Halloween party ideas 2015
.வத்திக்கான் வானொலி செய்திகள்

 

செய்திகள்

11.03.16

------------------------------------------------------------------------------------------------------

 

1. திருத்தந்தை: துன்புறும் குடும்பங்களுக்காகச் செபிப்போம்

 

2. எளியச் சூழல்களில் இடம்பெறும் உன்னதம் தியானச் சிந்தனை

 

3. அன்பின் எதிர் நிலை, வெறுப்பு அல்ல, அக்கறையின்மை

 

4. நல்ல சமாரியரின் பரிவு, கிறிஸ்தவத்தின் இதயம் தியானச் சிந்தனை

 

5. சொல்லித் தருவதை வாழ்வில் கடைபிடிக்க அழைப்பு

 

6. இந்திய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள தீர்மான அறிக்கை

 

7. டில்லியில் கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலித்துக்களின் போராட்டம்

 

8. உலகில் அதிக வாழ்க்கைச் செலவு மிகுந்த நகரம், சிங்கப்பூர்

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. திருத்தந்தை: துன்புறும் குடும்பங்களுக்காகச் செபிப்போம்

 

மார்ச்,11,2016. மார்ச் மாதத்திற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள செபக் கருத்துக்கள் ஒரு காணொளி தொகுப்பாக இவ்வியாழன் மாலை வெளியிடப்பட்டுள்ளது.

இயேசு சபையினர் நடத்திவரும் செபத்தின் திருத்தூதுப் பணிக்குழு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி மேற்கொண்டுள்ள ஒரு புதிய முயற்சியாக, திருத்தந்தையின் செபக் கருத்துக்கள், ஒவ்வொரு மாதமும் காணொளி வடிவில் வெளியாகி வருகிறது.

மார்ச் மாதத்திற்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செபக்கருத்து, குடும்பத்தை மையப்படுத்தி அமைந்துள்ளது.

காணொளித் தொகுப்பின் ஆரம்பத்தில், பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் சில காட்சிகள் தோன்றி மறையும் வேளையில், திருத்தந்தையின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது.

மனித சமுதாயத்தின் மிக உயர்ந்த செல்வங்களில் ஒன்று, குடும்பம்; ஆயினும், அதுவே மிக எளிதில் காயப்படக்கூடியதாக விளங்குகிறது, இல்லையா? என்ற கேள்வியுடன் திருத்தந்தை, தன் சிந்தனைகளைத் துவக்குகிறார்.

பொருளாதாரம், நலக்குறைவு, அல்லது வேறு துயரங்களுக்கு குடும்பம் உட்படும்போது, குழந்தைகள், ஒரு சோகமானச் சூழலில் வளர்கின்றனர் என்று, திருத்தந்தை தொடர்ந்து பேசுகிறார்.

திருத்தந்தை இந்தக் கருத்துக்களை பேசும் வேளையில், ஒரு சிறுமி வீட்டுக்கு வெளியே அமர்ந்திருப்பதுபோலவும், அவளுக்குப் பின் காணப்படும் மூடியக் கதவுக்குப் பின்புறமிருந்து, ஒரு பெண் அடிபடுவதுபோலும், அவர் எழுப்பும் அழுகுரலும் கேட்கின்றன.

அவ்வேளையில், அங்கு வரும் ஒரு சிறுவன் அச்சிறுமியைப் பார்த்து புன்னைகைப்பதுபோலும், பின்னர், இருவரும் சேர்ந்து 'இது என் குடும்பம்' என்ற சொற்களுடன் ஒரு ஓவியம் வரைவதுபோலும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் மாதத்திற்கென வகுத்திருக்கும் செபக்கருத்தைக் கூறுகிறார்.

துன்புறும் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவு கிடைக்கவும், குழந்தைகள், நலமான, அமைதியானச் சூழலில் வளரவும் செபிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செபக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

YouTube தளத்தில், 1 நிமிடம் 27 நொடிகள் நீடிக்கும் இந்தக் காணொளித் தொகுப்பு, www.thepopevideo.org என்ற பெயரில் இவ்வியாழன் மாலை வெளியாகியுள்ளது.

