Halloween party ideas 2015
.


வத்திக்கான் வானொலி செய்திகள்

 

செய்திகள்

21.03.16

------------------------------------------------------------------------------------------------------

 

1. திருத்தந்தை : இயேசுவின் தாழ்ச்சி, அவரின் பாடுகளில் தன் உச்சத்தை எட்டியது

 

2. ஸ்பெயின் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் தந்தி

 

3. துருக்கியிலும், இரஷ்யாவிலும் உயிரிழந்தவர்களுக்கு செப உறுதி

 

4. முன்னேற்றம் குறித்து மாற்று இலக்கணம் கர்தினால் டர்க்சன்

 

5. ஆயுதம் தாங்கிய குழுக்களால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு

 

6. வத்திக்கானில் கடைபிடிக்கப்பட்ட 'பூமி நேரம்' 2016

 

7. புனித வாரச் சடங்குகளில், இந்தியக்கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. திருத்தந்தை : இயேசுவின் தாழ்ச்சி, அவரின் பாடுகளில் தன் உச்சத்தை எட்டியது

 

மார்ச்,21,2016. இயேசு கிறிஸ்து தன்னையே தாழ்த்திக் கொண்டது, அவரின் பாடுகளின்போது உச்சத்தை எட்டியது என, இஞ்ஞாயிறு குருத்தோலை திருவிழா திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

30 வெள்ளிக் காசுகளுக்கு விற்கப்பட்டு, தன் சீடராலேயே முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு, தன் சீடர்களால் தனிமையில் விடப்பட்டதுடன், படைவீரர்களால் எள்ளி நகையாடப்பட்டது குறித்து தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்களால் இயேசு கிறிஸ்து, பாவியைப் போன்றும், அநீதியானவராகவும் நோக்கப்பட்டார் என்றார்.

எந்த மக்கள் அவரை சிறிது நாட்களுக்கு முன்னர் புகழ்ந்து பாடினார்களோ, அவர்களே அவரைக் குற்றஞ்சாட்டுவதுடன், அவருக்குப் பதிலாக ஒரு கொலையாளியை விடுவிக்கவும் வேண்டினர் எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'சிலுவையிலிருந்து இறங்கி வா' என விடப்பட்ட சோதனைக்கு உட்படாமல், தன்னையே தாழ்த்தி, இறைவனின் உண்மை முகத்தை, அதாவது இரக்கத்தை இயேசு வெளிப்படுத்தினார் என்ற திருத்தந்தை, அவர் நமக்காக தம்மையே தாழ்த்தியதால், அவர் வழிகள் நம் வழிகளில் இருந்து வேறுபட்டவைகளாகத் தெரிகின்றன என மேலும் கூறினார்.

திருப்பலியின் இறுதியில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை மாதம் போலந்தின் கிராக்கோவ் நகரில் 'இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்' என்ற தலைப்பில் இடம்பெறும் உலக இளையோர் தினம் குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. ஸ்பெயின் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் தந்தி

 

மார்ச்,21,206. ஸ்பெயின் நாட்டின் Freginals பகுதியில் இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தோர், மற்றும் காயமடைந்துள்ளவர்களுடன் தன் ஒருமைப்பாட்டையும், விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தன் செப உறுதியையும் வழங்கி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரங்கல் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் Tortosa ஆயர், Enrique Benavent Vidal அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இத்தந்தியில், இறந்தோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக தான் செபிப்பதாகவும், பாதிக்கப்பட்டோருக்கு தன் அனுதாபங்களையும் தெரித்துள்ளார், திருத்தந்தை.

வெளிநாட்டுப் பல்கலைக் கழக மாணவர்களை ஏற்றிவந்த பேருந்து ஒன்று, ஸ்பெயின் நாட்டின் வலென்சியா மற்றும் பார்சலோனா நகரங்களுக்கிடையே விபத்திற்குட்பட்டதில், 13 பேர் உயிரிழந்தனர், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், "நம்முடைய கிறிஸ்தவ அழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, விசுவாசிகளாக வாழ்வதற்கு நம்மை அர்ப்பணிப்போம்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக மார்ச் 21, இத்திங்களன்று வெளியிடப்பட்டது.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

3. துருக்கியிலும், இரஷ்யாவிலும் உயிரிழந்தவர்களுக்கு செப உறுதி

 

மார்ச்,21,2016. இச்சனிக்கிழமையன்று, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் திருத்தந்தையின் இரங்கல் செய்தி, அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர், 39 பேர் காயமடைந்தனர்.

