Halloween party ideas 2015
.வத்திக்கான் வானொலி செய்திகள்

 

செய்திகள்

02.03.16

------------------------------------------------------------------------------------------------------

 

1. சிரியாவில் காரித்தாஸின் பணிகள், திருஅவைக்கு ஒரு சான்றிதழ்

 

2. 'ஆஸ்கர்' விருதுபெற்ற 'ஸ்பாட்லைட்' திரைப்படம் குறித்து கர்தினால் ஒ'மாலி

 

3. 'ஆஸ்கர்' விருது பெற்ற பாகிஸ்தான் பெண்மணி ஷர்மீன்

 

4. புனித பேதுரு வளாகத்தில், இலவச மருத்துவமனை

 

5. மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, இன்னும் கிடைக்கவில்லை - போபால் பேராயர்

 

6. திருத்தந்தையின் பயணத்தால், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் நல்ல மாற்றம்

 

7. மேற்கு ஆப்ரிக்காவைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகள் - ஆயர்கள் கவலை

 

8. மணிலாவில் இயங்கும் EAPIயின் பொன்விழா ஆரம்பம்

 

------------------------------------------------------------------------------------------------------

 

1. சிரியாவில் காரித்தாஸின் பணிகள், திருஅவைக்கு ஒரு சான்றிதழ்

 

மார்ச்,02,2016. சிரியாவில் துன்புறும் மக்களை மனதில் கொண்டு, அரசியல் தலைவர்களும், உலக சமுதாயமும், தங்கள் சுயநலன்களையும், பேராசையையும் களைந்து, அந்நாட்டின் துயரங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டுமென்று, அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

உலக காரித்தாஸ் அமைப்பு, சிரியாவிலும் ஈராக்கிலும் செய்து வரும் மனிதாபிமானப் பணிகளை அண்மையில் பார்வையிட்ட மணிலாப் பேராயர், கர்தினால் தாக்லே அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில், உலகச் சமுதாயத்திற்கு தான் விடுக்கும் விண்ணப்பம் பற்றி குறிப்பிட்டார்.

50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தில், 10 இலட்சம் புலம் பெயர்ந்தோர் வந்திருப்பதை ஒரு பெரும் நெருக்கடி என்று ஊடகங்கள் கூறுவதை சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், 40 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட லெபனான் நாட்டில், சிரியாவிலிருந்து தஞ்சம் புகுந்திருக்கும் 10 இலட்சம் புலம் பெயர்ந்தோர், அந்நாட்டின் பொருளாதரத்திற்கு பெரும் சுமையாக உள்ளனர் என்பதையும் கவலையுடன் குறிப்பிட்டார்.

தான் மேற்கொண்ட பயணத்தின்போது, ஒரு முஸ்லிம் இல்லத்தலைவர், "காரித்தாஸ் நீடூழி வாழ்க! கத்தோலிக்கத் திருஅவை நீடூழி வாழ்க" என்று குரல் எழுப்பி சொன்னது, காரித்தாஸ் அமைப்பு, இஸ்லாமியரிடையே ஆற்றிவரும் பணிகளுக்கும், அதற்குப் பின்புலமாய் இருந்து செயலாற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மென்மையான உள்ளத்திற்கும் ஒரு சான்றிதழ் போல தன்னால் உணர முடிந்ததென்று கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.

கர்தினால் தாக்லே அவர்கள் மேற்கொண்ட இந்தப் பயணத்தின்போது, பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து வெளியேறி, மத்தியக் கிழக்கு நாடுகளில் பணியாற்றிவரும் தொழிலாளர்களைச் சந்தித்தது குறித்தும், அவர்கள் அனுபவிக்கும் அநீதமானச் சூழல்கள் குறித்தும் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

2. 'ஆஸ்கர்' விருதுபெற்ற 'ஸ்பாட்லைட்' திரைப்படம் குறித்து கர்தினால் ஒ'மாலி

 

மார்ச்,02,2016. அருள்பணியாளர்களால் சிறுவர் சிறுமியர் பாலினக் கொடுமைகள் அடைந்ததை ஊடகங்கள் வெளிக்கொணர்ந்தபோது, அது, தகுந்ததொரு பதிலிறுப்பை மேற்கொள்ள திருஅவைக்கு உதவியது என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாஸ்டன் பேராயர், கர்தினால் ஷான் ஒ'மாலி (Seán O'Malley) அவர்கள் கூறினார்.