 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

 

SeDoc                   Pope's Video message of the March Intentions of the Apostleship of Prayer

 

2. எளியச் சூழல்களில் இடம்பெறும் உன்னதம் – தியானச் சிந்தனை

 

மார்ச்,11,2016. திருத்தந்தைக்கும், திருப்பீட அதிகாரிகளுக்கும் தவக்காலத் தியானம் வழங்கும் அருள்பணி எர்மேஸ் ரோன்கி அவர்கள், இறைவன் எப்போதும் மனிதரோடு குடிகொள்கிறார் என்ற மறையுண்மையை, அன்னை மரியா, நாசரேத்தில், இயேசுவுடன் வாழ்ந்த 30 ஆண்டுகள், தன் அனுபவத்தில் உணர்ந்தவர் என்று, தன் இறுதி தியான உரையில் கூறினார்.

தவக்காலத் தியானத்தின் இறுதி உரையை, இவ்வெள்ளி காலை வழங்கிய அருள்பணி ரோன்கி அவர்கள், அன்னை மரியாவுக்கு விண்ணகத் தூதர், கிறிஸ்து பிறப்பைக் குறித்து அறிவித்த நிகழ்வை தன் உரையின் மையமாக்கினார்.

இறைவன் எளிமையை விரும்புகிறவர் என்பதால், கிறிஸ்துவின் பிறப்பு என்ற மிக உன்னதமான மறையுண்மை, மிக, மிக எளியதொருச் சூழலில் வெளிப்படுத்தப்பட்டது என்று கூறிய அருள்பணி ரோன்கி அவர்கள், நம் வாழ்விலும் இத்தகைய உன்னத நிகழ்வுகள், எளியச் சூழல்களில் இடம்பெறுகின்றன என்று எடுத்துரைத்தார்.

ஒருவர் வாழும் இல்லம் என்பது, ஒருவரை மிக இயல்பாக இருக்கச் செய்யும் ஓர் இடம் என்பதால், அங்கு, இறைவன் இளம்பெண் மரியாவைச் சந்திக்க வந்தார் என்று அருள்பணி ரோன்கி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

நமது சமயலறையில் உள்ள பாத்திரங்களில் கடவுள் இருக்கிறார் என்று அவிலா நகர் புனித தெரேசா தன் துறவுசபை அருள்சகோதரிகளுக்குக் கூறியதை நினைவுபடுத்திய அருள்பணி ரோன்கி அவர்கள், மிகச் சாதாரணச் சூழல்களில் நாம் இறைவனை அடையாளம் கண்டுகொள்ளத் தவறுகிறோம் என்று கூறினார்.

மார்ச் 6, இஞ்ஞாயிறு மாலை முதல், உரோம் நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அரிச்சா விண்ணகப் போதகர் இல்லத்தில் திருத்தந்தையும், திருப்பீட அதிகாரிகளும் மேற்கொண்ட தவக்கால தியானம், மார்ச் 11, இவ்வெள்ளி மதியம் முடிவடைந்தது.

 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

 

SeDoc                   Concluding meditation of the Spiritual Exercises of the Pope and the Roman Curia - March 11

 

3. அன்பின் எதிர் நிலை, வெறுப்பு அல்ல, அக்கறையின்மை

 

மார்ச்,11,2016. திருத்தந்தையும், ஏனைய திருப்பீட அதிகாரிகளும் மேற்கோண்டிருந்த தவக்காலத் தியானத்தில், மரியின் ஊழியர் சபை அருள்பணியாளர், எர்மேஸ் ரோன்கி அவர்கள், இவ்வியாழன் மாலை வழங்கிய உரையில், அன்பின் எதிர் நிலை, வெறுப்பு அல்ல, மாறாக, அக்கறையின்மையே என்று கூறினார்.

உயிர்ப்புக்கும், தூய ஆவியாரின் வருகைக்கும் இடைப்பட்ட நாட்களில் இயேசு தன் சீடர்களைச் சந்தித்த நிகழ்வுகளை அடித்தளமாகக் கொண்டு, அருள்பணி ரோன்கி அவர்கள் தன் சிந்தனைகளை வழங்கினார்.