மேலும், இரஷ்யாவின் Rostov-On-Don விமான தளத்தில் இடம்பெற்ற துபாய் நாட்டு விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிடும் இரங்கல் தந்தி ஒன்று இரஷ்ய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

துபாய் விமானம் ஒன்று சனிக்கிழமை காலையில் இரஷ்யாவின் Rostov-On-Don விமானத்தளத்தில் தரையிறங்க முயன்றபோது இடம்பெற்ற விபத்தில், அதில் பயணம் செய்த 55 பேர் மற்றும் 7 பணியாளர்கள் என அனைவரும் உயிரிழந்தனர்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

4. முன்னேற்றம் குறித்து மாற்று இலக்கணம் கர்தினால் டர்க்சன்

 

மார்ச்,21,206. வளர்ச்சி அல்லது முன்னேற்றம் என்பது குறித்து நாம் கொண்டிருக்கும் புரிந்துகொள்ளுதலில் நல்ல மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருப்பீட அதிகாரி, கர்தினால் பீட்டர் டர்க்சன்.

இயற்கையின் மீது அக்கறை கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுக்கும், திருத்தந்தையின் 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல் குறித்து, கனடாவின் டொரான்டோ புனித மைக்கிள் பல்கலைக் கழகத்தில், திருப்பீட நீதி, அமைதி அவைத் தலைவர், கர்தினால் டர்க்சன் அவர்கள் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

இன்றைய உலகில் 'வளர்ச்சி' என்ற கருத்து, பொருளாதாரத்தையும், தொழில்நுட்பத்தையும் மட்டுமே சார்ந்ததாக மாறி, நன்னெறி மதிப்பீடுகளை ஒதுக்கித் தள்ளியுள்ளது என்றும், இலாபத்தையே தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

இவ்வுலகம், அனைவருக்கும் பொதுவானது, இயற்கை வளங்களால் அனைவரும் பயனடையவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, நம் முன்னேற்றம் அமையவேண்டும் என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், வருங்காலத் தலைமுறையினரை மனதில் கொண்டு நாம் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வளர்ச்சி குறித்த நம் தவறான எண்ணங்களும், அணுகு முறைகளும் மாற்றம்  பெற்று, அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் முழு வளர்ச்சிக்கு நம்மையே அர்ப்பணிக்கவேண்டும் என்றும் கர்தினால் டர்க்சன் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

5. ஆயுதம் தாங்கிய குழுக்களால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு

 

மார்ச்,21,2016. ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழுக்களால் நிக்கராகுவா நாட்டின் அயபால் (Ayapal) பகுதியில் ஆசிரியர்கள் மிரட்டப்பட்டு வருவதையொட்டி, 60க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளனர், தலத்திருஅவை அதிகாரிகள்.

அயபாலின் பொகெய் (Bocay) நதிப் பகுதியில் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய ஏறத்தாழ 2100 குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக உரைத்த, அப்பகுதி ஆயர் Abelardo Mata அவர்கள், ஆயுதம் தாங்கிய குழுக்களின் இருப்பு, தொடரும் பழிவாங்கும் உணர்வு, நீதி குறித்த ஏக்கம், அரசு அதிகாரிகளின் அதிகார மீறல் போன்றவை, குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படுவதற்கான முக்கியக் காரணங்கள் என உரைத்தார்.

தங்கள் அரசியல் எதிரிகளுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள் என சந்தேகித்து, சில ஆயுதம் தாங்கிய குழுக்கள், ஆசிரியர்களை அச்சுறுத்தி வருவதால், பள்ளிகள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மேலும் கூறினார் ஆயர் Mata.

 

ஆதாரம் : FIDES / வத்திக்கான் வானொலி

 

6. வத்திக்கானில் கடைபிடிக்கப்பட்ட 'பூமி நேரம்' 2016

 

மார்ச்,21,206. இவ்வாண்டு நாம் சிறப்பிக்கும் 'பூமி நேரம்' (Earth Hour) ஒரு முக்கியமான வரலாற்றுத் தருணத்தில் நம்மை வந்தடைந்துள்ளது; டிசம்பர் மாதம், பாரிஸ் மாநகரில், உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில், நாடுகள் நிறைவேற்றியத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த, 'பூமி நேரம்' ஓர் அழைப்பாக உள்ளது என்று ஐ.நா. பொதுச்செயலர், பான் கி மூன் அவர்கள் கூறினார்.

மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று, இரவு 8.30 மணிக்குக் கடைபிடிக்கப்பட்ட 'பூமி நேரம்' முயற்சியையோட்டி, பான் கி மூன் அவர்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

உலக காடுவாழ் உயிரினங்களின் நிதி (World Wildlife Fund - WWF) என்ற அமைப்பினரால் 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'பூமி நேரம்' முயற்சி, இவ்வாண்டு, 178 நாடுகளில் கடைபிடிக்கப்பட்டது.

