Halloween party ideas 2015
.வத்திக்கான் வானொலி செய்திகள்


செய்திகள்
14.03.16
------------------------------------------------------------------------------------------------------

1. தீமைகளைக் களைய உதவ நம் விசுவாசம் அழைப்பு விடுக்கிறது

2. ஐவரி கோஸ்ட்டில் பலியானோருக்கு திருத்தந்தையின் அனுதாபம்

3. அங்காரா குண்டுவெடிப்பில் பலியானோருக்கு அனுதாபத் தந்தி

4. இரக்கத்திற்கும் வன்முறை நிலைகளுக்கும் இடையே நிறுத்தப்பட்ட பெண்

5. சிரியா நாட்டிற்காக செபிப்பதன் வழியாக ஒருமைப்பாட்டு அறிவிப்பு

6. அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியேற்றதாரர்களுக்காக திருஅவையின் குரல்

7. ஏழ்மையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே

8. லெபனான் நாட்டு கிறிஸ்தவர்களுக்கு ISIS எச்சரிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. தீமைகளைக் களைய உதவ நம் விசுவாசம் அழைப்பு விடுக்கிறது

மார்ச்,14,2016. வீடற்ற மனிதர் ஒருவர் அண்மையில், உரோம் நகர் சாலையில் குளிரால் உயிரிழந்தது, ஏமன் நாட்டில் அன்னை தெரேசா சபை அருள்சகோதரிகள் கொலை செய்யப்படடது போன்றவற்றிற்கு நமக்குக் கிடைக்கும் ஒரே பதில், இறைவன் மீதான நம்பிக்கையின் வழியேதான் என கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் காலை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில் நாம் காணும் துன்பங்கள், குழந்தைகளின் நோய்கள், ஏழைகளின் பசி மரணங்கள் போன்றவற்றிற்கு நியாயமான பதில் இல்லையெனினும், இறைவனின் விசுவாசம் வழி வரும் அக்கறைக்கு இது அழைப்பு விடுப்பதாக உள்ளது என்றார்.
தீமை என்பது இறுதி அல்ல, ஏனெனில், நமதாண்டவர் நம்மோடு நடைபோடுகிறார் என்ற கூற்றை வலியுறுத்திய திருத்தந்தை, இவ்வுலகின் தீமைகளுக்குரிய காரணம் நமக்குப் புரியவில்லையெனினும், அவற்றைக் களைவதற்கும், பாதிக்கப்பட்டோருக்கு அக்கறை காட்டுவதற்கும் நம் விசுவாசம் அழைப்புவிடுக்கிறது என மேலும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

SeDoc                   Pope's Monday Morning Mass Homily

2. ஐவரி கோஸ்ட்டில் பலியானோருக்கு திருத்தந்தையின் அனுதாபம்

மார்ச்,14,2016. ஐவரி கோஸ்ட் நாட்டின் Grand-Bassam எனுமிடத்தில் நிகழ்ந்த குண்டுத் தாக்குதலில் பலியானோருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், காயமடைந்தோருடன் தன் அருகாமையையும் வெளிப்படுத்தும் வகையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
Grand-Bassam மறைமாவட்ட ஆயர், Raymond Ahoua அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் சார்பில் அனுப்பியுள்ள இத்தந்தியில், எவ்வடிவத்தில் வெளிப்படும் வன்முறையும் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
இறந்தோர் அனைவரையும் இறைவன் தன் அமைதியிலும், ஒளியிலும் இணைக்க வேண்டும் என்றும், இறந்தோரின் குடும்பங்களுக்கு இறைவன் ஆறுதலாக இருக்கவேண்டும் என்றும் தான் மன்றாடுவதாக, இந்த அனுதாபத் தந்தியில் திருத்தந்தை கூறியுள்ளார்.
மார்ச் 13, இஞ்ஞாயிறன்று Grand-Bassam என்ற சுற்றுலாப் பயணியர் தலத்தில், இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 6 பேர் மேற்கொண்ட கண்மூடித்தனமான சுடுதலால், 4 ஐரோப்பிய பயணிகள் உட்பட, 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