நாம் உன்னதமானவர்கள் என்பதால் இறைவன் நம்மீது அன்புகொள்வதில்லை, மாறாக, நாம் நேரிய உள்ளத்துடன் வாழ்வுப் பாதையில் பயணிக்கிறோம் என்பதையே அவர் நோக்குகிறார் என்று அருள்பணி ரோன்கி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இறைவன் மீது நாம் கொள்ளும் நம்பிக்கை, அவர் மீது நாம் கொள்ளும் அன்புடன் பின்னிப் பிணைந்தது என்று கூறிய அருள்பணி ரோன்கி அவர்கள், இன்றைய உலகம், குறிப்பாக, மேற்கத்திய உலகம், அன்பின் மீது நம்பிக்கை வைப்பதில்லை என்று எடுத்துரைத்தார்.

இறைவன் மீது நாம் கொள்ளும் அன்பு, ஓர் அடிமையைப் போல், அவரைக் கண்டு பயந்து உருவாகும் அன்பு அல்ல, மாறாக, நம் முழு சுதந்திரத்துடன் உடல், மனம், ஆன்மா ஆகிய அனைத்தின் வழியாகவும் அவர் மீது நாம் கொள்ளும் அன்பு என்று அருள்பணி ரோன்கி அவர்கள் தன் சிந்தனையை நிறைவு செய்தார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

SeDoc                   Spiritual Exercises of the Pope and the Roman Curia - Meditation of March 10 afternoon

 

4. நல்ல சமாரியரின் பரிவு, கிறிஸ்தவத்தின் இதயம் தியானச் சிந்தனை

 

மார்ச்,11,2016. நல்ல சமாரியர் காட்டிய பரிவு ஒவ்வொரு கிறிஸ்தவரிடமும் குடிகொள்ள வேண்டும் என்று, திருப்பீட அதிகாரிகளின் ஆண்டு தியானத்தை வழிநடத்தும் அருள்பணியாளர் எர்மேஸ் ரோன்கி அவர்கள் கூறினார்.

உரோம் நகரின் புறநகரில் அமைந்துள்ள அரிச்சா தியான இல்லத்தில், திருத்தந்தையும் ஏனைய திருப்பீட அதிகாரிகளும் மேற்கொண்ட தவக்காலத் தியானத்தின் ஐந்தாம் நாள் சிந்தனைகளை வழங்கிய அருள்பணி ரோன்கி அவர்கள், துயருறுவோர் மீது அக்கறை கொள்வதே உண்மை கிறிஸ்தவரின் இலக்கணம் என்று கூறினார்.

கல்வாரியில் சிலுவையில் தொங்கிய வேளையில், தன் துன்பத்தின் மீது கவனம் கொள்ளாமல், அருகே துன்பப்பட்ட கள்வர் மீது இயேசுவின் கவனம் திரும்பியது என்றும், உயிர்த்தபின், கல்லறை அருகே கண்ணீர் வடித்த மகதலா மரியாவின் கண்ணீரைத் துடைப்பதில் இயேசு கவனம் செலுத்தினார் என்றும் அருள்பணி ரோன்கி அவர்கள் எடுத்துக்காட்டுகளைக் கூறினார்.

ஒருவருடைய தகுதி, தவறு என்ற கோணங்களில் சிந்திக்காமல், ஒவ்வொருவரின் உள்ளார்ந்த இயல்பைச் சந்திக்க விழைவதே, இயேசுவின் குறிக்கோளாக இருந்ததென்று தியானப் போதகர், அருள்பணி ரோன்கி அவர்கள் எடுத்துரைத்தார்.

நல்ல சமாரியர் உவமையைச் சுட்டிக்காட்டிய அருள்பணி ரோன்கி அவர்கள், பரிவு என்பது, ஒருவரைக் கண்டு, பரிதாபப்பட்டு, விலகிச் செல்வது அல்ல, மாறாக, அவரைத் தொட்டு, தூக்கியெடுத்து உதவிகள் செய்வது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

காயமடைந்திருக்கும் ஒருவரை நாம் தொட்டு, அவரது கண்ணீரைத் துடைப்பதால், இவ்வுலகின் அநீதியான அமைப்பு முறைகளில் மாற்றம் வந்துவிடாது என்று கூறிய அருள்பணி ரோன்கி அவர்கள், இருப்பினும், அநீதிகளால் அவதியுறும் உலகை மாற்றமுடியும் என்ற சிறு நம்பிக்கையை நம் செயல்கள் விளைவிக்கக்கூடும் என்று தன் உரையின் இறுதியில் கூறினார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

