Halloween party ideas 2015
.


செய்திகள்
16.03.16
------------------------------------------------------------------------------------------------------

1. இரக்கம் குறித்து திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

2. அன்னை தெரேசாவின் முகம், இரக்கத்தின் முகம் - கர்தினால் டோப்போ

3. உலக ஆசிரியர் விருதினை அறிவித்த திருத்தந்தை

4. அன்னை தெரேசா உருவாக்கிய சபையில் மகிழ்ச்சி

5. போதைப்பொருள் வர்த்தக வளர்ச்சியால் திருப்பீடம் கவலை

6. முதுபெரும் தந்தை : எந்தப் படையோடும் திருஅவைக்குத் தொடர்பில்லை

7. மியான்மார் நாட்டில் அரசுத் துணைத் தலைவராக கிறிஸ்தவர்

8. வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையத்தின் 125ம் ஆண்டு நிறைவு

------------------------------------------------------------------------------------------------------

1. இரக்கம் குறித்து திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

மார்ச்,16,2016. 'ஒப்புரவு அருளடையாளத்தின்போது, நாம் மறுபிறப்படைகிறோம்; அந்த அருளடையாளத்தில் நாம் பெரும் சக்தி, நமது நம்பிக்கையை வளர்க்கிறது' என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தன.
அதேவண்ணம், திருத்தந்தை அவர்கள் இச்செவ்வாயன்று வெளியிட்ட செய்தியில், 'இறைவன் இரக்கம் நிறைந்தவர், உண்மையான உள்ளத்துடன் அவரது இரக்கத்தைத் தேடுவோருக்கு, அதை நிறைவாக வழங்குகிறார்' என்ற வார்த்தைகள் இடம்பெற்றன.
திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகளில், இரக்கத்தின் யூபிலி ஆண்டையொட்டி, இரக்கம் மற்றும் ஒப்புரவு அருளடையாளம் ஆகிய எண்ணங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
@pontifex என்ற முகவரியுடன், திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள் வெளியிட்டுவரும் டுவிட்டர் செய்திகள், ஒவ்வொரு நாளும், இத்தாலியம், இஸ்பானியம், ஆங்கிலம், பிரெஞ்ச், போர்த்துகீஸ், போலிஷ், ஜெர்மன், மற்றும் ஆரேபியம் ஆகிய எட்டு மொழிகளில் வெளியாகிவருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. அன்னை தெரேசாவின் முகம், இரக்கத்தின் முகம் - கர்தினால் டோப்போ

மார்ச்,16,2016. ஒவ்வொரு மனிதரும் இறைவனின் சாயல் என்பதால், அவர்களுக்குரிய மதிப்பை அளித்த அன்னை தெரேசா, மக்களின் வாழ்வை, மன்னிப்பின் வழியாகவும், குணப்படுத்துதல் வழியாகவும் கட்டியெழுப்பினார் என்று இந்திய கர்தினால் ஒருவர் கூறினார்.
அருளாளர் அன்னை தெரேசா, செப்டம்பர் 4ம் தேதி புனிதராக உயர்த்தப்படவிருக்கும் செய்தியைத் தொடர்ந்து, இராஞ்சி பேராயர் கர்தினால் Telesphore Toppo அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
அன்னை தெரேசாவின் முகம் இரக்கத்தின் முகம் என்பதை உலகினர் அனைவரும் அறிவர்; எனவே, அவரது புனிதர் பட்ட விழா இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் நிகழ்வது மிகப் பொருத்தமானது என்று கர்தினால் டோப்போ அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
அன்னை தெரேசா அவர்கள், உடலளவில் தளந்திருந்தாலும், இத்தனை சக்தியை எங்கிருந்து பெறுகிறார் என்று தான் ஒருமுறை கேட்டபோது, அன்னை தெரேசா எவ்வித தயக்கமும் இல்லாமல், நற்கருணையில் உள்ள இயேசுவிடமிருந்து தன் சக்தியைப் பெறுவதாகக் கூறியதை, கர்தினால் டோப்போ அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
அன்னை தெரேசா அவர்கள் சிறுமி ஆக்னெஸ் என்ற பெயருடன் பள்ளியில் படித்துவந்த வேளையில், இராஞ்சி பகுதியில் பணியாற்றிய ஆல்பேனியாவை சேர்ந்த இரு இயேசு சபை அருள் பணியாளர்கள், பள்ளியில் வழங்கிய ஓர் உரையிலிருந்து, அன்னை தெரேசா அவர்கள், இந்தியாவில் உழைக்கும் அழைப்பை பெற்றார் என்பதை கர்தினால் டோப்போ அவர்கள் நினைவு கூர்ந்தார்.
அன்னை தெரேசா புனிதராக உயர்த்தப்படும் இந்நிகழ்வு, ஆசியாவில் பணியாற்றும் பலருக்கு, மறைபரப்புப் பணியாற்றும் உந்து சக்தியாக அமையும் என்று கர்தினால் டோப்போ அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

