Halloween party ideas 2015
.வத்திக்கான் வானொலி செய்திகள்

செப்டம்பர் 4, 2016
வத்திக்கானில், அன்னை தெரேசாவின் புனிதர்பட்ட விழா

செய்திகள்
15.03.16
------------------------------------------------------------------------------------------------------

1. செப்டம்பர் 4ல் அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டமளிப்பு விழா

2. இயேசுவின் முகமாக விளங்கியவர், அன்னை தெரேசா

3. இறை அன்பு குறித்து தெரிந்துகொள்ள சிலுவையை நோக்குங்கள்

4. ஐரோப்பா, தடுப்புச் சுவர்களை எழுப்புவது தவறு - இத்தாலிய கர்தினால்

5. சிரியா மனித உரிமை மீறல்கள் குறித்து திருப்பீடம் கவலை

6. மத சகிப்பற்ற தன்மைகளைக் கட்டுப்படுத்த ஒன்றிணையுங்கள்

7. 2000 கத்தோலிக்கரைக் காப்பாற்றிய பாகிஸ்தான் இளைஞருக்கு அஞ்சலி

8. பாகிஸ்தான்: போலியோவை தடுக்க மூன்று நாள் செயல்திட்டம் துவங்கியது

------------------------------------------------------------------------------------------------------

1. செப்டம்பர் 4ல் அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டமளிப்பு விழா

அருளாளர் அன்னை தெரேசா புனிதராக உயர்த்தப்படும் சடங்கு, இவ்வாண்டு செப்டமபர் 4ம் தேதி, ஞாயிறன்று இடம்பெறும் என இச்செவ்வாய் காலை, கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்னை தெரேசாவின் புனிதர்பட்ட அறிவிப்பு, செப்டம்பர் 4ம் தேதி இடம்பெறுவதுபோல், வரும் ஜூன் 5ம் தேதி, அருளாளர்கள் Stanislao di Gesu Maria மற்றும் Maria elisabetta Hesselblad ஆகிய இருவருக்கும், அதேவண்ணம், அக்டோபர் 16ம் தேதி Giuseppe Sanchez del Rio மற்றும் Giuseppe Gabriele del Rosario Brochero ஆகிய இருவருக்கும் புனிதர் பட்டங்கள் வழங்கப்படும் எனவும் செவ்வாய்க் கிழமையன்று அறிவிக்கப்பட்டது.
1910ம் ஆண்டு மாசெடோனியாவில் பிறந்து, தன் இளம் வயதிலிருந்தே இந்தியாவில் ஏழைகளிடையே பணியாற்றி, 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இறைபதம் சேர்ந்த அன்னை தெரேசா அவர்கள், 2003ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதியன்று புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் அருளாளராக அறிவிக்கப்பட்டார்.
அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், இறையடி சேர்ந்த 19ம் ஆண்டு நிறைவுக்கு ஒரு நாள் முன்னதாக அவரது புனிதர் பட்ட விழா நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

2. இயேசுவின் முகமாக விளங்கியவர், அன்னை தெரேசா

மார்ச்,15,2016. இயேசுவின் முகமாக இன்றைய உலகிற்கு விளங்கியவர், அன்னை தெரேசா; எனவேதான், அவர் கொல்கத்தாவையும், இந்தியாவையும் தாண்டி, இவ்வுலகம் அனைத்திற்கும் சொந்தமாகக் கருதப்படுகிறார் என்று, கொல்கத்தாவின் முன்னாள் பேராயர், ஹென்றி செபாஸ்டின் டிசூசா அவர்கள் கூறினார்.
இவ்வாண்டு செப்டம்பர் 4ம் தேதி புனிதராக உயர்த்தப்படவிருக்கும் அருளாளர் அன்னை தெரேசாவைக் குறித்து, ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் பேராயர் ஹென்றி டிசூசா அவர்கள் இவ்வாறு கூறினார்.
அன்னை தெரேசா அவர்களின் இறுதி ஊர்வலம் இந்திய அரசின் முழு மரியாதையுடன் நடத்தப்பட்டதையும், அவரது மறைவுக்குப்பின், ஐந்து ஆண்டுகள் காத்திராமல், விரைவிலேயே அவரது புனிதர் பட்ட முயற்சிகள் துவங்கப்பட்டதையும் குறித்து, பேராயர் ஹென்றி டிசூசா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
மொழி, இனம், மதம், கலாச்சாரம், வாழ்வு நிலை என்ற பல எல்லைகளைக் கடந்து பணியாற்றிய அன்னை தெரேசா அவர்கள், உலகமனைத்திற்கும் பொதுவான ஒரு புனிதராக உயர்த்தப்படுகிறார் என்று கொல்கத்தாவின் முன்னாள் பேராயர் ஹென்றி டிசூசா அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