SeDoc                   Lenten Retreat of the Roman Curia : Compassion at heart of Christianity

 

5. சொல்லித் தருவதை வாழ்வில் கடைபிடிக்க அழைப்பு

 

மார்ச்,11,2016. கத்தோலிக்க ஆசரியர்களும், இறையியலாளர்களும் தாங்கள் சொல்லித் தருவதை வாழ்வில் கடைபிடிப்பது மட்டுமே அவர்களை நம்பிக்கைக்குரிய சாட்சிகளாக மாற்றும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கத்தோலிக்கக் கல்வி திருப்பேராயத்தின் தலைவரான கர்தினால் ஜியூசெப்பே வெர்சால்தி (Giuseppe Versaldi) அவர்கள், மணிலாவின், அத்தனேயோ பல்கலைக் கழகத்தில் (Ateneo de Manila University) இவ்வியாழனன்று வழங்கிய ஓர் உரையில் இவ்வாறு கேட்டுக்கொண்டார் என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

அண்மையில், ஏமன் நாட்டில் கொலை செய்யப்பட்ட அருள்சகோதரிகளைக் குறித்து தன் உரையில் குறிப்பிட்ட கர்தினால் வெர்சால்தி அவர்கள், அந்த நான்கு அருள்சகோதரிகளும், தங்கள் மத நம்பிக்கைக்கும், துறவு வாழ்வுக்கும் தங்கள் உயிரை வழங்கி, சாட்சியம் பகர்ந்தனர் என்று கூறினார்.

இறையியல் கருத்துக்களில் நீதியைப் பற்றி கூறுகையில், மார்க்ஸியக் கொள்கைகளைப் பற்றி இனி பேசத் தேவையில்லை, ஏனெனில், இயேசுவே தன் நற்செய்தியில் இத்தகையக் கொள்கைகளைக் கூறியுள்ளார் என்று கர்தினால் வெர்சால்தி அவர்கள் எடுத்துரைத்தார்.

விவிலியத்தின் அடிப்படையில் விடுதலை இறையியலை சொல்லித் தருவது, இறையியல் ஆசிரியர்களின் கடமை என்பதையும் கர்தினால் வெர்சால்தி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

 

ஆதாரம் :  UCAN / வத்திக்கான் வானொலி

 

UCAN                    Cardinal urges theologians to practice what they preach

 

6. இந்திய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள தீர்மான அறிக்கை

 

மார்ச்,11,2016. அருள்பணியினரை மையப்படுத்தாமல் இருத்தல், எளிமையான வாழ்வைப் பின்பற்றுதல், இயற்கையின் மீது அக்கறை கொண்டிருத்தல் ஆகிய அம்சங்களை இந்தியத் தலத்திருஅவை வெளிப்படுத்த வேண்டும் என்று, இந்திய ஆயர் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மார்ச் 2, கடந்த புதன் முதல், 9, இப்புதன் முடிய, பெங்களூருவில் நடைபெற்ற இந்திய ஆயர் பேரவையின் நிறையமர்வுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இந்தியாவின் 171 மறைமாவட்டங்களிலிருந்து, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட 178 ஆயர்கள், மறைமாவட்ட, மற்றும் பங்குத்தள மேய்ப்புப்பணியில், அனைவருக்கும் தெரியும்படியான ஒளிவு மறைவற்ற வழிமுறைகள் பின்பற்றப் படவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

திருஅவைத் தலைவர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் அனைவரும் எளிமையான வாழ்வு முறையைப் பின்பற்றுவதால், ஏனைய மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழவேண்டும் என்று ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

இறை அழைத்தலை ஊக்குவித்தல், துறவற வாழ்வு, மற்றும் அருள் பணியாளர் பயிற்சி ஆகியவை, இன்றையச் சூழல்களுக்கு ஏற்றதாக அமையவேண்டும் என்றும் ஆயர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இன்றைய உலகின் போக்குகளால் குடும்பங்கள் சந்திக்கும் சவால்களுக்கு தகுந்த பதிலிறுப்பு வழங்குவதும் இந்தியத் திருஅவையின் கடமை என்பதை ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

 

UCAN                    Indian bishops wrap up weeklong plenary - Prelates vow to curb clericalism, live simpler lives and promote a greener society

 

7. டில்லியில் கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலித்துக்களின் போராட்டம்

 

மார்ச்,11,2016. இந்தியாவில், இந்து தலித் மக்கக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலித் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, புது டில்லியில் இவ்வியாழனன்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது என்று, UCAN செய்தி கூறுகிறது.

