Halloween party ideas 2015
.

தலைவரின் நம்பிக்கைக்குரிய தம்பியாக...

'எம்.எல்.ஏ., எம்.பி. ஆக வேண்டும் என்ற கனவோடு வராதீர்கள்; சமூக விடுதலைக்காக களமாட வாய்க்கரிசி போட்டுக் கொண்டு என்னுடன் வாருங்கள்' என்று 90களின் தொடக்கத்தில் போராளித் தலைவர் எழுச்சித்தமிழர் விடுத்த அறைகூவலை ஏற்று தங்களை விடுதலைச் சிறுத்தையாய் இணைத்துக் கொண்ட தம்பிகளுள் நானும் ஒருவன். அன்று தொடங்கிய விடுதலைக்கான பயணத்தில் இன்றுவரை தலைவரின் தடம்பற்றி நடந்து வருகிறேன். ஒரு ஊடகவியலாளனாகத் தான் தலைவரிடம் அறிமுகமானேன். நம் இயக்கத்தில் தலைமை நிலையச் செயலாளர், வெளியீட்டு பிரிவு செயலாளர், செய்தித் தொடர்பாளர், தமிழ்மண் பொறுப்பாசிரியர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன் ஆனால் எல்லாவற்றைக் காட்டிலும் தலைவரின் வழிகாட்டுதலில் தமிழகம் எங்கும் சென்று களத்தில் நின்று போராடுவதையும், அதற்காக சிறை செல்வதையும் தான் எப்போழுதும் நான் விரும்பியுள்ளேன். அந்த வகையில் தலைவர் இப்போது எனக்கு அளித்துள்ள பொறுப்பு மிகப் பெரியது, அதிக பாரம் மிகுந்தது. என் மீது நம்பிக்கை வைத்து அவர் அளித்துள்ள பொறுப்புக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

நான் ஈழத்தில் இருந்த சமயம் தளபதி பொட்டம்மான் அவர்கள் ஒரு முறை என்னிடம் சொன்னார் "நாம் தலைவருக்கு (தலைவர் பிரபாகரன்) இருபத்தைந்து ஆண்டுகள் நம்பிக்கையாய் இருக்கிறோம் என்பது பெரிய விடயம் இல்லை ஆனால் ஒரேயொரு முறை அந்த தலைவருக்கு எதிராக மனதளவில் நாம் யோசித்தாலும் அது துரோகம். அந்த ஒரு துரோகம் தான் நம் ஒட்டுமொத்த வாழ்க்கையின் பிரதிபலிப்பாக அமையுமே ஒழிய இருபத்தைந்தாண்டு கால நம்பிக்கை அல்ல" என்று. நாம் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கும், தலைமைக்கும் நம்பிக்கையாய் இருப்பதற்கான தகுதியாக தளபதி பொட்டம்மானின் வார்த்தைகளே எனக்கு உந்துசக்தியாய் இருந்து வருகிறது. தினந்தினம் அந்த நம்பிக்கையை, அதற்கான தகுதியை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறேன். கட்சி பொறுப்பு, தேர்தல் என்பதெல்லாம் ஒரு சிறிய பகுதி தான் ஆனால் நம் சமூக விடுதலைக்காக தலைவர் அமைத்துள்ள களத்தில் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவர் பின்னே உறுதியோடு நிற்பது தான் மிக முக்கியமானதும் அடிப்படையானதுமாகும். மேலவளவு முருகேசன் தொடங்கி தம்பி சங்கர் வரை நம் மக்கள் சிந்திய ரத்த சகதியில் நின்று சமூக விடுதலைக்காக களமாட மேலும் உறுதிக்கொள்ள வேண்டும். தலித்துகளின் பகையோடு மோதி சிறை செல்லவும் தயாராக இருப்பது என்றும் முதன்மையானது.

இந்த நேரத்தில் என் மகிழ்ச்சியை கட்டித் தழுவி, வெடிச் சிரிப்போடு பகிர்ந்துக் கொள்ள நண்பன் வெற்றிச்செல்வன் இல்லாதது ஒன்றே என்னை கலங்க வைக்கிறது. 'தலைவருக்காக நாம் இதைச் செய்து முடிக்க வேண்டும், அதை நிறைவேற்ற வேண்டும்' என்று நண்பன் வெற்றி எப்பொழுதும் பல புதிய திட்டங்களோடும் கனவுகளோடும் இருப்பார். அந்த கனவுகளை நெஞ்சில் சுமந்துக் கொண்டு, தலைவர் மீது அவன் கொண்டிருந்த அதே நம்பிக்கையோடு நானும் பயணிப்பேன் என்று உறுதி கொள்கிறேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

வன்னி அரசு
மாநில துணைப் பொதுச்செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

Post a Comment

Powered by Blogger.