Halloween party ideas 2015
.

வத்திக்கான் வானொலி செய்திகள்

19.03.16
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : செபத்தின் உதவியின்றி நம்மால் எதுவும் ஆற்ற முடியாது

2. கர்தினால் பரோலின் : வார்த்தைகள் ஏதுமின்றி வழிகாட்டும் புனித யோசேப்பு

3. திருப்பீடம்: உலக முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்

4. அண்மைக் காலங்களில் கிறிஸ்தவ சபைகள் அதிகம் நெருங்கி வந்துள்ளன‌

5. கத்தோலிக்கப் பணியாளர்களுக்கு பெலாருஸ் நாட்டின் புதிய தடைகள்

6. அருள்சகோதரிகளை சுட்டுக் கொன்று, தலையையும் சேதமாக்கிய தீவிரவாதிகள்

7. பாகிஸ்தானில் உயிர்ப்பு திருவிழாவன்று கிறிஸ்தவர்களுக்கு விடுமுறை

8. விபச்சாரத் தொழிலிருந்து பெண்களை விடுவித்த காரித்தாஸ்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : செபத்தின் உதவியின்றி நம்மால் எதுவும் ஆற்ற முடியாது

மார்ச்,19,2016. மனிதர்கள் நடுவிலிருந்து, மனிதர்களுக்காக, இறைவனால் தெரிவுச் செய்யப்பட்ட ஆயர்கள், கௌரவத்திற்காக அல்ல, மாறாக, பணிக்கென அழைப்புப் பெற்றவர்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் நமீபியா ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணி Peter Brian Wells,  பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணி Miguel Angel Ayuso Guixot ஆகிய இருவரையும் ஆயர்களாக அருள்பொழிவு செய்த திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு எடுத்துரைத்தார்.
இச்சனிக்கிழமை, புனித யோசேப்பு திருவிழாவன்று, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை, மீட்பின் நற்செய்தியை அறிவிப்பதிலும், விசுவாச அருளடையாளங்கள் வழியாக விசுவாசிகளின் புனிதத் தன்மைக்கு உதவுவதிலும் ஆயர்களுக்கு இருக்கும் கடமைகளை சுட்டிக்காட்டினார்.
செபத்தின் உதவியின்றி நம்மால் எதுவும் ஆற்ற இயலாது என்பதையும் தன் மறையுரையில் புதிய ஆயர்களுக்கு எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்று, இச்சனிக்கிழமையோடு மூன்று ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

2. கர்தினால் பரோலின் : வார்த்தைகள் ஏதுமின்றி வழிகாட்டும் புனித யோசேப்பு

மார்ச்,19,2016. இயேசுவின் வளர்ப்புத் தந்தை புனித யோசேப்பு பேசிய வார்த்தைகளாக விவிலியத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனினும், அவரைப் பற்றி நற்செய்தியாளர்கள் விவரித்துள்ளவை, அவரின் ஆன்மீகத்தை எடுத்துரைப்பவைகளாக உள்ளன என்றார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.
முன்னாள் யுக்கோஸ்லாவிய குடியரசான மசடோனியாவில், மேய்ப்புப்பணி சார்ந்த பயணம் மேற்கொண்டு வரும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், அருளாளர் அன்னை தெரேசா அவர்களின் பிறப்பிடமான, Skopje நகரின், இயேசுவின் திரு இருதய கோவிலில் வெள்ளியன்று மாலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகையில், புனித யோசேப்பின் சிறப்புப் பண்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
அனனை மரியா கருதரித்தது குறித்த குழப்பம் தனக்குள் எழுந்தாலும், அதற்கு இரையாகாமல், இறைவனின் தீர்வுக்கு செவிமடுத்த புனித யோசேப்பு, இயேசுவின் மீட்புப் பணியிலும் பங்கெடுக்கிறார் என்றார் கர்தினால் பரோலின்.
இறைச் சட்டங்களை ஒழுங்காக கடைபிடித்ததன் வழியாக மத்தேயு நற்செய்தியாளரால் 'நீதிமான்' என அழைக்கப்படும் புனித யோசேப்பு, நம் நியாயமான விருப்புகளையும் தாண்டி, இறைவனில் நாம் நம்பிக்கைக் கொள்ளவேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார் என மேலும் தன் மறையுரையில் எடுத்தியம்பினார் கர்தினால் பரோலின்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