நாம் பயன்படுத்தும் மின்சக்தியைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதை நினைவுறுத்த, மார்ச் 19 இரவு 8.30 மணியிலிருந்து, ஒரு மணி நேரத்திற்கு நாம் பயன்படுத்தும் அனைத்து மின் கருவிகளையும் நிறுத்தி வைப்பது, இம்முயற்சியின் ஒரு முக்கிய அம்சம்.

இவ்வழைப்பை ஏற்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா, வளாகம், மற்றும் வத்திக்கான் இல்லங்களில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் சனிக்கிழமை இரவு ஒரு மணி நேரம் அணைத்து வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

நியூ யார்க் நகரிலும், இன்னும் உலகின் பல நாடுகளிலும் உள்ள ஐ.நா.அவை கட்டடங்களிலும், உரோம் நகரின் கொலோசியம், சிட்னி நகரில் அமைந்துள்ள 'ஓபெரா இல்லம்' போன்ற புகழ்பெற்ற இடங்களிலும் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைத்துவைக்கப்பட்டன என்று ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.

 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

 

7. புனித வாரச் சடங்குகளில், இந்தியக்கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு

 

மார்ச்,21,206. இந்தியக் கிறிஸ்தவர்கள் மீது, இந்து அடிப்படைவாதிகள் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள், அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளதால், புனித வாரச் சடங்குகளின் போது, இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று, இந்திய கிறிஸ்தவ உலக அவை, அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியக் கிறிஸ்தவர்கள், ஏனைய குடிமக்கள்போல் உரிமை உடையவர்களாக நடத்தப்படுவதில்லை என்று, மனித உரிமைகள் தேசிய அவையில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள இந்தியக் கிறிஸ்தவர்கள் உலக அவையின் தலைவர் சஜன் ஜார்ஜ் அவர்கள், கிறிஸ்தவ முறையில் வழிபடுவது, இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

கிறிஸ்தவ சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களை தாக்குவதன் வழியாக, இந்து அடிப்படைவாதிகள், இந்திய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மத உரிமைகளை மறுக்கின்றனர் என்று, சஜன் ஜார்ஜ் அவர்கள் கவலையை வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் 6ம் தேதி சட்டிஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்தவக் கோவில் ஒன்றில், இந்து  அடிப்படை வாதிகளால் 65 கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டது; இம்மாதம், 11ம் தேதி, கர்நாடகா மாநிலத்தில் ஒரு கிறிஸ்தவப் போதகரும் அவர் மனைவியும் தாக்கப்பட்டு, பின் கைது செய்யப்பட்டது; 12ம் தேதி, தமிழகத்தின் Kalapatti எனுமிடத்தில் கிறிஸ்தவ ஆங்கிலிக்கன் கோவில் ஒன்று தாக்கப்பட்டது போன்ற நிகழ்வுகளை, சஜன் ஜார்ஜ் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 

இது இரக்கத்தின் காலம்...

 

இழக்கக் கூடாதது நம்பிக்கை

 

ஆசிரமக் குரு ஒருவரிடம், அவரின் மாணவர்கள் இப்படி ஒரு கேள்வி கேட்டனர். வாழ்வில் வரும் துன்பங்கள் மனிதரைப் பக்குவம் செய்து, பண்படுத்தி, அவரை உறுதியாக்க உதவுகின்றதுதானே? இந்தக் கேள்விக்கு இப்படிப் பதில் சொன்னார் குரு. குயவரின் தீ, களிமண்ணைப் பதமாக்கி, அழகிய குடமாக்கவும் முடியும், கரிமண்ணாக்கவும் முடியும். துன்பங்களையும், சவால்களையும் ஒருவர் எப்படி எதிர்கொள்கிறார், எப்படி ஏற்றுக்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவை அவரை உறுதியாக்கி, உருவாக்குமா, இல்லை, பலவீனப்படுத்தி உருக்குலைக்குமா என்பது இருக்கும். சுவாமி விவேகானந்தர் சொன்னார் - நீ பட்ட துன்பத்தைவிட, அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது என்று. ஆண்டவன் இந்தச் சோதனையை ஒருவருக்கு அளித்திருக்கிறான் என்றால், அதை வென்று வெற்றி கொள்ளும் திறமை அவருக்கு உள்ளது என்கிற காரணத்தில்தான்! கண்ணில் விழும் தூசி கண் பார்வையையே மறைக்கும். அதைத் துடைத்துப் போடுகையில்தான் தெரியும் அது கண் பார்வைக்குக்கூட அகப்படாத சின்னஞ்சிறிய தூசி என்று. ஆம். எதை இழந்தாலும் இழக்கக் கூடாதது நம்பிக்கை! இது இரக்கத்தின் காலத்தின் அழைப்பு

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

 

Post a Comment

Powered by Blogger.