3. உலக ஆசிரியர் விருதினை அறிவித்த திருத்தந்தை

மார்ச்,16,2016. உலக ஆசிரியர் விருதுக்கு, என் பெயரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்ததை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை என்று, இந்த விருதைப் பெற்ற பாலஸ்தீன ஆசிரியர், Hanan Al Hroub அவர்கள் CNA செய்தியிடம் கூறினார்.
கேரளாவில் பிறந்து, தற்போது துபாயில் வாழும் சன்னி வர்கி என்பவர் உருவாக்கிய வர்கி அறக்கட்டளை, கடந்த ஈராண்டுகளாக, Global Teacher Prize அதாவது, உலக ஆசிரியர் விருதினை வழங்கி வருகிறது.
பாலஸ்தீன நாட்டின் West Bank பகுதியில், வன்முறைகள் நடுவில் வாழ்ந்துவரும் சிறுவர் சிறுமியருக்கு ஆசிரியப் பணியாற்றிவரும் Hanan Al Hroub என்ற பெண்மணிக்கு 2015ம் ஆண்டுக்கான இவ்விருது வழங்கப்பட்டது.
துபாய் நகரில் இஞ்ஞாயிறன்று நடைபெற்ற ஒரு விழாவில், உலக ஆசிரியர் விருதினை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒலி ஒளி தொடர்பின் வழியே, வத்திக்கானில் இருந்தபடியே அறிவித்தார்.
இவ்விருதினைப் பெற்ற Hanan Al Hroub அவர்கள் விளையாட்டின் வழியே குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க முற்பட்டதை, திருத்தந்தை, தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
விளையாடுவது, குழந்தைகளின் உரிமை; விளையாட்டு நேரங்களில் குழந்தைகள் கற்றுக்கொள்ளக்கூடிய சமுதாயத் திறமைகள் அதிகம் என்பதால், விளையாட்டை, கல்வியின் அடிப்படை அம்சமாக நாம் இணைக்கவேண்டும் என்று திருத்தந்தை இச்செய்தியில் கூறினார்.
உலக ஆசிரியர் விருதினைப் பெற்ற Hroub அவர்கள், பாலஸ்தீனாவில், வன்முறைச் சூழலில் வளர்ந்துவரும் குழந்தைகளுக்கு, Samiha Khalil என்ற பள்ளியில், விளையாட்டுக்கள் வழியே பல்வேறு நன்னெறி பழக்கங்களை வளர்த்துள்ளார் என்பதால், அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதின் வழியே Hroub அவர்கள் பெற்ற 10 இலட்சம் டாலர்களை, சிறுவர் சிறுமியரின் கல்விக்கு உதவித் தொகைகளை உருவாக்கும் நோக்கத்தில் இருப்பதாக கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி

4. அன்னை தெரேசா உருவாக்கிய சபையில் மகிழ்ச்சி

மார்ச்,16,2016. எங்கள் அன்னை புனிதராக உயர்த்தப்பட விருப்பதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்; திருத்தந்தைக்கும் நன்றி கூறுகிறோம். அன்னையின் அன்புப் பணியை இன்னும் ஆழமாகக் கற்றுக்கொள்ளவும், அவ்வழியில் தொடர்ந்து பணியாற்றவும் நாங்கள் தூண்டப்பட்டுள்ளோம் என்று அன்னை தெரேசா அவர்களால் உருவாக்கப்பட்ட துறவு சபையின் தலைவர், அருள்சகோதரி பிரேமா அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.
அன்னை தெரேசாவின் புனிதர் பட்டவிழாவின் தேதி அறிவிக்கப்பட்டதும் நிகழ்ந்த நன்றித் திருப்பலியில், கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசூசா அவர்கள், மறையுரை ஆற்றுகையில், வறுமை, நோய் போன்ற சிலுவைகளை உலகெங்கும் கண்ட அன்னை தெரேசா அவர்கள், சிலுவையில் அறையுண்ட இயேசுவிடமிருந்து தன் சக்தியைப் பெற்றார் என்று கூறினார்.
தன் துறவு சபை வழியே உலகிற்கு பல புனிதர்களை வழங்கப்போவதாகக் கூறிய அன்னை தெரேசா அவர்கள், அப்புனிதர்களின் வரிசையில் முதலிடம் பெறுவது மிகப் பொருத்தமானதே என்று பேராயர் தாமஸ் டிசூசா அவர்கள் மேலும் கூறினார்.
செப்டம்பர் 4ம் தேதி, அருளாளர் அன்னை தெரேசா வத்திக்கானில் புனிதராக உயர்த்தப்படும் நிகழ்வையொட்டி, கொல்கத்தா உயர் மறைமாவட்டத்துடன் இணைந்து, பிறரன்பு மறைப்பணி சகோதரிகள் பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுள்ளதாக, UCAN செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