சிறுவர், சிறுமியர் அடைந்த துன்பங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த 'ஸ்பாட்லைட்' (Spotlight) என்ற திரைப்படம், இஞ்ஞாயிறன்று நடைபெற்ற 'ஆஸ்கர்' திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த படம் என்ற விருதைப் பெற்றதையடுத்து, கர்தினால் ஒ'மாலி அவர்கள் செய்தியாளர்களுக்கு வழங்கிய ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

'த பாஸ்டன் குளோப்' (The Boston Globe) என்ற நாளிதழ், அருள் பணியாளர்களின் இந்தக் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொணர்ந்ததை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இத்திரைப்படம், நடுநிலையோடு இந்தப் பிரச்சனையைக் கையாண்டுள்ளது என்று, கர்தினால் ஒ'மாலி அவர்கள் கூறினார்.

கர்தினால் ஒ'மாலி அவர்கள், பாஸ்டன் பேராயராகப் பொறுப்பேற்ற வேளையில், இந்தப் பிரச்சனை உச்சக் கட்டத்தில் இருந்ததென்பதும், அவரது தலைமையின் கீழ், பாஸ்டன் உயர் மறைமாவட்டம், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தகுந்த முயற்சிகள் மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கன.

கத்தோலிக்கத் திருஅவையின் பணியாளர்களால் சிறுவர் சிறுமியருக்கு இழைக்கப்பட்ட தீங்கினை வெளிக்கொணர்ந்துள்ள 'ஸ்பாட்லைட்' திரைப்படம், கத்தோலிக்கத்தை வெறுக்கும்படி அமைக்கப்படாதது, இத்திரைப்படத்தின் சிறப்பு என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.

 

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

 

3. 'ஆஸ்கர்' விருது பெற்ற பாகிஸ்தான் பெண்மணி ஷர்மீன்

 

மார்ச்,02,2016. இவ்வாண்டு நடைபெற்ற 'ஆஸ்கர்' திரைப்பட விருது விழாவில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஷர்மீன் ஒபாய்த்-சினோய் (Sharmeen Obaid-Chinoy) என்ற பெண்மணி, குறுகிய ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றார்.

பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் கொடுமைகளில் ஒன்றான, தன்மானக் கொலைகள் (honour killing) என்ற கருத்தை மையப்படுத்தி, ஷர்மீன் அவர்கள் உருவாக்கிய 'A Girl in the River: The Price of Forgiveness' அதாவது, 'ஆற்றில் ஒரு பெண்: மன்னிப்பின் விலை' என்ற ஆவணப் படம் இவ்விருதைப் பெற்றுள்ளது.

19 வயது நிறைந்த சபா கைசெர் (Saba Qaiser) என்ற இளம்பெண், தான் காதலித்த ஒருவரை மணந்துகொண்டார் என்ற காரணத்திற்காக, அவரது தந்தையும், மாமாவும் அப்பெண்ணை, துப்பாக்கியால் தலையில் சுட்டு, பிளாஸ்டிக் துணியில் சுற்றி, ஆற்றில் எறிந்துவிட, அப்பெண் அந்தக் கொடுமையிலிருந்து அற்புதவிதமாகத் தப்பித்து, இக்கொடுமையை வெளிச்சத்திற்குக் கொணர்ந்ததை மையப்படுத்தி, இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை தன் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பார்த்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் (Nawaz Sharif) அவர்கள், தன்மானக் கொலைகளைத் தடுக்கும் சட்டம் கண்டிப்பாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தன்னிடம் கூறியதாக, இத்திரைப்படத்தை உருவாக்கிய ஷர்மீன் அவர்கள் 'ஆஸ்கர்' விருது விழாவில் கூறினார்.