3. திருப்பீடம்: உலக முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்

மார்ச்,19,2016. பெண்கள், உலகின் வளர்ச்சியால் பயனடைபவர்கள் மட்டுமே என்ற குறுகிய கண்ணோட்டத்திலிருந்து வெளிவந்து, அவர்களும் உலக வளர்ச்சிக்காக உழைப்பவர்கள் என்ற நோக்கு அதிகரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார், ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் பெர்னதித்தோ அவுசா.
'பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கும், நிலையான வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு' என்பது குறித்து ஐ.நா.வில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள், இன்றைய உலகில் மேலும் கொடூரமான வழிகளில் நிகழ்வது குறித்த கவலையை வெளியிட்டார்.
அமைதியை உருவாக்குவதில் பெண்களின் பங்களிப்பு, இவ்வுலகில் சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பதையும் எடுத்துரைத்த பேராயர் அவுசா அவர்கள், பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் உலகில், குடும்ப மதிப்பீடுகள் ஒதுக்கி வைக்கப்படுவதால், பெண்கள் அதிக அளவில் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்றார்.
ஒவ்வொரு பெண்ணும் தன் தாய்மைப் பண்பு வழியாக, சமூகத்திற்கு வழங்கும் பங்களிப்பு சரியான முறையில் அங்கீகரிக்கப்படுகிறதா என்ற கேள்வியையும் முன்வைத்தார், திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் அவுசா.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

4. அண்மைக் காலங்களில் கிறிஸ்தவ சபைகள் அதிகம் நெருங்கி வந்துள்ளன‌

மார்ச்,19,2016. அண்மைக் காலங்களில் கிறிஸ்தவ சபைகளிடையே ஏற்பட்டுள்ள நேரடி சந்திப்புகளும், இதயங்களிடையே உருவாகியுள்ள ஒப்புரவும், அவற்றை மிக நெருக்கமாகக் கொண்டுவர உதவியுள்ளன என்றார், திருப்பீட அதிகாரிகளுக்கு தவக்கால சிந்தனைகளை வழங்கிவரும் அருள்பணி Raniero Cantalamessa.
ஒவ்வொரு கிறிஸ்தவ சபையும் தனக்கென வகுத்துள்ள கிறிஸ்தவக் கோட்பாடுகளுக்கு அதி முக்கியத்துவம் கொடுப்பதை விட, தங்களுக்குள் பகிர்ந்துவரும் கிறிஸ்தவ விசுவாசத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார், கப்புச்சின் துறவுசபை அருள்பணியாளர் Cantalamessa.
கிறிஸ்தவ சபைகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதைவிட, ஆற்றவேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன என்ற திருப்பீட அதிகாரப்பூர்வ தியானப் போதகர், நம் நம்பிக்கைகளால் அல்ல, மாறாக, கிறிஸ்துவின் மீது நாம் கொள்ளும் நம்பிக்கைகளாலேயே நாம் ஏற்புடையவராகிறோம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம்: Catholic Culture/ வத்திக்கான் வானொலி

5. கத்தோலிக்கப் பணியாளர்களுக்கு பெலாருஸ் நாட்டின் புதிய தடைகள்

மார்ச்,19,2016. பெலாருஸ் நாட்டிற்குள் வெளிநாட்டு அருள்பணியாளர்கள் வந்து பணியாற்றுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துவருவதாக கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
இரண்டு போலந்து அருள்பணியாளர்கள் பெலாருஸ் நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி மறுத்துள்ள அரசு, ஏற்கனவே அந்நாட்டில் பணியாற்றும் ஒரு வெளிநாட்டு அருள்பணியாளரின் தங்கும் அனுமதியை புதுப்பிக்க மறுத்துள்ளதையுயும் சுட்டிக்காட்டும் ஆயர்கள், நாட்டின் அரசியல் விவகாரங்களில் திருஅவை தலையிடுவதாக பொய்க் குற்றச்சாட்டை அரசு முன்வைத்துள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டுள்ளனர்.
இரஷ்யாவோடும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையோடும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள பெலாருஸ் நாடு, பிற மதங்களுக்கு தீவிர கட்டுப்பாடுகளை விதித்துவருவதுடன், கத்தோலிக்க வானொலி நிலையம் ஒன்றை திறப்பதற்கு, திருஅவை மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கும் தடை விதித்துள்ளது.

ஆதாரம்: Catholic Culture/ வத்திக்கான் வானொலி

6. அருள்சகோதரிகளை சுட்டுக் கொன்று, தலையையும் சேதமாக்கிய தீவிரவாதிகள்

மார்ச்,19,2016. ஏமன் நாட்டின் ஏடன் நாகரில் 4 அருள்சகோதரிகளும் 12 உடனுழைப்பாளர்களும் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டது குறித்த முழு விவரங்கள், அப்பொடுகொலையிலிருந்து தப்பிய ஒரே அருள்சகோதரியால் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஏடன் நகரின் முதியோர் இல்லத்தில் திருப்பலியையும், காலை செபத்தையும் முடித்து, வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்த அருள்கன்னியர்களை ஒவ்வோர் இடமாக தேடிக் கண்டுபிடித்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், நால்வரின் உடல்களையும் இருவர் இருவராகப் பிணைத்து, தலையில் சுட்டுக் கொன்றதுடன், அவர்களின் தலைகளையும் சிதைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்த அருள்கன்னியர்களை காப்பாற்ற முயன்ற எத்தியோப்பிய கிறிஸ்தவப் பணியாளர்களையும் சுட்டுக் கொன்றுள்ளனர், தீவிரவாதிகள்.
குளிர்ப்பதன அறைக்குள் ஒளிந்துகொண்ட ஓர் அருள்சகோதரியை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அங்கு திருப்பலி ஆற்ற வந்திருந்த அருள்பணி Tom Uzhunnalil அவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர், இஸ்லாம் தீவிரவாதிகள்.
அன்னை தெரேசா நிறுவிய பிறரன்பு சபையின் 5 அருள்கன்னியர்களால் நடத்தப்பட்டு வந்த முதியோர் இல்லத்தில், பராமரிப்புப் பெற்றுவந்த எவரும் காயப்படுத்தப்படவில்லை. படுகொலையிலிருந்து தப்பிய அருள்சகோதரி Sally என்பவர், பாதுகாப்பு காரணமாக காவல்துறையால் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆதாரம்: Asia News/ வத்திக்கான் வானொலி