3. இறை அன்பு குறித்து தெரிந்துகொள்ள சிலுவையை நோக்குங்கள்

மார்ச்,15,2016. இறைவன் நம்மீது வைத்திருக்கும் அன்பு குறித்து அறிய விரும்பினால், அவர் நமக்காக தன்னையே தியாகம் செய்த சிலுவையை உற்று நோக்குவோம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய்க் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு, 'இருக்கிறவர் நானே' என்பதை உணர்ந்துகொள்வீர்கள்"  என பரிசேயர்களை நோக்கி இயேசு கூறிய வார்த்தைகளை மையப்படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
கொள்ளிவாய்ப் பாம்பால் கடிபட்டவர்களை குணப்படுத்தும் நோக்கில், வெண்கலத்தால் செய்த கொள்ளிவாய்ப் பாம்பை கம்பத்தில் கட்டி உயர்த்தும்படி, இறைவன், மோசேயிடம் கூறி, மக்களைக் காப்பாற்றியதுபோல், இயேசுவும், நம் பாவங்களுக்காகவும், நம் மீட்புக்காகவும், சிலுவையில் உயர்த்தப்பட்டு, நம்மை காப்பாற்றினார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் மீட்பரின் கதை என்பது, கடவுளின் அன்பைப் பற்றிய கதை, அந்த அன்புக் கதையை அறிய வேண்டுமெனில், நமக்காக சிலுவையில் தொங்கிய இயேசுவை நாம் உற்று நோக்க வேண்டும் என, மேலும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

4. ஐரோப்பா, தடுப்புச் சுவர்களை எழுப்புவது தவறு - இத்தாலிய கர்தினால்

மார்ச்,15,2016. புலம்பெயர்ந்தோரும், குடியேற்றதார்களும், ஏழை லாசர்  போல, நம் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும்போது, மனித உரிமைகளுக்கும், கலாச்சாரத்திற்கும் தொட்டில் என்றழைக்கப்படும் ஐரோப்பா, தடுப்புச் சுவர்களையும், தாண்டமுடியாத அகழிகளையும் உருவாக்கிகொண்டிருப்பது தவறு என்று இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ (Angelo Bagnasco) அவர்கள் கூறினார்.
இத்தாலிய ஆயர் பேரவையின் நிரந்தரக் குழுவினரை, இத்திங்களன்று சந்தித்த கர்தினால் பஞாஸ்கோ அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் படும் துயரங்கள், புலம்பெயர்ந்தோர் பிரச்சனை என்ற பல்வேறு விடயங்கள் குறித்து பேசினார்.
புலம்பெயர்ந்தொரைப் பொருத்தவரை, உலக அளவில் புறக்கணிப்பு நிலவிவருகிறது என்ற கவலையை வெளியிட்ட கர்தினால் பஞாஸ்கோ அவர்கள், இத்தாலிய கத்தோலிக்க அமைப்புக்கள், 45,000 புலம் பெயர்ந்தோருக்கு புகலிடம் அளித்துள்ளது குறித்து மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.
இத்தாலியச் சமுதாயம் மெதுவாக சிதைந்து வருகிறது என்பதைக் குறிப்பிட, கடந்த ஆண்டு, இத்தாலியில் 6,53,000 இறப்புக்கள் நிகழ்ந்ததையும், 4,88,000 பிறப்புக்களே இருந்தன என்பதையும் சுட்டிக் காட்டியபின், ஏறத்தாழ ஒரு இலட்சம் இத்தாலியர் வேறு நாடுகளில் குடியேறியுள்ளதையும் கர்தினால் பஞாஸ்கோ அவர்கள் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி

5. சிரியா மனித உரிமை மீறல்கள் குறித்து திருப்பீடம் கவலை

மார்ச்,15,2016. அண்மையில் சிரியாவில் நடக்கும் வன்முறைகளையும், புலம்பெயர்ந்தோர் வெளியேறலையும் நோக்கும்போது, அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள் மதிப்பிழந்ததுபோல் காணப்படுகிறது என கவலையை வெளியிட்டார், திருப்பீட அதிகாரி Richard Gyhra
ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அமைப்புகளுக்கான திருப்பீடச் செயலகத்தின் அதிகாரி அருள்பணி Gyhra அவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் உரையாற்றியபோது, இன்றைய காலக்கட்டத்தில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தண்டனையின்றி போவதையும், பொதுமக்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்கள் தினமும் இடம்பெறுவதையும் காணமுடிகின்றது என்றார்.
தற்போது சிரியாவில் துவக்கப்பட்டுள்ள அமைதி நடவடிக்கைகள் தோய்வின்றி முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் திருப்பீடத்தின் சார்பில் முன்வைத்தார் அருள்பணி Gyhra.
சிரியாவின் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டுமெனில், சண்டையிடும் அனைத்துத் தரப்பினரையும், அனைத்துலக சமுதாயத்தையும் உள்ளடக்கிய உண்மையான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டிய அவசியத்தையும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் எடுத்துரைத்தார், அருள்பணி Gyhra.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மத சகிப்பற்ற தன்மைகளைக் கட்டுப்படுத்த ஒன்றிணையுங்கள்

மத சகிப்பற்ற தன்மைகள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வேண்டுமெனில், அனைத்துலக ஒத்துழைப்பும், மதங்களிடையே கலந்துரையாடலும் இன்றியமையாதவை என உரைத்தார் திருப்பீட உயர் அதிகாரி, பேராயர் Paul Gallagher.
மறைப்பணி பயிற்சி குறித்து உரோம் மறைமாவட்டத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய, திருப்பீடத்தின் வெளியுறவுச் செயலர், பேராயர் Gallagher அவர்கள், மத தீவிரவாதமும் மத வன்முறைகளும் இன்றைய உலகில் மிகப்பெரும் பிரச்சனைகளாக மாறியுள்ளன என்றார்.
மத அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்தப்படாமை, மத சகிப்புத்தன்மை, மத விடுதலைக்கான உரிமை மதிக்கப்படுதல், அனைத்துலக ஒத்துழைப்புடன் மத தீவிரவாதத்தை ஒடுக்குதல் போன்றவை வழியாகவே மத வன்முறைகளை களைய முடியும் என கூறிய பேராயர் Gallagher அவர்கள், மத சகிப்பற்ற தன்மைகள் மேற்கத்திய நாடுகளிலும் காணப்படுகின்றன என மேலும் எடுத்துரைத்தார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