2000த்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில், இந்திய ஆயர் பேரவையின், தலித் மற்றும் பழங்குடியினர் பணிக்குழுவின் செயலர், அருள்பணி தேவ சகாயராஜ் அவர்களும் ஒருவர்.

தலித் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் சலுகைகள் தரப்பட்டால், அது, அதிகமான மத மாற்றத்திற்கு வழிவகுத்துவிடும் என்று இந்து அடிப்படைவாதிகள் கூறிவருவது அர்த்தமற்ற விவாதம் என்று அருள்பணி சகாயராஜ் அவர்கள் எடுத்துரைத்தார்.

தலித் கிறிஸ்தவ தேசியக் கழகம், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை உட்பட ஏறத்தாழ 100 அமைப்பினர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.

 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

 

UCAN                    Dalit Christians, Muslims demand quotas in India

 

8. உலகில், அதிக வாழ்க்கைச் செலவு மிகுந்த நகரம், சிங்கப்பூர்

 

மார்ச்,11,2016. வாழ்க்கைச் செலவு அதிகமான நகரங்களின் பட்டியலில் மீண்டும் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளதென ஓர் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில், முறையே, சூரிக், ஹாங்காங், ஜெனீவா மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்கள் உள்ளதாக ஆய்வினை மேற்கொண்ட The Economist Intelligence Unit (EIU) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு கூடையில் அடங்கும் பொருட்களின் விலை குறித்து உலகெங்கிலும் உள்ள 133 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பீட்டில், இலண்டன் 6-வது இடத்திலும், நியூ யார்க் 7-வது இடத்திலும் உள்ளன.

செலவு மிகக்குறைந்த நகரங்களாக, இந்தியாவின் பெங்களுர் மற்றும் மும்பாய் ஆகியன பெயரிடப்பட்டுள்ளதுடன், அவற்றைத் தொடர்ந்து ஸாம்பியாவின் தலைநகர் லுசாக்காவும் உள்ளதாக EIU குறிப்பிட்டுள்ளது.

ஓராண்டிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் கூட சிங்கப்பூர் விலை அதிகமான நகராக இருந்தது.

உலகில் செலவு மிக குறைந்த 10 நகரங்கள் பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் உள்ளதாக EIUவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி

 

BBC                        Singapore 'still world's most expensive city'

 

இது இரக்கத்தின் காலம்...

 

ஒவ்வொரு மனிதரும் விவேகமுள்ள புனிதரே

 

அந்த மாவட்டம் முழுவதும் அந்தப் புனிதரின் பெயர் பரவியிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில் வசிக்கிற செய்தியும், கூடவே பிரபலமாக இருந்தது. தூரத்தில் வாழ்ந்த கிராமத்து மனிதர் ஒருவர், அவரைச் சந்தித்துவிட வேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடுநாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம் அடைந்தார். குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக வேலைக்காரர் வரவேற்றார். 'நான் அந்த மகானைப் பார்க்க வேண்டும்'என்று வேலைக்காரரிடம் சொன்னார் வந்தவர். குடிசைக்குள் அவருக்கு உணவு வழங்கப்பட்டு, நன்றாக கவனிக்கப்பட்டார். அப்போதும் புனிதரைப் பார்க்க முடியவில்லை. நேரம் ஆக ஆக, பொறுமையிழந்த கிராமவாசி, 'நான் எப்போதுதான் புனிதரைப் பார்க்க முடியும்' என்று கேட்டார். 'நீங்கள் பார்க்க வந்தவரை,  ஏற்கனவே பார்த்து விட்டீர்கள். மேலும், நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண, அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால், உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச் சுலபமாகத் தீர்த்துவிடலாம்' என்றார், வேலைக்காரராகப் பணியாற்றிய புனிதர்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 
Post a Comment

Powered by Blogger.