பாகிஸ்தானில் தன்மானக் கொலைகள் தடைசெய்யப்படும் சட்டம் அமலுக்கு வந்தால், தான் அடைந்துள்ள 'ஆஸ்கர்' விருதைக் காட்டிலும் பெரிதும் மகிழ்வேன் என்றும் ஷர்மீன் அவர்கள் இவ்விழாவில் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் பாகிஸ்தானில் 4000 பேர் தன்மானக் கொலைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும், இவர்களில் 1000பேரின் கொலைகளே வெளிச்சத்திற்கு வருகின்றன என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 

4. புனித பேதுரு வளாகத்தில், இலவச மருத்துவமனை

 

மார்ச்,02,2016. புனித பேதுரு வளாகத்தில் இரக்கத்தின் மற்றொரு முயற்சியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தூண்டுதலால் தான் துவங்கியிருப்பது, மகிழ்வைத் தருகிறது என்று, திருத்தந்தையின் தர்மப் பணிகளுக்குப் பொறுப்பாகச் செயலாற்றும் பேராயர், கோன்ராட் கிரயெவ்ஸ்கி (Konrad Krajewski) அவர்கள் கூறினார்.

உரோம் நகரில் உள்ள வீடற்றோரின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற, புனித பேதுரு வளாகத்தில், பிப்ரவரி 29, இத்திங்களன்று இலவச மருத்துவமனை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

உரோம் நகரில் இயங்கிவரும் ஏனைய மருத்துவ அமைப்புக்களுடன் இணைந்து, வசதியற்ற வறியோருக்கு இலவச மருத்துவ உதவிகள் கிடைக்கும் வண்ணம், இந்த மருத்துவ மனை திறக்கப்பட்டுள்ளது என்று, பேராயர் கிரயெவ்ஸ்கி அவர்கள் கூறினார்.

வீடற்ற வறியோர் குளிப்பதற்கும், சிகைத்திருத்தம் பெறுவதற்கும் புனித பேதுரு வளாகத்தில் ஏற்கனவே வசதிகள் உள்ளன என்பதும், வீடற்றவர்கள் இரவில் உறங்குவதற்கு, வளாகத்தின் அருகில், இயேசு சபையினர் நடத்தி வரும் இல்லம் ஒன்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கவை.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

5. மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, இன்னும் கிடைக்கவில்லை - போபால் பேராயர்

 

மார்ச்,02,2016. மக்கள் அடைந்துவரும் உண்மையானக் கொடுமைகளை அரசியலாக்கிவிடுவதால், மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, முப்பது ஆண்டுகள் கடந்தும் கிடைக்கவில்லை என்று இந்தியாவின் போபால் பேராயர், லியோ கொர்னேலியோ அவர்கள் கூறினார்.

1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் Union Carbide ஆலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயு தாக்குதலால் 5,300 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்று UCAN செய்தி, புள்ளி விவரங்களை வழங்கியுள்ளது.

இந்த நச்சு வாயு விபத்தினால், அடுத்து வந்த ஆண்டுகளில், 25,000த்திற்கும் அதிகமானோர் இறந்தனர் என்று, மனித நல அமைப்புக்கள் கூறி வருகின்றன.

உலகில் இதுவரை நடைபெற்றுள்ள தொழிற்சாலை விபத்துக்களிலேயே மிகப் பெரிய விபத்து என்று கணிக்கப்பட்டுள்ள இந்த விபத்தில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் சேரவேண்டிய நீதியான இழப்புத் தொகை இன்னும் சென்று சேரவில்லை என்பதற்கு, இவ்விபத்தை வைத்து அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் விளையாட்டே காரணம் என்று பேராயர் கொர்னேலியோ அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.

 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

 

6. திருத்தந்தையின் பயணத்தால், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் நல்ல மாற்றம்

 

மார்ச்,02,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், அந்நாட்டில் நிலையான ஒரு தேர்தலையும், தகுதியான ஒரு தலைவரையும் தந்துள்ளது என்று, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் தியுதோன்னே இங்சாபலைங்கா (Dieudonne Nzapalainga) அவர்கள் கூறியுள்ளார்.

மத்திய ஆப்ரிக்க குடியரசில் அமைதி கிடைக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் தலைநகர் பாங்கியில் அமைந்துள்ள பேராயலத்தில் புனிதக் கதவுகளைத் திறந்ததை நினைவுகூர்ந்த பேராயர் இங்சாபலைங்கா அவர்கள், நாட்டின் முன்னாள் பிரதமர், Faustin-Archange Touadera அவர்கள் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, நம்பிக்கையைத் தருகிறது என்று கூறினார்.