7. பாகிஸ்தானில் உயிர்ப்பு திருவிழாவன்று கிறிஸ்தவர்களுக்கு விடுமுறை

மார்ச்,19,2016. பாகிஸ்தான் நாட்டில், கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை, கிறிஸ்தவர்களுக்கான சிறப்பு விடுமுறை நாளாக அறிவித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது, அந்நாட்டு தேசிய அவை.
கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா நாளும், இந்துக்களுக்கு ஹோலி மற்றும் திபாவளி நாட்களும் சிறப்பு விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது, நாட்டிற்கு, பொது விடுமுறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் இந்து சிறுபான்மை சமூகத்தின் தேசிய அவை அங்கத்தினர் வெங்வானி ரமேஷ் குமார் என்பவரின் முயற்சியால், இச்சலுகை முதன் முறையாக பாகிஸ்தான் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரே குடும்பமாக கொண்டாட உதவும் வகையில், சிறுபான்மையினரின் திருவிழாக்களை தேசிய விடுமுறைகளாக அறிவிக்கவேண்டும் என, சில இஸ்லாமிய குழுக்கள், அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஆதாரம்: AsiaNews/வத்திக்கான் வானொலி

8. விபச்சாரத் தொழிலிருந்து பெண்களை விடுவித்த காரித்தாஸ்

மார்ச்,19,2016. இஸ்பெயின் நாட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த 2200க்கும் மேற்பட்ட பெண்களை மீட்டு, அவர்களுக்குப் புது வாழ்வை வழங்கி வருவதாக அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
மக்கள் வியாபாரப் பொருட்களாக கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடிவரும் கத்தோலிக்க காரித்தாஸ், அண்மையில் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், இஸ்பெயினில் தற்போது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் வழியே புதுவாழ்வைப் பெற்றுள்ள இப்பெண்களுள், 20 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே இஸ்பானிய நாட்டினர் எனவும் கூறப்பட்டுள்ளது.
விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு புதுவாழ்வை அமைத்துத் தரும் நோக்கில், கடந்த 30 ஆண்டுகளாக உழைத்துவரும் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, ஆயுத வியாபாரம், போதைப்பொருள் கடத்தல், மக்களை வியாபாரப் பொருளாக கடத்துதல் போன்றவைகளுக்கு எதிராகவும் தன் குரலை தொடர்ந்து உயர்த்தி வருகின்றது.

ஆதாரம்: CNA/வத்திக்கான் வானொலி

இது இரக்கத்தின் காலம்...

சிலுவை சொல்லித்தரும் பாடம்

William J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய ஒரு கதை இது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஓர் ஆயரைப் பற்றிய கதை. இந்த ஆயர் சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று, அவர்களிடம் பேசி வந்தார், இந்த ஆயர். அவர்களிடம் அடிக்கடி ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது இவர் வழக்கம்.
பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில், ஒவ்வொரு ஞாயிறன்றும் இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்று உரத்தக் குரலில் கேலிசெய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் கூடிவந்தது.
ஒரு முறை, ஞாயிறு திருப்பலிக்கு முன், பங்குத்தந்தை, பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை அவரிடம், "நான் இப்போது உனக்கு விடுக்கும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு தூரம் வீரமில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபமும், கேலியும் கட்டுக்கடங்காமல் சென்றன. "முட்டாள் சாமியாரே! எனக்கேச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்." என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார். பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப்பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை' என்று நீ கத்தவேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.
அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார். பின்னர், உரத்தக் குரலில் "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை, அவரது குரலில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்குத்தந்தை, இளைஞனிடம், "தயவுசெய்து, இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர் நீ போகலாம்" என்று கூறினார். இம்முறை, இளைஞன் சிலுவையை உற்றுப்பார்த்தார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் வழிந்தோடியது.
இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர், சிறிதுநேரம் அமைதியாக இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்பதை, சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.
மாற்றங்களை உருவாக்கும் மந்திரச் சக்திபெற்ற இரக்கத்தின் காலத்தில், சிலுவையில் அறையுண்ட இயேசு, நமக்குள் என்னென்ன மாற்றங்களை உருவாகப் போகிறார்?

ஆதாரம் : வத்திக்கான் வானொலிPost a Comment

Powered by Blogger.