SeDoc                   Pope Francis sends telegram to Ivory Coast victims

3. அங்காரா குண்டுவெடிப்பில் பலியானோருக்கு அனுதாபத் தந்தி

மார்ச்,14,2016. துருக்கி நாட்டின் அங்காராவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியானோர், மற்றும் காயமடைந்தோர் ஆகியோருக்கு அனுதாபம் தெரிவிக்கும் தந்தியொன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.
துருக்கி குடியரசின் தலைவர், Recep Tayyip Erdoğan அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் சார்பில் அனுப்பியுள்ள இத்தந்தியில், துருக்கி அரசுத் தலைவரோடும், மக்களோடும் திருத்தந்தை ஆன்மீக அளவில் ஒன்றித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் துயரமிகு வன்முறையின்போது, உதவிகள் செய்துவரும் பாதுகாப்புப் படையினர், மற்றும் ஏனைய உதவியாளர்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்கவேண்டும் என்று, திருத்தந்தை தன் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 13, இஞ்ஞாயிறு மாலை, அங்காராவில், Guven Park எனுமிடத்தில், ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று, ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

SeDoc                   Pope's telegram for attack in Ankara - Turkey - signed by Cardinal Parolin

4. இரக்கத்திற்கும் வன்முறை நிலைகளுக்கும் இடையே நிறுத்தப்பட்ட பெண்

மார்ச்,14,2016. இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் காண்பிக்கும், 'விபசாரத்தில் பிடிபட்ட பெண்' பற்றிய நிகழ்வில், இயேசுவின் அணுகுமுறை, இரக்கம் நிறைந்ததாகவும், அதேவேளை, மறைநூல் அறிஞர்களின் எதிர்பார்ப்புக்கு எதிராகச் செல்வதாகவும் உள்ளது எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நற்செய்தி வாசகம் குறித்து தன் நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, இறைமகனின் இரக்கத்திற்கும், பரிசேயர்களின் வன்முறை நிலைகளுக்கும் இடையே இப்பெண் நிறுத்தப்பட்டார் என்றார்.
உங்களுள் குற்றமற்றவர் முதலில் கல்லை எறியட்டும் என இயேசு கூறியதைக் கேட்ட கூட்டம், ஒவ்வொருவராக பின்வாங்கிச் சென்றதைப்பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில் அங்கு நின்றது இயேசுவும் அப்பெண்ணுமே, அதாவது இரக்கமும், இரக்கத்தின் தேவையுள்ளவருமே, என்றார்.
நாமும் நம் பாவங்களை உணரும்போது, மற்றவர்களைத் தீர்ப்பிடும் மனநிலையிலிருந்து வெளிவருவதுடன், இயேசுவின் வழியான மீட்பையும் அடைவோம் என மேலும் கூறினார் திருத்தந்தை.
இதே நாளில், மூவேளை செப உரைக்குப் பின், லூக்கா நற்செய்தியின் கையடக்கப் பிரதிகள், தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