5. போதைப்பொருள் வர்த்தக வளர்ச்சியால் திருப்பீடம் கவலை

மார்ச்,16,2016. பல நாடுகளுக்கிடையே, வர்த்தகத் தடைகள் நீக்கப்பட்டு, உலகெங்கும் வர்த்தகங்கள் செழித்து வருவதன் மறைமுக விளைவாக, பல குற்றச் செயல்பாடுகளும் உலகெங்கும் பரவி வருவதை, திருப்பீடம் கவலையோடு நோக்குகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
போதைப்பொருள் பிரச்னையை மையப்படுத்தி, வியென்னா நகரில் நடைபெற்ற 59வது ஐ.நா. கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், தடையற்ற வர்த்தக விரிவாக்கம், போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் வழிவகுத்துள்ளது குறித்து, தன் உரையில் கவலை வெளியிட்டார்.
போதைப்பொருள் வர்த்தகம் தன்னிலேயே ஒரு குற்றம் என்பதோடு, அதனுடன் தொடர்புடைய, கொலைகள், ஆள்கடத்தல், மனித வர்த்தகம் என்ற பல்வேறு குற்றங்களும் வளர்வதற்கு, இந்த வர்த்தகம் காரணமாக அமைந்துள்ளது என்று, அருள்பணி Urbańczyk அவர்கள் சுட்டிக்காட்டினார்.
வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதே இந்தக் குற்றத்தை வளர்க்க தூண்டுதலாக அமைகிறது என்று கூறிய அருள்பணி Urbańczyk அவர்கள், போதைப்பொருள் பயன்பாட்டின் அதிகரிப்பிற்குக் காரணமாக உள்ள பிரச்சனைகளை அகற்ற வளர்ச்சி பெற்ற நாடுகளின் அரசுகள் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. முதுபெரும் தந்தை : எந்தப் படையோடும் திருஅவைக்குத் தொடர்பில்லை

மார்ச்,16,2016. 'பாபிலோனியப் படைகள்' (Babylon Brigades) என்ற பெயரில் ஈராக் நாட்டில் இயங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள குழுவுக்கும், கத்தோலிக்க திருஅவைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.
ஈராக்கில் உள்ள கிறிஸ்தவ சமுதாயத்தையும், நகரங்களையும் பாதுகாக்க, பாபிலோனியப் படைகள் உருவாக்கப்பட்டுள்ளதென வெளியாகியிருக்கும் கூற்றுகளுக்கும், கிறிஸ்தவ சமுதாயத்திற்கும் தொடர்பு இல்லை என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.
கிறிஸ்தவர்கள் என்று தங்களையே அழைத்துக்கொள்ளும் எந்த படையினரோடும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கல்தேயத் திருஅவைக்குத் தொடர்பில்லை என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தன் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஈராக் நாட்டிற்குள் ஊடுருவியுள்ள இஸ்லாமியப் போராளிகளுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் உருவாக்கியுள்ள பாதுகாப்புப்படை, பாபிலோனியப் படைகள்' என்று பெயர் பெற்றுள்ளது என பீதேஸ் செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி

7. மியான்மார் நாட்டில் அரசுத் துணைத் தலைவராக கிறிஸ்தவர்

மார்ச்,16,2016. மியான்மார் நாட்டில் அரசுத் துணைத் தலைவராக, ஹென்றி வான் தியோ (Henry Van Thio) அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, கிறிஸ்தவ சமுதாயத்திற்கு பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது என்று, மியான்மார் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர்களில் ஒருவரான, அருள்பணி பால் ஆங் டாங் (Paul Awng Dang) அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.
மியான்மார் பாராளுமன்றத்தில் அண்மையில் நிகழ்ந்தத் தேர்தலில், ஆங் சான் சூ சி (Aung San Suu Kyi) அவர்களின் கட்சியைச் சேர்ந்த, Htin Kyaw அவர்கள் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
50 ஆண்டுகள் இராணுவ ஆட்சிக்குப் பின்னர், அந்நாட்டின் குடிமகன் ஒருவர் அரசுத் தலைவராகத் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளதை, உலக ஊடகங்கள் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளன.
அரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இருவரில், ஹென்றி வான் தியோ அவர்கள், அந்நாட்டில் மிகவும் பின்தங்கிய, வறுமையான மற்றும் சிறுபான்மையான கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்தவர் என்பது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

8. வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையத்தின் 125ம் ஆண்டு நிறைவு

மார்ச்,16,2016. வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையம், மார்ச் 14ம் தேதி, இத்திங்களன்று 125ம் ஆண்டினை நிறைவு செய்துள்ளது என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano அறிவித்துள்ளது.
1891ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், Ut mysticam என்ற பெயரில், தன் சுய விருப்பத்துடன் வெளியிட்ட ஓர் ஆணையின்படி, வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையம் நிறுவப்பட்டது.
கிரகோரியன் நாள்காட்டியின் காரணமாக இருந்த திருத்தந்தை 13ம் கிரகோரி அவர்கள், இயேசு சபை அருள் பணியாளர்களின் ஒத்துழைப்போடு, 1578ம் ஆண்டு உருவாக்கிய காற்றுகளின் கோபுரம் (Tower of the Winds) என்ற முயற்சி, விண்வெளியில் கத்தோலிக்கத் திருஅவையின் ஆர்வத்தைக் காட்டும் ஓர் அடையாளம் என்று வத்திக்கான் நாளிதழ் கூறியுள்ளது.
விண்வெளி ஆய்வு குறித்து கத்தோலிக்கத் திருஅவை பல்வேறு பிரச்சனைகளைச்  சந்தித்தாலும், 1891ம் ஆண்டு, விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவுவதில் திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் உறுதியாக இருந்தார் என்பதையும் இக்கட்டுரை தெளிவுபடுத்தியுள்ளது.
உரோம் நகரில் இயேசு சபையினரால் உருவாக்கப்பட்டு, திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோவுக்கு (Castel Gandolfo) அருகே இயங்கிவரும் வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையம், தற்போது, இயேசு சபை அருள்சகோதரர் Guy Consolmagno என்பவரின் தலைமையில் இயங்கிவருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

இது இரக்கத்தின் காலம்...

இரண்டே வார்த்தைகளில் புரிந்துகொள்ள முடியுமா!

ஜென் மடாலயம் ஒன்றில், மௌனம், மிகத் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அங்கிருக்கும் யாரும் பேச அனுமதிக்கப்படுவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசலாம் என்று விதிமுறை இருந்தது, மடாலயத்தில்.
புதிதாக ஒரு துறவி, அங்கு வந்து, வசிக்க ஆரம்பித்தார். பத்து ஆண்டுகள் கடந்தபின், அவரை அழைத்த மடாதிபதி, "நீ வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. நீ இரண்டு வார்த்தைகள் பேசலாம். என்ன கூற விரும்புகிறாய்?" என்று கேட்டார். அதற்குத் துறவி, "படுக்கை... கடினம்..." என்றார்.
"ஓஹோ" என்றார் மடாதிபதி.
மீண்டும் பத்து ஆண்டுகள் கடந்தன. துறவி மறுபடியும் மடாதிபதியின் அறைக்கு வந்தார்.
"நீ பேச விரும்பும் இரண்டு வார்த்தைகளைப் பேசலாம்" என்றார் மடாதிபதி. துறவியோ, "உணவு... மோசம்" என்றார். "ஓஹோ" என்றார் மடாதிபதி.
மேலும் பத்து ஆண்டுகள் கடந்தபின், துறவி மறுபடியும் மடாதிபதியின் அறைக்கு வந்தார். "நீ பேச விரும்பும் இரண்டு வார்த்தைகளைச் சொல்" என்று மடாதிபதி கூறினார். "நான்... போகிறேன்" என்றார் துறவி. "சரி! நீ ஏன் போக விரும்புகிறாய் என்று எனக்குத் தெரியும். நீ எப்போதும் சொல்ல விரும்புவது, புகார்தான்!" என்றார் மடாதிபதி.
மற்றவர்களை முதலில் ஏற்றுக் கொண்டால், அவர்களை புரிந்துகொள்வது, அதன்பின் எளிதாக இருக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

Post a Comment

Powered by Blogger.