7. 2000 கத்தோலிக்கரைக் காப்பாற்றிய பாகிஸ்தான் இளைஞருக்கு அஞ்சலி

மார்ச்,15,2016. கடந்த ஆண்டு பாகிஸ்தான் லாகூரில் கத்தோலிக்கக் கோவிலில் தாக்குதல் நடத்த முயன்ற இஸ்லாம் தீவிரவாதியை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தன் உயிரைத் தியாகம் செய்த இளைஞர் ஒருவரை மறைசாட்சியாக அறிவிக்க வேண்டும் என, திருஅவையை விண்ணப்பித்துள்ளனர், அப்பகுதி கத்தோலிக்கர்கள்.
லாகூரின் புனித யோவான் கத்தோலிக்கக் கோவிலில் சுயவிருப்பப் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய 20 வயது ஆகாஷ் பஷீர் என்ற இளைஞர், வெடிகுண்டுடன் வந்த தீவிரவாதி ஒருவரை தடுத்து நிறுத்திய வேளையில், அத்தீவிரவாதி குண்டை வெடிக்க வைத்து, தன் உயிரை மாய்த்துக் கொண்டதுடன், அக்கத்தோலிக்க சுய விருப்பப் பணியாளரும் உயிர் இழந்தார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி இடம்பெற்ற இத்துயரச் சம்பவத்தின் ஓராண்டு நினைவாக இம்மாதம் 13ம் தேதி ஞாயிறன்றும், 15ம் தேதியும், அதே புனித யோவான் கோவிலில் வழிபாடுகளை நடத்திய கத்தோலிக்கர்கள், இளைஞர் பஷீரை, கத்தோலிக்க மறைசாட்சி என திருஅவை அறிவிக்க வேண்டும் என விண்ணப்பித்தனர்.
கோவிலினுள் செப வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 2000க்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்களின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரை, கடந்த ஆண்டில் கையளித்த 20 வயது இளைஞர் பஷீரை புனிதராக அறிவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அழைப்பு விடுத்தார், புனித யோவான் கோவில் பங்கு தந்தை பிரான்சிஸ் குல்சார்.
புனித யோவான் கோவிலுக்கு வெளியே நடந்த இந்தத் தாக்குதலில் பஷீருடன் உயிரிழந்த 15 பேருக்கும் லாகூர் பேராயர் செபஸ்டியான் ஷா அவர்களின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட நினைவுத் திருப்பலியில் 3000க்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொண்டனர்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

8. பாகிஸ்தான்: போலியோவை தடுக்க மூன்று நாள் செயல்திட்டம் துவங்கியது

மார்ச்,15,2016. பாகிஸ்தானில் உள்ள இரண்டு கோடியே 20 இலட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு போலியோ தடுப்பூசி கொடுப்பது குறித்த மூன்று நாள் பிரச்சார நடவடிக்கை ஒன்று ஆரம்பமாகியுள்ளது.
இச்சிறார்களில் ஏறத்தாழ ஒரு கோடியே 80 இலட்சம் பேர் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
பாகிஸ்தான் சிறார்களிடத்தில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் வெளிநாட்டு சதியே இந்த மருந்து என்று குற்றஞ்சாட்டி, தடுப்பூசி வழங்கும் அணியினர் மீது இஸ்லாமிய தீவரவாதிகள் தொடர்ந்து தாக்குதலை நடத்திவரும் நிலையில், அங்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

இது இரக்கத்தின் காலம்...

மறந்து, மன்னித்து, வரவேற்கும் வானகத் தந்தை

மன்னிப்பதையும், மறப்பதையும் இணைத்து சொல்லப்பட்டுள்ள பல கதைகளில், நம் உள்ளங்களில் ஆழமாய்ப் பதியவேண்டிய ஒரு கதை இது:
கணவன், மனைவி இருவருக்கும் இடையே நிகழ்ந்த ஓர் உரையாடலில், "நான் செய்த தவறை மன்னித்து, மறந்துவிட்டதாகச் சொல்கிறாய். பின், ஏன் மீண்டும், மீண்டும் அதைப் பற்றிப் பேசுகிறாய்?" என்று கணவன் தன் மனைவியிடம் கேட்கிறார். அதற்கு, மனைவி, "நான் மறந்து, மன்னித்துவிட்டேன். ஆனால், நான் மறந்துவிட்டேன் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், உங்களுக்கு அதை நினைவுபடுத்துகிறேன்" என்று பதில் சொல்கிறார்.
பக்தனுக்கும், பரமனுக்கும் இடையே நிகழும் ஓர் உரையாடலில், "என் குற்றங்களை மன்னித்து, மறந்துவிடு, இறைவா!" என்று பக்தன் வேண்டுகிறார். அதற்கு, பரமன், "எந்தக் குற்றங்கள்? எனக்கு எதுவுமே நினைவில் இல்லையே!" என்று பதில் சொல்கிறார்.
நம் குற்றங்களை மறந்து, மன்னித்து, வரவேற்கக் காத்திருக்கும் வானகத் தந்தையின் இயல்பில், ஒரு துளி அளவாகிலும் நம் இயல்பாக மாறினால், இவ்வுலகம் இரக்கத்தில் நனையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு
SEO/SMO Team

Post a Comment

Powered by Blogger.