SEDOC Pope's Sunday Angelus message

5. சிரியா நாட்டிற்காக செபிப்பதன் வழியாக ஒருமைப்பாட்டு அறிவிப்பு

மார்ச்,14,2016. இம்மாதம் 15ம் தேதிக்கும் 20ம் தேதிக்கும் இடைப்பட்டக் காலத்தில் சிரியா நாட்டு மக்களுக்காக சிறப்பு செப வழிபாடுகளையும் உண்ணாநோன்புகளையும் மேற்கொள்ளும் அனைத்துலக முயற்சிகளுக்கு தன் ஆதரவை வழங்கியுள்ளது, Pax Christi என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு.
உண்ணா நோன்பு மற்றும் செபவழிபாடுகள் வழியாகவும், நம் அருகே வசிக்கும் சிரியா நாட்டு அகதிகளை நேரில் சந்திப்பதன் வழியாகவும், அவர்களுடன் நம் ஒருமைப்பாட்டை அறிவிக்க முடியும் எனக் கூறும் Pax Christi அமைப்பு, அனைத்து கிறிஸ்தவ கோவில்களிலும், வரும் ஞாயிறு திருப்பலியின்போது சிரியா நாட்டு மக்களுக்காக செபிக்குமாறு விண்ணப்பித்துள்ளது.
குழுவாகவும், தனிப்பட்ட முறையிலும் சிரியா நாட்டிற்காக செபிப்பதன் வழியாக, அந்நாட்டின் அமைதிக்கு நம்மால் உதவ முடியும் எனவும் இந்த கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, அழைப்பு விடுத்துள்ளது.

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி

ICN  Pax Christi calls for special time of prayer and action for Syria

6. அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியேற்றதாரர்களுக்காக திருஅவையின் குரல்

மார்ச்,14,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்திலிருக்கும் பல இலட்சக்கணக்கான குடியேற்றதாரர்களுக்கு, மனிதாபிமான உதவிகளை வரையறுக்கும் விதிமுறைகள் அடங்கிய மனுவை, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பதிவுச் செய்துள்ளது, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை.
24 மதக் குழுக்களுடன் இணைந்து, இந்த மனுவை நீதிமன்றத்தில் பதிவுச் செய்துள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், அனுமதியின்றி குடியேறியுள்ளவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் வழங்கவேண்டிய உதவிகள் குறித்து வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் உறவினர்களைக் கொண்டிருக்கும் அதேவேளையில், தேசத்தின் பாதுகாப்பிற்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக இல்லாத குடியேற்றதாரர்களை பலவந்தமாக திருப்பி அனுப்புவது குறித்த கேள்விகளையும் நீடிமன்றத்தில் முன்வைத்துள்ளனர், அமெரிக்க ஆயர்கள்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் வளர்ச்சியில் குடியேற்றதாரர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்தும் சிந்திக்க வேண்டிய அவசியத்தையும் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி

ICN    US Bishops join other faith groups in court brief supporting migrants threatened with deportation

7. ஏழ்மையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே

மார்ச்,14,2016. உலகில் ஏழ்மையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில், பல புள்ளிவிவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை, NGO ONE என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
"ஏழ்மை என்பது, பாலின அடிப்படையில் வெளியாவது" என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இவ்வமைப்பு, பெண்கள், மிகப்பெரும் அளவில் துன்பங்களை அனுபவிக்கும் 20 நாடுகளையும் பட்டியலிட்டுள்ளது.
2016ம் ஆண்டில் கூட 50 கோடி பெண்கள் எழுத படிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர் என்றுக் கூறும் NGO ONE அமைப்பு, பெண்களை பாகுபாட்டுடன் நடத்தும் சட்டங்கள், உலகின் 155 நாடுகளில் நடைமுறையில் உள்ளன என்றும் தெரிவிக்கிறது.
உலகின் எந்த ஒரு நாட்டிலும், ஆண்களுக்கு இணையான வாய்ப்புக்கள் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் இவ்வமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.
பெண்களை மிக மோசமாக நடத்தும் 20 நாடுகளுள், சில ஆப்ரிக்க நாடுகளுடன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹெயிட்டி, ஏமன் ஆகிய நாடுகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

Fides                     Discriminatory laws between men and women in 155 countries