நடந்து முடிந்த தேர்தல், ஓரளவு அமைதியில் நடைபெற்றதற்கும், நாட்டின் பிரச்சனைகளை நன்கு உணர்ந்த தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயணம் வித்திட்டது என்று பேராயர் இங்சாபலைங்கா அவர்கள், CNS கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

 

7. மேற்கு ஆப்ரிக்காவைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகள் - ஆயர்கள் கவலை

 

மார்ச்,02,2016. பாதுக்காப்பின்மை, தீவிரவாதம், கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், ஊழல், ஆகியவை, மேற்கு ஆப்ரிக்க நாடுகளைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகள் என்று மேற்கு ஆப்ரிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை கூறுகிறது.

கானா நாட்டின் Accra எனுமிடத்தில் மேற்கு ஆப்ரிக்க ஆயர் பேரவை மேற்கொண்ட ஒருவாரக் கூட்டம், இத்திங்களன்று முடிவுற்றதைத் தொடர்ந்து, அப்பேரவை, Fides செய்திக்கு அளித்த அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நைஜீரியா, மாலி, புர்கினா பாஸோ, காமரூன் மற்றும் சாட் ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து, ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

மதங்களை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், மதங்களுக்கிடையே உரையாடலை வளர்க்கவும் ஆயர்கள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று இவ்வறிக்கையில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

நாடுகளின் முன்னேற்றத்திற்கு தகுதியான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளத் தவறினால், இளையோர் நம்பிக்கை இழந்து தவறானப் பாதைகளைத் தேர்ந்தெடுக்க வழிவகுத்துவிடும் என்று ஆயர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

 

8. மணிலாவில் இயங்கும் EAPIயின் பொன்விழா ஆரம்பம்

 

மார்ச்,02,2016. பிலிப்பின்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் East Asian Pastoral Institute - EAPI என்ற பெயரில் இயங்கிவரும் கிழக்கு ஆசிய மேய்ப்புப்பணி மையம், மார்ச் 4ம் தேதி, தன் பொன்விழா கொண்டாட்டங்களைத் துவங்குகிறது.

Cubao மறைமாவட்ட ஆயர், Honesto Ongtioco அவர்களின் தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன், பொன்விழா கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின்றன.

மணிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, மற்றும் மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ ஆகியோர் பங்கேற்கும் பல நிகழ்வுகள் அடுத்துவரும் மாதங்களில் நடைபெறும் என்றும், பொன்விழா கொண்டாட்டங்கள், டிசம்பர் 3, புனித பிரான்சிஸ் சேவியர் திருநாளன்று நிறைவடையும் என்றும் Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

சீனாவிலிருந்து வெளியேறி, பிலிப்பின்ஸ் நாட்டில் தஞ்சம் அடைந்த சில இயேசு சபை அருள் பணியாளர்கள், இயேசு சபையின் முன்னாள் தலைவர், அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்களின் தூண்டுதலால், இந்த மையத்தைத் துவக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2ம் வத்திக்கான் சங்கம் கொணர்ந்த புத்துணர்வு, கலாச்சாரத்தின் அடிப்படையில் ஆசிய நாடுகள் மேற்கொள்ளவேண்டிய புதிய மேய்ப்புப்பணி முயற்சிகள் ஆகியவை, இந்த மையம் உருவாக முக்கியக் காரணங்கள் என்று Fides செய்திக்குறிப்பு கூறுகிறது.

 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

 

இது இரக்கத்தின் காலம்...

 

துன்பத்திலும் சோகத்திலும் கை விடாதவர் இறைவன்

 

தன் மகனை அழைத்துக்கொண்டு ஒரு காட்டிற்குச் சென்ற தந்தை, மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.

''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்கவேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக்கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது. காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது. மரங்கள் பேயாட்டம் ஆடுவதாகத் தெரிந்த்து, அவனுக்கு.

'அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்'என்று பலமுறை கத்திப் பார்த்தான், பயனில்லை.

திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கடந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான்.

கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. 'அப்பா'என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

"அப்பா, நீங்க எப்போ வந்தீங்க?'' என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்?" என்றார்.

"இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?" என்று கேட்டான்.

"உன்னிடம் மன உறுதி வளரவேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால், அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்'என்றார் தந்தை. மகனுக்கு, தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் உறுதிபெற வேண்டும் என்பதற்காகவே, பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 
Post a Comment

Powered by Blogger.