில், வான்வெளியில் கார்பன் டை ஆக்ஸைடின் சேமிப்பு, இன்னும் 500 ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரிக்கும், அதாவது, அச்சமயத்தில், இப்பூமியின் வெப்பநிலை, ஏழு முதல் எட்டு செல்சியுஸ் டிகிரியாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார் Taalas.
மார்ச் 23, இப்புதன், உலக வானிலை ஆய்வு தினம்

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

9. கல்வியை கட்டாய உரிமையாக்கியும் 60 இலட்சம் பேருக்கு எட்டாக்கனி

மார்ச்,22,2016. இந்தியாவில் அனைவருக்கும் கல்வி வழங்கும் வகையில், கல்வியை அடிப்படை உரிமையாக அறிவித்து, ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், நாடு முழுவதும், அறுபது இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கவில்லை என்று இத்திங்களன்று டில்லியில் நடந்த ஒரு மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில், 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய, இலவசக் கல்வியை அளிக்கும் வகையில், கல்வியை அடிப்படை உரிமையாக அறிவிக்கும், கல்வி உரிமைச் சட்டம் 2010ல் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம், கல்வியை அடிப்படை உரிமையாக அறிவித்துள்ள 135 நாடுகளில் இந்தியாவும் சேர்ந்தது. இச்சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வரும், கல்வி உரிமைச் சட்ட அமைப்பு என்ற அரசு-சாரா நிறுவனம் நடத்திய மாநாட்டில் இச்சட்டம் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
தற்போது, இந்தியாவில் 60 இலட்சம் குழந்தைகளுக்கு கல்வி உரிமை கிடைக்கவில்லை என்பதும், இதில், 76 விழுக்காட்டினர், அதாவது, 46 இலட்சம் பேர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் என்பதும் தெரியவந்துள்ளன. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின், 3.5 இலட்சம் பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமப் பகுதிகளில், 99 விழுக்காட்டினருக்கு, 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் பள்ளி வசதி உள்ளது. 84.4 விழுக்காட்டினருக்குப் பள்ளியில் மதிய உணவு அளிக்கப்படுகிறது. 48.2 விழுக்காட்டுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் உள்ளன. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களின் எண்ணிக்கை, 2005ல், 1.34 கோடியிலிருந்து, 2014ல், 60 இலட்சமாகக் குறைந்துள்ளது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி

இது இரக்கத்தின் காலம்...

உயிர் பிரியும் வேளையிலும், உறுப்பு தானம்

சென்ற மாதம் 17ம் தேதி, ஊடகங்கள் வழியே பகிர்ந்துகொள்ளப்பட்ட ஓர் உண்மை நிகழ்வு இது. உள்ளத்தை உயர்த்தும் இந்த உன்னத நிகழ்வு, கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்தது.
24 வயது நிறைந்த ஹரிஷ் நஞ்சப்பா என்ற இளையவர், வெளியூரில் இருந்த தன் தாயையும், குடும்பத்தினரையும் சந்தித்துவிட்டு, பெங்களூருக்கு தன் இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். சாலையில் வெகு வேகமாக வந்த ஒரு லாரி அவர் மீது மோதியதால், சாலையில் எறியப்பட்டார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹரிஷ் அவர்கள், 20 நிமிடங்களுக்கும் மேலாக உதவி கேட்டு குரல் எழுப்பியும் உதவி கிட்டவில்லை. அவர் அடிபட்டுக் கிடப்பதை, ஒரு சிலர் தங்கள் கைப்பேசிக் 'காமரா'க்களில் பதிவு செய்தனர் என்று ஒரு செய்தித்தாள் (Bangalore Mirror) கூறியது. ஹரிஷ் அவர்கள், உதவி கேட்டு குரல் எழுப்பிய அதே வேளையில், தன் உறுப்புக்களைத் தானம் செய்துவிடும்படியும் குரல் எழுப்பி வந்ததாக, மற்றொரு செய்தித்தாள் (The HIndu) கூறியுள்ளது.
இறுதியாக, அங்குவந்து சேர்ந்த ஓர் 'ஆம்புலன்ஸ்', அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற வழியில், அவர் உயிர் பிரிந்தது. 'ஆம்புலன்ஸ்' ஓட்டுனரிடம் ஹரிஷ் அவர்கள், மீண்டும் தன் உறுப்பு தானம் பற்றிக் கூறினார் என்றும் செய்திகள் கூறுகின்றன. அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்ற வழியில்லாத வண்ணம் அவரது உறுப்புக்கள் வெகுவாக சிதைந்துவிட்டன என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால், அவர், தலைக்கவசம் ('ஹெல்மெட்') அணிந்திருந்ததால், அவரது கண்கள் எவ்விதத்திலும் அடிபடாமல் இருந்தன என்றும், அவரது கண்கள், தானத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன என்றும் மருத்துவர்கள் அறிவித்தனர்.
உயிர் பிரியும் வேளையிலும் உறுப்பு தானம் பற்றி சிந்திக்கும் மனமுள்ளவர், ஓர் உன்னத மனிதர். பிறரை வாழவைக்கும் மனமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர் பொருட்டு மனிதம் நிலைத்து வாழும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


Post a Comment

Powered by Blogger.