8. லெபனான் நாட்டு கிறிஸ்தவர்களுக்கு ISIS எச்சரிக்கை

மார்ச்,14,2016. லெபனான் நாட்டு கிறிஸ்தவர்கள், இஸ்லாம் மதத்தைத் தழுவவேண்டும், இல்லையேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஒரு காணொளி பதிவு வழியே எச்சரித்துள்ளது, ISIS இஸ்லாமிய அரசு.
லெபனான் நாட்டின் Sunni இஸ்லாமியர்கள், அந்நாடு முழுவதும் இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைக்குக் கொணரவேண்டும் என்று விண்ணப்பிக்கும் இந்த இஸ்லாமியத் தீவிரவாதக் குழு, லெபனான் நாட்டு கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய மறையைத் தழுவவேண்டும், இல்லையெனில், அவர்களது பிணங்கள்மீது நடந்து எருசலேம் அடைவோம் என்று தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.
லெபனான் நாடு, குரானால் வழிநடத்தப்பட வேண்டுமேயொழிய, இஸ்லாமியத்திற்கு எதிரான குற்றவாளிகளால் அல்ல எனவும் கூறுகிறது, ISIS தீவிரவாதிகளின் எச்சரிக்கை காணொளிப் பதிவு.
இதற்கிடையே, அரேபிய ஒன்றியம் (Arab League) மற்றும் அரேபிய வளைகுடா அரசுகள் இணைந்து, எகிப்தின் கெய்ரோவில் மேற்கொண்ட ஒரு கூட்டத்தில், ISIS அமைப்பை ஒரு தீவிரவாதக் குழு என்று அறிவித்து, தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

AsiaNews            IS threatens Lebanese Christians, Hezbollah, as Arab League declares the latter a "terrorist" group

இது இரக்கத்தின் காலம்...

சமாதானத்தை ஏற்படுத்தும் பொய்

அரசர் ஒருவரிடம், குற்றவாளி ஒருவரை, சிலர் கொண்டுவந்து நிறுத்தினர். அரசே, இவன் வேற்று நாட்டைச் சேர்ந்தவன், நமக்குப் புரியாத மொழி பேசுகிறவன் என்று சொல்லி, அக்குற்றவாளி செய்த குற்றத்தை அரசரிடம் விவரித்தனர். அதைக் கேட்ட அரசர், குற்றவாளிக்குத் தூக்குத்தண்டனை விதித்தார். உடனே, அக்குற்றவாளி தனது மொழியில் அரசரைத் திட்டினார். அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. அமைச்சரை அருகில் அழைத்து, இவன் என்ன சொல்கிறான் என்று கேட்டார் அரசர். ஒரு கணம் சிந்தித்த அமைச்சர், அரசே, கோபத்தை அடக்கி, பிறரை மன்னிப்பதே சொர்க்கம் என்கிறான் என்று சொன்னார். சற்று சிந்தித்த அரசரின் மனம் மாறியது. பின்னர், அங்கிருந்தவர்களிடம், இக்குற்றவாளிக்கு நான் கொடுத்த தண்டனையைத் தள்ளுபடி செய்கிறேன், இவனை மன்னித்து விடுகிறேன் என்றார். அருகில் நின்றுகொண்டிருந்த மற்றோர் அமைச்சருக்கு இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மெல்ல அரசர் காதருகில் சென்று, அந்த அமைச்சர் சொன்னது பொய். இப்போது நான் உங்களிடம் சொல்வதுதான் உண்மை. இந்த அந்நியன் உங்களைத் தனது மொழியில் கோபமாகத் திட்டினான் என்றார். புன்னகையோடு இந்த அமைச்சரைப் பார்த்த அரசர், அமைச்சரே, நீங்கள் கூறிய உண்மையைவிட, அந்த அமைச்சர் கூறிய பொய் எனக்கு மகிழ்வைத் தருகிறது என்றார். உண்மையைச் சொன்ன அமைச்சர் உறைந்துபோய் நின்றார். மீண்டும் அரசர் சொன்னார் சமாதானத்தை ஏற்படுத்தும் பொய், சண்டைகளை ஏற்படுத்தும் உண்மையைவிட மேலானது என்று. இது இரக்கத்தின் காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


Post a Comment

Powered by Blogger.